"வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் தொட்பொருளாவாள்'
எனத் தொடங்கும் பாடலில் பாரதியார், கல்விக் கடவுளான சரஸ்வதிதேவியை சிறப்பித்துப் பாடியுள்ளார். கவிச்சக்கரவத்தி கம்பனும் "சரஸ்வதி அந்தாதி'யைப் பாடியுள்ளார். அதேபோல் சரஸ்வதி தேவியைப் போற்றும் வண்ணம் "சியாமளா தண்டகம்' என்கிற பாமாலையை சமஸ்கிருத மொழியில் காளிதாசர் பாடியுள்ளார். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் "சகலகலாவல்- மாலை' எனும் பெயரில் சரஸ்வதி தேவியைப் போற்றி துதிப்பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடல்களைத் துதித்தால் சரஸ்வதி தேவியின் கல்வி கடாட்சம் நமக்கு நிச்சயம் கிட்டும்.
கொன்றைவேந்தனில் ஔவையார் "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' எனச் சொல்லியுள்ளார். எண் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கணம், இலக்கியம், மொழி போன்றவையும் மனிதனுக்கு கண் போன்ற அவசியமான ஒன்று என்னும் பொருளில் கூறினார். அந்த எண், எழுத்தில் உறைந்து வாழ்பவள் சரஸ்வதிதேவியே. இந்த தேவியை சாரதா, கலைமகள், வாக்தேவி, வித்யா, சகலகலாவல்லி போன்ற பெயர்களில் அழைப்பதுண்டு.
சத்திய லோகத்தில் (பிரம்ம லோகம்) பிரம்மதேவனுடன் வாழ்ந்த சரஸ்வதிதேவி பூவுலகில் சோணாநதி பாயும் (சிலர் கோணாபுரி என்றும் சொல்வார்கள்) வளமான இடத்தில், விஷ்ணுமித்ரரின் மகளாக பாரதி (உபய பாரதி) எனும் பெயரில் அவதரித்தாள். அதேபோன்று பிரஜாபதியான பிரம்மதேவர் விசுவரூபர் (மண்டனமிச்சரர்) எனும் பெயரில் காஷ்மீர் நகரில் அவதரித்தார். இவ்விருவருக்கும் திருமணம் நடந்தபிறகு மாஹிஷ்மதி நகரில் வாழ்ந்துவந்தனர்.
ஸ்ரீ ஆதிசங்கரர் தம்முடைய வேதாந்த சாஸ்திரமான அத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்த, பல மதங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களுடன் சமயவாதம் புரிந்தார். ஜைமினி முனிவரை மூலமாகக்கொண்ட, பூர்வ மீமாம்ஸ சாஸ்திரத்தில் பற்றுகொண்ட பெரிய பண்டிதரான குமரில பட்டரின் சீடரான விசுவ ரூபரிடம் தர்க்கவாதம் (சமயவாதம்) செய்ய, மாஹிஷ்மதி நகருக்கு வந்தார் ஆதிசங்கரர். தர்க்கவாதத்தில் விசுவரூபர் தோற்றதால், வாதத்தின் ஒப்பந்தப்படி விசுவரூபர் இல்லறத்தைத் துறந்து சந்நியாசம் பெற்றார். அதன்பின்னர் சுரேஸ்வராச்சாரியார் என்னும் பெயர் விசுவரூபருக்கு வந்தது. இவரே சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் முதல் பீடாதிபதி.
மீண்டும் பிரம்மலோகத்திற்குச் செல்லவிருந்த சரஸ்வதிதேவியிடம், ஆதிசங்கரர் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் தெய்வீக சாந்நித்யத்துடன் நித்தம்வாசம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டதால், அவ்வாறே சாரதா எனும் பெயரில் இருப்பதாகக் கூறினாள்.
அதன்படி துங்கா நதிக்கரையில் சாரதாபீடம் உருவாக்கப்பட்டது. சிருங்கேரியில் சாரதாம்பாளை ஸ்ரீ சக்கரத்தின்மீது ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அம்பாளைப் போற்றும் வண்ணம்-
"ஸுவ சேஷாஜ கும்பாம்
ஸுதா பூரண கும்பாம்
ப்ரஸாதாவலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம்
ஸதானோஷ்ட பிம்பாம்
பஜே சாரதாம்பாமஜஸ்ரம் மதம்பாம்'
எனத் தொடங்கும் சாரதா புஜங்கத்தைப் பாடினார். சாரதா தன்னுடைய நான்கு கரங்களில் சுவடி (புத்தகம்), ஜெப மாலை, அமிர்த கலசம், சின்முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
குங்குமப் பூவின் மணமும், வண்ணமிகு ரோஜாப்பூந் தோட்டமும், பனிபடர்ந்த மலைகள், பள்ளதாக்குகளின் வனப்பும், ஜீலம்நதி, தால் நதிகளின் ரம்யமும் நிறைந்த வடமாநிலமான ஜம்மு, காஷ்மீர்தான் பூலோக சொர்க்கபூமி. இயற்கை எழில் கொஞ்சம் காஷ்மீரில் சாரதாபீடம் என்னும் பெயரில் சரஸ்வதி தேவிக்கு ஒரு கோவில் பல நூற்றாண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்டது. சாரதா பீடம் என்றால் சரஸ்வதிதேவியின் இருக்கை (வாழ்விடம்) எனப் பொருள்.
வாக்தேவியான சாரதா குடிகொண்ட காஷ்மீரிலிருக்கும் சாரதாபீட கோவிலுக்கு ஒரு தனிச்சிறப்பு இருந்தது.
அதாவது வேதம், சாஸ்திரம், ஆகமம் உட்பட சகலத்தையும் நன்கறிந்தவர்கள் மட்டுமே கோவிலில் இருக்கும் பீடத்தில் (இருக்கை) அமரத் தகுதியுண்டு. தென்திசையில் (கேரளா- காலடி) பிறந்த ஆதிசங்கரர் அந்த சர்வக்ஞ பீடத்தில், பிற மத அறிஞர்களை வாதத்தில் வெற்றிகண்டு ஏறியமர்ந்தார். இச்செய்தி ஸ்ரீ வித்யாரண்யர் எழுதிய ஸ்ரீமத் சங்கர திக்விஜயத்தில் விவரமாகக் கூறப் பட்டுள்ளது.
ஸ்ரீ இராமானுஜர் இக்கோவிலுக்கு கூரத்தாழ்வாருடன் சென்று சாரதா தேவியை வழிபட்ட தாகவும், அவர் எழுதிய பாஷ்யத்திற்காக அவருக்கு பாஷ்யக் காரர் என்னும் சிறப்பு விருது கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பல மகான்கள் தரிசனம் செய்த மிகப்பழமையான கோவில், காஷ்மீரை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் காலத்தில் சிலபகுதிகள் தகர்க்கப்பட்டன. அதனால் ஆலயம் சிதைந்து காலப்போக்கில் பாழடைந்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த இந்து மன்னர்களால் சீர்செய்யப்பட்டது. நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைபெற்ற சமயத்தில், எல்லைப் பிரிவில் கோவில் இருக்கும் பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குச் (Pok) சென்றுவிட்டது. இதனால் கோவிலைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
காஷ்மீரில் வாழும் இந்துக்களுக்கும், காஷ்மீர் பண்டிதர்களுக்கும் அதிதேவதை யான சாரதாதேவிக்குப் புதிய கோவில் கட்ட வேண்டும் என்னும் விருப்பம் ஏற்பட்டது.
சாரதா யாத்ரா கோவில் கமிட்டி (Sharada Yatra Temple committee) மூலம் இந்திய எல்லைப் பகுதியில் பழைய கோவில் வடிவில், நான்கு வாயிற் கதவுகளுடன் ஆலயம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. மத்திய- மாநில அரசின் அனுமதியுடன் விரைவில் கோவில் கட்டப்படவுள்ளது.
இந்த முயற்சிக்கு உள்ளூர் முஸ்லிம் பிரமுகர் கள் ஒத்துழைப்புடன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதியன்று மத்திய அரசின் வாக் கவுன்சில் (Central waqf council) உறுப்பினரும், பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான திருமதி. தரக்க்ஷன் அண்ட்ரபி (Dr. Darakhshan Andrabi) முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது.
கோவில் சிறப்பாகக் கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி கோவில் கமிட்டியைச் சேர்ந்த தலைவர் ரவீந்தர பண்டிட் மற்றும் நிர்வாகக் குழுவினர் மோகன் கே. மோங்கா, மஞ்சுநாத், ராகேஷ் கௌல் ஆகியோர் சிருங்ககேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் சங்கராச்சார்யர் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசந்நிதானம், ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானம் ஸ்வாமிகளிடம் நேரில்சென்று, கோவில் கட்டப்படும் அமைப்பைப்பற்றி ஆலோசனை செய்து ஆசிர்வாதம் பெற்றனர்.
ஞானவடிவான சாரதாதேவிக்கு அமையவிருக்கும் புதிய கோவில், பழமைக்கும் புதுமைக்கும் ஓர் பாலமாக இருக்கும். இக்கோவில் பற்றிய மேலும் விவரங்களுக்கு: கோவில் கமிட்டியின் தலைவர் ரவீந்திர பண்டிட்டை, புதுடெல்லி- 110 091. (98111 43024) அணுகலாம்.