ன்னிரு திருமுறைகள்: சைவ சமய நூல்களின் தொகுப்பு 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 10-ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் கோவிலில் பூச்சிகளால் அரிக்கப் பட்டு கவனிப்பாரின்றிக் கிடந்த திருமுறைகளில் அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் இயற்றியவை. நான்கு, ஐந்து, ஆறு திருநாவுக்கரசர் இயற்றியவை. 7-ஆம் திருமுறை சுந்தரரால் இயற்றப்பட்டது. 7 திருமுறைகளும் தேவாரம் என்றழைக்கப்படுகிறது. 8-ஆம் திருமுறை மாணிக்கவாசகரால் இயற்றப் பட்டது. திருவாசகம் திருக்கோவையார் என்றழைக்கப்படுகிறது. 9-ஆம் திருமுறை 9 ஆசிரியர்களால் இயற்றப்பட்டது. முறையே; திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி, நம்பிகாடநம்பி, கண்டராதித்தர். வேணாட்டடிகள். திருவாலிய முதனார், புருடோத்தநம்பி சேதிராயர்- திருவிசைப்பா என்றழைக்கப்படுகிறது. திருப்பல்லாண்டு தனியே சேந்தனாரால் இயற்றப்பட்டது. பத்தாம் திருமுறை திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திரம். பதினோராம் திருமுறை 12 ஆசிரியர் களால் இயற்றப்பட்ட 40 நூல்கள். பன்னிரண் டாம் திருமுறை சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட திருத்தொண்டர் புராணம், பெரியபுராணம் என்றழைக்கப்படுகிறது.

ss

பன்னிரு திருமுறைகள் பாமரர்முதல் பெரிய பண்டிதர்கள்வரை பக்தியாய் வணங்கக்கூடிய அனைத்துக் கூறுகளும் கொண்டதாகும். எட்டாம் திருமுறையாகிய, திருவாசகம் ஒலிக்காத இல்லங்களே இல்லை. மாதாந்திர பிரதோஷ வழிபாட்டில் "சிவபுராணம்' எல்லோராலும் பாராயணம் செய்யப்பட்டு மிகச் சிறப்பாக வழிபாட்டில் பாடப்படுகிற பாடல் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம்.' "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று

"வான் கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

Advertisment

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே''.

Advertisment

வள்ளல் பெருமானாலும், போற்றப் பட்டதாகும்.

மாணிக்கவாசகர்

பாண்டிய நாட்டின் (இன்றைய மதுரை மாவட்டம்) திருவாதவூரில் பிறந்தவர். அமாத்திய குலத்தவர். பெற்றோர்கள் சம்புபாதாசிருதர் என்னும் பெருந்தகையும், சிவஞானவதி என்றும் பெருமாட்டியும் ஆவர். பதினாறு வயதிற்குள் கல்வி, கேள்வி, ஞானம் பெற்று சைவத்திலும், தத்துவத்திலும் நல்ல புலமைபெற்றார். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாசகரை தனது அமைச்சரவையில் அமைச்சராக அமர்த்திக்கொண்டான். தென்னவன் "பிரம்மராயன்' என்ற பட்டத்தையும் மாணிக்கவாசகருக்கு வழங்கினான். இறைவனின் திருவிளையாடலின்படி, மன்னர் இட்ட பணியை மறந்து சிவனார் சேவைக்கு தம்மை ஒப்படைத்து மன்னனின் கோபத்திற்கு ஆளாகினார். சிறையிலிடப்பட்டார். தனது அடியாரின் துயர் பொறுக்காத இறைவன் நரிகளை, குதிரைகளாக்கித் தானே சேவக னாகி, குதிரைகளை அரசனிடம் கொண்டு சேர்த்தான். அரசனும் மனமகிழ்ந்து. மாணிக்க வாசகரை விடுவித்தான். "நரி பரியானதும்' பரி நரியானதும் ஆண்டவனின் திருவிளையாடல் என அறியாத மன்னன் மாணிக்கவாசகரை வைகை சுடுமணலில் நிற்க வைத்தான். பெருமானின் கருணை வெள்ளம் புனல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. வீட்டுக் கொருவர் மண் சுமக்கவேண்டும் என்ற மன்னன் கட் டளையின் படி, புட்டு விற்கும் ஏழை வந்திக்கு கூலியாளாகக் காட்சிதந்து இறைவனே பிட்டுக்கு மண் சுமந்தான். வந்தியின் மடை அடையாமலிருந் ததைக் கண்டு மன்னன் கூலியாளாய் வந்த இறைவனை பிரம்பால் அடித்தான். எல்லாருக்கும் அடிவிழுந்தது. மாணிக்க வாசகருக்காக இறைவன் கூலி வேலை செய்பவனாக வந்தது உணர்ந்து மன்னன் மாணிக்கவாசகரை தெய்வப்பிறவி என அறிந்தான்.

மாணிக்கவாசகர் மதுரையிலிருந்து புறப்பட்டு உத்திரகோச மங்கை, திருவாரூர், திருவிடைமருதூர், சீர்காழி, திருவண்ணா மலை, திருக்கழுக்குன்றம் என பல தலங் களுக்கும் சென்று இறைவனைப் பாடி பின்னர் தில்லைத் திருநகரை அடைந்தார்.

இறைவனோடு உரையாடல்

ஆனந்தக் கூத்திடும் நடராஜப் பெருமானை வணங்கி, "அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லைகண்டேனே' என்று பரவசமுற்றார். இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொள்ளத் திருவுளம் பற்றினார். வேதியர் வேடம் புனைந்து வந்து "நீர் பாடுக நான் எழுதுவேன்' என்றார். திருவாதவூரார் பாட நடராஜப் பெருமான் ஏடு வாங்கித் தெளிவுரை வரைந்தார். "மெய்த்தவ வாதவூரன் விளம்பிட எழுதும் இந்தப் புத்தகம் மன்றுள் ஆடல் புரிந்தவன் எழுத்து' என்று கோவை முடிவில் எழுதிக் காப்பிட்டு அதனை பொன்னம் பலத்தேயுள்ள பஞ்சாக்கரப் படியில் வைத்து மறைந்தார்.

மாணிக்கவாசகரும் திருவாசகமும்

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க'

என சிவபுராணம் முதல் பதிகம். கீர்த்தித்திரு அகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திரு அகவல் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருவம்மாணை திருப்பொற்புண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருஉந்தியார், திருத்தோணாக்கம், திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம் திருப்பள்ளியெழுச்சி, கோவில் மூத்த திருப்பதிகம், கோவில் திருப்பதிகம். செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திருக்கழுகுன்றப்பதிகம் கண்ட பத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்த பத்து, திரு ஏசறவு திடும்புலம்பல், குலாப்பத்து, அற்புதப்பத்து. சென்னிப் பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம். யாத்திரைப்பத்து திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டு ஆய நான்மறை திருப்படை ஆட்சி, ஆனந்த மாலை, அச்சோப் பதிகம். என ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிற நூல் இது. பாடல்களின் தொகை அறு நூற்று ஐம்பத்தாறு.

தத்துவத்தின் சாரமாக தலைசிறந்து நிற்கிறது திருவாசகம். மாணிக்க வாசகரின் ஆன்ம பக்குவ நிலைக்கு எடுத்துக்காட்டாய் அமைவதோடு ஆன்மாவின் உன்னத நிலையை அடைய விரும்பும் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாய்த் திருவாசகம் அமையப் பெற்றுள்ளது.

மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட 51 திருப்பதி கங்களில் அவரது உன்னத அனுபவத்தை உரைக்கும் 45-ஆவது பதிகம், "யாத்திரைப்பத்து', மாணிக்கவாசகர் தில்லையில் இருக்கும்போது அடியார்கள் பலரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு, இறைவனின் திருவடி சேரும் காலம் வந்து விட்டது வாருங்கள் எனப் பாடப்பட்டதாகும்.

பாடல்: 1

"பூவார் சென்னி மன்னம் எம்

புயங்கப் பெருமான் சிறியோமை- என தொடங்கி

"பொய்விட்டுடையாள். கழல்புகவே'' என முடியும் முதல் பதிகம் கூறுவது;

கொன்றைமாலையை தலையிலும், பாம்பணியைக் கழுத்திலும் பூண்டவன் சிவபெருமான். அவன் எப்போதும் என் உள்ளத்தி லிருக்கிறான். எம்மை உருகச் செய்கின்றான். எமது பொய்யுடல் தொலைந்து அந்தக் ககனைத் தெய்வத்துடன் பொருந்தும் காலம் வந்துள்ளது. அன்பர்களே நாம் அனைவரும் ஒன்றுகூடி அவனுடைய திருவடியை அடையப் போவோம். இதுவே அதற்குத் தருணமாகும்.

பாடல்: 2

"புகவே வேண்டா புலன்களில் நீர்

புயங்கப் பெருமான் பூங்கழல்கள்'' எனத் தொடங்கி

"தளராதிருப்பார் தாந்தாமே'' என முடியும். இரண்டாம் பதிகம் கூறுவது;

கறைப்பட்ட நம்மையும் பெருமான் ஆண்டுகொள்கி றான். அவனை அடைவதில் ஊக்கம் வேண்டும். புலன்களை அவை போகும் வழியில் விடக்கூடாது. உலகப் பொருட் களை ஒதுக்கித் தள்ளி அவன் திருவடி ஒன்றையே சிந்தியுங் கள்.

பாடல்: 3

"தாமே தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்'' எனத் தொடங்கி

"புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே'' என முடியும் மூன்றாம் பதிகம் கூறுவது;

இறைவனது திருவருளைத் துணையாய்க் கொண்டு அன்பர்கள் தம்மைத் தாமே கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும். இறைவனை மறந்து அகந்தை வளர்ப்பது மயக்கமாகும். அடியார்களோடு வைக்கிற தொடர்பு வாழ்வின் குறிக்கோளாகிய இறைவனிடம் நம்மைக்கொண்டு சேர்க்கும். இவ்வுலக வாழ்க்கை நமக்கு வேண்டாம்.

பாடல்: 4

"அடியாரானீர் எல்லீரும்

அகலவிடுமின் விளையாட்டை'' எனத் தொடங்கி

"பூவார் கழற்கே புகவிடுமே'' என முடியும் நான்காம் பதிகம் கூறுவது;

உலக வாழ்வெனும் விளையாட்டை விடுங்கள். துறத்தல் என்னும் உயர்ந்த இலட் சியத்தைக் கடைப்பிடியுங்கள். அந்தத் துறவு பேரானந்தத்திற்கு இருப்பிடமாகிய இறைவனின் திருவடியில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அவன் நமது தூல சரீரத்தை நீக்கித் தூய உடல் நல்குவான்.

பாடல்: 5

"விடுமுன் வெகுளி வேட்கை நோய்

மிகவோர் காலம் இனியில்லை'' எனத் தொடங்கி

"பொடிசேர் மேனிப் புயங்கன்றன்

பூவார் கழற்கே புகவிடுமே'' என முடியும் ஐந்தாம் பதிகம் கூறுவது;

காமத்தையும் கோபத்தையும் விட்டு விடுங்கள். அவற்றை விடுவதற்கு மேலான காலம் வேறொன்றுமில்லை. அடியார் கூட்டத் துடன் இறைவனின் திருவடி சென்றடைய தீர்மானம் செய்யுங்கள். சிவபுரத்து வாசல் நமக்காய்த் திறந்திருக்கிறது. அவை அடை படுவதற்குமுன் போய்ச் சேருவோம்.

சிவனார் அருகில் சென்று அவனைப் போற்றுவோம்.

பாடல்: 6

"புகழ்மின்றொமின் பூப்புனையின்

புயங்கன்றாளே புந்திவைத்திட்டு'' எனத் தொடங்கி

"நெஞ்சம் உருகி நிற்போமே'' என முடியும் ஆறாம்

பதிகம் கூறுவது;

பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்குங்கள். பூக்களால் அலங்கரியுங்கள். அத்திருவடிகளை மனதில் பதியுங்கள். நம்மைத் துன்பங்கள் நெருங்காது. இடையூறு ஏற்படாது. நாம் சிவபுரத்துள் சென்று மெய்யன்பர் தம்மோடு மனமுருகி நிற்போம்.

பாடல்: 7

"நிற்பார் நிற்க நில்லாவுலகில்

நில்லோம் இனிநாம் செல்வோமே'' எனத் தொடங்கி

"பிற்பால் நின்று பேழ் கணிந்தால்

பெறுவதற்கு அரியன் பெருமானே'' என முடியும் ஏழாம் பதிகம் கூறுவது;

நிலையற்ற உலக வாழ்வை நிலையானது

என்று கருதிக்கொள்வோர் அதில் ஈடுபட்டிருக் கட்டும். நமையாளும் திருமேனியன் பொன்னடிக்கு நாம் விரைந்து செல்வோம். இன்று அதற்காக முயற்சி செய்யாது நிற்பவர் கள் பின்னொரு நாள் அதற்காக வருந்தும்படி ஆகும்.

பாடல்: 8

"பெருமான் பேரானந்தத்துப்

பிரியாதிருக்கப் பெற்றீர்கள்'' எனத் தொடங்கி

"திருமாலறியா திருப்புயங்கள்

திருத்தாள் சென்று சேர்வோமே'' என முடியும் எட்டாம் பதிகம் கூறுவது.

இறைவனுடைய பேரானந்தத்தில் எப்போதும் திளைத்திருக்கும் பக்தர்களே நீங்கள் எது பற்றியும் உலக வாழ்க்கையில் மயக்கம் கொள்ளாதீர்கள். சிவபுரத்தில் செல்ல இது தருணமாகும். திருமாலும் கண்டறியாத சிவனின் பாதம் சென்றடைவோம்.

பாடல்: 9

"சேரக் கருதிச் சிந்தனையைத்

திருந்த வைத்து சிந்திமின்'' எனத் தொடங்கி

"பொய்யிற் கிடந்து புரளாதே'' என முடியும் ஒன்பதாம் பதிகம் கூறுவது;

சிவனைச் சென்றடையும் சிந்தை படைத்தவர் மனதைச் செம்மையாக்கிக் கொண்டு சிந்திக்கவேண்டும். வேல்போலும் கண்ணையுடைய உமாதேவியின் பாகன் வழங்கும் அமுதத்தைப் பெற தனியாத ஆசை கொள்ளுங்கள். நிலையற்ற உலக வாழ்வினின்று நீங்கி சிவபெருமானின் திருவடிமீது பெரு விருப்பம் கொள்ளுங்கள்.

பாடல்: 10

"புரள்வார் தொழுவார் புகழ்வாராய்'' எனத் தொடங்கி

"அந்தோ அந்தோ அந்தோவே'' என முடியும் பத்தாம் பாடல் கூறுவது;

பக்திமீதுள்ள நிலையில் புரள்வதையும் தொழுவதையும், புகழ்வதையும் செய்ய என்ன தயக்கம்? இவற்றைக் கையாளத் தயங்கினால் மயக்கத்தில் மூழ்கிவிடுவீர்கள். அறிவு மயங்கியவர்களை யார் மதிப்பார்கள். நீங்கள் தெளிவுகாண விருப்பினால் சாதனையில் ஈடுபடுங்கள். இப்படிச் செய்யாமல் பரமன் அருளை எப்படிப் பெறுவீர்கள். எண்ணிப் பாருங்கள் மீண்டும் மீண்டும்.

தென்னாருடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

இறைவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாமல் எல்லார் உள்ளத்திலும் தங்கி இருப்பவன். எல்லார் வாழ்விலும் இன்பம் விளையக் காரணமானவர்.