ரத ஸப்தமி 04-2-2025
மனித உயிர்கள் அனைத்திற்கும் கண்ணில் தெரியும் கண்கண்ட தெய்வமாக ஒளிர்வது "சூரியன்'தான்.
இவ்வுலகின் இருளை நீக்கி உலக உயிர்களின் வாழ்க்கைக்கு முக்கிய அம்சமாக சூரியன் திகழ்கிறது.
"ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்...'' என்ற சிலப்பதிகாரப் பாடல் சூரியனின் பெருமையினை பறைசாற்றுகிறது.
சூரிய வரலாறு
தவவலிமை கொண்ட காஸ்யப முனிவரின் மனைவி பெயர் அதிதி. கருவுற்றிருந்த அதிதி தன் கணவர் காஸ்யபருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அவ்வமயம் அந்தணர் ஒருவர் மிகுந்த பசியுடன் வீட்டு வாசலில் நின்று உணவு கேட்டார். கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அதிதி மெல்ல நடந்துவந்து அந்தணருக்கு உணவு தந்தாள். தாமதமாக உணவு தந்ததால் கோபம் கொண்ட அந்தணர். "பசியுடன் இருந்த எனக்கு தாமதமாக உணவு தந்த காரணத்தால் உனது வயிற்றிலுள்ள குழந்தை இறந்து பிறக்கும்'' என்று சாபமிட்டார்.
இதனால் மிகுந்த வேதனையடைந்த அதிதி தன் கணவர் காஸ்யப முனிவரிடம் இதைப்பற்றி கூறினாள். அதைக்கேட்ட முனிவர் "குற்றமில்லாத பெண்ணே நீ கலங்கவேண்டாம் என்றும், அழிவு இல்லாத மைந்தனை நீ பெற்றெடுப்பாய்'' என்று ஆறுதலாய் ஆசியும் வாழ்த்தும் கூறினார்.
காஸ்யபமுனிவரின் ஆசியால் அதிதி அழிவில்லாத ஆதித்தியனை மகனாக ஈன்றெடுத்தாள் என்பது வரலாறு.
சூரியனின் சிறப்புகள்
அயோத்தியில் அவதரித்த இராமபிரான் சூரிய குலத்தை சேர்ந்தவர். சூரிய வழிபாடு செய்துவிட்டு போர்க்களம் சென்று இலங்கேஸ்வரனை போரில் வதம் செய்தார். பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர் சூரியனை அனுதினமும் வழிபட்டு அள்ள அள்ளக் குறையாத உணவளிக்கும்
அட்சய பாத்திரத்தைப் பெற்றாராம். பாண்டவர்களின் தாயான குந்திதேவி சூரியனின் அருட்பார்வையால் வீரத்திலும் தானத்திலும் சிறந்து விளங்கிய கர்ணனை மகனாகப் பெற்றாள்.
ஸ்ரீகிருஷ்ணரின் மகனான சாம்பன் உடல்வலிமை கொண்டவன். ஒருசமயம் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்க வந்திருந்த துர்வாச முனிவரைப் பார்த்து நையாண்டி செய்தான். இதனால் கோபமடைந்த துர்வாச முனிவர் அவனைப் பார்த்து "நீ தொழு நோயாளியாகத் துன்பப்படுவாய்'' என்று சபித்தான். சாம்பனும் தொழுநோயுற்று வாடி ஸ்ரீகிருஷ்ணரிடம் முறையிட்டான். அதற்கு அவர், "நீ நாள்தோறும் சூரிய பகவானை பூஜித்து வழிபாடு செய்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்'' என்றார். அதன்படி சாம்பனும் சூரியனை வழிபட்டு குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.
முப்பெரும் தெய்வங்களின் ஒன்றுபட்ட வடிவமாக சூரியன் திகழ்கிறது. உதய காலத்தில் பிரம்மாவாக, மதிய நேரத் தில் மகேஷ்வரனாக, மாலை வேளை யில் மகாவிஷ்ணுவாக சூரியன் தோற்றமளிக்கிறான். இதனைத்தான்-
"பிரம்ம ஸ்வரூபம் உதயே.
மத்யான வேறது மகேஸ்வரஹர
அஸ்தகாலே ஸ்வயம் விஷ்ணுஹூ
த்ரயமூர்த்தி திவாகரஹ'' என்று ரிக்வேதப்பாடல் கூறி சிறப் பித்துள்ளது.
ஸ்ரீமத் நாராயணனின் கண் ஒளியிலிருந்து அவதரித்த காரணத்தால் "சூரிய நாராயணன்' என்ற பெயரிட்டு வணங்கப்படுகிறார். சூரிய பகவான். ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாக சூரியனைப் போற்றி வணங்கும் நாளாக ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.
எனவே இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் திருமால் சூரியப் பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவார்.
தெற்கு திசையில் பயணிக்கும் சூரியன் வடக்கு திசையில் திரும்பி பயணிக்கும் நாளே' ரத சப்தமி' என்று அழைக்கப்படுகிறது. உத்தராயண காலத்தில் தை அமாவாசைக்கு பின்னர்வரும் ஏழாம்நாளில் "ரத சப்தமி' அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளை "சூர்ய சப்தமி', "அசலா சப்தமி', "பானுசப்தமி', "ஆரோக்கிய சப்தமி' என்றும் அழைப்பதுண்டு.
"ரத சப்தமி' விழா திருப்பதி திருமலையில் வெகுவிமரிசையாக பிரம்மோற்சவம்போல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் திருமலையப்பர் சூரியப்பிரபை வாகனம், சேஷவாகனம் கருட வாகனம், அனுமன் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வபூபால வாகனம் ஆகியவற்றில் தினந்தோறும் பவனி வந்து இறுதியாக சந்திரபிரபை வாகனத்தில் பயணித்து ஏழு வாகன உலாவை நிறைவு செய்கிறார்.
ரத சப்தமி விழா திருமலையில் மட்டு மின்றி ஒரிசாவில் உள்ள கோனார்க், ஆந்திராவில் அரசவல்லி, திருச்சி ஸ்ரீரங்கம், கும்பகோணம் சூரியனார் கோவில், பிகாரிலுள்ள தட்சிணார் கோவில், குஜராத்திலுள்ள சூரியபஹார் ஆலயம், திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஆலயம் அருகில் சூரியக்கோவில் ஆகிய இடங்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உயிர்களை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக மக்கள் மகிழ்வுடன் கொண்டாடும் நன்னாளாக தைப்பொங்கல் விளங்குவதுபோல் ஸ்ரீ மன்நாராயணின் அம்சமாகத் திகழும் சூரியனை "சூரிய நாராயண பகவானாகப் பூஜித்து வணங்கு கின்ற சுந்தரத் திருநாளாக ரத சப்தமி மின்னுகிறது.
இந்நாளில் சூரியநாராயணரைப் பூஜித்து வணங்கி வளமுடன் வாழ்வோம்.