வையின் பயணக் குழுவினர், தங்களது பயணத்தைத் தொடங்குவதற்காக, நேசமணிகள் ஒலி எழுப்பத் தொடங்கின. அதைக் கேட்டு, அப்பயணத்தில் இணைந்து கொள்பவர்களின் கூட்டம், ஔவை இருக்கும் கூடாரத்தைச் சூழ்ந்து வரத்தொடங்கியது. அதேவேளையில், பாண்டிய இளவலின் தலைநகரான மதுரை மாநகரில், கோட்டையின் கிழக்கு வாயிலின் பெருங்கதவுகள் திறக்கப்பட்டன. வாயிலின்முன் குதிரைகள் பூட்டப்பட்ட அரச பண்டார சாத்து வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பயணம் செய்வதற்கு தயார் நிலையில் இருந்தன. குதிரைகளின் கனைப்பு ஒலியும், அவற்றின் நெற்றியிலும் கழுத்திலும் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஓசைகளும், அக்கருக்கல் நேரத்தில் பாண்டியனின் கோட்டை முழுவதும் எதிரொலித்தன.

அந்தச் சாத்து வண்டிகள், பாண்டிய நாட்டின் கிழக்கு திசை யிலுள்ள குடாக் கடலின் துறைமுகப் பட்டினமான மருங்கையை நோக்கிய படி இருந்தன. அரச சாத்து வண்டி களின் இருபுறமும் முன்னும் பின்னும் கொழுத்த கருப்புநிறக் குதிரைகளில் பாண்டிய நாட்டு காக்கு வீரர்களும், வட்டுடை எனப்படும் பாவாடை போன்ற கீழாடையும், மெய்ப்பை எனும் சட்டையும் அணிந்த யவன வீரர்களும், தங்களது உயரமான வெண்குதிரைகள் மீதமர்ந்து அங்கு வந்துசேர்ந்தனர். சங்க காலப் பாண்டியர் காலத்தில், குடாக்கடல் என்றழைக்கப்பட்ட வங்காள விரிகுடாவில், மருங்கை என்ற மருங்கூரில் அழகான துறைமுகப்பட்டினம் இருந்தது. அது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில், சோழ நாட்டு பூம்புகார் துறைமுகப்பட்டினத் திற்கு இணையானதாகவும், பாண்டியனின் இரண்டாம் தலைநகர் எனச் சொல்லும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. பூம்புகாரைக் காட்டிலும் ஒருபடி மேலானதாக, பூம்புகாருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இயங்கிவந்தது. மேலும், இதன் சிறப் பம்சம் என்னவென்றால், இப்பட்டினத் தின் கிழக்குப்பகுதி நெய்தல் நிலமாகவும், மேற்குப்பகுதி வளமிக்க மருத நிலமாகவும் காணப்பட்டது. நெய்தல்பகுதியில் முத்து, சங்கறுத்தல், ஏற்றுமதி- இறக்குமதி வாணிபம் நடந்தது. மேற்குப்பகுதியானது கரும்பு, வாழை, நெல்விளையும் வளமிக்க பகுதிகளைக் கொண்டிருந்தது.

இந்நகரானது, சுற்றிலும் மிக அழகான உயர்ந்த மதில்சுவருடன், திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தெருக்கள் மற்றும் கலைக்கூடங்கள் உடையதாகவும், பல மொழிகள் பேசக்கூடிய உலகின் பல்வேறு பட்ட பகுதிகளிலிருந்து வரும் மாலுமிகள் தங்கும் விடுதிகள் அமையப்பெற்றதாகவும் திகழ்ந்தது. பாண்டிய மன்னனுக்கு மிகவும் பிடித்த விண்ணகரமாகவும் இந்நகரம் விளங்கியது. இது நெல்லூர் என்றும் சாலியூர் எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

எழில் மிகுந்த இத்துறைமுகநகரில் மேல் நாட்டுக் குதிரைகள், சாவக நாட்டிலிருந்து ஐவகை வாசப் பொருள்கள், குணகடல் துகிர் எனப்படும் உயர்தர பவளம், சீனப்பட்டுகள், சாவக வெண் சந்தனக்கட்டைகள், கிரேக்க நாட்டுப் பொன்னாபரணம் போன்றவை சிறப்புமிக்க இறக்குமதிப் பொருட்களாக வந்திறங்கின.

Advertisment

இங்கு சாவகத்தீவுகள் என்று சங்கக் காலத்தில் குறிப்பிடப்பட்ட பகுதிகள், தற்போது கிழக்கிந்தியத்தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. சங்கக் காலத்தில் பாண்டிய இளவல் மணமுடித்து, தனது துணையுடன் நாவாய் பயணமாக, இந்தச் சாவகத்தீவுகளுக்கு சென்றுவருவது வழக்கம். அவ்வாறு மதுரையிலிருந்து பாண்டிய இளவலோடு அங்கு சென்ற தமிழர்கள், இயற்கை எழில்மிக்க ஒரு தீவில் குடியேறினர்.

சங்கக் கால மதுரை மக்கள் குடியேறிய அத்தீவானது, மதுரா என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. மணிமேகலையில் இதை ஆபுத்திர நாடு என்று சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். இங்கிருந்து பாண்டிய நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐவகை வாசப் பொருட்களான குங்குமப்பூ, தக்கோலம், கிராம்பு, சாதிக்காய், கற்பூரம் ஆகியனவும், வாசனைமிக்க உயர்வகை வெண் சந்தனமரங்களும் இங்குதான் விளைந்தன. பாண்டியன் நெடுஞ்செழியன் இவ்வகைச் சந்தனத்தை மட்டுமே பயன் படுத்தியதாகக் கூறுவர்.

சங்க காலத் தில் பாண்டிய நாட்டிற்கு சீனர் கள் வரமாட்டார் கள். சீனநாட்டில் நெய்யப்பட்ட பட்டாடைகளை சாவக நாட்டுத் துறைமுகம்வரை கொண்டுவந்து இறக்கு மதி செய்வார்கள். பாண்டிய நாட்டு கடல் வாணிபம் செய்யும் வணிகர்கள்.

Advertisment

அங்கு சென்றுதான் சீனப் பட்டாடைகளை வாங்கி. மருங்கூரில் இறக்குமதி செய்வார்கள். இந்தச் சீனப் பட்டாடைகள். பாண்டிய மன்னனின் அரண்மனை மேல்மாடங்களையும், பாண்டியனின் அவைக்களத்தையும் திரைச்சீலைகளாக அலங்கரித்தன.

பாண்டிய நாட்டு மாலுமிகள் பெரிய நாவாய்களை "கொண்டல்' எனப் படும் கீழக்கடல் காற்றின் உதவியால் சாவகத்தீவிற்கு ஓட்டிச்செல்லும் திறமை படைத்தவர்கள். இவர்களுக்கு மீகாமர்கள் என்று பெயர். பெரு நாவாய்களில் சென்று கடல் வாணிபம் செய்தவர்களை சங்கக் காலத்தில் மாநாவிகன் என்று அழைத்தனர்.

ss

இவர்கள் பின்னாளில் மாநாய்கன் என மருவி அழைக்கப்பட்டனர்.

இவர்களால் கொண்டுவரப் பட்ட அரிய வாணிபப் பொருட்களை வாங்கி, தரைப் பயணமாகச் சென்று வாணிபம் செய்துவந்த பெருவணிகர்களை மாசாத்து வர்கள் என்பர். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட வணிகர் களில். கண்ணகியின் தந்தை ஒரு கடல் வணிகர் என்ற பொருளில் மாநாய்கன் என்றும் கோவலனின் தந்தை பெரிய தரைப்பயண வணிகர் என்ற பொருளில் மாசாத்துவன் எனவும் பின்னாளில் எழுதப்பட்ட சிலப் பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகி றார்.

இப்பேர்ப்பட்ட எழில்மிகுந்த மருங் கூருக்கு பாண்டிய இளவலின் அம்மான், தன் வீட்டுச் சீதனமாக கிரேக்க பொன் ஆபரணங்களையும், குதிரைகளையும், வெண்சந்தனம், குணகடல் துகிர், சீனப் பட்டாடைகள் முதலானவற்றையும் இறக்குமதி செய்து இளவலுக்கு அளிப்பதற்கு, மதுரைத் தலைநகரிலிருந்து புறப் படத் திட்டமிட்டு, இரவோடு இரவாக, தன் அரண்மனை யிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந் தான். தன்னுடன் ஐந்து மெய்க்காப்பாளர் களையும் உடனழைத்து குதிரை யில் பயணித்திருந்தான். மதுரையின் கிழக்கு கோட்டை வாயிலை அவர்கள் நெருங்கியபோது, அவர்களது குதிரையை நிறுத்தி வெண் சங்கம் முழங்கினர். பாண்டி யப் பேரரசின் தளபதியை "பழையன் மாறன் வாழ்க வாழ்க' என்று பாண்டிய நாட்டு காக்கு வீரர்கள் முழக்கமிட்டனர்.

ஆறு குதிரைகளில் ஒரு குதிரை மட்டும் கோட்டை நுழைவாயிலுக்குள் சென்றது.

அதில் கம்பீரமாக சிறிதும் பயணக்களைப் பின்றி பழையன் மாறன் தன் குதிரையிலிருந்து கீழே குதித்தவுடன், காக்குவீரர்கள் இருவர் தங்களின் குதிரைகளிலிருந்து கீழே இறங்கி வந்தனர். அவர்கள் கைகளில் இருந்த தீவெட்டி வெளிச்சத்தில் சாத்து வண்டிகளின் கதவைத் திறந்து, அதிலிருக்கும் பொருளைப் பழையன் மாறனிடம் காட்டினர். ஒவ்வொரு வண்டியிலும் ஒவ்வொரு நிற ஒளிவீசும் பெரிய பெரிய பொருட்கள் இருந்தன.

கிரேக்க நாட்டிலிருந்து பொன் ஆபரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், அதற்கு ஈடாக மதுரைக்கு மேற்குப் பகுதி மலைகளிலிருந்து எடுக்கப்பட்ட நீலக்கல், பச்சை, மஞ்சள், பழுப்பு, சிவப்பு நிறக் கற்களையே தரவேண்டும். இக்கற்களாலான பொருட்களுக்கு கிரேக்க நாட்டில் மதிப்பு அதிகம். தற்போது உள்ள வைகை ஆற்றின் பிறப்பிடமான வருச நாட்டு மலைப் பகுதிகளில் கிடைக்கும் பச்சை மற்றும் நீலக்கற்களை, கிரேக்க நாட்டில் "அக்குவாமெரின்' என்று இரண்டாயிரம் வருடங் களுக்குமுன்பே அழைத்த னர். இதன்பொருள், கடல் நீரை ஒத்த நிறமுடையவை என்பதாகும். இன்றும் இதே பெயரில்தான் இக்கற்கள் அழைக்கப்படுகின்றன. தற்போதுள்ள கொடைக்கானல் பகுதியில் சிவப்புக் கற்கள், சேலம் பகுதியில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறக் கற்கள், விருதுநகர் அருகே கோபால சாமி மலை அருகே கார்னெட் என்று அழைக்கப்படும் கருஞ்சிவப்புநிறக் கற்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே அம்மலைப் பிரதேசத்தில் வாழும் பலிக்கர், முத்தரையர், மலைவேடர்கள் போன்ற பழங்குடியினர்களால் வெட்டி யெடுக்கப்பட்டு, பாண்டியன் தலைநகருக்குக் கொண்டுவரப்பட்டன. மதுரைக்கு மேற்கு திசையில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏகன் ஆதன் கோட்டம் என்ற பெயரில் தொன்றுதொட்டு விளங்கிவரும் குருகுலத்தில். இக்கற்களை சிலை, ஆபரணம், துளைகளிட்டு மணிகள் செய்த ஆபரணங்கள், ஆரங்கள் செய்யக் கற்றுத் தந்தமைக்கான ஓலைச்சுவடி ஆதாரங்கள் இன்றும் உள்ளன.

இக்கற்களாலான அழகு சாதனப் பொருட்களை கிரேக்கர்கள் மிகுந்த அளவில் விரும்பியதால், பழையன் மாறன் இக்கற்களால் செய்யப்பட்ட பொருட்கள் நிறைந்த வண்டிகளைப் பார்வையிட்டான். இவற் றிற்குப் பண்டமாற்றாக சாதரூபம், சாம்பூநதம், கிளிச்சிறை, ஆடகம் போன்ற தூய்மையான கிரேக்க நாட்டுப் பொன்வகைகளை வாங்கிவரவே, இப்பயணத் திற்குக் கடுங்காவலுடன் புறப் படத் தயாரானான்.

இளவலின் மணவிழா முடிந்தபின், விருந்தோம்பலுக்கு இளவல் தன் அரண்மனைக்கு வந்து தங்கும்போது, அரண்மனையில் காற்றோட்டம் சிறப்பான தாகவும் குளிர்ச்சி பொருந்தியதாகவும் இருந்திட, காலதர்கள் பொருந்திய மேல்மாடம் சுவருக்குள் நாளோலக்கம், மேல்மாட சுற்றுத் திண்ணை, இடைச்சுழி, ஈர்சுவர் நடுவே ஆற்று மணல் நிரப்பப்பட்டு கட்டப்பட்ட குளிர் பொருந்திய பள்ளியறை, நிழல்காண் மண்டிலங்கள், வயங்கு மணி, பாண்டில் போன்ற கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒப்பனை செய்வதற்குப் பயன்படும் அறைகள், தெருக்களின் நடுவே நீர்குழாய் ஆற்றிலிருந்து நீர்வர ஆழமாக உருவாக்கப்பட்டு அரண்மனைக்குள் தாழ்ந்த பகுதியில் மீனத்தின் வாயிலிருந்து பீச்சிடும் நீர்க்கன்னல்கள் பொருந்திய நீராடும் குளிர் பொழில்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்ட இறந்த யானைத்தந்தங்களால் உருவாக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுமிக்க இருக்கைகள், பெண்களின் மார்பை ஒத்த குமிழ்களுடையதும், அவற்றில் பொன் இழைத்து ரத்தின மணிகள் பதித்ததுமான, கருமருத மரத்தினால் செய்யப்பட்ட சாய்வு மேடைகளின் மீது மென்மையான அன்னத் தின் சிறகுதிர்வுகள், வடநாட்டுக் "கவரிமா' என்ற விலங்கின் மயிருதிர்வுகள், இவற்றோடு இலவம் பஞ்சுநூலால் நெய்யப்பட்ட மெத்தைகள், ஊஞ்சல்களுமுடைய புதிய கட்டுமான வேலைகளை, இப்பயணத்திற்கு ஆயத்த மாகும் கணப்பொழுது வரை இரவு- பகல் பாராமல் செய்து முடித்துவிட்டு, பழையன் மாறன் இங்கு வந்து சேர்ந்துள்ளான்.

இளவலின் தந்தைக்கு, தன் தமக்கையை மண முடித்த காலம் தொட்டு பாண்டியனின் நிழலாக இருந்து, தன் மருமகன் தன் மகளுக்கு அவனது மனப் பேரரசின் துணையாக்க ஆயத்தமான தருணத்திலிருந்து, தன் வயது மூப்பையும் பொருட் படுத்தாமல், இளவலைத் தன் உடலுக்குள் இருக்கும் உயிராக நேசித்து பழையன் மாறன் இயங்கிக் கொண்டிருந்தான். திருமணம் முடிந்தபின் இளவல் தன் மகளோடு அழைத்துவரக்கூடிய அத்தனை மாந்தர் களுக்கும் தன் மனையில் விருந்தோம்பல் செய்து, அவர்கள் அனைவருக்கும் பூவேலைப் பாட்டுடன் கூடிய அழகிய நிறச்சாயங்கள் ஏற்றப்பட்ட பருத்தித் துணிகள், அழகிய புட்ட கங்கள் (சேலைகள்), அறுவைகள் (வேட்டி கள்), இடைக்கும் தலைக்கும் கட்டுவதற்கான கச்சைகள், இடையிலும் மார்பிலும் அணியும் மிருதுவான ஈரணிகள், உடல் முழுமைக் கும் சுற்றிக்கொள்ளும் அளவிற்கு நீளமான மெய்யாப்புகள் போன்றவற்றை தனது காருகர்கள் (இங்கு காருகர் என்பது சங்கக்கால பாண்டிய நாட்டு நெசவாளர்களைக் குறிக்கும் சொல்) இடைவிடாது தயாரித்து முடிக்கப் போதுமான வசதிகளை செய்து கொடுத்துவிட்டு, இரவோடு இரவாக இங்கு வந்துசேர்ந்தான்.

இளவலின் துயில் களையாமல் இருக்கும் படி, தன்னை வழியனுப்ப வந்த தலைமை அகப்படைத் தலைவனிடம் கூறிவிட்டு, பழையன் மாறன் பாண்டியன் கோட்டையை விட்டு செல்லச்செல்ல.. பகைவர்களோ கோட்டையை நோக்கி...?

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்