பாண்டிய மன்னரின் படைத் தளபதியான பழையன் மாறனின் சாத்துவண்டிக் குழு கடற்கரைத் துறைமுகப்பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சங்ககாலப் பாண்டியர் களின் ஆட்சிக்காலத்தில், பாண்டியர்களின் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தடையும் வெளிநாட்டைச் சேர்ந்த பெரிய பாய்மரக் கப்பல்கள், அவற்றிற்குரிய இடங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அவற்றிலிருந்து அக்கப்பல்களின் மாலுமிகள் எனப் படும் திரைமீளர்களும், பாய்மரத் திரைச் சீலைகளை கப்பல்களில் இருக்கும் உயரமான கம்பங்களில் ஏறிக் கட்டும் திறன் படைத்த மரக்காயர்களும், வெளிநாடு களிலிருந்து வாங்கிவந்த பொருட்களை பாண்டியப் பேரரசிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் மாநாய்கர்களும், கரை வந்து சேர்ந்தவுடன் தங்கள் கடற்பயணம் வெற்றி யடைந்ததை நினைத்து கடல் தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் வகையிலும், தற்போது பாண்டியப் பேரரசின் மண்ணிலிருந்து தங்களின் கடல் வணிகத்திற்காக அயல் நாடுகளுக்குச் செல்ல விருக்கும் திரைமீளர் கள், மரக்காயர்கள், மாநாய்கர்கள் தங்களது கடற்பயணம் வெற்றி யடைய வேண்டியும், கடற்தெய்வத்தை வணங் கும் முந்நீர்ப்பெருவிழா எனும் வழிபாடு, கீழைக்கடற்காற்று வீசும் ஒவ்வொரு பருவ காலத்திலும் சிறப் பாக நடைபெற்றுவருவது வழக்கமாக இருந்தது.

Advertisment

mm

இங்கு குறிப்பிடத்தக்கது, மரக்காயர் என்பவர்கள் தற்போது நாடார் எனும் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற்காலத் தில் கன்னியாகுமரி மற்றும் கேரளப் பகுதிகளில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்கொள்ளப்பட்டு அவற்றிலிருந்து வெளிவர, தங்களை இஸ்லாமிய மதத்திற்குள் இணைத்துக் கொண்டவர்களாயினர்.

Advertisment

இவ்விழா பெரும்பாலும் பாண்டியப் பேரரசனின் முன்னிலையில்தான் நடக்கும். இந்தமுறை பாண்டிய இளவ லின் முடிசூட்டு விழாவும், அதனைத் தொடர்ந்து அவனது மணவிழாவும் நடக்கவிருப்பதால், இளவலின் பிரதிநிதி யாக பாண்டியனின் படைத்தளபதி இவ் விழாவில் கலந்துகொள்ள வேண்டுமாய், பேரரசியாரின் கட்டளையின் பேரில் தான் பழையன் மாறனின் இப்பயணம் அமைந்திருந்தது.

மாறனின் சாத்துக்குழுவானது அன்றைய முற்பகல்வேளையில், அத்துறைமுகப் பட்டினத்தின் மேற்குப் பகுதியான மருதநிலப் பகுதியை அடைந்தது. நகரத்தில் நுழையும்போது பழையன் மாறன், தன் குதிரையிலிருந்து இறங்கிக்கொண்டான். தனது பாண்டியப் பேரரசன் உயிருடன் இருந்த போது, அவருடன் சேர்ந்து அவரது வசந்த மாளிகையில் நடந்த முந்நீர்ப் பெருவிழாவின்போது அவரது நிழலாக இருந்த பழைய நினைவுகள், பழையன் மாறனின் நெஞ்சைப் பிழிந்தது. அவன் குதிரையைவிட்டு இறங்கியதைப் பார்த்து அவனோடு வந்த மற்ற குதிரை வீரர்களும் தங்கள் குதிரைகளிலிருந்து இறங்கி, அவற்றின் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டு நடக்கலாயினர்.

Advertisment

அந்நகரத் தெருக்களில் வளம்படைத்த மருதநில வீட்டுப் பெண்களிடம், நெல் பொதிகளுக்கு ஈடாக உப்புப் பொதி களை கழுதைகளின்மீது ஏற்றிவந்து கொடுக்கும் பரதவர்களும், தேனைப் பண்டமாற்றாகக் கொடுத்து நெல்லை வாங்கவந்த குறிஞ்சியின் வேட்டுவர் களும், தயிர், நெய் கலயங்களைக் கொடுத்து நெல் வாங்கவந்த முல்லைநில இடைச்சியர்களும் வரிசையாக எதிர்ப் படுவதைப் பார்த்தவண்ணம் நடந்து வந்து கொண்டிருந்த பழையன் மாறனின் பின்புறம், இரண்டு குதிரைகள் மிகுந்த வேகத்துடன் வந்து திடீரெனத் தங்கள் முன்னங்கால் களைத் தூக்கிக் கனைத்தன.

அதைக் கவனித்துவிட்ட மாறன், தன் உடைவாளை அதன் உறையிலிருந்து உருவி, அவற்றின் பக்கம் திரும்பி இரண்டடி பின்னோக்கி நகர்ந்து, அவற்றின் முன்னங்கால் களை வெட்டுவதற்கு ஆயத்தமானான். அதைக் கண்டு அக்குதிரைகள் மீதிருந்த வீரர்கள் இரு வரும் "நாங்கள் பாண்டிய நாட்டு ஓலை தாங்கி கள். தங்களைக் காண சந்தையூரிலிருந்து வரு கின்றோம். வேகமாக வந்த நாங்கள், தங்களைப் பார்த்தவுடன் குதிரை களை சட்டென நிறுத் தியதால், அவை இவ்வாறு செய்துவிட்ட எங்களை மன்னியுங்கள்.' எனக் கூறிக்கொண்டே குதிரைகளை விட்டு குதித்திறங்கி வணங்கி நின்றனர்.

அதைக்கேட்ட மாறன் "இதற்கேன் இவ்வளவு வேகம்? என்ன செய்தி கொண்டு வந்துள்ளீர்கள்? இது யாரிடமிருந்து வந்துள் ளது?' என்று வினவினான். "உங்கள் இல்லத் திற்கு வருகைதரும் ஔவையிடமிருந்து இச்செய்தியைக் கொண்டுவந்துள்ளோம்' எனக்கூறி, தங்களிடமிருந்த ஓலைச்சுருள்கள் இருக்கும் மூங்கில் குழாய்களை தளபதியிடம் நீட்டினார்கள். அக்குழாய்களிலிருந்து பக்குவ மாக அவ்வோலைகளை வெளியிலெடுத்த மாறன், அதனைப் படிக்கப்படிக்க, அவனது கண்கள் விரிந்து சிவந்தன.

மாறன் தனது வீரர்களிடம் "சோழ நாட்டிலிருந்து வந்திருக்கும் மாசாத்துவக் குழுக்களில் எத்தனைபேர் இருந்தாலும், அவர்களை உடனே கைது செய்யுங்கள். அவர்கள் இந்த நகரத்தை விட்டுத் தப்பித்துவிடக்கூடாது' என்று கட்டளையிட்டான். நமது சாத்து வண்டிகளைப் பத்திரமாக பாண்டிய அரச மாளிகைக்குள் கொண்டுசென்று வாயிற்கதவுகளைப் பூட்டிவிடுங்கள். மற்ற வீரர்கள் என்னோடு வாருங்கள்' எனக் கூறிக்கொண்டே, தனது குதிரையின்மீதேறி, துறைமுகத்தை நோக்கி விரைவாகச் செலுத்தினான். அவனைத்தொடர்ந்து அவனது வீரர்களும் தங்கள் குதிரைகளை விரைவாக செலுத்தி பின்தொடர்ந்தனர்.

ss

குதிரைகள் விரைவதைக் கண்ட மருதநில நகர வீதிகளில் இருந்த மக்கள், ஏதோ நடக்கப்போகிறது என்று அஞ்சி, வீறிட்டு ஓடி, தங்களது வீட்டிற்குள் நுழைந்து தாழிட்ட னர். அங்கிருந்த தெருப் போக்கர்களை மிதித்து விடாமல், வீரர்கள் அனைவரும் கவனமாக தங்களது குதிரைகளைச் செலுத்தி னர். துறைமுகத்திலிருந்து வெளிவரும் பகுதியிலிருந்த பாண்டியனின் சுங்கச் சாவடியை அக்குதிரைகள் வந்தடைந்தன. "இதன் வாயிற்கதவுகளை அடையுங்கள். வெளிநாட்டிலிருந்து வந்திறங்கியிருக்கும் குதிரைகள் இருக்கும் லாயங்கள் அனைத்தையும் பூட்டுங்கள்' எனத் தொடர்ச்சியாகக் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டே துறைமுகத்திற்குள் நுழைந்தான் பழையன் மாறன்.

"வெளிநாட்டுப் பொருட்களை வாங்க வந்திருக்கும் மாசாத்துவான்கள் தங்கியிருக்கும் விடுதிகளின் வாசலில் ஒவ்வொரு குதிரை வீரர்களும் நின்று, அவர்களை துறைமுகத்திற்குள் போகாதவாறு நிறுத்துங்கள். இங்கு அனுதினமும் காவல்புரியும் பாண்டிய நாட்டு வீரர்கள் அனைவரையும் இங்குவந்து ஒன்றுகூடச் செய்யுங்கள்' எனப் பழையன் மாறன் கட்டளையிட்டான். அதனைக் கேட்ட பெரும்பறையர்கள், தங்களின் பறைகளை ஆபத்தான அவசரகாலம் என்பதை உணர்த்தும் வகையில் இசைக்கத் தொடங்கினர்.

அப்பறை ஓசை கேட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட துறைமுகக் காவல் வீரர்கள் விரைந்து வந்து குவியத் தொடங்கினர். பாண்டியப் பேரரசின் படைத்தளபதி அங்கு வந்திருப்பதைப் பார்த்தவுடன், அவனுக்கு முன்பாக அனைவரும் தலைவணங்கி வரிசையாக நின்றனர். "முந்நீர்ப் பெருவிழாவிற்கு வந்திருக்கும் பாணர்கள், விரலியர்கள், நடனமாந்தர்கள், அலங்காரகைகள் போன்ற அனைவரையும் கைதுசெய்து ஒரு மாளிகையில் அடையுங்கள்' எனத் தளபதியார் உத்தரவிட்ட மறுகணமே, வீரர்கள் அனைவரும் மேற் சொன்னவர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களைச் சுற்றிவளைத்தனர்.

தன் மெய்காப்பாளர்களை அழைத்து "இந்நகரைக் காவல்புரியும் யவன வீரர்களை இத்துறைமுகத்தில் நிற்கும் அனைத்து மரக்கலன்களின் திரைமீளர்களையும் மரக்காயர்களையும் கைதுசெய்து, எந்த மரக்கலன்களும் இத்துறைமுகத்தைவிட்டு நகராதபடி காவல்புரியச் செய்யுங்கள்' எனக் கூறிக்கொண்டே, மாசாத்துவர்கள் தங்கியிருக்கும் சத்திரங்களை நோக்கி விரைந்தான் தளபதி பழையன் மாறன்.

தன் வீரர்கள் அனைவரையும் குதிரை களோடு அச்சத்திரங்களைச் சுற்றி வளைத்து நிற்கச்செய்த பழையன் மாறன், தன்னுடன் இரண்டு திறமைமிக்க வீரர்களை அழைத்துக்கொண்டு, ஒவ்வொரு சத்திரமாக நுழைந்து தேடினான். அப்போது, ஒரு சத்திரத்தின்மேல் முற்றத்திலிருந்து ஒருவன் பின்புறமாகக் குதித்து ஓடலானான். குதிரை வீரர்கள் அவனைச் சுற்றிவளைத்துத் தூக்கினார்கள். தன் இடது கையால், தான் இடையில் செருகியிருந்த குறுவாளை உருவி, தன் கழுத்தை அறுக்க அவன் முற்பட்டான். வீரர்கள் அவனது இரு கைகைகளையும் பிடித்து பின்புறம் திருகி, பழையன் மாறனிடம் இழுத்துவந்தனர்.

மாறன் அவனை மேலும் கீழும் உற்றுநோக்கி, தன் உடைவாளால் அவனது இடைக்கச்சையில் செருகி அதை அறுத் தெறிந்தான். அவனது இடைக்கச்சைக்குள் கட்டியிருந்த வலைப்பை அறுந்து பொற்காசுகள் உதிர்ந்தோடின. "நீ யார்? ஏன் இவ்வளவு பொற்காசுகளை வைத்திருக்கின்றாய்? இங்கு எதை வாங்குவதற்காக வந்திருக்கின்றாய்?' என வினவிக் கொண்டே, அவனது இடது காது மடலை தன் வாளால் மாறன் அழுத்தினான்.

மாறனின் விரைவான செயலைக் கண்டு அஞ்சிய அம்மனிதன், "குதிரைகள் வாங்கவந்தேன்' எனக் கூறினான். "உனக்கும் குதிரை வணிகத்திற்கும் எந்தவிதத்திலும் பொருத்தமில்லாமல் உள்ளது? நீ யார்? உன்னோடு எத்தனைபேர் வந்துள்ளனர்? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?' எனப் படைத்தளபதி கோபத்துடன் கேட்டான். அதற்கு எந்தப் பதிலையும் கூறாமல் அவன் நின்றான். மாறனின் கோபம் உச்சமடைந்தது. அவனது வாள் அம்மனிதனின் ஒரு காது மடலை அறுத்தெறிந்தது. "ஐயோ, சொல்லிவிடுகிறேன். நான் வேளிர்நாட்டவன். என்னுடன் 50 பேர் வந்திருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் அதோ மூன்றாவதாக நின்றுகொண்டிருக்கும் சோழநாட்டு மரக்கலனுக்குள் இருக்கின்றனர். இங்கு வாங்குகின்ற குதிரைகள் அனைத்தை யும் அம்மரக்கலனில் ஏற்றி, சோழநாட்டிற் குக் கொண்டுசெல்ல வந்துள்ளாம்' என்றான்.

பழையன் அவனிடன் "சோழனுக்கும் வேளிருக்கும் என்ன தொடர்பு?' என்றான். அதற்கு அம்மனிதன் "சோழ மன்னனோடு சேர்ந்து வேளிர் மன்னர்கள் பாண்டிய நாட்டின்மீது போர் தொடுத்து, எங்கள் கூடல் நகரை மீட்கவிருக்கிறோம். மதுரை எங்களுடைய மண். அதனை மீட்டெடுக்க எங்கள் மன்னர் உறுதிபூண்டுள்ளார்' என்றான். "உங்கள் மன்னர் யார்?' என பழையன் மாறன் கேட்டவுடன், அம்மனிதனின் வாயிலிருந்துவந்த பெயரைக் கேட்டு, பழையன் ஒரு கணம் அதிர்ச்சியுற்று நின்றான்.

அம்மனிதனிடமிருந்து வெளிப்பட்ட அந்த வார்த்தையுடன், வரும் இதழில்..

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்