பாண்டீர்வன் மந்திர்...
இந்த ஆலயம் உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுரா மாவட்டத்தில் இருக்கிறது. இந்த ஆலயம் இருக்கும் இடத்தின் பெயர் மாண்ட்.
பகவான் கிருஷ்ணருக்கும் அன்னை ராதாவிற்கு மான ஆலயமிது.
இந்த ஆலயம் இருக்கும் இடத்தைச் சுற்றி பாண்டீர்வன் என்ற அடர்ந்த வனம் இருக்கிறது.
இந்தக் காடும், ஆலயமும் மிகவும் புகழ் பெற்றவை.
"பிரம்மவைவார்த்த' என்ற புராண நூலிலும், "கார்க் சம்ஹிதா' என்ற நூலிலும் இந்த இடத்தில் கிருஷ்ணருக்கும் ராதாவிற்கும் திருமணம் நடைபெற்றது என்றும், அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர் பிரம்மா என்றும் கூறப்பட்டிருக்கிறது. பிரம்மா வேத மந்திரங்களை உச்சரித்து, சடங்குகளைச் செய்து அந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி- மார்ச் மாதங்களில் "புலேரா தூஜ்' என்றொரு விசேஷ நாள் வரும். அந்த நாள் இந்த ஆலயத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ராதாஷ்டமி, சரத் பூர்ணிமா ஆகிய நாட்களிலும் இந்த ஆலயத்தில் ஏராளமான கூட்டம் இருக்கும்.
இந்த ஆலயத்தில் பகவான் கிருஷ்ணர், ராதாவின் நெற்றியில் செந்தூரம் வைக்கும் சிலை இருக்கிறது. இந்து மத திருமணத்தில் இது மிகவும் முக்கியமான விஷயம்.
ஆலயத்திற்கு அருகில் 'வேணுகூப்' என்ற பெயரில் ஒரு கிணறு இருக்கிறது. அந்த கிணற்றை பகவான் கிருஷ்ணர் தன் புல்லாங்குழலை பயன்படுத்தி உண்டாக்கியதாக வரலாறு.
இங்கு ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது.
அந்த ஆலமரத்திற்கு அடியில்தான் கிருஷ்ணருக்கும் ராதாவிற்கும் திருமணம் நடந்திருக்கிறது.
இங்கு பலராமருக்கும் ஒரு ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயம் இருக்கும் இடத்தில்தான் மாடுகளை மேய்க்கும் தன் நண்பர்களுடன் கிருஷ்ணர் விளையாடியிருக்கிறார். உணவு சாப்பிட்டிருக்கிறார்.
இங்கு கிருஷ்ணருக்கும் ராதாவிற்கும் திருமணம் நடைபெற்ற சமயத்தில் அங்கு இருந்தவர் பிரம்மா மட்டுமே. அவரைத் தவிர, கிளி, மயில், பசு, குரங்குகள் ஆகியவையும் சாட்சிகளாக இருந்திருக்கின்றன.
இந்த ஆலயத்தைப் பற்றி உள்ள ஒரு கதை இது...
கிருஷ்ணரின் தந்தையான நந்தபாபா மேய்ப்பதற்காக மாடுகளுடன் இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார்.
இங்கிருக்கும் ஆலமரத்திற்குக் கீழே அவர் அமர்ந்திருக்க, பலமான புயல் அடித்திருக்கிறது. பொழுதும் இருண்டிருக்கிறது.
அவருடன் சிறுவனான கிருஷ்ணரும் இருந்திருக்கி றார்.
புயலால் தன் மகனுக்கு ஏதாவது பாதிப்பு உண்டாகி விடக்கூடாது என்று அவர் பயந்திருக்கிறார்.
தான் பயத்தால் நடுங்குவதைப் போல காட்டிக் கொண்ட கிருஷ்ணர், தன் தந்தையை கட்டிப் பிடித்திருக் கிறார்.
அப்போது தந்தை நந்தனின் கண்களில் ராதா தெரிந்திருக்கிறாள்.
புயலைப் பற்றிய எந்த அச்சமும் இல்லாமல் நடந்து வரும் அந்த அழகு தேவதையைப் பார்த்து வியந்திருக் கிறார் நந்தன்.
"பெண்ணே... இந்த குழந்தையை நீ வைத்திரு. இவனுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, இவனைக் கொண்டுபோய் தாய் யசோதையிடம் கொடு'' என்று கூறிய நந்தன், பாலகனாக இருந்த கிருஷ்ணரை ராதாவிடம் தந்திருக்கிறார்.
கிருஷ்ணரை சந்தோஷத்துடன் வாங்கியிருக்கிறாள் ராதா. அப்போது அவளின் கண்களில் ஒரு அரண்மனை தெரிந்திருக்கிறது.
அந்த அரண்மனை நவரத்தினத்தால் ஒளிர்ந்திருக் கிறது.
அந்தச் சமயத்தில் ராதாவின் இடுப்பிலிருந்த கிருஷ்ணர் மறைந்து விடுகிறார். அதற்குப் பதிலாக அவளுக்கு முன்னால் ஒரு இளைஞராக அவர் நின்றிருக்கிறார்.
பலவகையான ரத்தினங்களைக்கொண்ட மகுடத்தை அந்த இளைஞர் அணிந்திருக்கிறார். அந்த இளைஞர், பகவான் கிருஷ்ணர்தான் என்பதை அறிந்து கொள்கிறாள்.
ராதாகிருஷ்ணரும் ராதாவும் அமர்ந்து அங்கு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். "நாம் இருவரும் தனித்தனியாக இருந்தாலும், ஒரு உடலின் இரு பகுதிகள்தாம் நாம்'' என்று கூறுகிறார் கிருஷ்ணர்.
"உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது'' என்று ராதா கூற, "சிறிது பொறுத்திரு. அதற்கான காலம் வரும்'' என்றார் கிருஷ்ணர்.
அப்போது திடீரென அங்கு பிரம்மா தோன்றினார். அவர் இரு மாலைகளை அங்கு வரும்படி செய்தார். நெருப்பை அங்கு எழச் செய்தார். அங்கு அமர்ந்து வேத மந்திரங்களைக் கூறினார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணருக் கும் ராதாவிற்கும் அங்கு திருமணத்தை நடத்திவைத்தார். அந்த திருமணம் "கந்தர்வ திருமணம்' என்று அழைக்கப் படுகிறது.
அப்போது கிருஷ்ணரும் ராதாவும் பாடி, ஆடினர்.
மீண்டும் கிருஷ்ணர் குழந்தை வடிவத்தை எடுத்தார். பாலகிருஷ்ணனை ராதா, யசோதையிடம் ஒப்படைத்தார்.
இந்த இடத்தில்தான் பிராலம்பா என்ற அரக்கனை கிருஷ்ணரின் அண்ணனான பலராமன் வதம் செய்ததாக வரலாறு கூறுகிறது.
மதுரா ரயில் நிலையத்திலிருந்து இந்த ஆலயம் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சென்னையிலிருந்து மதுராவிற்குப் பயணிக்கும் நேரம் 32 மணிகள். பயண தூரம் 2,187 கிலோமீட்டர். டில்லியிலிருந்து மதுரா 165 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சென்னையிலிருந்து தினமும் மதுராவிற்கு ரயில் இருக்கிறது.