"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்னும் கோஷத்துடன் பக்தர்கள் ஆர்வமாக மலையேறிக் கொண்டிருக்கி றார்கள். அங்கே இயற்கை மூலிகைகள் செழுமையாக முளைத்துக் கிடக்கின்றன. "குறிஞ்சிநிலக் கடவுளாம் குமரன் அருள்தரும் இந்த மலையில் பற்பல அற்புதங்களைக் காணலாம்' என்கிறார்கள் இங்குவரும் பக்தர்கள். மந்திரகிரி என்னும் பெயருடன் அழகனின் ஆதிபடைவீடான இம்மலை கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.

பொதுவாக கையில் சேவற்கொடியும் வேலும் ஏந்தியிருக்கும் முருகன், இந்த தலத்தில் சேவலை மட்டும் தனித்து ஏந்திய படி காட்சிதருகிறார். அருணகிரிநாதர் தன் திருப்புகழில், "செஞ்சேவற் செங்கையுடைய சண்முக தேவே' என்று பாடுகிறார். "செண்டாடி அசுரர்களை வென்றானை அடியர் தொழ தென்சேரியில் வரு பெருமாளே' என்று புகழ்ந்துரைக்கிறார்.

t

முருகப்பெருமான் சூரர்களை வதம்செய்யப் புறப்பட்டுவிட்டபோது, பார்வதிதேவி சிவபெருமானிடம், "நம் குழந்தையான முருகன் சிறு பாலகனாயிற்றே. எதிர்த்துவரும் சூரர்கள் மாயை செய்வதில் வல்லவர்கள். எனவே அசுரர் களை வெல்ல முருகனுக்கு சத்ரு சம்ஹார மந்திரத்தை உபதேசம் செய்த ருள வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டாள்.

Advertisment

அதற்கு பரமேஸ்வரன், "தர்பைப்புல், கங்கை தோன்று கின்ற இடமாகவும், மகாவிஷ்ணுவுக்கு தீட்சையளித்த இடமாகவும், வேதங்கள் அனைத்தும் கடம்ப மரங்களாகவும் காட்சி தரும் மந்திரமலை என்னும் தென்சேரிமலை யில் நின்று, அந்த மகா மந்திரத்தை உபதேசம் செய்கிறேன்'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

மந்லி மனதில் நினைப்பவரை; திரலி காப்பாற்றக்கூடிய; கிரிலி மலை. இங்கே முருகனை வணங்கி நின்றால் வாழ்வும் மழைபோல் உயர்கிறது. இதற்காகவே முருகப்பெருமான் ஆகாயவழியாக வருகின்றபோது, பூவுலகில் மந்திரமலையில் இந்த அமைப்பிருப்பது கண்டு மகிழ்ந்து, அங்கு தந்தை ஈசனை நினைத்துத் தவம்புரிந்தார். மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் "மந்திர மாமலை மேயாய் போற்றி' என்று சிவபெருமானைக் குறிப்பிடுவது இத்தலத் தைக் குறித்தே. முருகனின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், எதிரிகளை வெல்லும் சக்திபடைத்த சத்ருசம்ஹார மந்திரத்தை முருகனுக்கு உபதேசித்து, பதினோரு ருத்திரர்களை பதினோரு ஆயுதங்களாகச் செய்துதந்து ஆசிவழங்கினார். மகேசனிடம் மந்திர உபதேசம் பெற்றதனால் இத்தலத்தில் முருகப்பெருமான் மந்திரகிரி வேலாயுத சுவாமி என்று சிறப்புப் பெயர்பெற்று அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பீடத்தோடு சுமார் ஏழடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகங்கள், பன்னிரு திருக் கரங்கள் கொண்டு, இடப்பாகத்தில் மயில் வாகனத்துடன் காட்சி வழங்குகிறார்.

மந்திரகிரி மலை அடிவாரத்தில் சுமார் ஆறடி உயரத்தில் பாத விநாயகர் காட்சி தருகிறார். இடபாகத் தில் ஞானதண்டத்தை ஏந்தியவாறு மூன்றடி உயரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி ஆசிவழங்குகிறார். பாத விநாயகர் பீடத்திலிருந்து புறப்பட்டு 285 படிகளைக் கடந்து சென்றால் மலையுச் சியை அடைந்துவிடலாம். படியில் ஏறிச்செல்லும் போது சந்தான கணபதி, குழந்தைக்குமாரர், இடும்பன், கன்னிமார் ஆகியோரை தரிசிக்கலாம்.

Advertisment

te

இங்கு மறவாமல் காணவேண்டியது தலவிருட்ச மான கடம்பமரமும் ஞானதீர்த்தமும் ஆகும்.

மலைத்தளத்தை அடைந்ததும் செப்புத்தகடு வேய்ந்த கொடிமரம் வரவேற்கிறது. ஆலயத்தினுள் சென்றதும் தல கணபதியாக மந்திரசித்தி விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி தேவி ஆகியோர் கருவறை அர்த்த மண்டபத்துள் காட்சிதருகின்றனர்.

கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

சிற்ப வேலைப்பாடுகளுடன், கருங்கல் மண்டபத்துடன் கூடிய கருவறையில் மூலநாயகர் மந்திரகிரி வேலாயுதர் காட்சிதர, துவாரபாலகர் களாக சுமுகர், சுதேகர் நிற்பதைக் காணலாம். உற்சவமூர்த்தி யாக இரு தேவியருடன் முத்துக்குமார சுவாமி அருள்தருகிறார். ஆடல்வல்லான் சிவகாமி அன்னை யோடிருக்க, விநாயகர், வீரபாகுத் தேவர், அஸ்திர தேவர், பெரியநாயகி யம்மன், காட்சிகொடுத்த பெருமான் சந்திரசேகரர் ஆகியோரை தரிசிக்கலாம்.

சமயக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்க வாசகர் ஆகியோரும் உள்ளனர்.

இரண்டாம் பிராகாரத்தின் வடமேற்கு பாகத்தில் மகாவிஷ்ணு சந்நிதியும், வடகிழக்கில் நவகிரக மூர்த்தி களும் காலபைரவரும் உள்ளனர். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றிவர கிரிவலப் பாதை அமைந்துள்ளது. மலைக்குப் பின்புறம் அதிசயக் குகை ஒன்றுள்ளது. மகரிஷிகளும் சித்தர்களும் இந்த மந்திர மலையானை வழிபட்டுச் சென்றுள்ளனர்.

மலையின் மேற்பகுதியில் ஞானதீர்த்தம், லட்சுமிதீர்த்தம், வாணிதீர்த்தம், தர்ப்பைச் சுனை, கண்ணாடிச்சுனை, கானாச்சுனை, பிரம்ம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஞானதீர்த்தம், பிரம்மதீர்த்தம், தர்ப்பைச்சுனைகளில் மட்டும் நீர் உள்ளது. ஞானதீர்த்தத்திலிருந்து தினசரி திருமஞ்சனத்திற்காகவும், யாகம் செய்யவும் நீர் எடுக்கப்படுகிறது. கங்கைக்கு நிகரான ஆற்றல் பெற்றது ஞானதீர்த்தம்.

தலவிருட்சமாக கருநொச்சி, கடம்பமரம், அனாமதேய விருட்சம் உண்டு. அகத்தியர், போகர், நக்கீரர், அருணகிரிநாதர், புலிப் பாணி சித்தர் ஆகியோர் வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர். போகர் 45 நாட்கள் முருகன்முன் அமர்ந்து தவம்செய்து அஷ்டமாசித்திகளை அடைந்ததாக வரலாறு.

தினமும் நான்குகால பூஜைகள் நடக்கும் சமயத்தில், முருகப்பெருமானின் வலி இடக்கரங்களில் பூ வைத்து வழிபாடு நடத்து வார்கள். ஒரு நற்காரியத்தைச் செய்யலாமென்றால் வலக்கையிலிருந்து பூ விழும். நடைபெறாது; முயற்சி செய்யவேண்டாம் என்றால் இடக்கையிலிருந்து பூ விழும். இரண்டு கரங்களிலிருந்தும் விழாமலிருந்தால் அச்செயலை தாமதமாகச் செய்யலாம் என்று பொருள் கொள்கிறார்கள்.

y

முருகப் பெருமான் சந்நிதி முன்பாக சஷ்டி, செவ்வாய்க்கிழமைகளில், நாக்கில் வேலால் மூலமந்திரம் எழுதி ஆசிர்வாதம் பெற்றால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மனநிலை சரியில்லாதவர் கள் ஞானதீர்த்தத்தில் நீராடி, 48 நாட்கள் கிரிவலம் வந்து, அர்த்தசாம பூஜையின்போது அருட்பிரசாதமாக வழங்கப்படும் எலுமிச்சையும் சந்தனத்தையும் நீரில் கலந்து உட்கொண்டுவர, அவர்கள் பூரண குணம்பெறுவார்கள் என்று வேலன்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படுகிறது.

"இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக' என்று பால தேவராய சுவாமிகள் கந்தசஷ்டிக் கவசத்தில் கூறினார். அதன்படியே ஆறு திருமுகங்களும் எட்டு திசைகளையும் நோக்கும்விதமாக அமைந்துள்ளதும், சிவபெருமானை வலம்வந்த கோலத்தில் இருப்பதால் முருகனது மயில் இடப்புறத்தில் அமைவதும் சிறப்பானது.

முருகப்பெருமான் மலையிலும் மடுவிலும் கோவில்கொண்டிருந்தாலும் அழகாக வர்ணித்துப்பாடும் புகழ்க்கவி அருண கிரிநாதர், தென்சேரிமலை முருகனை அழகு தமிழில் நாவாரப் பாடியுள்ளார். முருகனின் உள்ளத்தையே உருகவைத்து அருள்தரத் தூண்டும் தித்திக்கும் திருப்புகழை இல்லத்தில் பாடுவதோடு, கோவை பகுதிக்குச் செல்வோர் அவன் சந்நிதியிலும் பாடலாம்; திருவருள் பெறலாம்.