வ்வொரு வருடமும், மாசி மாதம் சூரியன் கும்ப ராசியில் அமர்ந்திருப்பார். அப்போது சந்திரன், சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் செல்லும், பௌர்ணமி நாளை மாசி மகம் என சிறப்பித்துக் கூறுகின்றனர்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கும். மாசி மகம் தினத்தன்று தீர்த்தவாரி எனும் கடலாடும் நாள் முக்கிய தினமாகப் பார்க்கப் படுகிறது.

அது சரி, தீபாவளிக்குப் பட்சணம் செய்து, பட்டாசுகளை வெடிக்கிறோம். பொங்கல் என்றால், சூரியனுக்குப் பொங்கல் வைத்து வணங்குகிறோம்.

மாசி மகத்துக்கும் நிறைய புராண காரணங்கள் உள்ளது.

சிவ பெருமான், ஒவ்வொரு நான்கு யுகமும் முடிந்தபின்னும் இந்த உலகை, அழித்துவிட்டு, மறுபடியும் புதிதாக தோற்றுவிக்க எண்ணம்கொள்கிறார். எனவே அவர் பிரம்மாவை நோக்கி ஒரு கும்பத்தில் அமிர்தத்தை நிரப்பிவைக்கச் சொல்கிறார்.

பிரம்மாவும், அமிர்த குடத்தை தயார் செய்துவிட்டு, சிவனிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். புது யுகம் தொடங்குவதற்கு, அந்த அமிர்த கும்பத்தை, கும்பகோணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமென கேட்க, சிவனும் அந்த அமிர்த குடத்தை உடைத்த நாளே மாசி மகம் எனப்படுகிறது.

ss

இதனால்தான் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தில், 21 குளம் கொண்ட, மகா குளம் உள்ளது. இதில் இந்திர, யம, அக்னி, நிருதி, வாயு, குபேர ஈசான்ய பெயரில் குளங்கள் உள்ளது.

12 வருடத்துக்கு ஒருமுறை வரும் மாசி மகம், கும்ப மேளா எனப்படும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஸ்தலத்தில் கும்ப மேளா நடக்கும்.

Advertisment

இன்னொரு கதைப்படி, திருவண்ணா மலையில் வள்ளலார் என்ற அரசன் ஆட்சிபுரிந்தான். அவனுக்கு குழந்தைகள் கிடையாது. எனவே, அந்த அரசன், சிவனிடம், தனது இறுதிக் காரியங்களை சிவனே தனக்கு செய்யவேண்டுமென வரம் கேட்கிறார். ஈசனும் அதற்கு இயைந்து, அந்த அரசன் இறந்தவுடன், இறுதிக் காரியத்தை செய்து முடிக்கிறார். அது ஒரு மாசி மகத்தன்று நடந்தது. அதனால் மாசி மகத்தன்று, யார் கட−ல் நீராடுகிறார்களோ, அவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இன்னொரு புராண கதைப்படி, விஷ்ணுபகவான், வருணனுக்கு ஒரு வரம் கொடுத்தார். ஒவ்வொரு மாசி மகம் நட்சத்திரத்தின் போதும், விஷ்ணு கடல் மற்றும் நீர்நிலைகளில் நீராடுவதாகக் கூறியதால், மாசி மகம் என்பது தீர்த்தவாரி எனும் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

ஒருசமயம் சில முனிவர்கள், அகங்காரம் பிடித்து அட்டகாசம் செய்தனர். அவர்கள் தெய்வம், மனிதர் என எல்லாரையும் அவமதித்தனர். இதனைக்கண்ட சிவபெருமான், பிச்சைக்காரன் போல் அவர்கள்முன் தோன்றினார். வழக்கம்போல, முனிவர்கள் அவரையும் அவமானப்படுத்தி, யானையைக் கொண்டு விரட்டினர். வெகுண்ட ஈசன், யானையைக் கிழித்து, அதன் தோலை தன் ஆடையாக அணிந்து கொண்டார். இதனை "கஜ ஸம்ஹாரம்' என அழைக்கின்றனர். இது ஒரு மாசி மகத்தன்று தான் நடந்தது.

Advertisment

மாசி மகமும் கிரக நிலையும்

மாசி மகம் நடப்பது, உத்தரயாண கால தொடக்கத்தில் ஆகும். அப்போது சூரியன், எனும் தந்தை கிரகம் சனி எனும் கர்மகாரகன் வீட்டில் அமர்ந்துள்ளது. எதிரே, சந்திரன் சிம்ம ராசியில் உள்ளார். சிம்மம் என்பது காலபுருசனின் பூர்வபுண்ணிய இடமான 5-ஆமிடமாகும். அதன் அதிபதி சூரியன் ராஜ கிரகம் மற்றும் தந்தை கிரகம்.

அதில் சந்திரன், மக நட்சத்திரத்தில் செல்கிறார். மக நட்சத்திர சார அதிபதி கேது. கேது ஒரு பித்ரு மற்றும் ஞான கிரகம். ஆக இந்த கிரக இணைவுகளை கவனியுங்கள். சந்திரன் தாயைக் குறிப்பார்.

எனவே இந்த அருமையான நாளில் கடலில் நீராடுவது, நதியில் குளிப்பது என சுவாமியின் தீர்த்தவாரி நடக்கும்போது, நாமும் கூடவே நீராடினால், எத்தகைய, ஜென்ம பித்ரு தோஷமும் ஓடியே போய்விடும்.

மாசிமக பலன்கள்

முதலில் நமது பித்ருதோஷம் அகலும்.

கூடவே எதிர்மறை செயலால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால், அவை தெய்வ புண்ணியத்தால் அகலும்.

பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மனம் தெளியும். மனத்தெளிவு நல்ல எண்ணங்களைத் தரும். நல்ல எண்ணங்கள், நல்ல ஆரோக்கியம் கொடுக்கும். எல்லாவற்றையும்விட, தீர்த்தவாரியின் போது, சுவாமிமீது பட்ட தீர்த்த நீர் பிரசாதமாக நம்மீதும் படும்போது புத்தொளி பெருகும்.

எல்லா பண்டிகைக்கும் ஒன்று அல்லது இரண்டு குறிப்பிட்ட பலகாரங்களை பிரசாதமாக செய்யும்படி கூறுவர்.

ஆனால் இந்த மாசி மகத்திற்கு அப்படியெல்லாம் ஒன்றும் கூறப்படவில்லை. ஒரு வேளை கடல் நீராடவே பொழுது சரியாக இருக்கும் என்பதால் இருக்கலாம் போலிருக்கிறது.

எனவே 12-3-2025 அன்று கடல் நீராடுவோம்; நன்மை பெறுவோம்.