இந்து மதத்தில் சைவ சமயப் பெரியோர் கள், நாம் இறைவனை வழிபடும் நிலைகளை, நான்காகப் பிரித்திருக்கிறார்கள். சைவ நாற்பாதங்களாகிய அவையாவன. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்குபடி நிலைகளாகும். முதல் நிலைப்படியானது புறவழிபாடு ஆகும். இவ்வழிபாட்டில் நாம் கோவில் கருவறையில் நின்றிருப்போம். நமது கரங்கள் குவிந்து இறைவனை வணங்கியபடி இருக்கும். ஆனால் நம் மனமோ வேறு எங்கோ இருக்கும். அருகில் உள்ளவர் களையோ, அவர்கள் உடுத்தி யிருக்கும் ஆடைகளையோ அல்லது வேறு ஏதோ ஒன்றை நினைத்தவண்ணம் இருக்கும். இது ஆரம்ப நிலை வழிபாடாகிய சரியை ஆகும். புறவழிபாட்டிற்குள் வந்துவிட்டாலே, அடுத்த நிலையான அக வழிபாட்டிற் குள் நாமாகவே வந்துவிடு வோம். இந்த நிலையில் நமக்கு ஏதோ ஒரு சோதனை ஏற்பட்டால் அத்தருணத்தில் நாம் எங்கிருந்தாலும், அங்கிருந்தே நாம் விரும்பும் கோவில் கருவறை வரை நம் மனம் சென்று "இறைவா இச் சோதனையில் இருந்து என்னை நீதான் காக்க வேண்டும்' என்று மனதினால் இறைவனை வழிபடும் நிலை கிரியை ஆகும். இது இரண்டாவது படிநிலையாகும். இந்த நிலையில் இருப்பவர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவனித்து பிறருக்கு தீமை விளைவிக்கக்கூடிய தீய எண்ணங்களை நீக்கி, அகத்தூய்மையோடு வழிபடுபவர்களை,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iraivan.jpg)
அவர்களுக்கேற்ற குருவானவர் தானாகவே முன்வந்து அவர்கள் மனதை மேலும் பக்குவப்படுத்தி, அடுத்த மூன்றாவது படிநிலையான யோக நிலைக்கு அழைத்துச்செல்வார். இந்த நிலைக்கு வந்தவர்கள் தான் தேடும் இறைவன் தனக்குள்தான் இருக்கிறான் என்ற தெளிவு ஏற்பட்டு, புறவழிபாட்டில் மனம் செல்லாமல், நம் அகத்தினுள் நிறைந்திருக்கும் இறைவனை தரிசித்து மகிழ்வார்கள். இவ்வாறு யோக நிலையில் சதா சர்வகாலமும் இறைவனை இடையறாது நினைப்பவர்கள். நிறைவு நிலையான ஞானநிலையை அடையலாம். இந்நிலையில் இருப்பவர்களால் மட்டுமே இறைவனுடன் இரண்டறக்கலக்க முடியும். ஆற்று நீரானது இனிப்புச் சுவையுடையது. அந்த நீரானது கடலில் சங்கமித்தவுடன் இரண்டறக்கலந்து கடல் நீராகவே மாறி விடுகிறது. அதுபோல இறைவனுடன் கலந்த வர்கள் நான் என்பதை இழந்து அவனாகவே மாறும் உயர்ந்த ஞானநிலையானது, நான்காம் படிநிலையாகும். நம் குழந்தையை ஆரம்பப் பள்ளியில் சேர்க்கும் நாம் நம் குழந்தைகள் ஒவ்வொரு வகுப்பாக முன்னேறி பள்ளியின் நிறைவு வகுப்பில் கல்வியை நிறைவு செய்வதையே விரும்புவோம். அது போல இறைவனும் நம் ஒவ்வொரு படிநிலையையும் கடந்து நிறைவு நிலையான ஞானநிலையை அடைந்து நாம் அவனுடன் இரண்டறக் கலத்தலையே விரும்புவான். நாம் எந்தப் படிநிலையில் உள்ளோம் என்பது நம் மனதிற்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும். நாம் ஒரு ஊருக்குப் பயணம் செய்யவேண்டுமானால் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தால் மட்டுமே நாம் செல்லவேண்டிய இடத்தை அடையமுடியும். அவ்வாறு பயணம் செய்யும்பொழுது சாலை ஓரத்தில் உள்ள மைல்கற்கள்மூலம் நாம் கடந்துவந்த தூரத்தையும் மேலும் நாம் கடக்கவேண்டிய தூரத்தையும் கணக்கிட்டுக்கொள்வோம். அதுபோல நம் சைவ சமயப் பெரியோர்கள் நாம் இறைவனை அடையும் தூரத்தைக் கணக்கிடுவதற்காக பிரித்துவைத்த படிநிலைகளே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகும். எனவே நாம் பக்தி என்ற ஆரம்ப நிலையான புறவழிபாட்டில் நின்றுவிடாமல் உண்மை ஆன்மிகம் உணர்ந்து நிறைவான ஞான நிலையை அடைவோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-01/iraivan-t.jpg)