மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் வக்ரகதியில் சஞ்சாரம். குருவின் சாரத்தில் சஞ்சரிக்கிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் செவ்வாய்க்கு 3, 6, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள்தான். 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். தேக ஆரோக்கியத்தில் வைத்தியச் செலவு போன்ற தொந்தரவுகளைச் சந்திக்கலாம். முதுகுவலி அல்லது சளித் தொந்தரவுகள் ஏற்படலாம். 2-ல் குரு வக்ரமாக இருப்பதால் தனவரவில் சிலநேரம் பற்றாக்குறை உண்டாகும். 11-ஆம் தேதிமுதல் குரு வக்ர நிவர்த்தியாகிறார். அதன்பிறகு பொருளாதாரப் பிரச்சினைகள் சீராகும். 5-க்குடைய சூரியனை 2-ல் நிற்கும் குரு பார்ப்பதால் எண்ணங்கள், திட்டங்களில் காரிய நிவர்த்தி ஏற்படும். நீண்டநாள் திட்டம் ஒன்றை இம்மாதம் செயல்படுத்தலாம். 11-ல் நிற்கும் சனி அனுகூலத்தைத் தருவார். என்றாலும் ராகு சாரத்தில் சஞ்சரிப்பதால் நிறைய பிரயத்தனம் படவேண்டியதிருக்கும். என்றா லும் "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்' என்ற குறளுக்கேற்ப உங்கள் விடாமுயற்சி முடிவில் வெற்றி தரும். சகோதர ஸ்தானாதிபதி ராகு சாரத்தில் சஞ்சரிப்பதால் உடன் பிறந்தவர்கள்மேல் சிலநேரம் அதிருப்தி உண்டாகும். உத்தியோகம், தொழில் இவற்றில் சுமூகமான பலன்கள் ஏற்படும். 2-க்குடைய சுக்கிரனும் 12-க்குடைய குருவும் பரிவர்த்தனை. வீண் விரயங்களைத் தவிர்க்க முடியாது.
பரிகாரம்: பழனி மலையிலுள்ள முருகப் பெருமானையும், போகர் சித்தர் ஜீவசமாதியையும் வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். 11-க்குடைய குரு ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சாரம். பிப்ரவரி 11-ஆம் தேதிமுதல் வக்ர நிவர்த்தி. அது உங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட். உங்கள் எண்ணங்கள், திட்டங்கள் செயல்வடிவம் பெறும். திருமண முயற்சிகள் செய்து இதுவரையிலும் திருமணமாகாத ஆண்- பெண்களுக்கு வக்ர நிவர்த்திக்குப்பிறகு குரு அந்த முயற்சிகளை சாதகமாக்குவார். ராசிநாதனும் உச்சமாக இருப்பதால் முன்னேற்றத்தையும் காரிய அனுகூலத்தையும் எதிர்பார்க்கலாம். 12-க்குடைய செவ்வாய் 2-ல் வக்ரமாக செயல்படுகிறார். 2-க்குடையவர் 12-ல் இருந்தால் நம்பணம் அடுத்தவரிடம் புரளும். 12-க்குடையவர் 2-ல் இருந்தால் அடுத்தவர் பணம் நம்மிடம் புரளும். தேக ஆரோக்கியத்தில் ஏற்பட்ட வைத்தியச் செலவுகளும் குறையும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட வகையில் மகிழ்ச்சியான நிகழ்வுக்கும் இடமுண்டு. 9-ஆமிடத்தை குரு பார்ப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழியில் சுமூகமான தீர்வுகள் உண்டாகும். பூர்வீக வீடு சம்பந்தமாகவும் பழுது பார்க்கும் வேலைகள் ஏதேனும் ஏற்பட்டால் பூர்த்தியாகும். தகப்பனாருக்கும் உங்களுக்கும் நிலவிய மனக்கிலேசம் விலகி ஒற்றுமையுணர்வு மேலோங்கும். தந்தைவழியில் சுபநிகழ்வுக்கும் இடமுண்டு. 10-ஆமிடத்து சனி ஒருசிலருக்கு உத்தியோக மாற்றத்தை தரும். இடமாற்றமும் உண்டாகலாம். மூத்த சகோதரவகையில் சகாயம் ஏற்படும். உத்தியோக முன்னேற்றமும் அமையும்.
பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றம் அருகில் திருக்கூடல் மலையில் ஸ்ரீ சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அங்கு சென்று வழிபாடு செய்யலாம்.
மிதுனம்
ராசிநாதன் புதன் மாத ஆரம்பத்தில் 9-ல் மாறுகிறார். தொடக்கத்தில் செவ்வாய் சாரம் (அவிட்டம்). பிறகு ராகு சாரம் சதயத்தில் சஞ்சாரம். புதிய முயற்சிகள் கைகூடும். இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அதற்குண்டான வாய்ப்புகள் வந்துசேரும். சிலர் குடியிருப்பு மாற்றங் களை மேற்கொள்ள நேரிடும். அது இம்மாதம் 11-ஆம் தேதி குரு வக்ர நிவர்த்திக்குப்பிறகு ஏற்படும். உத்தியோகரீதியாக முன்னேற்றம் சற்று தாமதமாகலாம். அதே சமயம் வீண் அலைச்சல், மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். ஜென்ம ராசியிலுள்ள வக்ர செவ்வாயும், 8-ஆமிடத்தைப் பார்க்கும் குருவும் அதற்கு ஒரு காரணம். தொழில்துறையினருக்கு ஏற்படும் விரயங்களை முதலீட்டு விரயமாக ஏற்படுத்திக்கொள்ளவும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமைந்தாலும் குரு ஜென்ம ராசிக்கு மாறியபிறகு முயற்சிகள் கைகூடும். 12-க்குடைய சுக்கிரன் 10-ல் உச்சம். செலவுகள் திடீரென ஏற்படலாம். வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள்வகையில் சுபவிரயங்களும் உண்டாகும். 13-ஆம் தேதிக்குப்பிறகு தகப்பனாருக்கு தேகநலத்தில் வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும் அது மனதை சற்று கவலையில் ஆழ்த்தலாம். என்றாலும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது.
பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று ஆஞ்சனேயர், சனீஸ்வரரையும், ஸ்ரீஸ்வயம்ப்ரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 12-ல் வக்ரகதியில் செயல்படுகிறார். மேலும் அட்டமத்துச்சனியும் நடந்துகொண்டிருக்கிறது. உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது குடியிருப்பில் இடமாற்றம் போன்ற சங்கடங்கள் ஏற்படலாம். சகோதரகாரகன் 12-ல் மறைவதால் உடன்பிறந்த வகையிலும் ஒத்துழைப்பு இல்லாத நிலை. தாமரை இலை தண்ணிபோல ஊருக்கு உறவாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் உறவில்லாத நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலை! தொழில்துறையினருக்கும் விரயங்களைத் தவிர்க்க இயலாது. ஒருசில நேரம் மனதில் சில தைரியக் குறைவுகள் தென்படலாம். 2-க்குடையவரை குரு பார்ப்பதால் சிறுசிறு வரவுகள் வந்து ஆறுதல் தரும். எனினும் யானைப்பசிக்கு சோளப்பொரியா என்ற பழமொழிக்கிணங்க தேவைகளை பூர்த்திசெய்வது கடினம்தான். 13-ஆம் தேதிமுதல் பொருளாதாரப் பற்றாக்குறைகளைச் சந்திக்கும் நிலை. 11-க்குடைய சுக்கிரன் 9-ல் உச்சம். பூர்வீக சொத்தும் பந்தமாக சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். குலதெய்வ வழிபாட்டில் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். பூமி சம்பந்தமான நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீடு கட்டும் பணி பாதியில் நின்றிருந்தால் அப்பணி மீண்டும் தொடங்கும் அமைப்பு ஏற்படும்.
பரிகாரம்: நாகப்பட்டிணம் அருகில் வடக்குப் பொய்கை நல்லூரிலுள்ள ஸ்ரீ கோரக்கர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் சஞ்சாரம். பொதுவாக ராசிநாதன் 6-ல் மறைவது ஒருவகையில் குற்றம்தான் என்றாலும் 5-க்குடைய குரு 10-ல் வக்ரகதியில் நின்று ராசிநாதனைப் பார்க்கிறார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுமாதிரி என்ற பழமொழிக்கிணங்க குரு பார்வை ராசிநாதனின் மறைவுத் திரையை விலக்கும். அதேசமயம் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கலக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். 4, 9-க்குடைய செவ்வாய் 11-ல் வக்ரகதியில் இயக்கம். பூமி, வீடு வகையில் சில நற்பலன்களை அடையலாம். உடன்பிறந்த வழியிலும் ஆதாயம் எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக வில்லங்கம் விவகாரம் ஒரு பேச்சு வார்த்தைக்கு வரும். குருவின் வக்ரநிவர்த்தி இம்மாதம் 11-ஆம் தேதி. அதுமுதல் மனதில் நிலவிய குழப்பம் குறையும். 10-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைந் தாலும் உச்சமாக இருப்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. தொழில் ஸ்தானாதிபதி என்பதால் தொழில்துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. நிதி சம்பந்தமாக தொழில்புரிவோருக்கும் லாபத்தை எதிர்பார்க்கலாம். 13-ஆம் தேதிமுதல் ராசிநாதன் 7-ல் நின்று ராசியைப் பார்த்தாலும் சனியுடன் சேர்க்கை. தேகநலனில் கால் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படலாம். சிறு சிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும்.
பரிகாரம்: தொழில் அபிவிருத்திக்கு லட்சுமி நரசிம்மரையும், தேகநலனுக்கு தன்வந்திரி பகவானையும் வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் 5-ஆம் தேதிமுதல் சஞ்சாரம். மற்ற கிரகங்களைப்போல புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது என்பது நீங்கள் அறிந்ததே! 2-க்குடையவர் 7-ல் உச்சம்பெற்று ராசியைப் பார்க்கிறார். பொருளாதார நிறைவு இல்லையென்றாலும் குறைவுக்கு இடமில்லை. 9-ல் வக்ரமாக நிற்கும் குரு ராசியைப் பார்ப்பதாலும் ஜென்ம ராசியில் கேது நிற்பதாலும் தேகநலனில் வைத்தியச் செலவு மட்டும் குறைந்தபாடில்லை. வீண் அலைச்சல் மன உளைச்சல் ஆதாயமற்ற பயணம் போன்ற அலைக்கழிப்புகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலை. அசதி, வயிற்றுத் தொந்தரவு, அலர்ஜி போன்ற தொல்லைகள் ஏற்படலாம். 3, 8-க்குடையவர் 10-ல் வக்ரம். ஒருசிலர் உத்தியோக மாற்றத்தை சந்தித்திருக்கலாம் அல்லது சந்திக்கலாம். என்றாலும் 3-ஆமிடத்தை குரு பார்த்த காரணத்தால் மனதைரியத்தை விடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்ல. 12-க்குடைய சூரியன் 6-ல் மறைவதால் (13-ஆம் தேதிமுதல்) "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதுபோல எதிர்பாராத சில நன்மைகள் உண்டாகலாம். 11-ஆம் தேதி குரு வக்ரநிவர்த்தி. புதிய வேலை, ஒப்பந்த முயற்சிகளை ஏற்பாடு செய்யலாம். கொடுக்கல்- வாங்கல் சற்று சுமாராக செயல்படும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருபுவனம் சரபேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரை சிறப்பு.
துலாம்
துலா ராசிக்கு 2, 7-க்குடைய செவ்வாய் 9-ல் வக்ரமாக சஞ்சரிக்கிறார். 12-ஆமிடத்தைப் பார்க்கி றார். எனவே, காரிய அனுகூலம், காரிய முன்னேற்றம் இவற்றில் தாமதப் பலன்கள் உருவாகும். விரயங்களும் எதிர்பாராதவிதமாக இருந்துகொண்டிருக்கும். மேலும் உடன்பிறந்த வகையிலும் பிரச்சினைகள், சஞ்சலங்கள், சலசலப்புகளும் ஒருபுறம் மனதை வருத்தத்தில் ஆழ்த்தும். என்றாலும் ராசிநாதன் 6-ல் மறைந்தாலும் உச்சபலமாக இருப்பது ஒரு நன்மை, கெடுத-லும் ஒரு நல்லது என்ற பழமொழிக்கேற்ப பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றலும், தக்க துணையும் ஒரு புறம் இருக்கும். நண்பர்களால் சகாயம் உண்டாகும். 11-ஆம் தேதிமுதல் குரு வக்ரநிவர்த்தி என்பது ஒரு ஆறுதல். வீண் விரயங்கள் குறையும். அத்தியாவசியச் செலவுகள் இருக்கும். 12-ல் கேதுவும், 6-ல் ராகுவும் இருப்பதால் சத்ரு வகையில் சத்ரு ஜெயம் ஏற்படும். வாழ்க்கையில் போட்டி என்ற ஒன்று இருந்தால்தானே வெற்றியும் ருசிக்கும். வெறும் இனிப்புச் சுவையாக இருந்தால் திகட்டிவிடுமல்லவா! மாதக்கடைசியில் செவ்வாயும் வக்ர நிவர்த்தி என்பதால் அது மேலும் ஒரு ஆறுதல். 11-க்குடைய சூரியன் 5-ல் சனியும் சேர்வது நல்லதல்ல. அதேசமயம் 11-ஆமிடத்தையே பார்ப்பதால் அனுகூலம் உண்டு. அதாவது எளிதான வெற்றிக்கு இடமில்லை. போராடித்தான் ஜெயிக்கமுடியும். பூர்வீக சொத்து சம்பந்தமாக எடுக்கும் முடிவை காலம் தாழ்த்தாமல் எடுப்பது அவசியம்.
பரிகாரம்: சென்னை அருகில் பட்டாபிராமம் சென்று (சித்துக்காடு) தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவு. வக்ரம். 6-க்குடையவர் 8-ல் மறைவது நன்மைதான். ராசிநாதன் மறைவது நல்லதல்லவே! முயற்சிகளில் தாமதம், எதிர்பார்த்த வரவு குறித்த நேரத்தில் வராததால் சற்று மன உளைச்சல். எனினும் 2-ஆமிடத்தை செவ்வாய் பார்ப்பதால் அள்ளிக் கொடுக்க வேண்டிய இடத்தில் கிள்ளிக்கொடுக்கும் நிலை! 7-ல் குரு இருப்பது நன்மையென்றா லும் வக்ரகதியில் சஞ்சாரம். அதுவும் காரியத் தாமதத்திற்கு காரணம். 11-ஆம் தேதிக்குப்பிறகு குரு வக்ரநிவர்த்தியாவதால் அதன்பின் தாமத வேளைக்கு இடம் ஏற்படாது. மாத பிற்பாதியில் 10-க்குடைய சூரியன் 4-ல் சஞ்சாரம். சனியுடன் சேர்க்கை. அர்த்தாஷ்டமச்சனி அஷ்டமத்தில் பாதி தொல்லைகளைத் தருவார். 10-க்குடையவர் 10-ஆமிடத்தையே பார்ப்பதால் தொழில் இயக்கம் பாதிக்காது. வண்டியில் பழுது ஏற்பட்டாலும் வேகமாக செயல்படமுடியாது என்பது மாதிரி நிதானமாகச் செயல்படும். 4-ல் சனி ஆட்சி. ஒரு சிலர் மனை அல்லது வீடு சொந்தமாக கடனுதவியுடன் வாங்கும் அமைப்பு ஏற்படும். அல்லது பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். 12-க்குடைய சுக்கிரன் 5-ல் உச்சம். ஒரு சிலர் ஆபரணச் சேர்க்கையில் செலவு செய்யலாம். பிள்ளைகள் வகையில் ஒருசில மனக்கவலைகள் இருந்துகொண்டுதானிருக்கும்.
பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றத்தில் திருக்கூடல்மலை அடிவாரத்தில் ஸ்ரீகட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 6-ல் மறைவு. வக்ரமும்கூட! எனவே நிலையில்லாத முடிவுகளை எடுத்து சங்கடப்படுவதுடன் தன்னுடன் இருப்பவர்களையும் சங்கடப்படுத்துவீர்கள். ஏழரைச்சனி விலகிய பின்னும் அலைக்கழிப்புகள் விட்டபாடில்லை. 12-ஆமிடத்தை குரு பார்க்கிறார். ஒருசிலர் குடியிருப்பு மாற்றத்தை சந்திக்கலாம். ஒருசிலர் உத்தியோக மாற்றத்தை சந்திக்கலாம். அல்லது உத்தியோகரீதியாக பிரச்சினைகள் வரலாம். வரவு ஒரு மடங்கு வந்தால் செலவு இரு மடங்காக அதிகரிக்கும் சூழ்நிலை! 5, 12-க்குடைய செவ்வாய் 7-ல் வக்ரமாக நின்று ராசியைப் பார்க்கிறார். ஒருசிலர் பண விஷயத்தில் அவப்பெயரை சந்திக்க நேரும். நீங்கள் நேர்மையானவர்தான் என்றாலும் சந்தர்ப்பம் சூழ்நிலை உங்களை அதற்கு மாறாக செயல்பட வைக்கும். சகோதரகாரகன் வக்ரம் என்பதால் உடன்பிறந்த உடன்பிறப்புகளிடமும் பேச்சுவார்த்தை இல்லாத நிலை, உங்கள்மீதும் தவறு ஏற்பட வாய்ப்பு வரும். நாம் அனைவரும் மனிதர்தானே! மனித மனம் ஒரு குரங்கு என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களே. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஆராய்ந்து பொறுமையுடன் செயல்படுங்கள். நல்ல உறவுகளை இழக்காமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவிக் குள்ளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
பரிகாரம்: பெரம்பலூர்- பழைய நகராட்சி பின்புறம் உள்ள மதனகோபால சுவாமி சந்நிதி சென்று வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியின் கடைசிக்கூறு நடக்கிறது. ஏழரைச்சனியின் தொடக்க காலத்தில் நற்பலன்களையும் தொழில் முன்னேற்றங்களையும் சந்தித்தவர்களுக்கு இந்த கடைசி இரண்டரை ஆண்டுகள் பாதச்சனி ஆரம்பமானபிறகு அடிமேல் அடிவிழுந்து வாழ்வா- சாவா என்ற போராட்டத்தை சந்திக்கும் நிலை! முற்கூறில் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அனுபவித்தவர்கள் இப்போது ஓஹோவென்று இல்லாவிட்டாலும் ஓரளவாவது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பார்கள். 3, 12-க்குடைய குரு 5-ல் வக்ரகதியில் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ஒரு நேரம் உடல்நலம் நன்றாக இருந்தால் ஒரு நேரம் பாடாய்படுத்திவிடும். இதில் சந்திர தசையோ சந்திரபுக்தியோ, ராகு தசையோ நடப்பவர்கள் அறுவைச் சிகிச்சையை சந்திக்க நேரும். 4-க்குடைய செவ்வாயும் 6-ல் வக்ரம். கடன் வாங்கி தொழில்புரிவோருக்கு மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய கட்டாயம். இந்த நிலை மாறுமா மாறாதா என்ற சந்தேகமும் ஒருபுறம் இருந்தாலும் தன்னம்பிக்கையும், தைரியமும் குறையாது. 11-ஆம் தேதி குரு வக்ரநிவர்த்தி. 20-ஆம் தேதி செவ்வாய் வக்ரநிவர்த்தி. அதன்பிறகு சற்று சிறு மன ஆறுதல் உண்டாகும். 2-ல் சனி இருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்குச் சனி கோப்பைக்கு குலைக்கும்.
பரிகாரம்: திருப்பத்தூர் அருகில் பெரிச்சியூர் சென்று ஒற்றை சனீஸ்வரரை வழிபடவும். கால பைரவருக்கு மிளகு தீபம் சனிக்கிழமை ஏற்றவும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம். ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடக்கிறது. சனி ராகுவின் சாரத்தில் (சதயம்) சஞ்சரிக்கிறார். பலருக்கு கால் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளும் அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளும் ஏற்படலாம். ஒருசிலருக்கு தோல் அலர்ஜி சம்பந்தமான தொந்தரவுகளும் தென்படும். என்னதான் கும்ப ராசிக்கு சனி ராசிநாதன் என்றாலும் விரயாதிபதியும் அவர்தான்! ஏழரைச்சனியின் பாதிப்புகளை செய்யவேண்டியது அவர் கடமை! மேலும் சனி நல்லவர். நியாயவாதி. அவரவர் கர்மவினைக்கான நன்மை- தீமை பலன்களைத் தவறாமல் அளிப்பவர். "தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது நம் நடவடிக்கைகளின் பலனே! 2-ல் சுக்கிரன் உச்சம். 2-க்குடைய குரு 4-ல் வக்ரம். தனவரவு தாராளமாக வந்துசேரும். பூமி, மனை யோகமும் ஏற்படும். குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை யோகம். 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் சில குழப்பங்களைத் தந்தாலும் குரு சுக்கிரன் குழப்பத்துக்கு தீர்வும் தருவார்கள். பேச்சில் நிதானம் இழந்துவிடக்கூடாது. கவனம் தேவை. 5-ல் செவ்வாய் வக்ரம். உடன்பிறப்பு கள் வகையில் சற்று மனக்கிலேசம் உருவாகலாம். அல்லது பாகப்பிரிவினைகளில் பிரச்சினை ஏற்படலாம். போகும்போது எவரும் எதையும் கொண்டுபோவது கிடையாது. வாழ்வதற்கு பணம் தேவைதான். அதே சமயம் உறவுகளும் தேவைதானே! தனிமரம் தோப்பாகாது என்பதை மனதில் கொண்டு உங்கள் செயல்பாடுகள் அமையட்டும்!
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகுதீபமும், ஆஞ்சனேயருக்கு நெய்தீபமும் ஏற்றவும்.
மீனம்
மீன ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனியில் முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்கு சனியும், இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்குசனியும், மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்சனியுமாக நடக்கும். மரணச்சனி என்றால் மரணம் என்பது இல்லை. அதற்கு நிகரான தொந்தரவுகளைத் தரும் என்பதும் அர்த்தம். ராசிநாதன் குருவும் 3-ல் மறைவு; வக்ரம்! 2-க்குடைய செவ்வாய் 4-ல் வக்ரம். 3-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் உச்சம். தனவரவுகளில் நெருக்கடி, சகோதரவகையில் மனப்பூசல், குடும்பத்தில் நிம்மதியின்மை, வீண் விரயம் அல்லது எதிர்பாராத திடீர் செலவு போன்ற சங்கடங்கள் உண்டாகும். 9-க்குடையவர் செவ்வாய் என்பதாலும் அவர் 4-ல் வக்ரம் என்பதாலும் ஆன்மிக வழிபாடுகளிலும் மனது ஒரு நிலைப்படாமல் அலைபாயும். நிம்மதி தேடித் தானே இறைவனையும் குருவையும் நாடுகிறோம். அதில் பாகுபாடு எதற்கு? இடையில் எந்த இடையூறு கள் வந்தாலும் சரி அல்லது உங்களுக்கு முன்னுரிமை கிடைக்காவிட்டாலும் சரி; உங்கள் ஆழ்மனதில் உண்மையான பக்தியும் அர்ப்பணிப்பும் இருந்தால் இறைவனும் குருவும் உங்களுக்கு அருளாசி வழங்குவார்கள். "நின் கடன்காண் நின்னைப் பணிதல் என் கடனே'' என்று அப்பர் கூறியிருக்கிறார். அதாவது தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே. என்கிறார். ஜென்ம ராகு தரும் குழப்பத்தை உங்களின் குரு பக்தியால் வெல்லுங்கள். 4-ல் செவ்வாய் வக்ரநிவர்த்திக்குப் பின் வீடு கட்டும் பணியோ அல்லது கட்டட சீர்த்திருத்தப் பணியோ செயல்பாட்டுக்கு வரும்.
பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதரையும் ஆரணவல்- அம்மனையும் வழிபடவும்.