பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்க உதவும் விரதங்களில் முக்கியமானது காரடையான் நோன்பு ஆகும். கவுரி விரதம், காமாட்சி விரதம், சாவித்ரி விரதம் என்ற பெயரிலும் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பு தோன்றியதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
அஸ்வபதி மன்னர் மாலதிதேவி தம்பதியருக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இருவரும் வசிஷ்ட முனிவரைப் பார்த்து தங்கள் குறையை கூறினர். அவர்லி "சாவித்ரிதேவி மகா மந்திரத்தை' அவர்களுக்கு உபதேசித்து தினமும் சொல்லவேண்டும் என்று கூறினார். அதன்படியே தினமும் தம்பதிகள் சாவித்ரி மகா மந்திரத்தை சொல்லிவந்ததன் பயனாக அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. சாவித்ரி மந்திரம் சொல்லி பிறந்த குழந்தையாதலால் அதற்கு "சாவித்ரி' என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். பக்கத்து தேசத்தை ஆண்ட "துயமத்சேனன்' என்றொரு மன்னனுக்கு சத்திய சேனன் என்று அழகான மிக உயர்ந்த குணங்களைக்கொண்ட மகன் இருந்தான். அவனது பெருமைகளை அறிந்த சாவித்ரி அவனையே கணவனாக அடையவேண்டுமென்று பெற்றோரிடம் கூறினாள். அவள் விரும்பியபடி "சத்திய சேனன்' என்ற சத்தியவானை அவளுக்கு மணமுடித்து வைத்தனர்.
அவனது ஜாதகப்படி அவன் 12 மாதத்தில் இறந்துவிடுவான் என்ற விதி இருந்த காரணத்தால் எமதர்மன் 12-ஆவது மாதத்தில் சத்தியவானின் உயிரை தன் பாசக் கயிற்றால் கவர்ந்துசென்றான்.
தன்னுடைய ஆரூயிர் மணாளன் சத்திய வானை எமதர்மன் கவர்ந்து செல்வதைக்கண்டு தன் கணவன் உயிரைத் திருப்பித் தரும்படி எமதர்மனிடம் முறையிட்டு அவனைப் பின்தொடர்ந்தாள் சாவித்ரி. எமதர்மனிடம் மன்றாடினாள். எமதர்மன்- அவளிடம் "கணவன் உயிரைத் தவிர வேறு ஏதாவது வரம்கேள் தருகிறேன்'' என்றான்.
உடனே சாவித்ரி "எனது மாமனார்-
அதாவது சத்தியவானின் தந்தை பேரக் குழந்தைகளைக் காணவேண்டும்'' என்றாள். எமதர்மனும் "சரி' என்று சொல்லிவிட்டான். "என் கணவர் சத்தியவான் இல்லாவிட்டால் எனக்கு எப்படி குழந்தை உண்டாகும்?'' என்று சாவித்ரி வினவ அவளது சாதுரியத்தை கண்டு வியந்த எமதர்மன் மனமிரங்கி அவளது- மணாளனை திரும்பத் தந்தான் என்பது வரலாறு. சாவித்ரி தாம் கடைப்பிடித்து வந்த பதிவிரதை விரதம்தான் தன் கணவன் உயிரை மீட்டுத் தந்தது என்பதை உணர்ந்தாள். இதனால் இந்த "காரடையான் நோன்பு' விரதத்திற்கு "சாவித்ரி விரதம்' என்ற பெயரும் ஏற்பட்டது.
காரடையான் நோன்பு அன்று பெண்கள் தாலிச்சரடை புதிதாக கழுத்தில் அணியும்முன்பு-
"தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே
ஸ ஹாரித்ரம் த "ராமயஹம் பர்த்து:
ஆயுஸ்ய ஸத்யர்த்தம் ஸுப்ரிதா பவஸர்வதா''
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமாம்.
"பாக்கியத்தை தரும் தேவியே!
மஞ்சளுடன்கூடிய இந்த மங்களக்
கயிற்றை முறையாக விரதமிருந்து
எனது கழுத்தில் அணிந்துகொள்கிறேன்
இந்த விரதத்தால் நீ மகிழ்ச்சியடைந்து
எனது கணவரின் ஆயுளை நீட்டித்து
எப்போது அருள்புரிய வேண்டும்''
என்பது மேற்கண்ட மந்திரத்தின் அர்த்தமாகும்.
காரடையான் நோன்பினை முறை
யாகக் கடைபிடித்து சாவித்ரி தேவியை
பூஜித்து வணங்கினால் மாங்கல்ய பலம், மகப்பேறு பாக்கியம் கிட்டும் என்பதில் ஐயமில்லை.