கொத்த. திருவேங்கடம் மாமா, தடி தாத்தா (வண்டி. எத்திராசன்) இருவர் மூலம் அறிமுகமானவர்தான் ஆஞ்சநேயர்.
பொங்கல் திருநாளில் ஊரே குதுகலித்திருக்க மாட்டுப் பொங்கல் அன்று, மாட்டுவண்டியில் ஊரைச்சுற்றி வருவது, சிறுவயது உற்சாகம்.எத்தனை சுற்றுவருகிறோம் என ஓவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டிருப்போம். மூன்று முறையோடு முடித்துவிடுவார் சாவடி. குலசேகரன் மாமா. ஐந்துமுறை சுற்றிவருபவர்களும் உண்டு. மாட்டு வண்டியையும், மாட்டு வண்டியில் வலம்வருவதையும் ஊரே உற்சாகமாக பார்த்து தன்னை மறந்து இன்புற்று இருக்கும். இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் எதிர்திசையில் பயணப்படுவார் கொத்த திருவேங்கடம் மாமா. கையில் எண்ணையோடு.
அவர் செல்வதை பார்க்கும் பொழுது இவர் எங்கே செல்கி றார்? எதற்காக செல்கிறார்? என்ற கேள்வி மனதில் குடைந்து கொண்டே இருக்கும். ஆஞ்சனேயர் கோவிலுக்கு தீபம் ஏற்றச் செல்கிறார் என்றார் அம்மா.
மாவலி அமாவாசைக்கு மூத்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதை நம்மூரில் மூத்தவர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் அனைவரும் அந்த தேதியில் முன்னோர்களுக்கு படையல் சாற்றி வேண்டிக்கொள்வர். அதை மாமா அவர்கள் தொடர்ந்து ஆஞ்சனேயர் கோவிலில் செய்து வந்து கொண்டிருந்தார். எல்லா உறவும் நம் சொந்தமாக பார்க்கும் மனதில் இருக்கிறான் இறைவன்.
தடிதாத்தா, ஆஞ்சனேயர் கோவிலில் பின்புறம் இருக்கும் குடிசை வீட்டில் தன்னந் தனியாக வாழ்ந்துகொண்டிருந்தார். விசேஷ நாட்களில் எது செய்தாலும் அவருக்கு ஒரு பாத்திரத்தில் போட்டு முதலில் கொடுத்துவிட்டு வரும்படி சொல்வார் அம்மா. ஆஞ்சனேயர் கோவில் திண்ணையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பார். கோவில், குளம் என அனைத்தும் சுத்தமாக இருக்கவேண்டும் என நினைப்பவர். தினம் தினம் தானே சுத்தப்படுத்தியபடி இருப்பார். மற்றவர் களையும் சுத்தமாக வைத்திருக்க வற்புறுத்து வார். தெருவில் நடமாடுபவர்கள், குளத் தில் தண்ணி எடுப்பவர்கள் என் அனைவரிடமும் இதற்காக சண்டை போடுவார்.
மழை அதிகரிக்கும் நாட்களில், மழை நீர் ஏரியில் நிரம்பி வழியும்போது, முதல் ஆளாக சென்று கடப்பாரையால் சரியான இடத்தில் உடைத்து ஏரி தண்ணீரை குளத்துக்கு அனுப்புவார். குளத்துக்குள் ஒரு குளம் உண்டு. அதில் தேங்கும் தண்ணீர்தான் அந்த வருடம் முழுவதும் ஊருக்கான நீர்.
ஊரின் நலன்கருதும் தாத்தா, எவர் வார்த்தைக்காகவும் காத்திராமல், அனைத்திலும் பொதுநலமாக இருந்து செயல்பட்டுக்கொண்டிருப்பார்.
இவருக்கு எதற்கு நம்வீட்டில் செய்த பலகாரத்தை முதலில் தரவேண்டும்? என்று அம்மாவிடம் கேட்டபோது, "அவர் திருமணம் செய்துகொள்ளாமல் கடைசிவரை பிரம்மசாரியாக வாழும் ஆஞ்சனேய பக்தர்' என்றார்.
ஆஞ்சனேயரை பற்றிய பிம்பம் பெரிதாய் மனதில் விழ அவரைக் காண ஆவலாய் கோவில் சென்றேன். கண் மூடி ஆஞ்சனேயர்முன் நின்றேன்.
ஆஞ்சனேயர் முகத்தில், கொத்த திருவேங்கடம் மாமா, தடி தாத்தா, லட்ச தீபம் திருவிழாவை ஆரம்பித்து வைத்த.. கொளத்துமேட்டார் வீடு முனுசாமி அய்யா, வாரா வாரம் விளக்கேற்றி சாமியாடியாக வாழ்ந்த கொத்த காந்தி மாமா, பள்ளி ஆண்டு விழாவுக்கு பாடலை ஆர்வமாக எழுதும் தலையாட்டி திருவேங்கடம் தாத்தா, இசையமைத்து பாடல் பாடும் காந்திமதி அத்தை, அழகு நடனம் ஆடவைக்கும் அன்பழகி அத்தை, யார் வீட்டு விசேஷம் என்றாலும் ஓடிவந்து சுவையாக பலகாரம் செய்துதரும் சக்குபாய் அம்மா, எவர் வீட்டு எலக்ட்ரிக்கல் பழுதையும் சலிப்பின்றி சரி செய்துதரும் கொத்த மணி மாமா, கோவில் பஜனை கோஷ்டியில் ஓங்கி குரல் எடுத்து இறைவனை நம்மூருக்கு அழைத்துவரும் அமரேசன் ஆசிரியர், பாடலை சுவையூட்ட மிருதங்கம் வாசிக்கும் இலட்சுமிகாந்தன் ஆசிரியர், கை அசைவில் காதில் மிருதங்க இசையை வழங்கும் கோனாநாய்க்க தனசேகர், கூத்து கட்டும் திருவிக்கரமன் தாத்தா, எந்த பொது பிரச்சினை என்றாலும் வந்து நிற்கும் நீலமேகம் மாமா, வீராசாமி மாமா, தெற்கத்தி ராசமாணிக்கம், படித்த அனைவரையும் ஆசிரியராக்கி அழகு பார்த்த செவலை குமார் அண்ணன். "என எங்கும் எல்லாருக்கும் உதவும், நல் உள்ளங்கள் முகம் தெரிந்துகொண்டே இருக்கிறது'.
எல்லோர் மனதிலும் இருக்கிறார் ஆஞ்சநேயர். அதனுடைய அளவு சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கிறது. அதை நாம் மெல்ல மெல்ல வளர்த்துக்கொள்வோம். அதற்கு ஆஞ்சனேயர் கோவில் உறுதுணையாக இருக்கும். நம் மனதை தெய்வமாக்குவது நம்மிடம் இருக்கிறது.
ஆஞ்சனேயர் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!!