க்தி என்பது பரிகாரம் செய்வதில் இல்லை. பண்பு நலனிலும், குண நலனிலுமே இருக்கிறது. நம் வாழ்க்கை யில் நாம் ஒவ்வொருவரும் திருமந்திரம் எனும் மகா மந்திர பொக்கிஷத்தை படித்து, அறிந்து, உணர்ந்து செயல் படுவோமானால், நம் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். திருமந்திரம் என்பது ஏதோ சிவபெருமானை குறித்த செய்யுள் அடங்கிய புத்தகம் என்று பலர் நினைத் துக்கொண்டிருக்கின்றனர். இது மகா தவறு. ஏனென்றால் சுமார் 15,000 வருடங்களுக்குமுன்பே, திருமந்திர சிற்பி திருமூலர் திருமந்திரத்தை பிரபஞ்ச பேராற்றலான சிவப்பரம் பொருளை மையப்படுத்தி ஒரு வாழ்வியல் வழி காட்டும் நூலாக வடிவமைத்து சென்றிருக்கிறார். மனிதன் எப்படி வாழவேண்டும்? அதுவும், மனிதன் எப்படி நோயற்று வாழவேண்டும்? அறச் சிந்தனையுடன் எப்படி வாழவேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் மிகவும் அழகாகவும், தெளிவாகவும், அறிவியல் பூர்வமாகவும் எழுதி இயம்பி இருக்கிறார். அணுவை முதன்முதலில் உலகுக்கு கண்டு அறிவித்தவர் திருமூலர். அதன்பிறகுதான் அணு ஆராய்ச்சியை படிப்படியாக மற்றவர்கள் கையில் எடுத்தார்கள். மீண்டும் நினைவு கூறுகிறேன். திருமந்திரம் சொல்கிறது,

"யாவர்க்கு மாம்இறை வர்க்குஒரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை

யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.'

இறை வழிபாடு செய்வதற்கு, இறைவனை பூஜிப்பதற்கு எங்கும் எல்லா இடத்திலும் எளிதாகக் கிடைக்கின்ற ஏதேனும் ஒரு பச்சிலை போதுமானதாகும். பசுவுக்கு ஏதேனும் ஒரு கைப்பிடி பசும்புல்லைப் பறித்து உணவாக தருவது எல்லாருக்கும் எளிதான ஒரு விஷயம்தான். அது மட்டுமில்லாமல் எந்த ஒரு உயிருக்கும் தன்னால் இயன்ற ஏதேனும் ஒரு உணவைக் கொடுப்பது நல்ல விஷயமாகும். நாம் உணவருந்தி கொண்டி ருக்கும் பொழுதே இல்லை என்றும், பசி என்றும் வருபவர் களுக்கு ஒரு கைப்பிடி உணவை அவர் களுக்கு தருவதும் கடமையாகும். இவை யெல்லாம் ஒரு தனி மனிதனால் செய்ய முடியாதபட்சத்தில், அனைத்து தரப்பினரி டமும் அன்பாக இருப்பது, இனிமையான வார்த்தைகள் கூறுவது எல்லாருக்கும் மிகமிக எளிதான காரியம் ஆகும். குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கவேண்டும். இதுபோன்று இனிய வார்த்தைகளை கூறினால் அதைவிட சிறந்த அறம் இவ்வுல கில் வேறு எதுவுமில்லை. பிறருக்கு உதவுவதற்கு நம்மிடம் பெரிதாக பொருள் இருக்க வேண்டும் என்பது இல்லை. அதற்கான நல்ல மனம் நம்மிடம் இருக்க வேண்டும் என் பதே திருமந்திர சிற்பியின் வேதவாக்காகும்.

உலகைச் சுற்றி நடக்கும் விபரீதமான விரும்பத்தகாத ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயல்கள் எல்லாவற்றுக்கும் யார் காரணம்? எல்லாவற்றிற்கும் மனித மனமே காரணம்! சோமாலியா எனும் நாட்டில் கடுமையான உணவுப் பஞ்சம்.

அதேவேளையில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சமடைந்த நிலையில் பாலஸ்தீன மக்கள் குறிப்பாக, கைக்குழந்தைகள்முதல் சிறார் கள்வரை கடுமையான பசிக் கொடுமைக்கு ஆளாகி இருக்கின்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம்... யார் காரணம்? அன்பு எனும் ஒற்றை வார்த்தை அழிந்து கொண்டி ருப்பதும், அறம் எனும் பண்பை மனித இனம் மறைத்து அதனை சிதைத்துக் கொண்டி ருப்பதும், தனிமனித வளர்ச்சியில் முக்கியத் துவம் கொடுப்பதுவுமே இத்தகைய மாபெரும் இன்னல்களுக்கு காரண மாக அமைகிறது. மருத்துவ மேதை திரு வள்ளுவர் "பகுத்துண்டு பல்லுயிர் போற்றுங் கள்' என்றுரைக்கின்றார். அதைப் போலவே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் இறைவனிடம் இறைஞ்சு வதைப் பார்க்கலாம்.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடு தோறும் இரந்தும் பசியறாது

அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

நேர் உறக் கண்டுளம்துடித்தேன்

ஈடு இல்மானிகளாய் ஏழைகளாய்

நெஞ்சு இளைத்துப்போன

தமைக்கண்டே இளைத்தேன்.'

vv

வாடுகின்ற பயிர்களைக் கண்ட போதெல் லாம் நான் பசியால் இளைத்து வாடுவது போன்ற உணர்வால் வாடினேன். பல வீடுகளில் யாசித்து தங்கள் பசியைப் போக்கவும், போக்கிக் கொள்ள முடியாமல் அயர்ச்சி உற்றவர்களை கண்டு உள்ளம் பதைத்தேன். நீண்டகால நோயினால் அவதியுற் றோரை நான் நேராகக் கண்டபோதெல்லாம் எனது உள்ளம் நடுங்கினேன். ஒப்பற்றமான உணர்வினராய், ஏழைகளாய் மனம் இழைத்த வர்களைக் கண்டு நானும் இளைத்தேன். இறைவா, இவர் தம் துயர் துடைக்க எனக்கு அருள்புரிவாயாக.

இப்பாடல் உணர்த்தும் பொருளை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இன்றைய சூழ்நிலையில் "பொதுநலம்' என்பதை ஒவ்வொரு ஆறறிவும் மறந்து, தனது சுயநலத்தின் மீது கொடூர பசியோடு அலைந்து திரிந்துகொண்டிருக்கிறது. வாழ்க்கை நிலையற்றது என்பதை சிறிதும் உணராமல் உலகம் முழுவதிலும் உள்ள ஒரு பத்து சதவிதத்தினர் கொடூர பேராசை கொண்டு வறியவர்களின் அத்தியாவசிய தேவைகளை உணராமல் அதற்கு உதவாமல் சுயநலத்தோடு கர்வமும், அகந்தையும், ஆணவமும் சேர்ந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த உடலெனும் வீடு நிலையானது அல்ல. எந்த நிமிடமும் அதனுள் குடியிருக்கும் காற்றெனும் "உயிர்' இவ்வுடலை விட்டு விட்டு ஓடிவிடும். இதைப்புரிந்து கொள்ளாதவர் களிடம் எத்தகைய பொன், பொருள் இருந்தும் அதனால் பிற உயிர்களுக்கு எந்த உபயோக மும் இல்லை.

யாக்கை நிலையாமை பற்றி, திருமந்திர சிற்பி திருமந்திரத்தில் கூறுவதைப் பார்க்கலாம்.

"நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்

காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை

நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட

நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.'

நாட்டுக்கு தலைவனாக இருந்தவன், நமது ஊரில் மிகுந்த சிறப்புக்குரிய பெருமகனாகத் திகழ்ந்தவன். இன்று பாடையில் ஏறி கடைசி பயணம் போகிறான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒலிக்கப் போகிறது அவனது இறுதி ஊர்வலம். நாட்டுக்கு தலைவனாக, ஊருக்குள் உயர்ந்த வனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும், தகுதியும், பெருமையும். உயிர் போய்விட்டால் உடல் பிணம்தான். போகும் இடம் சுடுகாடுதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் உயிர் என்பது ஆறறிவுக்குக் குறைவானதாக இருப்பினும், ஆறறிவுக்கு உகந்ததாக இருப்பினும் "உயிர்' என்பது பொதுவான ஒன்றுதான். அந்த உயிர் குடிகொண்டிருக்கும் பொருளைப் பிரிந்துவிட்டால், அந்தப் பொருள் குப்பை யாகிவிடும். எனவே மதிப்புமிக்க இம்மானுட உடலும், அதனுள் குடியிருக்கும் உயிரும் நலமாக இருக்கும் பொழுதே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நல்ல விஷயங்களை செய்துவிட வேண்டும் என்பதே இதனுள் ஒளிந்திருக்கும் கருத்தாகும்.

இதனை உணர்த்தும் திருமந்திரப் பாடலை பார்க்கலாம்.

"ஆம்விதி நாடி அறம்செய்மின் அந்நிலம்

போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்

நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்

ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.'

பிறவிப் பயன், பிறப்பின் நோக்கம் என்பதெல்லாம் பிறருக்கு உதவுவதே ஆகும். எனவே அந்த நல்வழியை விரும்பி ஏற்று நல்லது செய்யுங்கள். பேரின்ப வீட்டையும், அதன் வழியை அறியவும் இறைவனைப் போற்றுங்கள். இதைவிட சிறப்பாக, முறையாக மேற்கொண்டு ஒழுக வேண்டிய வழிமுறைகளைக் கூறவேண்டும் என்று சொன்னால், மனிதராய் பிறப்பெடுக்கும் பெருமை பெற்றவருக்கு மேலும் சிறப்பாக சொல்ல வேற என்ன வழிமுறைகள் தேவை? ஒன்றும் இல்லை என்பதே இதன் உண்மை பொருளாகும்.

அறம் செய்வதைப் பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்க்கலாம்.

"அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.'

இளைஞராக உள்ளவர் "பிற்காலத்தில் செய்வோம்' என்று காலத்தை கடத்தாமல் இளமையாக இருக்கும்போதே அறச் செயல்களை செய்யவேண்டும். அத்தகைய அறம் ஆனது, அவர் இறக்கும் போதும் அவருக்கு இறப்பே இல்லாத துணையாக அமையும்.

பிற உயிர்களிடம் அதாவது, ஆறறிவு மனித இனம் உட்பட அனைத்து உயிர்களிடமும் உதவிசெய்வதில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதே ஆன்றோர் வாக்கு. திருமந்திரம் கூறுவதைப் பார்க்கலாம்.

"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்

பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன் மின்

வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

காக்கை கரைந்துண்ணும் காலம் அறமினே.'

எல்லாருக்கும் கொடுத்து உதவுங்கள்.

அவர், இவர், வேண்டியவர், வேண்டாதவர் என்று வேறுபாடோ, பாகுபாடோ பார்க் காதீர்கள். வரும் விருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்து அதன் பிறகு நீங்கள் உண்ணுங் கள். முன்னதாக சமைத்து மீதியாகிப்போன பழைய உணவை பாதுகாத்து வைக்காதீர்கள். ஆசை அதிகம் உடையவர்களே, அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள். ஆற அமர உண்ணுங்கள்.தனியாக இருந்து சாப்பிடாதீர் கள். ஏனென்றால் காகங்கள்கூட தம் இனத் தைக்கூவி அழைத்து கூட்டமாக இருந்து உண்ணுவதை உணருங்கள்.

பிற உயிர்களுக்கு உண்பதற்கு உதவுவது இதன் உட்பொருள் ஆகும். இப்போது "யாவர்க்குமாம் இறைவர்க்கு' எனும் பாடலை நினைவு கூறுவோம். இறைவன் கூறுவது, எனக்கென்று பிரத்தி யேகமாக எந்த ஒரு பூஜை பொருட்களும் தேவையில்லை. பிற உயிர்களுக்கு உதவி செய்வதையே என் மனம் விரும்புகிறது. அவ்வாறு உதவி செய்ய முடியவில்லை என்றாலும், நல்ல வார்த்தை களை கூறுவதே மிகச்சிறந்த அறமாகும்.

திருக்குறள் கூறும் கருத்தினை பார்ப்போம்

"அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.'

பிறர்க்கு நன்மையானவற்றை ஆராய்ந்து அறிந்து, அவற்றை செவிக்கு இனிதாக ஒருவன் சொல்வானானால், அவனுக்கு தீவினைப் பயன்கள் அழிந்து, நல்வினைப் பயன்கள் பெருகும்.

திருமந்திரச் சிற்பி கூறியதைப் பார்க்கலாம். "ஒன்றே கடவுள், ஒருவனே தேவன்' என்று சொல்கிறார். அப்படிச் சொன்னவர் மேலும் சொல்லும்போது, உனது "அறிவே கடவுள்' என்கிறார். இந்த புரிதல் வேண்டும் என்றால் நீ யார்? என்று உன்னை ஆராய்ந்து அறிந்து கொள். உன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீ செய்யும் எந்த ஒரு பரிகாரமும் சுயநலமானது.

அது உனக்கு பயனைத் தராது. யாரேனும் எளியவர்க்கோ, ஐந்து அறிவுக்கு குறைவான உயிர்களுக்கும் அல்லது இயற்கையாக உள்ள மரம், செடி, கொடிகள் என்று ஏதேனும் ஒரு உயிருக்கு நீ உதவிசெய். அத்தகைய உனது மனதைக் கவனித்துக் கொண்டிருக்கும் இயற்கை எனும் இறை ஆற்றலான சிவப்பரம் பொருள் உனக்குத் தேவையானதை நீ கேட்காமலே கொடுத்துவிடும். இதன்மீது நீ முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.

அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் இறைவனிடம் கேட்பதைப் பார்க்கலாம்.

தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்

"தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்

ஆயுள் இன்பமும் அன்பும் மெய் அறிவும்

அனைத்தும் நீ என ஆதரித்திருந்தேன்

ஏயும் என்னள விரக்கம் ஒன்று இல்லையேல்

என்செய்வேன் இதை யார்க் கெடுத்துரைப்பேன்

சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்

தில்லை மன்றிடைத் திகழ் ஒளி விளக்கே.'

தில்லை அம்பலத்தில் திகழும் ஒளி விளக்கே எனக்குத்தாயும் தந்தையும் குருவும் தெய்வம் ஆகின்றவன் நீயே! என்னைக் காத்தருளும் தலைவனும் நீயே! நான் வாழ்வதற்கு வேண்டிய பொருளும் அனுபவிப்பதற்கு ஆய்ந்து உணரும் இன்பமும் அதற்கு வேண்டிய அன்பும் மெய் உணர்வும் நீயேயாக உள்ளாய். இவற்றை எண்ணியே உன்னிடம் இன்றுவரை நான் அன்பு செலுத்தி வருகின்றேன். அப்படி இருக்க நீயே என்னிடம் கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை என்றால், நான் இதனை யாரிடம் சொல்வேன். குழந்தைகள்கூட உன் அருள்பெற ஆசை கொள்ளும் என்பதை அறிந்து எனக்கு நீதான் அருள்புரியவேண்டும்.

பக்தியில் ஆகச்சிறந்த இராமலிங்க வள்ளலாரே இவ்வாறு இறைவனிடம் இறைஞ்சும்பொழுது, எப்படி இறைவனிடம் பத்தி செய்ய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு பக்தி செய்யவேண்டும். உண்மை பக்தி செய்வோம். உயரிய இறைப்பேரருளைப் பெறுவோம்.