"கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து.'

-திருவள்ளுவர்

கற்பவை கற்று மனத்துள் கோபம் பிறக் காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்த வனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும் என்பதாம்.

Advertisment

ஒருசமயம் கலைமகளின் அருளை முழுமை யாகப் பெற்ற கம்பர் சோழ நாட்டிலிருந்து புறப் பட்டுப் போய்க்கொண்டிருந்தார். கைகளில் பண மில்லை. கம்பரின் அருமை பெருமை அறிந்து ஆதரிப்பவர்களுமில்லை.

போகும்வழியில் ஓர் ஊரில் நல்லி என்பவள் ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்ததை அறிந்தார் கம்பர். அதாவது நல்லி என்பவள் ஒரு வீடுகட்ட முயற்சி செய்தாள். ஆனால் என்ன காரணத்தி னாலோ வீட்டின் புறச்சுவர் இடிந்து கொண்டே இருந்தது. கட்டுமான வேலையில் திறமைசாலிகள் பலர் முயன்றும் சுவர் எழும்பி, கட்டி முடிக்கும் வேளையில் அப்படியே முழுமையாக சரிந்து விழுந்தது.

ff

Advertisment

"இந்த சுவரை நல்லவிதமாகக் கட்டி கொடுப்பவருக்கு 8 படி நெல் கொடுப் பேன்' என்று விளம்பரப்படுத்தினாள் நல்லி. அந்தப் பெண்ணின் விளம்பரம் கம்பர் காதில் விழுந்தது. 8 படி நெல் என்பது அந்தக் காலத் தில் பெரும் செல்வமாக மதிக்கப் பெற்றது. ஆகையால் கைகளில் பணமில்லாத நிலை யில் இருந்த கம்பர் "இந்தச் சுவரை நான் கட்டித் தருகிறேன்...' என்று சொல்லி சுவர் கட்டும் வேலையில் இறங்கினார்.

மண் பிசைந்து குழைத்து கற்களை அடுக் கிப் பூசி, சுவரைக் கட்டிமுடித்தார். சுவரும் வழக்கப்படி விழத் தொடங்கியது. அதைப் பார்த்த கம்பர், "நல்லி தரும் கூலி, நெற் கொண்டு போம் அளவும் நில்லாய் நெடுஞ்சு வரே...' என பாடினார். சுவர் நின்றுவிட்டது; விழவில்லை.

அதைப்பார்த்த நல்லி ஆச்சரியப்பட்டு 8 படி நெல்லை கம்பரிடம் கொடுத்தாள். நெல்லைப்பெற்ற கம்பர் நகரத் தொடங்கி னார். "தொப்பென்று சுவர் விழுந்துவிட்டது. அதிர்ச்சியடைந்தாள் நல்லி. கம்பரோ சிறிதும் கலங்கவில்லை.

கலைமகளைத் தியானித்து பழைய படியே சுவரை எழுப்பி, "நெற்கொண்டு போனாலும் நில்லாய் நெடுஞ்சுவரே...'' என பாடலை மாற்றிப் பாடினார். சுவர் விழவில்லை. உறுதியாக நிலைபெற்று நின்றது. அனைவரும் வியந்தனர்.

அமிர்தபுரம் நாட்டை ஆட்சி செய்தான் மன்னன் அமரகேது. மாவீரன் என்று பெயர் எடுத்தவன். அண்டை நாடுகளை படை யெடுத்து வெற்றிகொண்டான். அந்த நாடுகளின் கஜானாவில் இருந்தவற்றை கொள்ளையடித் தான். சில ஆண்டுகளில் அளவற்ற செல்வம் சேர்த்துவிட்டான்.

ff

அப்போது புத்த துறவி சந்திரநாதன், அந்த நாட்டுக்கு வந்தார். பெரும் ஞானியான அவரை அரண்மனைக்கு அழைத்து உபசரித் தான் மன்னன். அவரது அறிவுரைகளை கவனமாகக் கேட்டான். அன்று அரண்மனைக்கு ஒரு திருடனைப் பிடித்து வந்திருந்தனர் காவலர்கள். பிடிபட்டிருந்தவன் மிகவும் ஏழை. பட்டினியால் வாடியது தெரிந்தது.

தலைமை காவலன். "மன்னா.... இவன் பிரபு வீட்டில் புகுந்து ஆபரணங்களை திருடி யுள்ளான். அவற்றை விற்க முயன்றபோது அகப் பட்டான் என்றான். அப்படியா, பத்து ஆண்டு கள் சிறையில் அடையுங்கள்''... கோபமாக உத்தரவிட்டான் மன்னன். அதைக் கேட்டதும் கலங்கியபடி பணி கிடைக்காமல் பல நாட்கள் பட்டினி கிடந்தேன்;

ஏதேனும் பொருள் கிடைத்தால் விற்று பிழைத் துக்கொள்ளலாம் என நினைத்து செல்வந்தர் வீட்டில் திருடினேன்; என்னை மன்னித்து விடுங்கள்' என அழுதான் திருடன்.

நிகழ்வை பார்த்த புத்த துறவி, "அவனை மன்னித்துவிட்டு விடுங்கள். அதே நேரம் இதுபோன்ற குற்றங்கள் செய்துள்ள மன்னராகிய உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்க லாம்...' என்று கேட்டார்.

அதிர்ச்சியடைந்த மன்னன் "துறவியே... நான் குற்றவாளியா.... எனக்கு தண்டனையா....

என்றான். எத்தனையோ நாடுகளை படை பலத்தால் ஆக்கிரமித்து, மக்களை அடிமைப்படுத்தியுள்ளீர்கள். "சொத்துகளை கொள்ளையடித்தீர்; அதிகாரத்தில் இருப்பதால் இந்த குற்றங்களை நியாயப்படுத்துகிறீர்; ஆனால் பட்டினியால் திருடிய ஏழைக்கு தண்டனை கொடுக்க நினைக்கிறீர்; இதில் என்ன நீதி இருக்கிறது....

துறவியின் கேள்வியால் மனம் திருத்தினான் மன்னன். ஏழையை விடுதலை செய்து, பொற்காசுகள் வெகுமதியாக தந்து அனுப்பி னான். இனி அந்நிய நாடுகளை ஆக்கிரமிப்ப தில்லை என முடிவுசெய்தான். அவனை வாழ்த்தி னாள் துறவி.

நேர்மறை எண்ணத்தோடு நீதியைப் போற்றி நடந்தால் எந்த தவறையும் செய்ய மனம் ஒப்புக்கொள்ளாது. அத்தகைய மனத் தையும்; "அறம் பார்த்து ஆற்றின் நுழைந்து' என்ற வள்ளுவர் வாக்குபடி; அறவழியில் வாழ்பவர் (கம்பர்) சொல்லும் சொல்லுக்கு, பேசும் பேச்சுக்கு வலிமை உண்டு, சக்தி உண்டு என்பது போல்; வாக்கிற்கு வலிமையையும் தரவல்ல தொரு அற்புதமான திருத்தலம்தான் காரைக் கால், தருமபுரம், ஸ்ரீ யாழ்மூரி நாதர் திருக் கோவில்.

ff

இறைவன்: யாழ் மூரிநாதர், தருமபுரீஸ்வரர்.

இறைவி: தேனாமிர்தவல்- மதுர மின்னம்மை.

விசேஷமூர்த்தி: சன்யாச கோல தட்சிணா மூர்த்தி, விணை ஏந்திய சிவன்.

ஆகமம்: மகுடாகமம்.

புராணப் பெயர்: திருத்தருமபுரம்.

ஊர்: தருமபுரம்.

வட்டம்: காரைக்கால்.

மாநிலம்: புதுச்சேரி.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், எம தீர்த்தம்.

தலவிருட்சம்: பின்னை மரம்.

தருமபுர ஆதீனம் குரு மகா சன்னிதானம் அவர்களது கட்டுப்பாட்டில் நன்முறையில் இயங்கியவருகின்ற இவ்வாலாயம் சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிவனின் தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 51-ஆவது தலமாகவும், 274 சிவாலயங்களில் இது 114-ஆவது தலமாக வும் திகழ்கின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட பெருமையோடு இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் தருமபுரம் ஸ்ரீ யாழ் மூரிநாதர் திருக்கோவில்.

மாதர் மடப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர் சடையுடைம்

மலைமகள் துணையென மகிழ்வர்

பூத இனப்படை நின்றிசை பாடவும் அடுவர் அவர்

படர்

சடைந்நெடு முடியதொர் புனலர்

வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை யிரைந்

நுரை கரைபொரு துவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்குமலர்ச் சிறை வண்டறை

யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.v -திருஞானசம்பந்தர்

தல வரலாறு

திருக்கடையூரில், யமன் தனது கயிற்றை மார்க்கண்டேயரைச் சுற்றி வீசினான். ஆனால் பிந்தையவரின் பக்தியின் காரணமாக தனது பக்த னைக் காக்கவந்த சிவனையும் அந்தக் கயிறு சூழ்ந்தது. இது எமனுக்கு ஒரு பாவத்தை ஏற்படுத்தியது. மற்றும் பூமியில் சமநிலையைப் பராமரிக்கும் மற்றும் இறந்த ஆன்மாக்களுக்கு பொறுப்பான அவரது வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின.

பாரம் தாங்காத பூமாதேவி எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினான். அதே சமயம் எமதர்மனும் தன்தவறை மன்னித்து பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக் கொண்டான். எமனுக்கு அருள்செய்வதற்காக சிவன், பூலோகத்தில் தன்னை வழிபட்டுவர இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி எமன் தவமிருந்து பல்வேறு கோவில்களில் சிவனை வழிபட்டார். இறுதியில் அவர் இந்த கோவிலில் வழிபாடு செய்தபோது அவருக்கு காட்சி தந்த சிவன் தகுந்த நேரத்தில் சாபம் நீங்கும். பணி கிடைக்கப்பெறும் என்றார்.

நன்றி செலுத்த எமன் இங்கே தீர்த்தம் உருவாக்கி னார். எமன் தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு அருளவேண்டும் என வேண்டவே சிவன் இங்கேயே தங்கினார். தர்மத்தைக் குறிக்கும் எமன் இங்கு சிவபெருமானால் அருளப்பட்டதால் இத்தலம் தருமபுரம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தின் பெயருக்கு மற்றொரு புராண மும் உள்ளது. மகாபாரத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது யுதீஷ்டிரர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. யுதீஷ்டிரர் தர்மராஜா என்றும் அழைக்கப்படுகிறார்.

அவரது தந்தை தர்மா- எமன் என்பதாலும் அவருடைய நேர்மையான நடத்தைக்காகவும்; யுதீஷ்டிரரின் பெயரால் இந்த இடம் தருமபுரம் என்றழைக்கப்படுவதாக தலபுராணம் சொல் கிறது.

யாழ் இசைத்த சிவன்

எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீல கண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன்மீது தீவிர பக்திகொண்டு இருந்தார். திருஞானசம்பந்த ரின் சிவபணியை அறிந்த நீலகண்ட யாழ்ப் பாண நாயனாரும் அவரது மனைவி மதங்க துளாமணியும் அவருடன் இணைந்து சிவத்தல யாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத் துப் பாடல்களுக்கும் இனிமையாக யாழ் (ஒருவகையான இசைக்குருவி) இசைக்கும் திறமை பெற்றிருந்தால் யாழ்ப்பானார் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார்.

அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில்தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரைவிடச் சென்றார்.

அப்போது சிவன் அவருக்கு காட்சிதந்து யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து நடனம் ஆடினார். நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப் பெற்றார்.

யாழை இசைத்து யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன் "யாழ்மூரி நாதர்' என அழைக்கப்படுகிறார்.

சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும் அமிர்தமும் கலந்ததுபோல இனிமையாகப் பாடி மகிழ்ந்தாளாம். எனவே அம்பாளை "தேனாமிர்தவல்லி' என்றழைப்பர். சிவன் யாழ் இசைத்தபோது குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர் "எழில் பொழில் குயில் பயில தருமபுர பதியே!'' என்று பாடியிருக் கிறார்.

சிறப்பம்சங்கள்

ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ யாழ்மூரி நாதர், தருமபுரீஸ்வரர்; இறைவியின் திருநாமம்: தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை; தலவிநாயகர்- கற்பக விநாயகர்; உற்சவர்- தர்மபுரீஸ்வரர் கையில் யாழ் ஏந்தியவாறு, யாழ் இசை கோலத்தில் காட்சிதருவதோடு, அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாணநாயனாரும் இருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்று.

ப் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்ச மான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பிக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னை யும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தா ராம். இதனை உணர்த்தும்விதமாக இத்தல தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம் தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால் இங்கே காவிநிற வஸ்திரம் சாற்றி பூஜை கள் செய்கிறார்கள். இதை சன்னியாச தட்சிணா மூர்த்தி என்பர். இக்கோலத்தைக் காண்பது அபூர்வம் என்கிறார் ஆலய அர்ச்சகர்.

ப் சிவாலயத்திற்குண்டான அனைத்து விசே ஷங்கள் நடந்தாலும் குறிப்பாக வைகாசி மூலநட்சத்திரத்தில் சம்பந்தருக்கு குருபூஜை மற்றும் அன்று சிவன் வீதியுலா வந்து சம்பந்த ருக்கு காட்சிதருகின்ற விழா வெகுவிமரிசையாக நடப்பது குறிப்பிடத்தக்கது.

ப் மகுடாகம விதிப்படி பூஜைகள் நடக் கின்ற இத்தலத்தில் ஆயுள் விருத்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்து சுவாமி அம்பாளிடம் வேண்டிக்கொள்வதும், திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் உத்திராடம் நட்சத்திர தினத்தில் இத்தல துர்க்கைக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் கால தாமதமாகாமல் நற்பலன் கிட்டுவதோடு வம்ச விருத்தியுண்டாகும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான முத்து குருக் கள்.

ப் கோஷ்டத்தில் லிங்கோத்பவரை பிரம்மா, திருமால் இருவரும் வணங்கிய கோலத்தில் காட்சிதருவது சிறப்பு.

ப் தருமன் உண்டாக்கிய எம தீர்த்தம் சுவை யுடன் இருப்பதோடு; தீர்த்தத்தை பருகினால் பாவங்கள் நீங்கும் என்கின்றனர் உள்ளூர் கிராமவாசிகள்.

ப் பின்னை மரம் தல விருட்சமாகக்கொண்ட இவ்வாலயம்; 7-ஆம் நூற்றாண்டுக்குமுன்பே உருவாகி; 8, 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலம், விஜயநகரப் பேரரசு மற்றும் மரட்டியர்களால் அடுத்தடுத்து புதுப்பிக்கப் பட்டு நாளடைவில் படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, கடைசியாக 2017-ஆம் ஆண்டு குடமுழுக்கு கண்டு அனுதினமும் நான்குகால பூஜைகள் தருமபுரி ஆதீனத்தின் இயக்கத்தோடு நடந்துகொண்டு, தற்பொழுது பொலிவுடன் விளங்குகின்ற இத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்பவர்கள் திருப்தியோடு திரும்பிச் செல்வர். கோரிக்கைகள் நிறைவேறியபின் மறுபடியும் மகிழ்வுடன் இங்கு வருவர் என்று கோவில் கணக்கர் சேகர் சிவம் கூறுகிறார்.

திருக்கோவில் அமைப்பு

நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று ஐந்து நிலைகள்கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இரண்டு பிராகாரங்களுடன் காட்சி யளிக்கும் இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் தென்னை மரம், வாழைமரம், பூச்செடிகளுடன்கூடிய நந்தவனத்தில் தல விருட்சமான பின்னை மரம் உள்ளது.

உட்பிராகார நுழைவாயிலில் மகா மண்டபத் தில் தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் நின்ற நிலையில் இடது கையை தொடையில் வைத்தப்படி மலர்ந்த முகமலர்ச்சியுடன் அருள் கிறாள். அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கிய படி நடராஜர் சந்நிதி உள்ளது கருவறை மண்டபத்தில் மூலவர் யாழ்மூரிநாதர் லிங்கத் திருமேனியாய் எப்பொழுதும் வெள்ளிக் கவசத்துடன் அருட்காட்சியளிக்கிறார். மூலவர் சந்நிதிக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர்.

கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சற்றே சாய்ந்த நிலையில் சனகாதி முனிவர்களுடன் அருள்கிறார். அடிமுடிகாணா அண்ணல் லிங் கோத்பவரை பிரம்மாவிஷ்ணு இருவரும் வணங்கிய கோலத்தில் உள்ளனர். கோஷ்டத் தில் துர்க்கைக்கு பின்புறத்தில் மகிஷாசூரன் இருக்கிறான்.

திருச்சுற்றில் மடப்புள்ளி உள்ளது. தொடர்ந்து விநாயகர் சைவசமய குரவர் நால்வர், சந்தனாசாரியார், 63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். அடுத்து க்ஷேத்திர விநாயகர், சோமாஸ் கந்தர், சுப்ர மணியர், காசிவிஸ்வநாதர், சந்திரசேகர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர். இத்திருச்சுற்றில் சூரியன், சந்திரன், பைரவர், நவகிரகங்கள் ஆகியோர் உள்ளனர். எமதீர்த்தக் கிணறு உள்ளது.

சிவலிங்க வழிபாடும் அதன் பலன்களையும் பார்க்கும்போது-

தர்ப்னபப்புல் லிங்கம்- லட்சுமிகடாட்சம்

ஆற்றுமணல் லிங்கம்- மோட்சம்

வெண்ணெய் லிங்கம்- நல்வாழ்வு

அரிசிமாவு லிங்கம்- சிறப்பு கள் சேரும்

அன்னலிங்கம்- தீர்க்காயுள்

களிமண் லிங்கம்- மனச்சாந்தி

பசுஞ்சாண லிங்கம்- ஆரோக் கியம்

இப்படி வகைவகையாக லிங்கம் செய்து வழிபட்டால் எப்படி பலன் கிட்டுமோ அவை யனைத்தும் ஒட்டுமொத்த பலனாய் தருமபுரத்திலே சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை நல்கி அருள்கிறாரோ இவரது மகிமையை என்னவென்று சொல்வது என்கிறார் ஆலய பிரதான அர்ச்சகரான முத்து குருக்கள். மேலும் அவர் கூறுகையில்;

சிவ பூஜைக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த மலர்கள் சூட்டி வழிபடலாம்

சித்திரை- பலாசம்

வைகாசி- புன்னை

ஆனி- வெள்ளெருக்கு

ஆடி- அரளி

ஆவணி- செண்பகம்

புரட்டாசி- கொன்றை

ஐப்பசி- தும்பை

கார்த்திகை- கத்திரி

மார்கழி- பட்டி

தை- தாமரை

மாசி- நீலோத்பவம்

பங்குனி- மல்லிகை

அதேபோல் மாதப் பௌர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்

சித்திரை- மரிக்கொழுந்து

வைகாசி- சந்தனம்

ஆனி- முக்கனிகள்

ஆடி- பால்

ஆவணி- நாட்டுச் சர்க்கரை

புரட்டாசி- அப்பம்

ஐப்பசி- அன்னம்

கார்த்திகை- தீப வரிசை

மார்கழி- நெய்

தை- கருப்பஞ்சாறு

மாசி- நெய்யில் நனைந்த கம்பளம்

பங்குனி- கெட்டித்தயிர்.

சிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களாலும் கீழ்க்கண்ட நற்பலன்கள் கிட்டும். தயிர்ச்சாதம், நீர்மோர்- மூலபவுத்திரம், எலும்புருக்கி நோய் தீரும்.

பால், சர்க்கரை பொங்கல்- வயிற்றுக் கோளாறு தீரும்.

தேன், திணை மாவு- குழந்தை பாக்கியம் கிட்டும்.

தயிர்சாதம்- காரியத் தடை நீங்கும்.

எலுமிச்சை, தேங்காய் சாதம்- அடிவயிற்றில் இருந்து தொடைவரை உள்ள நோய் தீரும்.

வெண் பொங்கல், கடலை, சுண்டல்- ஆஸ் துமா, மூச்சு சம்பந்தமான நோய் தீரும்.

குறிப்பாக பங்குனி மாத பிரதோஷத்தன்று தேங்காய் சாதம், தக்காளி சாதம் படைத்து வழி பட்டால் பித்தம், மனக்கிலேசம், பைத்தியம் தீரும்.

சிவபூஜைக்குரிய மலர்கள் பலன்கள்

செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம், பாரிஜாதம்- பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள் விருத்தி.

வெண் தாமரை, நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி.

மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்பட்டு, சகலகலா விருத்தி.

மாசிப்பச்சை மரிக்கொழுந்து- நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி- கடன் நீங்கும், கன்னியர்க்கு மணப்பேறு கிட்டும்.

செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.

நீலசங்குலி அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும். அருளும் ஆயுளும் கிட்டும்.

வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி சகல காரியமும் கைகூடும்.

கிளுவை, விளா, வெண் நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்சவிலவங்களாகும். இவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; பலன்கிட்டும்.

சுயம்பு மூர்த்தியாம் எழுந்தருளி எழுச்சி யுடன் கர்மவினைகளைக் களைத்து களிப்பான வாழ்வருளும் தருமபுரம் ஸ்ரீ யாழ்மூரிநாதர் உடனுறை தேனாமிர்த வல்லியை வருகின்ற சோபகிருது வருஷம் மார்கழி மாதத்தில் 4-ஆம் தேதி நிகழும் சனிப்பெயர்ச்சி காலங்களிலும் 20-12-2023 அன்று (மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் சனிபகவான்) மற்றும் உத்திராடம் நட்சத்திரம் வருகின்ற நாளிலிலோ, வைகாசி திருவிழா காலத்திலோ குடும்ப சகிதமாக தரிசிப்போம்; நற்பலன்களை பெறு வோம்.

நடைதிறப்பு: காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: பொறுப்பாளர், தருமபுர ஆதீனம், தருமபுரம், மயிலாடுதுறை மாவட்டம்.

பூஜை விவரங்களுக்கு: முத்து குருக்கள்... 99407 55484. ஸ்ரீ யாழ்மூரிநாதர் திருக்கோவில், தருமபுரம், காரைக்கால்- 609 602.

புதுச்சேரி. கோவில் கணக்கர் சேகர் சிவம்- 70100 22350.

அமைவிடம்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வட்டத்தில் காரைக்காலில் இருந்து திருநள்ளார் செல்லும் வழியில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதி காரைக்காலில் உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா