கோடைகாலம் ஆரம்பித்துவிட்டால் நகர் எங்கும் "தண்ணீர்ப் பந்தல்' வைப்பது வழக்கம். இதில் குறிப்பாக அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்தான் அதிகளவு தண்ணீர் பந்தலை வைப்பதுண்டு. சில கட்சிகள், அதன் நிறுவனங்கள் முதல்நாள் ஆடம்பரமாக திறப்பு விழா செய்துவிட்டு பின்னர் அங்கு ஒன்றுமே இருக்காது. இந்த காட்சியை நடைமுறையில் வருடம்தோறும் பார்ப்பதுண்டு. பல நூற்றாண்டுகளுக்குமுன்பு பொதுமக்களின் நலன்கருதி தண்ணீர்ப் பந்தலை வைத்தவர் அப்பூதியடிகள் என்பவர்தான். 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். இவரைப்பற்றி யாழ்ப்பானத்து நல்லூர் ஆறுமுக நாவலர்- "தனமா வதுதிரு நாவுக்கரசின் சரணமென்னா

மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழக்கே

யினமாத் தனது பெயரிடப் பெற்றவ எனங்கள்பிரா

னனமார் வயிற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே'

எனப் பாடியுள்ளார். தனக்கென வாழாது சிவனடி யார்களுக்காகவே வாழ்ந்த அன்பர்.

sss

அந்த தண்ணீர்ப் பந்தல், அன்னசத்திரம் முதலியவற்றிற்கு தனது பெயரையோ, தன் குடும்பப் பெயரையோ வைக்காமல் தனது மானசீக குருவான திருநாவுக்கரசர் (அப்பர்) பெயரை வைத்து மகிழ்ந்தார். பண்டைய தமிழனின் பெருந்தன்மையான மனதிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். திருநாவுக்கரசர் பெயரில் தொன்றுதொட்டு இன்றும் அடியார்கள் நடத்தி வருவது பாராட்டவேண்டிய அம்சம்.

"திருநின்ற செம்மையே செம்மை யாகக் கொண்ட

Advertisment

திருநாவுக்கரையன்ற னடியார்க்கு மடியேன்'

என திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் திருநாவுக்கரசரைப்பற்றி இங்ஙணம் புகழ்ந்து பாடியுள் ளார். பெண்ணையாறு பாயும் திருமுனைப்பாடி (தென்னாற் காடு மாவட்டம்) திருவாமூரில் வேளாளர் குலத்தில் புலழனார்-

மாதினியார் என்ற தம்பதியினர் வாழ்ந்துவந்தனர். சிறந்த சிவபக்த ரான புலழனாருக்கு திலகவதி என்கிற மகளும், மருணீக்கியார் என்கிற மகனும் பிறந்தனர்.

Advertisment

மருணீக்கியார் ஆரம்ப காலத்தில் சமண நூல்களைக் கற்றதால் சமண சமயத்தின்பால் இருந்த மயக்கத்தினால், சமணத்தைத் தழுவினார். சைவ குலத்தில் பிறந்த தன் தம்பி இப்படி மாறிவிட் டானே என திலகவதியார் மனம் வருந்தி சிவபெருமானை வழி பட்டு வந்தார். இறைவனின் திருவிளையாட்டால் மருணீக் கியார் சைவ சமயத்தைத் தழுவி, இறைவனின் திருவருளால் தேவார மூவர் என்கிற பட்டப் பெயரைப் பெற்றார். இவர் சிவபெருமானைப் போற்றி தேவாரத் தின் நான்காம் திருமுறையில் 1,070 பாடல்களையும், ஐந்தாம் திருமுறையில் 1,015 பாடல்களையும், ஆறாம் திருமுறையில் 981 பாடல்களையும் பாடினார். செந்தமிழில் இயற்றப்பட்ட தேவாரப் பாடல்களை இன்னிச்சைப் பாடல்களாக முதன்முதலில் பாடியவர் இவரே. இதனால் தமிழ் உலகுக்கும் சைவ உலகுக்கும் பெருமை சேர்ந்தது. சிவபெருமானிடம் அளவற்ற பக்தியைக்கொண்டு சுமார் 125-க்கும் மேற்பட்ட திருத்தலங்களுக்குச் சென்று பதிகங்களைப் பாடியதால் மருணீக்கியார் திருநாவுக்கரசர் என அழைக்கப்பட்டார். பின்னாளில் திருஞான சம்பந்தர், அப்பர் என அழைத்து பெருமைப்படுத்தினார்.

அடியாருக்கு அடியாராக விளக்கிய திருநாவுக்கரசரின் புகழ் ஊர் எங்கும் பரவியது. சோழவள நாடான தஞ்சை பகுதியில் திங்களூரில் அந்தணர் குலத்தில் பிறந்த அப்பூதி என்கிற சிவனடியார் வாழ்ந்து வந்தார். எப்பொழு தும் சிவ சிந்தனையிலும், சிவபக்தியிலும் திளைத்து இருந்தார். சிவனடியாருக்குத் தொண்டுசெய்வதே தனது கடமை என வாழ்ந்ததால் இவரை அப்பூதியடிகள் என அழைக்கப்பட்டார். திருநாவுக்கரசரின் பெருமையை உணர்ந்த இவர் அவரது பெயரால் தண்ணீர் பந்தல், அன்னசத்திரம் போன்றவற்றை உருவாக்கினார். இதனால் சிவபக்தர்களும், பொதுமக்களும் பயன் பெற்றனர்.

ss

திருநாவுக்கரசர் பல திருத்தலங்களுக்குச் சென்று பதிகம் பாடும் சமயத்தில் திருப்பழனம் செல்லும் வழியில் திங்களூருக்கு வருகை தந்தார். அங்கு தனது பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைக்கப்பட்டத்தை அறிந்து ஆச்சரியப் பட்டு விசாரித்தபோது அப்பூதியடிகளின் தொண்டு என்பதை அறிந்து அவரைக்காண அவரது இல்லத்திற்குச் சென்றார். நவகிரகங் களில் சந்திரனின் திருத்தலமான திங்களூரில் வாழ்ந்த அப்பூதியடிகளின் இல்லத்திற்குச் சென்றபோது இதுவரை மானசீக குருவாக வழிபட்டுவந்தவரே தன்னைக் காண நேரில் தனது இல்லத்திற்கே வந்ததால் மகிழ்ச்சிக் கடலில் அப்பூதியடிகளும், அவரது குடும்பத் தினரும் திளைத்தனர். வந்தவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார்.

அப்பூதியடிகளின் மனைவி திருநாவுக் கரசரருக்காக சிறப்பான முறையில் பல திண்பண்டங்களைத் தயாரித்து, மதிய உணவிற்காக உணவு அருந்துமாறு அழைக்கவே திருநாவுக்கரசரும் சம்மதித்தார்.

உணவு பரிமாற தோட்டத்தில் சென்று வாழை இலையை எடுத்து வருமாறு தன் மகனிடம் அப்பூதியடிகள் சொல்லவே சிறுவனும் தோட்டத்திற்குச் சென்றான்.

தோட்டத்திலிருந்த ஒரு கருநாகம் சிறுவனைத் தீண்ட சிறுவன் மயக்க முற்று இறந்தான். சிறுவன் இறந்ததாலே குடும்பத் தினர் அனைவரும் மிகவும் சோகமானார் கள். இந்த செய்தி தெரிந் தால் வந்த விருந்தினர் சாப்பிடாமல் சென்று விடுவாரே என்கிற வருத்தமும் தம்பதி யினரிடம் இருந்தது. துக்கத்தை அடக்கிக் கொண்டு உணவு பரிமாற நினைத்தனர். வீட்டு சூழ்நிலை மாறியதால் இதை உணர்ந்த திருநாவுக்கரசர் உணவு உண்ணாமல் நடந்தவற்றை கேள்விப்பட்டு மிகவும் மனம் வருந்தினார். தன் மகன் இறந்த நிலையிலும், தனக்காக சோகத்தை மறைத்து உணவு அருந்த அழைத்த தம்பதியினரின் நல்ல உள்ளத்தை அறிந்த திருநாவுக்கரசர், அவர் களுக்கு உதவவேண்டும் என எண்ணினார்.

இறந்த சிறுவனின் சடலத்துடன் சிவன் கோவிலுக்குச் சென்று

"ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை

ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெண்தலைகையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே'

எனத் தொடங்கும் "விடம் தீர்த்த பதிகத்தை' பாடினார். (நான்காம் திருமுறை) திருநாவுக்கரசர் பத்து பாடல்களை பாடியபின்னர் சிறுவன் சிவபெருமானின் அருளால் மீண்டும் உயிர்பெற்றான்.

இதனால் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்து திருநாவுக்கரசரை வணங்கினார் கள். பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி செய்யும் வேளையில் இப்பதிகத்தைப் பாடினால் நிச்சயம் உயிர் பிழைப்பார்கள். "செய்த தர்மம் தலைக்காக்கும்' என்று சொல்வார்கள். அதன்படி அப்பூதியடிகள் தண்ணீர்ப் பந்தல், அன்னசத்திரம் முதலியவற்றை தொடர்ந்து நடத்தியதன் பயன் இறந்த மகன் மீண்டும் மீண்டு வந்தான்.

திருநாவுக்கரசர் பெருமானின் மலரடிகள் போற்றி! போற்றி!!