நமக்காக வேண்டு வதைவிட பிறர் நலனுக்காக வேண்டினால் கடவுளின் அருளால் நம் துன்பங்கள் ஓடிவிடும். அத்துடன் நம் தலையெழுத்தை மாற்றும் சக்தி (சிவனுக்கு) இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு உன்னதமான திருத்தலம்தான் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சோழீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: சோழீஸ்வரர்.
இறைவி: அருள்மிகு தில்லைநாயகி.
ஆகமம்/ பூஜை: காமிக ஆகமப்படி மூன்றுகால பூஜைகள்.
ஊர்: சாமளாபுரம்.
மாவட்டம்: திருப்பூர் மாவட்டம்.
மாநிலம்: தமிழ்நாடு.
தீர்த்தம்: நொய்யல் ஆறு மற்றும் ஆலயக் கிணற்று நீர்.
தலவிருட்சம்: வில்வமரம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/solisharwar.jpg)
சுமார் பல நூறு ஆண்டுகளுக்குமுன் கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்ட இத்தலம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதும், பரம்பரை அறங்காலவர் அவர்களது இயக்கத்திலும் முறைப் படிகால பூஜைகள் நடப்பதோடு; மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம் தான் சாமளாபுரம் சோழீஸ்வரர் திருக்கோவில்.
"கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்க்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி
சாமளாபுரத்து சோழீஸ்வரரே போற்றி! போற்றி!!''
கொங்கு மண்டலத்திலே வெள்ளிங்கிரி மலையில் தோன்றி கிழக்கே 170 கிலோமீட்டர் பயணிக்கின்ற காஞ்சிமா நதி என்று போற்றக் கூடிய நொய்யல் ஆற்றின் தென்புறத்திலும், தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், சோழன் பூர்வபட்டயம் ஏடுகளில் குறிப்பிடப்பட்டதும், கோள்நிலைக் கோளாறுகள் அகற்றி கோலாகல வாழ்வை வரவழைப்பதிலும் முக்கியத்துவம் பெறுகின்றதொரு திருத்தலம்தான் சாமளாபுரம் சோழீஸ்வரர் திருக்கோவில்.
தலவரலாறு
முற்கால மன்னர்கள் வனத்தை சீர்படுத்தி, நாடாக்கி, குளம் வெட்டி, வளம் பெருக்கி, கோவில் தீர்மானித்து குடிகளை அமர்த்தினர். அப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் சாமளா புரம் கோவிலும் ஒன்று.
ஊரும், கோவிலும் மன்னன் கரிகாலன் காலத்தில் உருவானது என்பதை சோழன் பூர்வ பட்டயம் சொல்கிறது. சோழ மன்னர் மரபில் வந்த உத்தம சோழனின் மகன் உறையூர் சோழன். அவன் உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டபோது அங்கு சமய முதலி, கஸ்தூரி ரங்கப்ப செட்டியார், திருவெண்ணெய் நல்லூர் சடையப்பன் ஆகியோர் சமயத் தலைவர்களாக இருந்த னர். சோழனின் ஆட்சியில் அநீதி தலையெடுத்து மக்களை வாட்டியதால் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் நலிவுற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/solisharwar1.jpg)
எனவே, தங்களைக் காத்திட அம்மனை வேண்டினர். உறையூரில் இருந்தால் தனக்கும், தன் குடும்பத்தார்க்கும் தேவியால் ஆபத்து பாதிப்பு வருமென பயந்துபோன சோழன் கர்ப்பிணியான மூத்த மனைவி சிங்கம்மாளை யும், இளைய மனைவி சாமளாம்மாளையும் கொங்கு நாட்டிற்கு அனுப்பி வைத்தான். பின்னர் குதிரை ஏறி தப்பித்து செல்லும்போது நெற்றிக்கண்ணைத் திறந்து சோழனை அழித்தாள். தேவி, கொங்கு நாடு வந்தடைந்த அரசியர் இருவரும் அக்ரஹாரம் ஒன்றில் தங்கினர். உரியநாளில் சிங்கம்மாள் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவன் வளர்ந்து கல்வி, கலைகளில் வல்லவன் ஆனான்.
இந்நிலையில் உறையூரில் சமூகத் தலைவர்கள் மூவரும் நாட்டுக்கு ஓர் அரசர் இல்லையே என வருந்தினர். காசிக்கு சென்று விசாலாட்சி அம்மனைத் தொழுது, அங்கிருந்த வெள்ளை யானையை அழைத்துக்கொண்டு திருவாரூர் வந்தடைந்தனர். தியாகராஜரை வணங்கி, அவர் கழுத்தில் இருந்த மாலையைப் பெற்று வெள்ளையானையின் துதிக்கையில் கொடுத்து நீ யாரைத் தேர்வு செய்கிறாயோ அவர்தான் எங்கள் மன்னர் எனக்கூறி அனுப்பி வைத்தனர். வெள்ளை யானை ஒவ்வொரு இடமாகச் சென்று கொங்கு நாட்டிற்கு வந்தது.
குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிங்கம்மாளின் 12 வயது சிறுவனுக்கு மாலை போட்டு தன்மீது ஏற்றிக்கொண்டு சோழநாடு புறப்பட்டது. செய்தியறிந்த சிங்கம்மாளும், சாமளாம்மாளும் அங்குவந்து யானையை வணங்கினர். மண்ணால் மகனுக்குத் திலக மிட்டு கரிகாலன் எனப்பெயர் சூட்டி வாழ்த்தினர். பின்னர் யானையிடம் உனது ராஜாவை கூட்டிச்செல் என்றனர். தங்களை அவ்வளவு காலம் பாதுகாத்த இராமபட்டருக்கு சிங்கம்மாள், சிங்காநல்லூர் என்ற அக்ரஹாரத்தையும், சந்திரபட்டருக்கு சாமளம்மாள், சாமளாபுரம் என்ற அக்ரஹாரத் தையும் ஏற்படுத்திக்கொடுத்தனர். வெள்ளை யானை கரிகாலனை ஏற்றிக்கொண்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் முன்வந்து நின்றது.
சமூகத் தலைவர்கள் மிகவும் மகிழ்ந்தனர். மனுநீதி சோழன் என பெயர் சூட்டி, வேளாளர் குடியில் சிறந்த பெண்ணைத் தேர்வுசெய்து அவனுக்குத் திருமணம் செய்வித்தனர். அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான். இளவரசன் சிறு தேரை சாலையில் ஓட்டி விளையாடிபோது பசுங்கன்று ஒன்று அதன் சக்கரத்தில் சிக்கி மாண்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணி அடிக்க, விவரம் அறிந்த கரிகாலன் தன் மகனை தேர்க்காலில் இட்டுக்கொன்றான். அதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. மனநலமும் அவனை பாதித்தது. சமயத் தலைவர்கள் ஏகாம்பரநாதரை வேண்டினர். அவர் காமாட்சியன்னையிடம், நீ குறத்தி வடிவில் சென்று ஆரூடம் சொல்லி, அவன் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவாயாக எனக் கூறினார்.
குறத்தியாக வந்த காமாட்சி, கரூர்முதல் வெள்ளிங் கிரி முட்டம்வரை கொங்கு நாட்டில் பல சிவன் கோவில்கள் கட்டி மக்களைக் குடியேற்றி மானியங்களை ஏற்படுத்தினால் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்குமெனறு அரசிடம் கூறினாள்.
அவ்வாறே செய்வதாக வாக்களித்தவுடன் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது. அதன்படி அவன் அமைத்த சிவன் கோவில்களுள் ஒன்றுதான் சாமளாபுரம் சோழீஸ்வரர் திருக்கோவில்.
சாமளாபுரத்தின் வடக்கு எல்லை யாகத் திகழ்வது நொய்யல் ஆறு. ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் என்பது பழமொழி. சாமளாபுரம் ஊருக்கு அழகூட்டி வளம்தந்த நொய்யல் ஆறு கரிகாலனுக்குபின் முறையான பராமரிப்பு இல்லாமலும், இயற்கைச் சீர் கேடாலும் கோவில் சிறிது சிறிதாக சிதிலமடைந்தது. இந்நிலையில் ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடிப் பேசி கோவிலை நிர்மானம் செய்ய முடிவெடுத்தனர். அதற்கென ஒரு குழுவும் அமைத்தனர். பாலாலயம் அமைக்கப்பட்டு பூஜைகள் தொடர்ந்து நடந்துவந்தன. 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாளன்று திருப்பணி துவக்கப்பட்டு 14-ஆண்டுகள் தொடர்ந்து நடந்த திருப்பணிகள் செவ்வனே நிறைவடைந்து; நந்தன வருடம், மாசி மாதம், 3-ஆம் நாள் (15-2-2013) வெள்ளிக்கிழமையன்று வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்று தற்பொழுது பொலிவுடன் காட்சியளிக்கிறது.
சிறப்பம்சங்கள்
ப் முதன்மைத் திருக்கோவில் என்ற வகைப்பாட்டில் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும்; பரம்பரை அறங்காவலர்களால் நிர்வாகிக் கப்பட்டும் வருகின்ற இவ்வாலயம் சுமார் 1,000 ஆண்டுகளுக்குமேல் பழமையானது.
ப் காமிக ஆகமப்படி மூன்றுகால பூஜைகள் முறைப்படி நடக்கின்ற இத்தல மூலவர் சோழீஸ்வரர் என்ற திருநாமத்துடனும், அம்மன் தில்லைநாயகி என்ற திருநாமத்துடனும் இருவரும் மேற்கு நோக்கியபடி அருள்பாலிப் பது சிறப்பு. மகான் ஒருவர் தனது நூலில் 1,000 கிழக்கு நோக்கிய சிவாலயத்தை வலம்வந்து வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ, அத்தகைய பலன் ஒரே ஒரு மேற்கு நோக்கிய சிவாலயத்தை வலம்வந்து வணங்கினால் கிடைக்குமென்று கூறியுள்ளார். மேற்கு நோக்கிய தலத்திற்கு ஆற்றல் அதிகம் என்று பரம்பரை அறங்காவலர் யமுனா அவர்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்.
ப் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற் றுக் கொண்டுள்ளதா?, நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டுள்ளவரா?, கருத்து வேறுபாட்டி னால் காரியம் கைகூடாமல் உள்ளதா?, பிள்ளைகளுக்கு எப்பொழுதுதான் நல்லது நடக்கும்? நம் பிள்ளை மருத்துவப் படிப்பு படிப்பார்களா?, நல்ல வரன் அமையுமா? இதுபோன்ற மனதில் எழுகின்ற பிரச்சினைக்கு வாழ்வில் வருகின்ற சோதனைகளை சாதனைகளாக்கி மனசஞ்சலத்துடன் வாழ்பவரை மனமகிழ்வுடன் சோழீஸ் வரர் வாழவைப்பார் என்று உறுதியாக கூறுகிறார் மகேஸ் குருக்கள்.
ப் இத்தலத்தில் சிவனுக்குரிய அனைத்து விசேஷங்கள் நடந்தால் குறிப்பாக மகா சிவராத்திரியும், ஆரூத்ரா தரிசனம் மற்றும் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சியன்று சிறப்பு ஹோம, அபிஷேக, அர்ச்சனை சிறப்பாக நடக்கும்.
ப் பிப்ரவரி 16, 17, 18-ஆம் தேதிகளில் மாலை 5.30 மணிமுதல் 6.00 மணிவரை சூரிய ஒளி ஈசன்மீது படர்வது மிகவும் சிறப்பான ஒன்று. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் இத்தலத்திலுள்ள சூரியனுக்கு சப்தமி திதியிலும், சந்திரனுக்கு பௌர்ணமி திதியிலும் அபிஷேக அர்ச்சனைச்செய்து, வலம் வந்து வழிபட்டால் நலம்பெற்று தெளிவுடன் வாழலாம் என்றும்; ஈசனுக்கு சோம வாரத்தில் இளநீர் அபிஷேகமும், கமலதீபமும் (சுவாமிக்கு பின்னால் உள்ள தீபம்) ஏற்றி 12 வாரங்கள் வழிபட்டால் மனநலம் பெற்று வம்ச விருத்தி, ஆரோக்கிய விருத்தியுடன் வாழ்வர் என்று கூறுகிறார் மற்றொரு ஆலய அர்ச்சகரான மணிகண்ட சிவம்.
ப் திருமணத்தடை உள்ளவர்கள் ஏழு செவ்வாய்க்கிழமை அல்லது ஏழு கிருத்திகை நாளில் இத்தல கல்யாண சுப்பிரமணியருக்கு வாசனைமிகு மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி காரியம் இனிதே கைகூடும்.
ப் சோழீஸ்வரருக்கு 300 பொன் வருவாய் உள்ள கிராமம் மானியமாக அளிக்கப்பட்டது. சுங்கத்தீர்வையில் 30 பொன் அளிக்கப்பட்டது. முப்பது மிடா விதைத்தானியம் விதைக்கக்கூடிய புல் செய்நிலமும், குளக்கரையில் முப்பதுமிடா விதைக்கக்கூடிய நன்செய் நிலமும் கொடையாக வழங்கப்பட்டது என கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
ப் கார்த்திகை தீபம், மார்கழி உற்சவம், சிவராத்திரி காலங்களில் பலவகை தீபங்கள் ஏற்றுவார்கள். அவையாவன:
சித்திர தீபம்: சித்திரக் கோலமிட்டு தீபமேற்றுவது சித்ர தீபம்.
ஆகாச தீபம்: உயரமான இடத்தில் ஏற்றப் படுவது.
ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடுவது.
நௌகா தீபம்: படகு போன்ற வடிவில் நதி நீரில் விடுவது.
சர்வ தீபம்: வீட்டின் எல்லா பக்கத்திலும் ஏற்றுவது.
மோட்ச தீபம்: கோபுரங்கள்மீது ஏற்றுவது.
அகண்ட தீபம்: மலைமீது பெரிய கொப்பரையில் ஏற்றுவது.
இப்படி தீபவழிப்பாட்டால் பலன்கள் நிறைய உண்டு. தூபம் போடுவதால் பாவங்கள்
விலகும். தீபமேற்றுவதால் எமபயம் விலகும். நாக தீபமேற்றுவதால் பாம்பை பற்றிய பயம் அகலும். ரிஷப தீபமேற்றுவதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். புருஷ தீபமேற்றுவதால் ஆண் மக்கட்பேறு கிடைக்கும். கட தீபமேற்றுவதால் சாந்தியருளுதல் உண்டு. நட்சத்திர தீபமேற்றுவதால் ஸர்வ சித்திகள் உண்டாகும்.
ப் சனி மகா பிரதோஷத் தன்று நந்தி தேவர்க்கும், சனீஸ்வரருக்கும் பல வகை அபிஷேகங்கள் செய்து பிரதோஷ நாயகர் உட்பிராகாரம் மேளதாளத்துடன் வலம்வருவது, பக்த கோடிகள் பின்தொடர்ந்து வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
திருக்கோவில் அமைப்பு
கொங்கு வளநாட்டில் வெள்ளிங்கிரி மலையில் தோன்றி கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர் கிழக்கே பயணித்து கொங்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியிலேயே காவிரியில் கலக்கின்ற காஞ்சி மாநதி எனப் போற்றப்படுகின்ற நொய்யல் நதியின் தென்புறத் தில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் சாமளாபுரம் என்ற சிற்றூரில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு வெளியே கொங்கு மண்டல வழக்கப்படி நெடி துயர்ந்த தீபஸ்தம்பம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நடுவே நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் சித்திர மண்டபம் போல் காட்சியளிக்கும் மகா மண்டபம் 16 தூண்களைக்கொண்டு அழகு றக் காட்சியளிக்கிறது. சோழீஸ்வரர், தில்லை நாயகி சந்நிதிகள் தனித் தனி மூல விமானத்துடன் இரண்டு சந்நிதிகளை இணைத்து ஒரே மண்டபமாக அமைந்துள் ளது. மூலவர் சோழீஸ் வரர் மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
அம்மன் தில்லை நாயகி யும் மேற்கு நோக்கியபடி நாற்கரங்களுடன் நின்ற கோலத்தில் சிவனைப் பிரியாத செல்வியாய் சுவாமிக்கு இடப்புறம் எழுந்தருளியுள்ளார்.
மகாமண்டபத்தில் மூலவரான சோழீஸ் வரரை நோக்கி கம்பீரமாக நந்திகேஸ்வரர் வீற்றிருக்கின்றார். தெற்கு பார்த்தபடி தனிச் சபையில் ஸ்ரீ நடராஜர், சிவகாமி அருள்கின்றனர்.
கோஷ்டத்தில் சிவதுர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், யோக தட்சிணாமூர்த்தி மற்றும் நர்த்தன விநாயகர் அருள்கின்றனர்.
அம்மன் சந்நிதி கோஷ்டத்தில் வ்ராஷி, பிராம்மி, வைஷ்ணவி அருள்கின்றனர்.
உட்பிராகாரத்தில் சூரியன், சந்திரன், கிழக்கு பார்த்தபடி தனிச் சந்நிதியில் வள்ளி, தேவசேனா கல்யாண சுப்பிரமணியர் அருள் கின்றனர். காலபைரவர் தெற்கு பார்த்தபடி தனிச் சந்நிதியில் அருள்கிறார். ஈசான்ய திக்கில் நவகிரக சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்கு பின்புறம் மேற்குப் பார்த்தபடி ஸ்ரீ சனீஸ்வரர் காக வாகனத்துடன் அருள்கிறார். அருகில் பஞ்சலிங்கம் மற்றும் சண்டிகேஸ்வரர் அருள் கின்றனர். உட்பிராகார வடபுறம் வடக்கு பார்த்தபடி 63 நாயன்மார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்பதுபோல் அழகுற அருட் காட்சி தருகின்றனர். உள் சுற்றில் தீர்த்தக் கிணறு மற்றும் வெளி சுற்றில் தலவிருட்சம் வில்வமரம் உள்ளது. நிருதி மூலையில் கேட்சத்திர விநாயகர் தனிச் சந்நிதிக்கொண்டு அருள்கிறார்.
சங்கடஹர சதுர்த்தி- விநாயகர், அமாவாசை, பஞ்சமியில் வராஹி, சஷ்டியில் முருகப்பெருமான், சப்தமியில் சூரியன், அஷ்டமியில் பைரவர், திரயோதசியில் (பிரதோஷம்) நந்திதேவர், பௌர்ணமியில் ஈசனை வலம் வருதல், மங்கள வாரம்; சுக்ரவாரம், அம்பிகை என இப்படி திதி பார்த்து, நாள் பார்த்து வழிபாடுகள் மேற்கொண்டால் விதியின் வலிமையை அதாவது ஊழ்வினையின் தாக்கத்தை குறைத்து ஊக்கத்துடன் சோதனைகளை சாதனைகளாக்கியருளும் சாமளாபுரம் ஸ்ரீ சோழீஸ்வரர் உற்சாகமாக வாழவைப்பார் என்று இருகைகளில் மலர்கள் ஏந்தியவண்ணம் இருகரம் கூப்பி ஈசனை வணங்கி சொல்கிறார் பரம்பரை அறங்காவலரான எம். யமுனா அவர்கள்.
நடைதிறப்பு: காலை 7.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: பரம்பரை அறங் காவலர் அலைபேசி: 96292 63313. ஸ்ரீ சோழீஸ் வரர் திருக்கோவில் சாமளாபுரம் (அஞ்சல்) பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்- 641 663.
பூஜை விவரங்களுக்கு: எஸ். மகேஸ்சிவம் குருக்கள் அலைபேசி: 98422 87461, எம். மணிகண்ட சிவம் குருக்கள் அலைபேசி: 94433 04532.
அமைவிடம்: கோயம்புத்தூர், அவினாசி சாலையிலுள்ள கருமத்தம்பட்டியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோமனுருக்கு அருகிலும், கோவை, பல்லடம் சாலையிலுள்ள காரணம்பேட்டைக்கு வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பூரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது சாமளாபுரம். அனைத்து ஊர்களி லிருந்தும் பேருந்து வசதியுள்ளது.
படங்கள்: போட்டோ கருணா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/solisharwar-t.jpg)