சிந்தாபூரணி மந்திர்....
இந்த ஆலயம் இமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் இருக்கிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்று இது. பக்தர்கள் ஏராளமாக படையெடுத்து வரும் புனித தளம் இது.
ஜம்மு வைஷ்ணவாதேவி...
இமாச்சல பிரதேசத்தின் ஜுவாலாதேவி...
விந்தியாச்சல் விந்தியவாஸினி...
சஹரான்பூர் சாகம்பரி தேவி...
இந்த அன்னைகளின் ஆலயங்களைப் போல மக்கள் நாடி வரும் ஆலயம் இது. இந்த இடத்தில் சக்தி தேவியின் கால் பாதம் விழுந்தது. பாதத்தை இந்தியில் "சரண்' என்று கூறுவார்கள். இயற்கை அழகு ஆட்சி செய்யும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இங்குவரும் பக்தர்கள் அழகான செடிகளை யும், மரங்களையும் பார்த்து ரசித்தவாறு அன்னையை வழிபடுவார்கள்.
வட இந்தியாவில் "நவ துர்க்கா யாத்திரை' என்ற புனித பயணம் புகழ்பெற்றது. பல ஆலயங்களுக்கும் செல்ல வேண்டும் என்று விரும்பும் பக்தர்களுக் காக இப்படியொரு பயணத் திட்டம் செயலில் இருக்கிறது.
அதன்படி இந்த பயணத் தில் ஒன்பது புகழ் பெற்ற ஆலயங்களுக்கு பக்தர் கள் பயணிக்கலாம்.
அந்த ஆலயங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் "சிந்தாபூரணி மந்திர்' இருக்கிறது.
அந்த ஆலயங்களின் பட்டியல் இதுதான்...
1. ஜம்மு வைஷ்ணவாதேவி ஆலயம்.
2. சாமுண்டாதேவி ஆலயம்.
3. வஜ்ரேஸ்வரிதேவி ஆலயம்.
4. ஜ்வாலாதேவி ஆலயம்.
5. சிந்தாபூரணி ஆலயம்.
6. நைனாதேவி ஆலயம்.
7. மனுஷாதேவி ஆலயம்.
8. காளிகாதேவி ஆலயம்.
9. சாகம்பரிதேவி ஆலயம்.
இந்த ஆலயத்தைப் பற்றிய கதை இது...
அன்னை பார்வதியின் தந்தை தட்ச பிரஜாபதி. அவர் ஒரு யாகம் நடத்துகிறார். அதற்கு தன் மருமகனான சிவபெருமானை அவர் அழைக்கவில்லை.
அதைப்பற்றி கேட்பதற்காக பார்வதி அங்கு செல்கிறாள். அங்கு தன் மகளை அவமானப்படுத்தி விடுகிறார் தட்சன். அதன் காரணமாக கடும் கவலைக்கு ஆளான தேவி, யாக குண்டத்திற்குள் இறங்கி உயிர் துறக்கிறாள்.
அதைத்தொடர்ந்து
அவளின் இறந்த உடலைத் தூக்கிய சிவபெருமான், ஆக்ரோஷத்துடன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.
அதைப் பார்த்த பகவான் விஷ்ணு தன் கையிலிருந்த சுதர்சன சக்கரத்தை எய்துகிறார்.
அது வேகமாக இறந்த சக்தி யின் உடலில் பாய்கிறது. அந்த உடல் துண்டு துண்டாக சிதறி பல இடங்களிலும் விழுகிறது.
அப்படி விழுந்த உறுப்புகளில் கால் பாதம் இந்த இடத்தில் விழுகிறது. பாதம் விழுந்த இடத்தில் பின்னர் ஆலயம் எழுகிறது. அதுதான் "சிந்தாபூரணி மந்திர்'.
இந்த ஆலயத்தைப் பற்றி இன்னொரு கதையும் இருக்கிறது.
புராண காலத்தில் தேவர்களுக்கும்
அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. அந்த போரில் அசுரர்கள் வெற்றிபெற்று விட்டார்கள்.
அசுரர்களின் தலைவனான மகிசாசுரன் சொர்க்கத்தின் அரசனாக ஆகிறான். தேவர்கள் பூமிக்கு வந்து சாதாரண மனிதர் களாக நடமாடிக்கொண்டிருக்க, அசுரர்கள் பூமியிலும் அட்டகாசம் செய்கின்றனர்.
அவர்களின் செயல்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள், தங்களின் கஷ்டங்களை விஷ்ணுவிடம் கூறுகிறார்கள். அப்போது விஷ்ணு, பிரம்மா, சிவன் மூவரும் சேர்ந்து ஒரு தேவியை உருவாக்கி, அவளுக்கு பலவற்றையும் அளிக்கின்றனர்.
சிவன் சிங்கத்தை அளிக்கிறார்.
விஷ்ணு தாமரையை அளிக்கிறார்.
இந்திரன் மணியைத் தருகிறார்.
கடல், மாலையை அளிக்கிறது.
தேவர்கள் அனைவரும் அந்த அன்னையை வழிபடுகின்றனர்.
"உங்களின் கஷ்டங்களை நான் நீக்குகிறேன்''
என்று கூறிய அந்த தேவி, அரக்கனான மகிசாசுரனுடன் போராடி, அவனை வதம் செய்கிறாள். அதைத் தொடர்ந்து மகிசாசுர மர்த்தினி என்ற பெயர் அந்த அன்னைக்குக் கிடைக்கிறது.
அந்த அன்னையே நாம் வழிபடும் சிந்தாபூரணி தேவி.
சிந்தாபூரணி தேவி குடிகொண்டிருக்கும் ஆலயம் இருப்பதால், இந்த ஊருக்கே சிந்தா பூரணி என்ற பெயர் உண்டாகிவிட்டது.
இங்குவரும் பக்தர்கள் சிந்தாபூரணி அன்னைக்கு அல்வா, லட்டு, தேங்காய், பால்கோவா ஆகியவற்றை அன்புடன் படைப்பார்கள்.வேண்டுகோள் நிறைவேறியபிறகு, சிவப்பு நிற சால்வையை அன்னையின்மீது போர்த்துவார்கள்.
இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் நிறைய கடைகள் இருக்கின்றன. பிண்ட வடிவத்தில் இந்த ஆலயத்தில் அன்னை சிந்தாபூரணி இருக்கிறாள்.
இந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள நகரம் சண்டிகார். அது பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறது. சாலைவழியாக அங்கிருந்து ஐந்துமணி நேரங்கள் பயணித்தால், இந்த ஆலயத்தை அடையலாம்.
அருகிலுள்ள விமான நிலையம் அமிர்தசரஸ். சண்டிகாரிலும் விமான நிலையம் இருக்கிறது. சென்னையிலிருந்து சண்டிகருக்கான பயண தூரம் 1,924 கிலோமீட்டர் அங்கிருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் சிந்தாபூரணி ஆலயம் இருக்கிறது.