மது இந்து சமயங்களில் பலவகையான முறையில் இறை வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். அவற்றில் ஒன்று சித்தர்களை வழிபடுவது. இறைவனை அடைய யாகம் சிறந்தது. யாகத்தைவிட சிறந்தது தியாகம். அதிலும் சிறந்தது தியானம்.

அந்த தியானத்தின்மூலம் கிடைப்பது, இறைசக்தி. அந்த சக்தியை அடைய வழிகாட்டு பவர்கள்தான் சித்தர்கள், ரிஷிகள், குருமார்கள். அப்படிப்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்குமிடங்களை தேடிச்சென்று தரிசித்து வருகிறோம். அங்கே செல்வதன்மூலம் மனம் ஒருமைப்படுகிறது. நமது மனம் நாம் சொன்னபடி கேட்கும். அதன் வழியே மனஅமைதி. அமைதியிருந்தால் தெய்வங்கள் பேசுவதைக்கூட மனிதர்கள் கேட்கலாம். இது சித்தர்கள் கூறிய அறிவுரைகள்.

ss

சித்தர்களின் ஜீவசமாதி உள்ள பல இடங்களில் கோவில்கள் ஏற்பட்டுள்ளன. சித்தர்கள் தமக்காக வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். மக்களின் வழிகாட்டிகள். அவர்கள் ஜீவசமாதி அடைந்தபிறகும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சித்தர்களின் அமைவிடங்களை, உறைவிடங்களை, சமாதி களை, நாம் தேடிச்சென்று தரிசிப்பதன்மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். முதன்மை சித்தர்கள் 18 பேர். அவர்களில் ஒருவர் கொங்கண சித்தர். இவர் இறுதிக் காலத்தில் திருமலைக்குச் சென்று ஜீவசமாதி அடைந் துள்ளார். இருந்தாலும் அதற்குமுன்பே, அவர் தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று தங்கி தியானங்களையும், யாகங்களை யும் செய்துள்ளார். அப்படி அவர் உண்டு, உறங்கி யாகம், செய்த குகைக்குச் சென்று தரிசிப் பது என முடிவெடுத்து புறப்பட்டோம்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகி லுள்ள ஊதியூர் மலை காட்டுப் பகுதியில், அவர் வாழ்ந்தகாலம் நிறைய காங்கேயம்- பழனி செல்லும், சாலையில் ஊதியூர் புலிகள் வாழும் காப்புகாட்டு பகுதியில் அமைந் துள்ளது. கொங்கணர் கோவில், அப்பகுதிக்கு கடலூர் ஊடக நண்பர் சௌ. குமார், குண மங்கலம் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சென்று தரிசித்த பயண அனுபவம் அளப் பரியது. அது மட்டுமல்ல திகில் நிறைந்த இறை அனுபவமாக அது அமைந்தது.

Advertisment

பொதுவாக, காடு என்றாலே நம்மை அறியாமலேயே, ஒருவித பயம் நம்மை தொற்றிக்கொள்ளும். அப்படி கொங்கண சித்தர் தவமிருந்த, அந்த காட்டுப் பகுதியை தேடிப் புறப்பட்டோம். ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி வெயில் கடுமையாக வறுத்தெடுத்தது. பல்வேறு பணிகளையும் முடித்துக்கொண்டு, அன்றிரவு பண்ருட்டியிலிருந்து இரவு 11.00 மணிக்கு திருப்பூர் செல்ல டிக்கெட் எடுத்தோம். திருப்பூர் சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து காங்கேயம் பேருந்து நிலையம் சென்றடைந்தோம். விடியற் காலை நேரம், அங்கே ஒரு டீக்கடை பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. சூடான மெதுவடை, இனிப்பு, கார போண்டா, கேழ்வரகு மாவு கலந்த வெங்காய பக்கோடா அத்தனையும் சூடாக கிடைத்தது. காலை டிபனை முடித்துக்கொண்டு அங்கிருந்து 15 நிமிட பயணத் தூரத்தில் ஊதியூர் காட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டோம்.

ss

கொங்கணரின்மீது, நமக்கு இருந்த பக்தி, நம்மை இழுத்துச் சென்றது. அங்கே வனத்துறையினர் வைத்திருந்த புலிகள் வாழும் காப்புக்காட்டுப் பகுதி என்ற விளம்பரப் பலகை நம்மை வரவேற்று திகைப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இருந்தும் பயணத்தை தொடர்ந்தோம்.

Advertisment

அடர்ந்த காடாக இல்லாவிட்டாலும் ஓரளவு செடி, கொடிகள், தாவரங்கள் மண்டிக் கிடந்தன. குகைக் கோவிலை நோக்கி மலைமீது ஏற ஆரம்பித்தோம். காட்டு வாசனை, நம்மை கிறங்க வைத்தது காட்டில் வாழும் பெரும்பாலான உயிரினங்கள் யாரையும் தாக்க நினைக்காது. அது ஒதுங்கி வாழவேண்டும் என்பது இறைவன் அதற்கு கற்றுத் தந்த பாடம். ஒவ்வொரு மாதமும் கொங்கணர் பிறந்த உத்திர நட்சத்திரத்தன்று, தேய்பிறை அஷ்டமி. அவரது பிறந்த தினம் ஆகிய நாட்களில் அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் ஆகியவை இங்கு நடைபெறுகின்றன. அந்த நினைவுகளோடு சித்தரின் கோவிலுக் குச் செல்லும் நுழைவாயிலை கடந்து போனோம்.

அங்கே இருந்த அரசமரம் காற்றில் அசைந்து, நம்மை வரவேற்றது. நூறு மீட்டர் கடந்ததும், பாதாள விநாயகர் கோவில், அடுத்து இடும்பன் கோவில், மலை ஏறும்படிகள். துவங்கும் இடத்தில் மயில் வாகனம் அதை கடந்ததும் பொன்னூதி மலையடிவாரம். அதன்படிகளின் பக்கத்தில் அனுமந்தராயர் கோவில். இவர் வேலாயுதம் தாங்கியுள்ளார். அங்கே வளைந்து நெளிந்து உள்ளே செல்லும்வழி. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றபோது, அவர் கைகளில் இருந்து சிறு பகுதி இங்கு விழுந்ததாம். அதுவே இங்கு மலையாக உயர்ந்து நிற்கிறது என்ற தகவலை கூறினார் கள். சஞ்சீவி மலையில் உத்தண்ட வேலாயுத சாமி கோவிலுள்ளது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலை கடந்து செல்லும்போது கற்களும், பாறைகளும், கால்களை பதம் பார்த்தன. கவனமாக செல்லவேண்டிய பகுதி, அதை கடந்த தும் கொங்கண சித்தரின் சீடர் செட்டித் தம்பிரான் தவம் செய்த குகை. அங்கே அவரது ஜீவசமாதி உள்ளது. இங்கு ராகு- கேதுவுடன் லட்சுமி கணபதி கோவில் உள்ளது. மூவரையும் தரிசனம் செய்து புறப்பட்டோம்.

கொங்கண சித்தர் வாழ்ந்த இடத்திற்கு வந்த, நாம் அவரது வரலாற்றையும் சித்து வேலைகளையும் தெரிந்துகொள்ள வேண்டு மல்லவா? கொங்கணர் மேலை கடற்கரை பகுதியில் பிறந்தவர் (கேரளம்). சித்திரை மாதம், உத்திர நட்சத்திரத்தில் பிறந்தார் என்று அகத்தியர்- 12,000, போகர்- 7,000 ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர், அவரது மாணவரும் கூட! ஒருமுறை நீண்ட தவத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது மரக்கிளையில் இருந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. கொக்குக்கு தெரியுமா? கொங்கணர் என்ற பெரும் சித்தர் கீழே தவமிருக்கிறார் என்று. கொங்கணரில் தலையில் கொக்கு எச்சம் விழுந்தது. அதனால் தவம் கலைந்த சித்தர் கடும் கோபத்துடன் கொக்கை பார்க்க, அந்த கொக்கு அப்படியே எரிந்து சாம்பலாகி போனது. நீண்டநாள் தவத்தில் இருந்ததால் கொங்கணருக்கு கடும்பசி, யாசகம் வேண்டி பக்கத்தில் இருந்த கிராமத்தை நோக்கி சென்றார்.

ss

ஒரு வீட்டின்முன்பு நின்றுகொண்டு, வீட்டுக்கார பெண்மணிக்கு யாசகம் அளிக்கு மாறு குரல் கொடுத்தார். வீட்டு பெண்மணி யாசகம் கொடுக்க வெளியே வருவதற்கு கொஞ்ச நேரம் தாமதமானது. அதுவரை கொங்கணர் காத்திருந்தார். பிறகு அந்தப் பெண்மணி வெளியே வந்து கொங்கணருக்கு அன்னத்தை யாசகம் அளித்தார். அப்போது நீண்டநேரம் தம்மை காக்க வைத்தாளே இந்தப் பெண்மணி என்ற கோபத்தில் அந்தப் பெண்மணியை எரிப்பதுபோல் கொங்கணர் பார்க்க கொக்குபோல், அந்தப் பெண்மணி எரிந்து சாம்பலாகவில்லை, கொங்கணரை பார்த்த அந்தப் பெண்மணி சிரித்துக்கொண்டே "கொக்கென்று நினைத் தாயோ கொங்கணவா'' என்று கூற காட்டில் நடந்த சம்பவம் இந்த அம்மையாருக்கு எப்படி தெரிந்தது என்று வியந்து போனார்.

அந்தப் பெண்ணின் கற்பின் வலிமையை உணர்ந்தார். அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அந்தப் பெண்மணி வேறுயாரு மல்ல. திருவள்ளுவரின் மனைவி வாசுகி என்று கூறப்படுகிறது. அப்போது வாசுகி "கொங்க ணரே எனது கணவர் வீட்டில் உணவருந்தி கொண்டிருந்தார். அவருக்கு வேண்டிய பணிவிடை உபசாரங்களை செய்துவிட்டுத் தான் தங்களுக்கு உணவளிக்க வெளியே வந்தேன். இதனால் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. மேலும் கணவருக்கு அடுத்து தான் மற்றவர்களுக்கு பணி செய்யவேண்டும் என்ற பத்தினித் தன்மையோடு உள்ள எனக்கு தங்களின் செயல் எனக்கு ஏற்பட்ட ஞான திருஷ்டியால் தெரியவந்தது' என்று கூற கொங்கணர் திகைப்புடன் வாசுகி அம்மை யாரை வணங்கினார்.

அவரது கற்பின் வலிமையை புரிந்து கொண்ட சித்தர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது, தர்ம வியாசர் என்பவரை சந்தித்தார். கொங்கணரை பார்த்த தர்ம வியாசர் ஓடிவந்து வணங்கினார் சுவாமி.

அங்கே "வாசுகியம்மையார் நலமாக இருக்கி றார்களா' என்று கேட்க கொங்கணருக்கு மேலும் வியப்பு ஏற்பட்டது. "அப்பா, நான் வாசுகி அவர்களை பார்த்துவிட்டுத்தான் வருகிறேன் என்பது உமக்கு எப்படி தெரிந்தது' என்று கேட்டார். அப்போது தர்ம வியாசர் சுவாமி "வாசுகி அம்மையார் கணவரிடம் பக்திகொண்ட பதிவிரதை.

ss

அதேபோல் அடியேன் பெற்றோர்களைத் தான் என் தெய்வமாக எண்ணி, அவர்களுக் கான பணிவிடைகளை செய்துவருகிறேன். அதன்காரணமாக, தங்களிடம் சக்தி இருப் பதை உணர்கிறேன்' என்று கூற அதைக் கேட்டு வியப்படைந்தார் கொங்கணர்.

அவரிடமிருந்து விடைபெற்ற கொங்கணர் உண்மையை உணர்ந்தார். ஒவ்வொருவரும் அவரவர், தர்மப்படி கடமைகளை தவறாமல் செய்வதும், தன்னடக்கத்துடன் இருப்பதும், தெய்வ சக்திகளைப்பெற வழிவகுக்கும். இதுபோன்ற நல்ல செயல்கள்தான் நம்மை இயக்குகின்றன என்பதை உணர்ந்தார். கொங்கணரின் மனம் கனிந்தது. கொங்கணர் போகரை சந்திப்பதற்குமுன்பு பல சித்தர் களை சந்தித்து பல்வேறு சித்துகளை பயின்றுள்ளார். அதற்கு உதாரணமாக கொங்கணர் அம்பிகையின் பக்தர்.

அம்பிகையை வழிபடும் முறைகளையும், மந்திரங்களையும் போகர்மூலம் கற்றவர். அவரிடம் இருந்து கிளம்பிய கொங்கணர். இப்பகுதி மலையில் மேல் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, அம்பிகையை நினைத்து தவம் செய்துகொண்டிருக்கையில், மனதிற்குள் ஏதோ ஒன்று அவருக்கு தோன்றியது. தவத்தை கைவிட்டு விட்டு, சக்தி வடிவங் களின் அருளைப்பெற, ஒரு யாகத்தை செய்ய ஆரம்பித்தார். அப்போது கௌதம முனிவர், கொங்கணரை வந்து சந்தித்தார். அவர் கொங்கணரிடம் தவம் செய்து அதன்மூலம், சிவத்தை அடையவேண்டும். எனவே, "யாகத்தை கைவிடு தவம் செய்' என்று சொல்லி விட்டு மறைந்தார். அதன் பிறகு கொங்கணர் யாகம் செய்வதைவிட்டார். பிறகு தில்லையை அடைந்த கொங்கணர். மறுபடியும் யாகத்தை தொடங்கினார். அங்கு யாகத்தை நிறைவாக முடித்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராள மான சித்திகள் கிடைத்தன. அதன்மூலம் நிறைய குளிகைகளை உருவாக்கினார்.

அந்த காலகட்டத்தில், ஒருநாள் கொங்கணர், திருமழிசையாழ்வாரை சென்று சந்தித்துள்ளார். அவரிடம் செம்பை பொன்னாக்கும், குளிகை ஒன்றினை பெருமையுடன்கூறி கொடுத்துள்ளார். கொடுக்கும்போது "இது காணிக்கோடியை போதிக்கும் என்று கூறினார். இதைக்கேட்ட, ஆழ்வார் தம் உடம்பில் ஒட்டி இருந்த அழுக்கை திரட்டி எடுத்துகொடுத்து, இந்தா ரசவாத குளிகை இது. "காணி கோடியை ஆக்கும்' என்று கொங்கணரிடம் கொடுத்தார். ஆழ்வாரின் சித்துப் பெருமையைக் கண்டு வியந்த கொங் கணர் அவரோடு நட்புறவு கொண்டார்.

திருமழிசை ஆழ்வாரை, சந்தித்தபிறகு மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். கடும்தவம் அவருக்கு மேலும் பலன் தந்தது. இரும்பை யும், செம்பையும், தங்கமாக்கும் ரசவாத வித்தையை கற்றுக்கொண்டார். அந்த ரச வாதத்தில் தனது கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். இந்த சித்து வேலையை தன் சொந்தத்திற்கு உபயோகப்படுத்திக்கொள்ளவில்லை அவர். பொதுவாக யோகிகளும், சித்தர்களும் பொன், பொருள்மீது பற்று வைக்கமாட் டார்கள். இறைவனே எல்லாம் என்பதில் தீவிரம் கொண்டவர்கள். அதற்கு கொங்கணரும் விதி விலக்கா என்ன? பொன், பொருளை ஒதுக்கி தள்ளியக் கொங்கணர், பிச்சை எடுத்த உணவை மட்டுமே சாப்பிட்டார்.

இறுதிக் காலத்தில், திருவேங்கடமலை சென்று தவம் செய்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரை வந்து சந்தித்தார். அவருக்கு கொங்கணரின்மேல் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு, அவரது சீடராக மாறிப்போனார். பல்வேறு ஞான அனுபவங்களை கொங்கணரிடமிருந்து கற்றுக்கொண்டார். அந்த சிற்றரசரின் வேண்டுகோளுக்கு இணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றினார். இறுதியில் திருமலையில் கொங்கணர் சித்தி அடைந்தார். பதினெண் சித்தர்களில், இவருக் கென்று ஒரு தனி சிறப்பிடம் உண்டு. இரும்பு, தங்கம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஆசாரி மற்றும் கொல்லர் இனத்தைச் சேர்ந்தவர் கொங்கணர். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் விஸ்வ கர்மாவை, முக்கிய கடவுளாக தங்கள் குலதெய்வமாக வழிபடுவார்கள். அவர்களுக்கு எத்தனை தெய்வங் கள் இருந்தாலும், தங்கள் குடும்பத்தில், ஒருவராக கொங்கணரையும், பிரதானமாக வழிபட்டு வருகிறார்கள்.

கொங்கணர் சித்தராக மாறுவதற்கு மிக முக்கிய காரணம் இவரது திருமணம்தான். திருமணத்திற்குபிறகு, எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி அதிக பேராசை கொண்டவர். பொன்னும், மணியும், செல்வமும், தன் வீட்டில் கொட்டி கிடக்கவேண்டும் என்று விரும்பினார்.

அவரது எண்ணம் கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது சித்தர் ஒருவர் கைகளை வருடும்போது வாசனையை உருவாக்கினார். அவர் தங்க காசுகளையும் வரவழைத்துக் காட்டினார். அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து வியந்த கொங்கணர் அதேபோல் நாமும் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு நாமும் ஒரு சித்தராக உருவாகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் அடிப்படையிலேயே போகரை சென்று சந்தித்து அவர் சீடர்களில் ஒருவராக கொங்கணர் மாறினார்.

கொங்கணர் யாகம் தவம் என அவ்வப்போது திசை மாறி... மாறி செய்து கொண்டிருந்தார். கொங்கணரின் இறைசக்தி விடாமுயற்சிகளை உணர்ந்த கௌதம மகரிஷி அவர்கள் கொங்கணரை வந்து சந்தித்தார். கொங்கணரை எச்சரித்தார். நீ சித்தனாக வேண்டுமென விரும்பினால், நீ சொல்வதை, உமது சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை, நீ கேட்கக் கூடாது. யாகம், ஹோமம் எல்லாம் பெரும் துன்பத்தில் இருப்பவர்கள் அருள் சக்திபெற வேண்டி செயல்படுத்தும் வழிமுறைகள்.

உமக்கு, எதற்கு, அது, அதைவிட உபதேச மந்திரத்தை, ஜெபித்தபடி தவம் செய்வதே உமக்கு ஏற்ற செயல். அதைக் கடைப்பிடி என்று வழிமுறைகளைக் கூறினார்.

அதன்படி தவமிருந்து பெறும் ஞானியாகி, குண அடக்கம், தன்னடக்கம் போன்ற பரிபூரணத்துவத்தை அடைந்தார். இவரது வாழ்நாளில் கௌதமர், போகர், திருமளிகை தேவர், திருமழிசை, யாழ்வார் என பல ஆன்றோர்களைச் சந்தித்து, அவர் களிடமிருந்து பலவிதமான ஞானங்களையும், உபதேசங்களையும் பெற்றுள்ளார். இதுவே, அவரை பதினெண் சித்தர்களில், ஒருவராக இடம்பெற காரணம் என்று கூறப்படுகிறது.

போகரின் ஆலோசனைப்படி, கொங்கணர் திருமாளிகை தேவரை சென்று சந்தித்தார். அவர்மூலம் சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார். தஞ்சைப் பகுதியில் பிரவேசித்த கொங்கணர் அப்போது ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி, அதை வைத்துதான், பூஜை செய்துவந்துள்ளார். வாழ்வின் இறுதிவரை, அந்த சிவலிங்கத்தை வைத்து அவர் வழிபட்டு வந்ததாக கொங்கணர் வரலாறு கூறுகிறது. கொடும் சித்தர் என்ற பெயரும், கொங்கணருக்கு உண்டு. காரணம் கொடிய பாஷான மருந்துகளையெல்லாம் தயாரித்து அவரே, அவற்றை சோதித்துப் பார்ப்பாராம். மிகக் கடுமையான கலைகளையும், தன் விடாமுயற்சியினால் கற்றுக்கொண்டவர். குருவருளை பெரிதாக போற்றி வணங்கி வாழ்ந்தவர். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் உருவாகும் எந்த நோய்களும், பிரச்சினைகளும் விரைவில் நீங்கும். நஞ்சு போன்ற தன்மைகளால் வரக்கூடிய, எந்த உடல் உபாதைகளும் நிகழாமல் கொங்கணர் பாதுகாக்கிறார்.

கொங்கணர் தன் இறுதிக்காலத்தில் திருமலையில் ஜீவசமாதி அடைந்தார். திருமலை கோவில் குளத்தின் தெற்குப் பகுதியில், எட்டாவது படிக்கட்டில், இவர் அடக்கம் ஆகியுள்ளார். அந்த இடத்திற்கு செல்லும் பக்தர்கள் கொங்கணர் ஏற்படுத்தும் அதிர்வலைகளை இன்றும் உணரமுடிகிறது என்கிறார்கள். ஆன்மிக அன்பர்கள் கொங்கணர், தன்னுடைய எழுத்து சொல், செயல் இறைசக்தி ஆகியவற்றின்மூலம் 800 ஆண்டுகள், 16 நாட்கள். இந்த உலகில் பூத உடலோடு வாழ்ந்துள்ளார். அப்படிப்பட்ட கொங்கணரை வணங்குவோர்க்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

கொங்கண சித்தர், குகை என்பது சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து வடக்கே சங்ககிரியிலிருந்து இடைப்பாடி செல்லும்வழியில், நான்கு மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. அவற்றில் பெருமலை என்று அழைக்கப்படும் இந்த மலையிலுள்ள குகையே கொங்கண சித்தர், குகை என அழைக்கப்படுகிறது. மேலும், கொங்கண சித்தர் பல இடங்களில் மலைகளில் தங்கி தவம் இருந்ததாக கூறப்படுகிறது.

அதில் ஊதியூர் மலை, வையப்பமலை, அளவாய் மலை ஆகியன குறிப்பிடத்தக்க தாகும். இந்த குகையின் மேற்கூரையில் 2,500 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளில் "ந' என்ற ஒரு எழுத்து மட்டும் தெளிவாக காணப்படுகிறது. இந்த கல்வெட்டுக்கு அருகில் யோக முத்திரையில் ஓவியம் ஒன்று காணப்படுகிறது. அதில், சித்தர் ஒருவர், பத்மாசனம் இட்டு அமர்ந்தநிலையில் உள்ள ஓவியம் காணப்படு கிறது. இங்கு காணப்படும் யோக முத்திரை யிலுள்ள உருவம் கொங்கண சித்தர் என நம்பப்படுகிறது. மேலும், இந்த குகையில் பல்லி ஓவியம், அறவாளி, சக்கரங்கள் என்று அழைக்கப்படும் ஓவியங்களும் காணப்படுகின்றன. ராசிபுரம் அருகேயுள்ள வையப்ப மலையிலும், கொங்கண சித்தர், தவம்புரிந்த குகை ஒன்று மலையின் பின்புறம் அடிவாரத்தில் உள்ளது. சிறியதும் பெரியதுமான இரண்டு குகைகள் உள்ளன. பெரிய குகையில் கொங்கண சித்தர் தவமிருந்ததாக செய்திகள் மற்றும் அலைவாய் மலை தலவரலாறு கூறுகின்றன. இதுவும் கொங்கண சித்தர் குகை என்றே அழைக்கப் படுகிறது.

உதியூரைச் சென்றடைவது எப்படி திருச்சியிலிருந்து: காங்கேயம் வழியாக 73 கிலோமீட்டர் வெள்ளக்கோவில் வழியாக காங்கேயம் வழியாக இடைவேளை பயணம்.

திருப்பூரிலிருந்து: காங்கேயம் வழியாக 40 கிலோமீட்டர் காங்கேயம் வழியாக இடைவேளை பயணம்.

தாராபுரத்திலிருந்து: காங்கேயம் நோக்கி 19 கிலோமீட்டர் அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

காங்கேயத்திலிருந்து: தாராபுரம் நோக்கி 14 கிலோமீட்டர் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.