ளியாரை வலியார் வாழ்த்தினால் வலியாரை தெய்வம் வாழ்த்தும் என்பது பழமொழி. நல்லதோ- கெட்டதோ எதுவாக இருந்தாலும் சரி. செய்தவை பன்மடங்காகப் பெருகி திரும்பிவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

சோழமண்டலத்திலே காவிரி வடகரையில் சிவனடியார்கள் பலர் வாழ்ந்துவந்தனர்.

அக்காலகட்டம் மன்னராட்சி காலம். கோவில் செல்வதும் ஆண்டவனை வழிபடுவதுமாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவந்தனர். அது சோழ மன்னரிடம் அமைச்சராக இருந்த வரின் கண்களை உறுத்தியது.

மன்னரிடம் "இவர்கள் இருக்கும் வீடுகளும் சுற்றியுள்ள நிலங்களும் என்னுடையவை' என்று சொல்லி அவரை நம்பச் செய்துவிட்டார் அமைச்சர்.

Advertisment

ss

அகத்தியரால் வகுக்கப்பட்ட எல்லைக் கற்களையும் பிடுங்கி எறிந்தார். அடியார்களையெல்லாம் அடித்துவிரட்டி அவர்கள் இருந்த வீடுகளில் தன் ஆட்களைக் குடியேற்றினார் அமைச்சர்.

எதிர்க்க இயலாத அடியார்கள் மறைவாக வாழ்ந்து தினமும் தாங்கள் வணங்குகின்ற ஈசனை வழிபட்டு முறையிட்டு வந்தனர்.

Advertisment

ஒரு முதியவர் வடிவில் வந்தார் சிவபெருமான். "கவலைப்படாதீர்கள். நீங்கள் இழந்ததையெல்லாம் மீட்டுத்தருகிறேன். அதற்குண்டான ஆவணங்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன. வாருங்கள்' என்று அடியார்களை அழைத்துச்சென்று மன்னரிடம் முறையிடவும் செய்தார்.

"மன்னா, முன்னோர்கள் காலத்திலிருந்து வழிவழியாக வந்த எங்கள் உடைமைகளை அமைச்சர் அபகரித்துவிட்டார். எல்லையை வரையறை செய்து, அகத்தியரே எல்லைக் கற்கள் நட்ட இடம் அது. இதோ அற்கான ஆவணங்கள் என்று ஆவணங்களையும் காட்டினார் முதியவராக வந்த ஈசன்.

அமைச்சரும் தான் தயாரித்து வைத்திருந்த ஆவணங்களைக் காட்டி வாதிட்டார். செய்வதறியாமல் திகைத்தார் மன்னர்.

இறுதியாக "சரி.... "அந்த இடம் உங்களுடையதுதான் என்பதற்கு இருவரும் வேறு ஏதாவது அடையாளம் சொல்லுங்கள்'' என்றார் மன்னர்.

நூறடி ஆழம் தோண்டினாலும் தண்ணீர் வராத பூமி அது. ஆற்றுப்பாசனம்தான் என்றார் அமைச்சர்.

முதியவராக வந்த ஈசனோ... "ஒருசில அடிகள் தோண்டினாலே தண்ணீர் வரும்'' என்றார்.

குறிப்பட்ட அந்த இடத்தைத் தோண்டினர்.

ஒருசில அடிகளில் தண்ணீர் பீறிட்டு வெளிவந்தது. அமைச்சரின் முகம் வெளிறியது. உண்மை உணர்ந்த மன்னர் அமைச்சரை தண்டித்தார்.

ss

"முதியவர் வடிவில் வந்து இழந்த எங்கள் உடைமைகளை மீட்டுத்தந்தது நாங்கள் சதாசர்வகாலம் வணங்குகின்ற அந்த ஈசனே...' என்று மகிழ்ந்த அடியார்கள் பழையபடியே தங்கள் வீடுகளில் குடியேறினர்.

தெய்வம் ஒருபோதும் கைவிடாது. ஏதாவது ஒரு வடிவில் வந்து நாம் இழந்தவற்றை மீட்டுத்தந்து அருள்புரியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு திருத்தலம்தான் திருவாளப்புத்தூர் ஸ்ரீ மாணிக்கவண்ணர் திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீ மாணிக்க வண்ணர், ஸ்ரீ ரத்தினபுரீஸ்வரர்.

இறைவி: அருள்மிகு வண்டமர் பூங்குழல் நாயகி, அருள்மிகு பிரம்ம குந்தளாம்பாள்.

புராணப் பெயர்: திருவாளொலிப் புற்றூர்.

ஊர்: திருவாளப் புத்தூர்.

தலவிருட்சம்: வாகை மரம்.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்.

மாவட்டம்: மயிலாடுதுறை.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. சிவனின் தேவாரம் பாடல்பெற்ற காவிரி வடகரை தலங்களில் 29-ஆவது தலமாகவும், சுந்தரர், திருஞானசம்பந்தரால் பதிகம்பாடப்பட்ட பெருமையுடன் விளங்கிவருவதோடு, மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருவாளொளிப்புற்றூர் ஸ்ரீ மாணிக்க வண்ணர் திருக்கோவில்.

"சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார்

ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபலவுடையார்

தோகைமா மயிலனைய துடியிடை பாகமும் உடையார்

வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர் உளாரே.''

-திருஞானசம்பந்தர்.

தலவரலாறு

முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் எடுக்க திருப்பாற்கடலை கடைந்தபோது மந்தாரமலையை கடிவாளமாகவும், வாசுகி எனும் நாகத்தை கயிறாகவும் பயன்படுத்தினார்.

இந்த செயலின்போது வாசுகியால் வலி தாங்க முடியாமல் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்துவிட்டது. இதனை சிவபெருமான் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக்கொண்ட னர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி இத்தலத் தில் மாணிக்க கல்லை உமிழ்ந்து சிவனை வேண்டி பூஜை செய்தது, அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன், சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். வாசுகி தன் வலிமையை மீட்டெடுக்க விரும்பினார்.

அவர் இந்தக் கோவிலின் தலவிருட்சம் (வாகை மரம்) ஒரு பாம்பு மலையில் (புற்று) இங்கு தங்கினார் என்பது தலவரலாறு.

ss

பிற்காலத்தில் இப்பகுதி வாகை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. ஒருசமயம் அர்ஜூனன் இத்தலம் வழியாக சென்றபோது தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. எனவே, ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்துவிட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜூனன் அவரிடம் தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜூனரிடம் ஒரு தண்டத்தைக் கொடுத்து, அருகிலிருக்கும் ஓர் இடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜூனன் தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்குச் சென்றான். முதியவரோ அருகிலிருந்த புற்றில் வாளை மறைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அர்ஜூனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது, முதியவரைக் காணவில்லை. அவன் தேடியபோது பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது.

அந்தப் புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜூனன் அதனை எடுத்தபோது சுயம்பு லிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சிதந்து தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின்னாளில் இவ்விடத்தில் கோவில் எழுப்பி வழிபட்டான்.

ருதுகேசன் என்னும் மன்னன், இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களைக் காத்தருளும்படி மன்னன் வேண்டவே, சிவன் மாணிக்க மழையைப் பொழிவித்தாராம். எனவே இத்தல இறைவனுக்கு மாணிக்கவண்ணர் என்று பெயர்வந்தது. மாணிக்கக்கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் சொல்வர். அர்ஜூனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தல வாளொலிப்புற்றூர் என்று பெயர்பெற்றது.

சிறப்பம்சங்கள்

ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீரத்தினபுரீஸ்வரர், ஸ்ரீ மாணிக்க வண்ணர். சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி யிருக்கும் மூலவர் மக்கள் மாணிக்க வண்ண சுவாமி என்றே பதிவாகியுள்ளது.

ப் இறைவியின் திருநாமம் அருள்மிகு பிரம்மகுந்தளாம்பிகை, அ/மி வண்டமர் பூங்குழல் நாயகி. இவள் பார்ப்பதற்கு வண்டுகளைக் கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் வண்டமர் பூங்குழல் நாயகி என்றே சொல் வழக்கில் உள்ளது.

ப் அர்ச்சுனன் செய்த பூஜைக்கு உகந்த பெருமான் அவன் வாளைப் புற்றில் ஒளித்து வைத்திருந்து மீண்டும் அவன் அத்தினாபுரி திரும்பும்போது அளித்தார் என்பது வரலாறு. உன் கரவாள் நின்ற வாகையின் அயல் புற்றொளித்தான் என்பது தல புராணப் பாடற்பகுதி.

ப் திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார் என்பது சிறப் பம்சம் வாய்ந்தது.

ப் சிம்ம மண்டபத்தில் விற்றிருக்கும் கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நந்தி இருப்பதும் சிறப்பு.

ப் கிடாத்தலைமேடு என்ற பகுதியில் மகிஷாசூரனை வதம்செய்த துர்க்கை யம்மன் சிவனை வணங்கி எட்டு கைகளுடன் அருள் புரிகிறார். இவளது இடது கீழ்கையில் கிளி இருப்பது விசேஷம்.

ப் தலவிருட்சம் வாகை மரத்தடியில் அஷ்ட நாகங்களுக்கு நடுவே தல விநாயகர் உள்ளார். புற்றில் சிவன் வெளிப்பட்ட ஸ்தலம் என்பதால் விநாயகர் சந்நிதியும் புற்றிற்குள் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

ப் இவ்வாலய இறைவனை மகாவிஷ்ணு, இந்திரன், வாசு, பாண்டவர்கள், திரௌபதி வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது.

ப் இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும், நாகமும் இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு அருகில் திருமால், பிரம்மா வணங்கியபடி இருக்கின்றனர்.

ப் மெய்கண்டநார் என்ற சிவனடியார் (நாயன்மார் அல்ல) விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்.

அவரது ஜெனன ஜாதகப்படி சனிபார்வை மற்றும் கோட்சாரப்படி கண்டகச் சனி நடைபெற்ற சமயம் மெய்கண்டநாருக்கு பெருங்கஷ்டம், வியாதி, மனக்குழப்பத்துடன் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அதனால் அவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரநாளில் திருவாளப்புத்தூரில் உறைகின்ற மாணிக்க வண்ண சுவாமியை மனமுருகி வழிபாடு செய்தார். அதன்பிறகு படிப்படியாக அவருக்கு ஏற்பட்ட அனைத்துவிதமான துன்பங்கள் நீங்கி, வியாதியும் நிவர்த்தியாகி; பிறகு மெய்கண்டநார் மாணிக்கவண்ணரை பிரிய மனமில்லாமல் தட்சிணாமூர்த்தி எதிரிலேயே அமர்ந்து தவம் மேற்கொண்டார். இன்றும் ஆலயத்தில் அவரைக் காணலாம். விருச்சிக ராசி மற்றும் அனுஷம் நட்சத்திரத்தை சாரந்தவர்கள் ஜென்ம ராசி நட்சத்திர (அனுஷம்) நாளில் இத்தல அம்மை- அப்பனை வழிபட்டு பூஜைகள் மேற்கொண்டால் சனி தோஷங்கள் விலகி, மனஅழுத்தமில்லாமல் சந்தோஷமாக வாழலாம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகரான கமலக்கண்ணன் சிவாச்சாரியார்.

ப் சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்கள் நடந்தாலும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, ஆரூத்ரா விழா, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் மற்றும் பிரதி பௌர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெறும்.

ப் பதவி உயர்வு, பணியிடமாற்றம் மற்றும் புதிய தொழில் அமைய வேண்டுமா? இத்தல மூலவரை தமிழ் மாதப் பிறப்பன்றும், திருமணத்தடை நீங்க வேண்டுமா... மகிஷாசூரனை வதம்செய்த பின் ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருள்கிறாளே அந்த துர்க்கையையும், அம்பாளையும் வெள்ளியன்றும், ஜாதகத்தில் ராகு- கேது உள்ளதா... அஷ்டநாகங்களுக்கு நடுவிலுள்ள விநாயகரை சங்கடஹரசதுர்த்தியன்றும் வழிபட்டால் தோஷங்களிலிருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழலாம் என்கிறார் செயல் அலுவலர் அவர்கள்.

ப் வாகை மரத்தடியில் பாம்பு புற்றுகளுக்கு நடுவிலுள்ள இத்தல விநாயகரை சதுர்த்தி திதி வரும்நாளில் பன்னிரு ராசிக்காரர்களும் கீழ்க்கண்டவாறு வழிபட்டால் சங்கடங்கள் தொலைந்து சகலமும் பெற்று மன அழுத்தமில்லாமல் வாழலாம் என்கிறார் ஆலய அர்ச்சகர் கமல் சிவம்.

மேஷம்: மஞ்சளால் அபிஷேகம் செய்து "ஓம் அவ்னிஷ் நமஹ' என்ற மந்திரத்தை சொல்லி வழிபட மேன்மை உண்டாகி சிறப் பான யோகம் கிடைக்கும்.

ரிஷபம்: சாணப் பொடியால் அபிஷேகம் செய்து "ஓம் கஜவக்ரா நமஹ' என்ற மந்திரத்தை சொல்லி வழிபட வாழ்வில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத் திலும் வெற்றிபெற்று எல்லா வளமும் கிடைக்கச் செய்வார்.

மிதுனம்: எலுமிச்சை சாற்றினால் அபிஷேகம் செய்து "ஓம் கீர்த்தி நமஹ' என்ற மந்திரத்தை சொல்லி வழிபட்டால் அனைத்து யோகங் களும் கிட்டும்.

கடகம்: பச்சரிசி மாவால் அபிஷேகம் செய்து "ஓம் துர்ஜா நமஹ' என்ற மந்திரத்தை சொல்லி வழிபட செய்கின்ற நற்செயலில் வெற்றிகிட்டுவதோடு கலைகளில் வித்தகராகத் திகழலாம்.

சிம்மம்: பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்து "ஓம் நமஹ ஸ்தேத்து நமஹ' என்ற மந்திரத்தை சொல்லி வழிபட ஆளுமைதிறன், தைரிய குணத்துடன் வெற்றிகிட்டும்.

கன்னி: சாத்துக்கொடி சாற்றினை கொண்டு அபிஷேகம் செய்து "ஓம் அவ்னிஷ் நமஹ' என்ற மந்திரம் சொல்லி வழிபட காரியங்களை அன்பானமுறையில் சாதிக்கும் திறனோடு வெற்றிகிட்டும்.

துலாம்: தேனால் அபிஷேகம் செய்து "ஓம் கஜகர்ண நமஹ' என்ற மந்திரம் சொல்லி வழிபட ஊக்கம், உத்வேகத்துடன் வெற்றிகிட்டும்.

விருச்சிகம்: இளநீரால் அபிஷேகம் செய்து "ஓம் விகாத் நமஹ' என்ற மந்திரம் சொல்லி வழிபட உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும்.

தனுசு: தேனால் அபிஷேகம் செய்து "ஓம் யஷஸ்கர் நமஹ' என்ற மந்திரம் சொல்லி வழிபட நேர்மறை எண்ணத்துடன் காரிய வெற்றிகிட்டும்.

மகரம்: சந்தனத்தால் அபிஷேகம் செய்து "ஓம் யஞ்ச்கய நமஹ' என்ற மந்திரம் சொல்லி வழிபட தியாக உணர்வு, கடின உழைப்புடன் காரிய வெற்றிகிட்டும்.

கும்பம்: பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து "ஓம் விஸ்வராஜ நமஹ' என்ற மந்திரம் சொல்லி வழிபட எத்தகைய துன்பத்திலும் கலங்காத மன தைரியத்துடன் வாழ்வதோடு எல்லா வளமும் கிட்டச் செய்யும்.

மீனம்: மஞ்சள்பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து "ஓம் சஷி வர் நமஹ' என்ற மந்திரம் சொல்லி வழிபட நேர்மையான குணத்துடன் பிறருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய ஞானத்தையும் தருவதோடு வாழ்வில் மேன்மை உண்டாகி சிறப்புடன் வாழ்வைப்பார்.

தொழில் நிமித்தமாக அல்லது அலுவலக வேலை தொடர்பாக எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் ஒருசிலருக்கு தொடர்ந்து ஏதாவது தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படி உள்ளவர்கள் மூலப்பொருளாக கருதப்படுகின்ற விநாயகப் பெருமானுக்கு மிக உயர்வான பொருளை படைக்க வேண்டும் என்பதால் முக்கண்களையுடைய தேங்காய் உடைக்கப்படுகிறது. விநாயகருக்கு மட்டும் தேங்காய் உடைப்பதில் பெரிய தத்துவம் இருக்கிறது. நான்தான் பெரியவர் என்று அகங்காரமாய் இருக்கின்ற மண்டையை உடைத்தால் உள்ளே அமிர்தரசமாக இளநீர் இருப்பதை சிதறு தேங்காய் உணர்த்துகிறது. தேங்காயின் உள்ளே இருக்கும் வெண்மையைப்போல நமது மனம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதைக் காட்டுவதோடு கோவிலில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் விநாயகருக்கு மட்டும் எதற்காக சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது என்பதற்கு கயிலாயத்தில் ஒருமுறை நடைபெற்ற சம்பவமே காரணமாகும்.

ஒருசமயம் தேவலோகத்தில் இருப்பவர்கள் அனைவரும் கைலாயத்தில் சிவபெருமானை தரிசிக்க சென்றனர்.

அப்போது சிவபெருமானைப் போன்றே தானும் இருப்பதாக பெருமை பேசியது. சிவபெருமான் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பது போன்றே, அனைத்து உயிர்களின் பூஜைக்கும் தான் பாதுகாப்பாக இருப்பதாக தேங்காய் கூறியது. சிவன் அணிந்திருக்கும் ஆமை ஓடுபோன்றே தன்மேலும் கெட்டியான ஓடு இருப்பதாக கூறியது. சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பதுபோல் தனக்கும் மூன்று கண்கள் உள்ளன என்றது. சிவனுக்கு சடையை போன்று தனக்கும் குடுமி உள்ளது என்று. சிவன் கங்கையை தனது உடலில் கொண்டிருப்பதுபோல் தானும் தனக்குள் இளநீரைக் கொண்டுள்ளதாக எகத்தாளமாகக் கூறியது. விநாயகப் பெருமானின் வடிவமாக இருக்கும் யானைக்கும் நானே மிகவும் பிடித்தமான உணவாகும் என்று பெருமிதத்துடன் கூறியது.

அதையடுத்து தேங்காயின் ஆணவ பேச்சைகேட்ட சிவபெருமான், உலகிலுள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்கட்டும் என்று கூறினார் அன்றுமுதல் விநாயகர். கோவிலில் சிதறு தேங்காய் உடைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு பெரிய உயர்ந்த இடத்தில் இருந்தாலும் என்றும் எப்போதும் பணிவாக இருக்கவேண்டும்; இல்லையென்றால் அடக்கமில்லாமல் ஆணவமாக பேசி திரிந்த தேங்காயைப்போல சிதறிப்போக வேண்டிவரும்.

கண்திருஷ்டி, தீவினை தோஷங்கள் விலகுவதோடு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, எதிரிகள் உதிரியாவதோடு எத்தகைய தடங்கள் இருந்தாலும் இத்தல விநாயகரை முறைப்படி வணங்கி சிதறு தேங்காய் போடுவதால் தடங்கள் தூள் தூளாக சிதறிபோவதோடு வெற்றிமேல் வெற்றிகிட்டும் என்கிறார் ஆலய அர்ச்சகர்.

திருக்கோவில் அமைப்பு

காவிரி வடகரையில் கிழக்கு நோக்கிய ஆலயத்தின் வெளிப்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. ஆலய முகப்பு வாயிலைக் கடந்ததும், இடப்புறம் வெளிப் பிராகாரத்தில் தலவிருட்சமான வாகை மரத்தடியில் பாம்புப் புற்றுகளுக்கு நடுவே விநாயகர், நாகர்களும் அருள்கிறார். உட்புறம் வவ்வால் நெற்றி மண்டபத்தில் பிரதோஷ நந்தி உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன், நடராஜர் சிவகாமி மற்றும் சனீஸ்வரருக்கு தனிச் சந்நிதி உள்ளது. திருமாளிகைப் பத்தியில் நிருதி விநாயகர், கஜலட்சுமி, சரஸ்வதி, வாசுகி சண்டிகேஸ்வரர் சந்நிதி, சூரியன், சந்திரன், பைரவர் நால்வர்க்கு சிலைகள் உள்ளன.

கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி உள்ளன. வெளிப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சித்தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதுபோல இவருக்கு எதிரே ஒரு நந்தியும் மற்றொரு நந்தியம் இருக்கிறது. இவருக்கு நேர் எதிரே மெய்கண்டனார். (சிவனடியார்)க்கு சந்நிதி உள்ளது. மூலவர் திரிதள விமானத்தின் கீழ் அருள்கிறார். கருவறை மண்டபத்தில் மூலவர் கிழக்கும், அம்மன் தெற்கும் பார்த்தபடி உள்ளன.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற இவ்வாலயம் குடமுழுக்கு கண்டு 18 ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் ஆலய தக்கார், செயல் அலுவலர், உபயதாரார்கள் சிவாச்சார்யார்கள், திருவாளப்புத்தூர் கிராமவாசிகள் சூழ (21-1-2024) தை 7-ஆம் நாள் தருமை ஆதீனம் 27லிஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் அவர்கள் முன்னிலையில் விமான பாலஸ் தாபன திருப்பணி துவக்கவிழா சிறப்புடன் நடைபெற்றது. விரைவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகளை மேற்கொள்ள இருக்கின்ற நிலையில் குரோதி ஆண்டு பிறக்கின்ற இக்காலத்தில் ஒருமுறை தரிசித்தால் வளமான வாழ்வு கிட்டும். அனுதினமும் நான்கு கால பூஜைகள் நடக்கிறது.

நடைதிறப்பு: காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ மாணிக்கவண்ணர் திருக் கோவில், திருவாளப்புத்தூர் (அஞ்சல்), மயிலாடுத்துறை மாவட்டம்- 609 205.

பூஜை விவரங்களுக்கு: கமலக்கண்ணன் சிவாச்சார்யார் அலைபேசி: 80984 60842.

அமைவிடம்: மயிலாடுத்துறை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும்; வைத்தீஸ்வரன் கோவிலிருந்து திருப்பனந்தாள் சாலையில் பத்து கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா