வானியலில் பூமியில் வாழும் நாம் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியைப்பெற்று இருள் நீங்கி வெளிச்சத்தில் வாழ்கின்றோம். சிலநேரம் மேகங்கள் சூழ்வதால் அவை நம் பார்வையில் இருந்து மறைக்கப்படுகிறது. ஆனால் ஒரு காற்று வீசியவுடன் மேகங்கள் கலைந்து மீண்டும் முழுமையாக நம் பார்வைக்கு வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சிலநாளில் குறிப்பிட்ட சிலகால அளவில் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியை நம்மால் முழுமையாகப் பெறமுடியாது. காரணம் அவற்றின் ஒளியை மறைக்கும் விதமாக வேறு ஏதேனும் ஒரு கோலானது, நம் பார்வைக்கு இடையில் குறுக்கீடு செய்வதேயாகும். அத்தகைய குறிப்பிட்ட கால அளவையே நாம் கிரகணம் என்று குறிப்பிடுகிறோம்.

அத்தகைய தருணம் நம் பார்வைக்கு இடையில் வந்த கோலானது தானாக விலகும்வரை சூரியன், சந்திரனின் ஒளியைப் நாம் முழுமையாகப் பெற பொறுமையுடன் இருத்தல் அன்றி நம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலாது.

life

அதைப்போல் நம் வாழ்வியலிலும் நாம் செய்த தீ வினைப்பயனின் விளைவுகள் (கர்மவினைகள்) சில நேரம் குறுக்கீடு செய்து நமக்குத் துன்பத்தைத் தருகிறது. அச்சமயத்தில் நம் அறியாமையால் தங்கள் துன்பத்திற்குக் காரணமாக, பிறர்மீது குற்றம் சாட்டியும், மூடநம்பிக்கையால் தமக்குக் கிரகம் சரியில்லை எனக் கருதியும் பல பரிகாரங்களும், செய்துவருகின்றோம். நமது செயல் வினைப் பயனால் நமக்கு ஏற்பட்ட துன்பவிளைவை, நாம் செய்யும் பரிகாரத்தால் மட்டுமல்ல; நாம் வணங்கும் இறைவனால்கூட நீக்கமுடியாது என்பதே மறுக்க முடியாத விதியாகும். மாறாக நம் வாழ்வில் இத்தகைய துன்பம் வர நாம் செய்த தீ வினை என்ன என்பதை, தன் மனதினுள் சுய பரிசோதனை செய்வதன்மூலம் தான் செய்த தவறை உணர்ந்துகொண்டவர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பமானது காற்றடித்தவுடன் விலகும் மேகத்தைப்போல விரைவில் விலகிவிடுகிறது என்பதை இராமாயணத்தில் வரும் இரண்டு காட்சிகள் நம் தீ வினை அகற்றவழி சொல்வதாக அமைகிறது.

காட்சி- 1

தசரத சக்கரவர்த்தியின் மகன் இராமபிரான் தந்தையின் ஆணைக்கு இணங்கி கானகம் செல்ல ஆயத்தமாகிறார். தன் கணவணைப் பிரிந்து கணமும் வாழ விரும்பாத சீதாதேவியும் உடன் செல்லத் தயாராகிறாள். தம்பி இலக்குவனும் தானும் அண்ணனுடன் அண்ணியுடனும் கானகம் சென்று அவர்களுக்கு உதவியாக இருந்து தொண்டுசெய்ய எண்ணியதால் மூவரும் கானகம் செல்கின்றனர். நேற்றுவரை அரண்மனையில் பஞ்சு மெத்தையில் துயில்கொண்ட தன் அண்ணனும், அண்ணியும் இன்று கானகத்தில் கல்லில் படுக்கும் நிலை வந்ததே என்று வருந்தி, அவர்கள் தங்குவதற்கு வசதியாக குடில் அமைத்து, புற்களால் படுக்கை அமைத்துக்கொடுத்து, கண்களில் கண்ணீர் வழிந்தோடியபடி நொடிப்பொழுதும் கண் இமைக்காமல் கையில் வில் ஏந்தியவாறு நாற்புறமும் சுற்றிவந்து பாதுகாத்து வந்தான் லட்சுமணன்.

கானகத்தில் ஒரு மானின் அழகில் மயங்கிய சீதாதேவி தன் கணவன் இராமபிரானிடம் அம்மானைப் பிடித்துத்தர கேட்டதன் பேரில் இலக்குவன் அது மாயமான் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் இராமபிரான் கேட்காமல், தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணி அம்மானை துரத்திப் பிடிக்க வெகுதூரம் சென்ற பிறகுதான் மாரிசன்தான் மாயமானாக வந்திருப்பதை உணர்ந்தான். இராமபிரான் தன் கையிலுள்ள வில்லில் நாண்பூட்டி அம்பெய்து மாரிசனைக் கொன்று வீழ்த்தினான். அச்சமயம் மாரிசன் இராமனின் குரலில் "சீதா அபயம் லட்சுமணா அபயம்'' என்றவாறே உயிரைவிட்டான். மாரிசனின் குரலை தன் கணவன் குரல் என்று எண்ணி பயந்த சீதை தன் கணவன் ஏதோ ஆபத்தில் சிக்கிய இருப்பதாகக் கருதி லட்சுமணனைச் சென்று பார்த்து வரச்சொன்னாள். தன் அண்ணனின் வீரத்தை நன்கு அறிந்ததாலும், கானகத்தில் அண்ணியை தனியே விட்டுச்செல்ல மனமில்லாமல் தயங்கி நின்றான் இலக்குவன். அதனால் சீதையின் பயம் கோபமாக மாறிய லட்சுமணனைப் பார்த்து சீதை "ஆபத்தில் சிக்கியிருகும் உன் அண்ணனைத் காப்பாற்றச் செல்லாமல் நீ காலம் தாழ்த்துவது என் மேலுள்ள ஆசையினால் என்று தோன்றுகிறது, இன்னும் ஒருநொடி தாமதித்தாலும் நான் தீக்கு இரையாகிவிடுவேன்'' என்றும் கடுமையான சொற்களை வீசினாள். மனம் கலங்கிய லட்சுமணன் மறுபேச்சின்றி, தன் வில்லால் ஒரு கோடு கிழித்து அதனைவிட்டு வெளிவராமல் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிவிட்டு அண்ணனைத் தேடிச்சென்றான். அச்சமயம் சீதையை இராவணன் கவர்ந்துசென்று பத்து மாதம் அசோக வனத்தில் சிறை வைத்தான்.

காட்சி-2

அசோக வனத்தில் பத்து மாதங்கள் இராமனைப் பிரிந்து துயரத்தில் இருந்த சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியபடி, கண்ணுறக்க மின்றி மிகுந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது.

அப்பொழுதுதான் தன் துன்பத்திற்கு காரணம், தன் நலன் கருதாது, நமக்கு தொண்டு செய்வதையே கடமையாக எண்ணிவந்த லட்சுமணன் மனதை, தான் கடுஞ்சொல்கூறி காயப்படுத்தியதன் விளைவுதான் இன்று அனுபவிக்கும் துன்பத்திற்குக் காரணம் என்ற உண்மை புரிந்ததும் சில நாட்களில் அனுமன் துணையுடன் இராவணனை வென்று சீதாதேவியை இராமபிரான் மீட்டார். தனது ஆசைக் கணவன் தன்னை தீக்குளிக்கச் சொன்னதன் காரணமும் தான் லட்சுமணனிடம் தீக்கு இறையாவேன் என்று கூறிய வார்த்தையால் தான் என்பதும் விளங்கியது. நம் துன்பத்தைப் போக்கும் பரிகாரம் நம் தவறை நாமே உணர்வது மட்டுமே ஆகும்.

"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்'

என்ற குறளும் எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக்கொள்வர். ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ அழியாமல் நம் பின்வந்து, நம்மை அழிக்கும் என்று எச்சரிக்கிறது.

எனவே, நம் எண்ணம், சொல் செயலால் பிறரை எந்தவகையிலும் மனம்வருந்தச் செய்யாத வாழ்வே, நம் வாழ்வில் மனம் வருந்தும் நிலை நமக்கு வராமல் நாமே நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வலிமையான ஆயுதமாகும்.