"தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே.'
பொருள்: எமனே! செந்தில் வேலவனுக்கு தொண்டனாகிய என்னிடம் இருக்கும் ஞானச்சுடர் வடிவம்கொண்ட வாள் இருக்கிறது பார்; என் கைக்கெட்டும் தூரத்தில் வந்து பார்; உன்னுடைய கதை ஆகிய தண்டாயுதமும், திரிசூலமும் கீழே விழும்படியாக, உன்னைத் திண்டாட விட்டு, என்னுடைய ஞான வாளால் வெட்டி வீழ்த்துவேன்.
எமதர்மனுக்கு எச்சரிக்கை!
நடுநாடு எனப்பட்ட (கடலூர் மாவட்டம்) திருவாமூர் எனும் ஊரில் ஆறுநாட்டு வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த புகழனார்பிள்ளை மற்றும் மாதினிஅம்மாள் தம்பதிக்கு திலகவதியார் எனும் பெண் பிள்ளையும் மருள்நீக்கியார் என்ற ஆண் பிள்ளையும் இருந்தனர்.
திலகவதிக்கும், அந்நாட்டு படைத் தலைவரான கலிப்பகையாருக்கும் திருமணம் நிச்சயமானது.
இந்நிலையில், புகழனாரும், மாதினியாரும் அடுத்தடுத்து இறந்துவிட கலிப்பகையார் ஒரு போரில் கொல்லப்பட்டார். இதனால் மனமொடிந்த சிவபக்தையான திலகவதியார், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாலும், தன் தம்பி சிறுவனாக இருந்ததால், அவனை தனியே தவிக்க விட வேண்டாம் என எண்ணி, அம்முடிவைக் கைவிட்டார். சிதம்பரத்திலிருந்து சிறிது தூரம் கொண்ட திருவதிகை எனும் ஊரிலிலுள்ள வீராட்டனேசுவரர் கோவிலில் தங்கி, இறைப்பணி செய்துகொண்டிருந்தார் திலகவதியார்.
அப்போது நாட்டை ஆண்டுகொண்டிருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், நாட்டு மக்களிடையே சமண மதத்தைப் பரப்பி, மக்களையும் மதம் மாறச் செய்துவந்தான். பல்வேறு திறமைகள் இயற்கையில் அமையப் பெற்ற மருள்நீக்கியார் சைவத்திலிருந்து, சமணத்திற்கு மாறினார். அக்கா திலகவதி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. மருள் நீக்கியாருக்கு தருமசேனர் எனும் பட்டமளித்து, தலைவராக்கினர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சமண மடத்தில் இருந்தபடியே சமணம் பரப்பிவந்தார்.
தன் தம்பி திரும்பவும் சைவத்திற்கே திரும்ப வேண்டும் என சிவனிடம் முறையிட்டார் திலக வதியார். அவரின் கனவில் வந்த சிவன் "உன் தம்பிக்கு கடும் சூலை நோய் கொடுத்து மீண்டும் சைவத்திற்கு திரும்ப வைப்பேன்' எனச் சொன்னார்.
அதுபோலவே மருள்நீக்கியார் "சூலைநோய்' எனப்படும் தீராத வயிற்று வலியால் துடித்தார்.
சமண மடத்தில் வைத்து, அவரின் சீடர்கள் பலவித சிகிச்சை யளித்தும் பலனில்லை. திருப் பாதிரிப்புலியூர் சமண மடத் திலிருந்து, யாருக்கும் தெரியாமல் கிளம்பி வந்து, அக்காவிடம் சொன்னார் மருள் நீக்கியார்.
தம்பியை அழைத்துக் கொண்டு திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சென்றார் திலகவதியார்.
சிவன்மீது பக்திப் பாடல்களைப் பாடினார்.
மருள்நீக்கியார் பாடிய முதல் தேவாரப் பாடல் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவிலில் தொடங்கியது.
"கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கே இர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.'
"வீரட்
டானத்து அம் மானே! எனக்கு எமனாக அச் சுறுத்தும் இந்த சூலை நோயை அகற்றிவிடு; என் உடம்பை முறுக்கி, முடக் கித் துன்புறுத்து கிறது. இந்த நோயின் துன் பத்தை என்னால் தாங்க முடிய வில்லை. தெரியா மல் தவறிழைத்து விட்டேன். இனி அல்லும்- பகலும் உன்னையே வணங்குவேன்.'
இவ்வாறு பொருள் கொண்டு பாடினார்.
மருள் நீக்கி யாரின் தமிழ் கேட்டு, மகிழ்வு டன் காட்சி யளித்த சிவன் "நோய் உன்னை விட்டு அகலும். உன் தமிழின் இனிமையால் இனி மக்கள் உன்னை "திருநாவுக்கரசர்' என்று அழைப்பர்'' என ஆசிர்வதித்து மறைந்தார்.
சூலை நோய் காணாமல் போனது;
மருள்நீக்கியார் என்கிற பெயரும் விட்டுப் போய், திருநாவுக்கரசர் ஆனார்.
இதையறிந்த சமணர்கள், சைவத்தின் பெருமையும், சிவனே நேரில் தோன்றி "திருநாவுக்கரசர்' எனப் பெயர் சூட்டி, சூலை நோயை தீர்த்ததும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனுக்குத் தெரிந்தால், தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்பதை எண்ணி, மன்னனிடம் இல்லாத தும் பொல்லாததுமாகச் சொல்லி, திருநாவுக்கரசரை கொல்ல ஏற்பாடு செய்தனர்.
திருநாவுக்க ர சரை அழைத்துவர ஆணையிட்டான் மகேந்திரவர்மன்.
அரச தூதர்களிடம் "நான் வரமுடியாது, எனக்கு பயமோ, கவலையோ இல்லை. சிவனைச் சரணடைந்த என்னை அவர் பார்த் துக் கொள்வார்' எனச் சொல்லிவிட்டுப் பாடிய பாடல்தான் இது...
"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர் படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணி யறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந் நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல் லாத் தன்மை யான
சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்சே வடி இணையே குறுகி னோமே.'
(திருநாவுக்கரசர் - திருத்தாண்டகம்- பதிகம் எண்: 6.98)
"நாம்' என்று தன்னையே குறிப்பிட்டு திருநாவுக்கரசர் பாடிய இந்தப் பாடலின் பொருள்:
நாம் யாருக்கும் அடிமை கிடையாது. எமபயமோ; மரண பயமோ இல்லை எமக்கு. நரகத்தில் துன்பப்பட மாட்டோம், எம்மிடம் பொய் இல்லை; சத்தியம் உண்டு, நாம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறோம், எமக்கு நோயுமில்லை, யாருக்கும் அடிபணிய வேண்டிய தேவையும் இல்லை, ஒவ்வொரு நாளும் இனிமையாக உள்ளது, துயரம் எமக்கில்லை. காரணம்... எவருக்குமே அடிபணியாத; அடிபணியத் தேவையுமற்ற இறைவனாகிய சங்கரனுக்கு; செவியில் வெண்சங்கு அணிந்த அந்த மன்னனுக்கு, என்றுமே மீளமுடியாத அடிமையாக சிவனின் மலர்ப் பாதங்களில் புகுந்துவிட்டோம்.
ஏற்கெனவே சிவனடிமையாக இருக்கிற நான்; இனி எந்த அரசனுக்குமோ, வேறு யாருக்குமோ அடிமையில்லை' என அழுத்தமாகச் சொன்னார் திருநாவுக்கரசர்.
இதனால் திருநாவுக்கரசரைக் கொல்ல பல்வேறு முயற்சிகள் நடந்தது. அவரை, சுண்ணாம்பு காளவாசலில் வைத்து கொல்ல முயன்றான் மன்னன். ஆனால், காளவாசல் குளிர்ந்துவிட்டது. விஷ உணவு கொடுக்கப்பட்டது; அதுவும் அவரை எதுவும் செய்யவில்லை. பட்டத்து யானையை வைத்து, அவரது தலையை மிதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. யானையோ, திருநாவுக்கரசரை வணங்கி வலம்வந்தது. கல்லில் கட்டி, கடலில் தூக்கி வீசினர்.
அந்தக் கல்லே அவரைக் கரைசேர்த்தது.
சிவனின் சக்தியையும், திருநாவுக்கரசரின் பக்தியையும், சைவத்தின் பெருமையை உணர்ந்த பல்லவராஜன் மகேந்திரவர்மன், சைவ மதத்திற்கு மாறிவிட்டான்.
"சிவனடிமையாக இருக்கிற எனக்கு எவன் பயமோ... எம பயமோ இல்லை' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.
"செந்தில் வேலவனின் தொண்டனாகிய நான் ஞானவாளால் உன்னை வெட்டி வீழ்த்துவேன்' என எமனுக்கு எச்சரிக்கையே விடுகிறார் அருணகிரிநாதர்..
(பாட்டு வரும்)