தினைப்புனத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த வள்ளியைக் காதலால் கவர முயன்று, காமத்தால் துடித்தார் வேடன் முருகன். இதன்மூலம் இச்சா தத்துவத்தை உலகிற்குச் சொன்னார்.

பாடல்: 6

"பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை

விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள

Advertisment

அரும்புந் தனிப்பர மாநந்தந் தித்தித் தறிந்தவன்றே

கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே.'

பொருள்: அகன்று விரிந்த பசுமையான பெருவயலில், சிறிய இடத்தில் பயிரிடப்பட்டிருந்தது தினைப்பயிர். அந்த தினைப் புனத்தைக் காவல் காக்கிறாள் வள்ளி. வள்ளியின் பெருத்த முலைகளின்மீது இச்சைகொண்ட முருகப்பெருமானை நாம் உணமையான அன்புடனும் பக்தியுடனும் நேசிப்பதால், நமக்குள் மெல்ல மெல்ல பரமானந்தத்தின் இனிய சுவை படர ஆரம்பிக்கும். நாம் பரமானந்த வசப்பட்டுவிட்டோம் என உணர ஆரம்பித்த அன்றைக்கே கரும்பும் துவர்த்தது; செந்தேனும் புளித்துக் கரித்தது.

Advertisment

மலையில் கிடைத்த மகள்!

முருகன் வேடனாகச் சென்று குறமகள் வள்ளியுடன் திருவிளையாடல் நடத்தியதால் அது வள்ளிமலை எனப்பட்டது. மலையும், மலைசார்ந்த வயலும் "குறிஞ்சி' ஆகும். அந்த மலையிலிருந்த ஒரு சின்ன ஊர் குறிச்சி. குறிஞ்சி நிலப்பகுதிக்குத் தலைவன் முருகப்பெருமான். அதனால் தான் "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம்' எனச் சொல்லப் பட்டது. குறிச்சி ஊரின் மக்கள் குறிஞ்சிக் கடவுளான முருகனை வணங்கிவந்தார்கள். ஊர்த்தலைவன் நம்பிராஜன். அவர்களுக்கு நான்கைந்து ஆண் பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளை இல்லாத ஏக்கம் நம்பிராஜன் தம்பதியை வாட்டியது.

இந்நிலையில் அம்மலையில் நேர்மையான, சிவபக்தரான முனிவர் ஒருவர் தவமிருந்தார். அவர் அந்த மலையிலிருந்த அழகிலும் அழகான ஒரு புள்ளிமானைக் கண்டு, காதலுற்றார். எண்ணத்திலேயே அதனுடன் உறவாடினார் அந்த முனி. இதனால் மான் கர்ப்பமடைந்தது. இதையறிந்த முருகன், தன் மாமன் திருமாலின் மகளான சுந்தரியிடம், "அந்த மானின் வயிற்றுக் கருவில் நீ புகு. ஆனால் நீ சுந்தரி என்பதுபற்றிய நினைவெல்லாம் உனக்கு மறந்துவிடும்' எனச் சொன்னார். அதன்படி சுந்தரி, மானின் வயிற்றில் வளர்ந்தாள்.

பிரசவ காலம் வந்தது. வள்ளிக் கிழங்கு தோண்டியெடுக்கப்பட்ட பள்ளத்தில் இறங்கி, அழகிய பெண்குழந்தையை மான் பிரசவித்தது. ஆனால் தன்னுடைய குட்டியாக இல்லாமல் வேறு ஜீவராசியாக இருந்ததால் மிரண்டுபோன மான், அந்தக் குழந்தையை புறக்கணித்துவிட்டு ஓடிவிட்டது.

நம்பிராஜன் தன் மனைவி கொடிச்சியுடனும், பரிவாரங்களுடனும் தினைப்புனத்திற்கு வந்தார். அங்கே குழந்தையின் அழுகுரல் கேட்டு, குழந்தையைக் கண்டெடுத்தனர். அதைக் கையில் வாங்கிய கொடிச்சிக்கு முலைப்பால் பீறிட்டுச் சுரந்தது. குழந்தைக்கு ஊட்டிமகிழ்தாள்.

நம்பிராஜன்- கொடிச்சி தம்பதியின் மகளாக பாவிக்கப்பட்டவளுக்கு, வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தைக்கு "வள்ளி' என்றே பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினர்.

ss

மங்கைப் பருவம் எய்திய வள்ளியைத் தங்களின் குல வழக்கப்படி தினைப்புனக் காவலுக்கு அனுப்பினர். 12 வயது பருவத்தில் வர்ணிக்க வார்த்தைகளற்ற அழகுடன் இருந்த வள்ளி, பரண்மீது ஏறிநின்று, கவண்கல் வீசி, தினைப் பயிரைத் தின்ன வந்த பறவைகளையும், காட்டுப் பன்றிகளையும் விரட்டினாள்.

வள்ளிக்கு அருளும்விதமாய் திருத்தணிகை மலை எனப்படும் திருத்தணியில் தனியாக எழுந்தருளினார் முருகப்பெருமான். அவரை தரிசிக்க வந்த நாரதர், வழியில் வள்ளியைப் பார்த்துவிட்டு, "இவ்வளவு பேரழகுப் பெண்ணாக தெய்வாம்சத்துடன் இருக்கிறாளே... முருகனுக்குப் பொருத்தமானவளாக இருப்பாள்' என எண்ணிக்கொண்டே திருத்தணிகை வந்து, முருகனிடம் சொன்னார்.

தக்க சமயத்திற்காகக் காத்திருந்த முருகன் தெய்வத் தோற்றம்விட்டு, மனித வேடனாக தினைப்புனத்திற்கு வந்தார். வள்ளியின் அழகைக் கண்டதும் காமநோயால் பீடிக்கப்பட்டார்.

முருகனுக்குத் தேனும் தினைமாவும் உண்ணக் கொடுத்த வள்ளி, தாகத்திற்கு நீரருந்த சுனைக்கும் அழைத்துப்போனாள். ஆயினும் முருகப்பெருமான், வள்ளிமீதான தனது இச்சை அடங்கவில்லை என்றார்.

"ஆகத்தை வருத்துகின்ற அரும்பசி அவித்தாய் தெண்ணீர்த்

தாகத்தை அவித்தாய் இன்னுந் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ

மேகத்தை யனைய கூந்தல் மெல்லியல் வினையேன் கொண்ட

மோகத்தைத் தணித்தி யாயின் முடிந்ததென் குறையிதென்றான்'

உடலைத் தளர்வுறச் செய்து வருத்திய என் பசியைப் போக்கினாய்; எனது தண்ணீர்த் தாகத்தையும் போக்கினாய்.

ஆனாலும் நான் சோர்வு நீங்காமல் இருக்கிறேன். மேகத்துக்கு ஒப்பான கரிய கூந்தல்கொண்ட மென்மையானவளே, நான் உன்மீது கொண்டிருக்கும் மோக இச்சையை நீ தணித்தாயானால் என் தளர்வு, சோர்வு, ஏக்கம் உள்ளிட்ட குறைகள் நிவர்த்தியாகிவிடும்!

-இவ்வாறு கிழ வேடமிட்ட முருகன் வள்ளியைப் பார்த்து கெஞ்சுவதாக, கச்சியப்ப சுவாமிகள் "கந்தபுராண'த்தில் பாடியுள்ளார்.

ஆயினும், "கிழவனுக்கு என்ன திமிர்' என்பதாக வள்ளி ஓட்டமெடுக்க, விநாயகர் யானை வடிவில் வந்து வள்ளியை வழிமறிக்க, பயந்துபோன வள்ளி, கிழவேஷ முருகனைக் கட்டிக்கொள்கி றாள். விநாயகர் சென்தும், தன் ஆறுமுக வடிவம் காட்டிய முருகன், ஒரு சோலையில், வள்ளியைக் கூடி இச்சை தணிந்தவராய், வள்ளியை மணமுடிக்கிறார். வள்ளி திருமாலின் மகள் சுந்தரி என்பதால் தேவலோகப் பெண்ணாக மாறுகிறாள்.

முருகப் பெருமானாகிய பரமானந்தம் நமக்குள் பரவப் பரவ "கரும்பும் துவர்க்கும்' என்கிறார் அருணகிரிநாதார்.

ஆனால் சிவத்தை நெருங்க நெருங்க இயற்கையிலேயே துவர்ப்புச் சுவை கொண்ட கரும்பின் நுனிப்பகுதி இனித்த கதையை இங்கே நினைவுகூர்வோம்.

காவிரிப் பூம்பட்டினத்து வணிகச்செல்வர் சிவநேசர், திருவெண்காட்டில் வசிந்து வந்தார். மனைவி ஞானக்கலை. குழந்தை யில்லாத நிலையில், ஒரு சாமியார் ஒரு குழந்தையை இவர்களுக்கு விற்க, அவனுக்கு மருதவாணன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஒருமுறை வணிகத்திற்கு கப்பலில் வெளிநாடு சென்ற மருதவாணன் செல்வம் கொண்டு வரவில்லை. மூட்டைகள் நிறைய எருவாட்டியும், நெற்தவிடும் இருந்தது. இதனால் மகனை ஏசினார் சிவநேசர்.

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என ஒரு ஓலையில் எழுதி, அதில் (நூல் கோர்க்கும் இடம் உடைந்த) காதறுந்த ஊசி ஒன்றையும் வைத்து, அதை ஒரு பெட்டகத்தில் வைத்துத் தன் தாயார் கையில் கொடுத்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினார் மருதவாணர்.

அதை வாங்கிப் படித்துப் பார்த்த சிவநேசருக்கு, தனக்கு மகனாய் வந்தவன் சிவன் என்றும், வாழ்க்கையின் நிலையாமையை தனக்கு உணத்தியதையும் உடனே உணர்ந்து, துறவியானார்.

அவரின் ஊர் காவிரிப் பூம்பட்டினம் என்பதால் "பட்டினத்தார்' என்றும், திருவெண்காட்டில் வசித்ததால் "திருவெண்காடர்' என்றும் அழைக்கப்பட்டார்.

ஊர் ஊராகச் சென்று வாழ்வின் நிலையாமை பற்றிப் பாடினார். சிவன் கோவில் களுக்குச் சென்று வணங்கினார். ஒருமுறை வடநாடு சென்றிருந்தபோது பத்ரகிரி மன்னன், இவரைத் திருடன் என எண்ணி கழுமரத்தில் ஏற்ற உத்தரவிட, கழுமரமே எரிந்தது. பட்டினத்தாரின் மகிமையறிந்து, மன்னன் துறவறம் வாக்கி, பட்டினத்தாரின் சீடரானார். சீடர் மரணகட்டத்தை நெருங்கியபோது அவருக்கு முக்தி கிடைத்தது.

"சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ்பொருளும்

போதுற்ற பூசலுக்கு என்செய லாம்செய்த புண்ணியத்தால்

தீதுற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ

காதற்ற ஊசியைத் தந்துவிட்டான் என்றன் கைதனிலே'.

(பட்டினத்தாரின் பொது- மெய்யுணர்வுப் பாடல்: 9)

நமது ஆன்மிக ஒழுக்கங்கங்களை இழக்கச்செய்யும் பெண்களின் முலை களும், உடலுறவு ஆசையும் கிழிசலைப் போன்றது; பொருள் தேடுவதற்காக நாம் செய்யும் செயல்களும் கிழிசல் போன்றது. இந்தக் கிழிசல்களைத் தைக்க கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதோ காதற்ற ஊசி. இதையறியாமல் காலமெல்லாம் காதற்ற ஊசியில் நூலைக்கோர்த்துக் கொண்டிருக்கிறோம். (பற்றற்று இருப்பவனிடம் கிழிசலும் இல்லை; ஊசியும் தேவையில்லை).

"வாதுற்ற திண்புயர்அண் ணாமலையர் மலர்ப்பதத்தைப்

போதுற்ற எப்போதும் புகலு நெஞ்சே இந்தப் பூதலத்தில்

தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென்

காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.'

(பட்டினத்தாரின் பொது- மெய்யுணர்வுப் பாடல்: 9)

அண்ணாமலையாரின் திருப்பாதங்களை எப்போதும் பற்றி, அவன் புகழ் பாடு நெஞ்சே. இந்த பூமியில் எத்தனை செல்வமும், புதையலாகக் கிடைத்த செல்வமும், எதற்கும் பயன்படாத காதற்ற ஊசியும்கூட, நீ வீடுவிட்டுக் காடு போகும்போதுகூட வராது.

-இவ்வாறு பட்டினத்தார் பாடியுள்ளார்.

திருவள்ளுவர் திருக்குறளிலும் பற்றறுத்தல் குறித்துப் பேசியுள்ளார்.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.' (திருக்குறள்: 341)

ஒருவன் எந்தெந்த பற்றுகளை அறுத்துக் கொள்கிறானோ, அந்தந்த பற்றுகளால் வரக்கூடிய துன்பங்களும் அவனை அண்டுவதில்லை.

"பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.' (திருக்குறள்: 350)

ஆசை எனும் பற்றுகளை விட்டொழிக்க ஒரேவழி- பற்றற்றவனான பகவானைப் பற்றிக் கொள்ளவேண்டும். அந்தப் பற்றை விடாமல் பின்பற்றவும் வேண்டும்.

ஆசைகளை அறுத்த பட்டினத்தாருக்கு, ஒரு ஆசை இருந்தது. அது கவலையும் கூட. "சீடனுக்கு முக்தி கிடைத்தும் தனக்கு, முக்தி இன்னும் கிடைக்கவில்லையே' என்று எண்ணினார். எண்ணத்தை ஈடேற்ற சிவனை வேண்டினார். அப்போது, "நீ என்னுடைய தலங்களுச் செல். எந்தத் தலத்தில் உனக்கு பேய்க்கரும்பு இனிக்கிறதோ, அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்' என்றார் சிவன்.

பட்டினத்தார் மீண்டும் கையில் கரும்புடன் திருவெண்காடு, சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை, காளஹஸ்தி என பல தலங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு, சென்னையை அடுத்த திருவொற்றியூர் சிவத் தலத்திற்கு வந்தார். அங்கே பட்டினத்தாரின் கையிலிருந்த பேய்க்கரும்பான தோகைகள் கொண்ட நுனிக் கரும்பு இனித்தது.

அந்த திருவொற்றியூர், முன்பு "ஆதிபுரி' என அழைக்கப்பட்டது. அங்கே கடற்கரையோரம் கிழக்கு நோக்கி தினமும் சிறிது நேரம் அமர்வார். பிறகு, மீனவக் குழந்தைகளுடன் விளையாடுவார். ஒருநாள் தன்னை கோழிகளை இரவில் மூடிவைக்கும் காற்றோட்டமான கூடையான பஞ்சாரத்தால் மூடும்படி கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் கழித்து குழந்தைகள் பஞ்சாரத்தை நீக்கியபோது அங்கே ஒரு லிங்கம் இருந்தது. சிவனுடன் ஐக்கியமானார் பட்டினத்தார். இன்றும் திருவொற்றியூர் கடலோரம் கிழக்கு வாசல்கொண்டு பட்டினத்தார் சமாதிக் கோவில் சிறப்புடன் இருக்கிறது.

இப்படி, சிவனருளால் பட்டினத்தாருக்கு இனிப்புச் சுவை இயற்கையிலேயே இல்லாத பேய்க்கரும்பு இனித்தது. ஆனால் முருகப் பெருமானை உள்ளத்தில் நினைத்த மாத்திரத்திலேயே, "இயல்பிலேயே இனிக்கக்கூடிய கரும்பும் துவர்க்கிறது. அதுவும் இனிப்புச் சுவையுடைய தேன் புளித்து, கரிப்புச் சுவையாக கைத்தது' என்கிறார் அருணகிரியார்.

(பாட்டு வரும்)