ஒரு மனிதன் நல்லவனாகவும், தீயவனாகவும், வளர்வதற்கும், வாழ்வதற் கும், அவன் வளரும் சுற்று சூழ்நிலையை சார்ந்தே வளர்ச்சி இருக்கிறது. அப்போது சுற்றுச் சூழ்நிலை எப்படியிருக்கவேண்டும்? கல்வி அறிவே இல்லாத, பக்தியைப் பற்றி தெரியாத ஒரு இடத்தில் பிறக்கும் குழந்தையை, பக்தி சார்ந்த இடத்திலும், கல்வி அறிவை போதிக்கும் இடத்திலும், அக்குழந்தையை வளர்த்தால், அக்குழந்தை யானது மிக அருமையான பக்திமானாகவும், உயர்ந்த ஞானியாகவும், மிக உயர்ந்த ஒழுக்க சீலனாகவும், ஆகச் சிறந்த கல்விமானாகவும் வளரமுடியும். அதேபோன்று, பக்தி சார்ந்த, அறிவு சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த இடத்தில் பிறந்த ஒரு குழந்தையை கல்வி அறிவும், நாகரீகமும், பக்தியும், ஒழுக்கமுமில்லாத இடத்தில் அக்குழந்தையை வளர்த்தால், அந்தக் குழந்தையானது அந்த சூழ்நிலையை சார்ந்து வளரும். இதுபோன்றுதான் கல்வி, ஒழுக்கம், பக்தி, நேர்மை, உண்மை, திறமை, தைரியம் அத்தனையும் நாம் பிறந்து வளரும் சுற்றுச்சூழலைப் பொறுத்தே உருவாகும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இங்கே "மரபணு' என்று ஒன்று இருக்கிறது. நாம் அதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு குழந்தை வளர்ப்பில் முழு முனைப்போடு கல்வி, பக்தி, (பக்தி என்பது பேதங்கள் இல்லாமை, சமத்துவம், சமதர்மம், சமநீதி, மிக உயர்ந்த கருணை, ஈகை என்பதாகும்). ஒழுக்கம் இத்தனையும் சேர்த்து அந்தக் குழந்தைக்கு போதிக்கும்பொழுது இந்த குழந்தையானது மிக உயரமான ஒரு நிலையை அடையமுடியும். அதுமட்டு மில்லாமல் தன்னைச் சார்ந்தவர்களின் தரத்தையும் அந்தக் குழந்தை மீட்டெடுக் கும். இதற்காகத்தான் அக்காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு தீமையான விஷயத்தில் தாங்கள் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வந்தபிறகு, எதிர்கால சந்ததி இப்படி ஒரு துன்பத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அதற்கென ஒரு பழமொழியை உருவாக்குவார்கள். உதாரணமாக, "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'. "தீதும் நன்றும் பிறர் தர வாரா', நன்மை- தீமை என்பது அவரவர் செய்யும் செயலை சார்ந்து வருவதாகும். கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கவேண்டும். கல்வியைப் பற்றி மருத்துவ மேதை திருவள்ளுவர் கூறி அருளியதைப் பார்க்கலாம்.
"தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.'
கற்றறிந்த அறிஞர், தாம் கற்ற கல்வியால், தான் இன்புறுவதோடு உலக மக்களும் இன்புறுவதைக் கண்டு, தான் மென்மேலும் கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் விரும்புவார். இப்படி கூறிய திருவள்ளுவர் ஒழுக்கத்தைப் பற்றி கூறியுள்ளதைப் பார்க்கலாம்.
"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.'
ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்ந்த நிலையை அடைவர். ஒழுக்கம் தவறுதலால், தாம் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். பக்தியைப் பற்றி திருவள்ளுவர் சொல்லியுள்ளதைப் பார்ப்போம்.
"கோள்இல் பொறியிற் குணம்இலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
எளிமையான குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காத உடல்கள், புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயனற் றவை ஆகும். இவ்வாறு கல்வி, ஒழுக்கம், பக்தி ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையதாகும்.
திருமந்திர சிற்பி அருளிய திருமந்திரம் கூறுவதைப் பார்ப்போம்.
"நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.'
அற நூல்கள் கூறிய நெறிமுறைகளின்படி நடந்து, உயர்ந்த நிலையை அடைய முடியாத வர்கள், உலகப் பிரகாரமான மற்றைய இச்சை களில் மனமானது பற்றுக்கொள்ள, மனிதப் பிறவியின் பண்பு நலன்களை இழப்பார்கள். கோலெடுத்தால், கூட்டமாக இருக்கும் பறவை கள் அங்கொன்றும் இங்கொன்றும் பறந்து ஓடுவதைப்போல, இந்த உலகப் பற்றாளர் களும், உலகத்திலுள்ள மாய விஷயங்களில் மயக்கம் கொண்டு தடுமாறுகின்றனர். இதனை யோக மார்க்கத்தில் கூறுவதென்றால், நூல் போன்ற சுழுமுனை நாடியைப் பற்றித் தலை உச்சியாகிய பிரம்மந்திரம் (நுனி) அடைய முடியாதவர்கள், பாசம் எனும் பற்றினைப் பற்றிக்கொண்டு காம விகாரத்தால் பண் பிழந்து யோகம் கெட நிற்பர். முதுகுத் தண்டாகிய கோலைப் பற்றித், தலை உச்சிப் பகுதியாகிய சகஸ்ராரம் என்று சொல்லப்படும் பகுதியை அடைந்தவர் களுடைய புலன்கள் இச்சைகள் இன்றி அடங்கி ஒடுங்கும். இது தெரியாமல் மனித இனம் மதிமயங்கி நிற்கின்றனர்.
இப்படி கல்வியானது அறிவு, பகுத்தறிவு, ஞானம் என்று பெருவளர்ச்சி பெற்று அது தனி ஒருவனுக்கு பயன்படுவதோடு, தான் வாழும் சமுதாயத்திற்கும் நல்லவழியை காட்டும் ஒரு அறநெறி கருவியாகவும் செயல்படும் என்பதே அதிலுள்ள மாபெரும் உண்மை.
அடுத்து ஒழுக்கத்தைப் பற்றி திருமந்திரம் கூறுவதைப் பார்ப்போம்
"சத்தியம் இன்றித் தனிஞானம் தான்இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை
இன்றிஊண்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம் அன்றே'.
உண்மைத் தவ ஒழுக்கம் இல்லாமல், மெய்ஞான அறிவும் இல்லாது, உடலோடும்,
மனத்தோடும் பொருந்தியுள்ள ஐம்புலன் களின் வழியாகச் செல்லும் ஆசைகளை விட்டு விலகிச்செல்லும் வழியை எண்ணு கின்ற நினைப்பும் இல்லாமல், உண்மை பக்தியில்லாமல், எல்லாவற்றிற்கும் மேலான ஒன்று சிவப்பரம் பொருளே என்ற உண்மை அறிவுமில்லாமல்தான் உண்ணுகின்ற உணவின்மீது ஆசை வைத்து அலையும் பைத்தியக்காரர்கள் தவசீலர்கள் (பிராமணர்) ஆகமாட்டார்கள். பிராமணர், அந்தணர் ஒரு தனி விளக்கம். அதாவது பொறுமை, நேர்மை, உண்மை, தூய்மை, இறையருள், உண்மையே பேசுதல், பொய் பேசாது இருத்தல், அளவான உணவு உண்ணுதல், சமநிலை பேணுதல், பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காதவன், திருடும் எண்ணம் இல்லாதிருத்தல், காமம் (பெண் பித்து) இல்லாதிருத்தல், கொலை பாவம் செய்யாதிருத்தல், சாதி, மதம் வேறுபாடு இல்லாதிருத்தல், இப்படிப்பட்ட குணங் களை எல்லாம் பெற்றவனே பிராமணன் அல்லது அந்தணன் என்று அழைக்கப் படுவான். இன்னும் சற்று எளிமையாக சொல்லவேண்டும் என்றால், பற்றற்றவனே, நற்செயல்களை சிந்தித்து சமநிலையில் இருப்பவனே மிக உயர்ந்த தவசீலனாக, பிராமணனாக கருதப்படுவான். இறைவனை காண்பதற்கும், இறைவனை வழிபடு வதற்கும் ஒரு மீடியேட்டர் தேவையில்லை. சாமியார் என்றால், "சாமி' யார் என்று கேட்பவர்களுக்கு தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் பகுத்தறிந்து உண்மையை, தூய்மையை உணர்த்துபவரே உண்மையான சாமி ஆவார். பொருளுக்கும், தன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும் தவறான வழிகாட்டுபவன் போலிச்சாமியார் ஆவான். இறைவன் எங்கே இருக்கிறான் என்பதை நாம் எளிமையாக புரிந்துகொள்ள அவ்வைக்குறள் ஒன்றை பார்ப்போம்.
"பிண்டத்தின் உள்ளே பெயராது இறைவனைக்
கண்டுதான் அர்ச்சிக்கு மாறு.'
நமது உடலுக்குள் நீங்காது நிறைந்து இருக்கின்ற இறைவனை, மனக் கண்ணால் கண்டு, உள்ளன்போடு தொழுவதே (வழிபடு வதே) மிக உயர்ந்த வழிபாடாகும். இப்படி காண்பதற்கு நல்ல அப்பழுக்கற்ற வழிகாட் டியே சிறந்த குருவாக இருக்கமுடியும்.
அவ்வைக்குறள் கூறும் மேலும் ஒரு பாடலைப் பார்ப்போம்.
"ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையும்
நேசத்தால் நீநினைந்து கொள்.'
அதாவது உயிர்க்குலம் முழுவதையும் கடவுளாக, இறைத்தன்மை உடையதாக எண்ணி, அவை எல்லாவற்றிடமும் அன்பு பாராட்டுவதைக் கடமையாக நீ நினைவில் கொள்ளவேண்டும். இதனையே திருமூலர் தனது திருமந்திரத்தில் "உயிர் இலங்கும் உடல் அனைத்தும் ஈசன் கோவில்' என்று கூறுவார். அப்படியென்றால் இந்த பூமிப்பந்தில் இருக்கின்ற ஒவ்வொரு உயிரினத்திலும் இறைவன் குடியிருக்கிறான் என்று பொருள். அது எப்படி? என்று கேள்வி கேட்பது சுலபம். ஆனால் நீ ஒவ்வொரு உயிரினத்திடமும் அன்பை கொடுத்துப்பார், அதன் விளைவை நீ உணர்ந்து கொள்ளமுடியும். சித்த மருத்துவ கொள்கையும், சித்தர்களின் கொள்கையும் மனித இனத்திற்கு மரணமே இல்லை என்பதை எடுத்துரைப்பதாகும். ஆனால் மனித இனமோ அதனை நம்பமறுக்கிறது. அதற்கான முயற்சியையும் செய்வதில்லை. அதாவது பரவாயில்லை, ஒருவன் 50 வயதில் இறந்துவிடவேண்டும் என்பது விதி. விதிவிலக்கு என்பது அவன் மதியை பயன்படுத்தவேண்டும். என்ன காரணத்தினால் 50 வயதில் இறக்க நேரிட்டது. ஒன்று மனநோய், மற்றொன்று அதன் வழிவந்த உடல்நோய். இந்த இடத்தில் சித்த மருத்துவக் கொள்கையையும், சித்தர்களின் கோட்பாடுகளையும் நாம் ஆராய்ந்து அறிந்தோமானால் நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு மேலும் ஒரு 20 ஆண்டுகள் நல்லவிதமாக உயிர் வாழமுடியும். அதுமட்டுமில்லாமல் நம்மை சார்ந்தவர்களுக்கும் நாம் நல்லதை செய்யமுடியும். அதன்மூலம் நாமும் நலமானவற்றை பெறமுடியும். நல்லது நினைப்போம்; நல்லதே நடக்கும்.
உடல்நிலை அற்றது. அதனால் அவ்வுட லில் குடியிருக்கும் உயிரும் நிலையற்றது. இவை இரண்டும் சேர்ந்து ஈட்டும் பொருளும் நிலையற்றது. இதற்கிடையே நாம் கற்றுக் கொள்ளும் தாய்மொழி கல்வியும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஒழுக்கமே அழியாப் புகழைத் தரும். கல்வியில் உயர்ந்து, அறத்தில் சிறந்து, அரணை தொழுதால், சிவப்பரம் பொருளின் அருட்செல்வம் உன்னை தானே தேடிவரும்.
திருமந்திரம் சொல்லுவதைப் பார்ப்போம்.
"தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கல்மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.'
செல்வம் நிலையற்றது என்பதைத்தெரிந்து தெளிவடையுங்கள். முன்னமே அறிந்து தெளிந்தவர்கள், செல்வம் இல்லாமையை எண்ணிக் கவலைப்படாதீர்கள். ஆற்று வெள்ளம்போல் பெருகிவரும் செல்வச் செழிப்பைக் கண்டு கலங்கி மயங்காமல், (வெள்ளம் வந்ததுபோல் வந்து ஒரு நாள் திடீரென்று வற்றியும் போகும்). எனவே, உங்கள் மனதை மாற்றிக்கொண்டு (பொருட்செல்வத்தின்மீது வைத்த பற்றை மாற்றிக்கொண்டு) இறையருளாகிய பெரும் செல்வத்தை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அவ்வாறு முயற்சி செய்யும்பொழுது எம பயம் கூட உங்களை அணுகாது. எனவே, அறக்கல்வியை கற்போம், அரன்வழி (ஒழுக்க நெறி) நடப் போம். சிவப்பரம் பொருளின் அளவில்லா அருட்செல்வத்தைப் பெறுவோம்.