சந்நியாசிகள், மகரிஷிகள், சித்தர்கள் அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டே இருப் பார்கள். ஒவ்வொரு சிவாலயங்களில் அல்லது அதனருகில் மேற்படி ரிஷிகள், சித்தர்களின் ஜீவ சமாதிகள் நிச்சயம் இருக்கும். அதே போல் விஷ்ணு ஆலயங்களிலும் பிருந்தாவனங்கள் இருக்கும்.
மகரிஷிகள் மனைவி, மக்களோடு வாழ்பவர்கள். மனமொத்த தம்பதிகளாக வாழும் மகரிஷிகள் தவமிருந்து பல வரங்கள் பெற்றவர்கள். சந்நியாசிகள், சித்தர்கள் முற்றும் துறந்தவர்கள். ஆசை, காமம், குரோதம் இல்லாதவர்கள். இவர்கள் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றைக் கூட சேமித்துவைக்காதவர்கள். கிடைத்ததை சாப்பிட்டு எந்த இடத்திலும் தூங்குவார்கள். இப்படிப்பட்ட முனிவர்களும் சித்தர்களும் மனிதவாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியுள்ளனர். மனிதர்கள் நோய் நொடி யில்லாமல் இறைபக்தியோடு வாழ்வதற்கு பல்வேறு மூலிகைகளக் கண்டறிந்து தந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mamunivar.jpg)
இப்படிப்பட்ட மகான்கள் மறைந்த இடங்களில் ஜீவ சமாதிகள் உள்ளன.
அங்கு மடப்பள்ளி களை உருவாக்கி யுள்ளனர். அப்பகுதி யிலுள்ள ஆலயங் களுக்கு வழிபடவரும் சந்நியாசிகள், சிவனடி யார்களுக்கு உணவு, தங்கும் வசதி ஏற்படுத் தித் தருவார்கள். இதற் காகவே அக்காலத்தில் இறைபக்தியுள்ள பெருந்தகையாளர்கள் சொந்தசெலவில் மடப் பள்ளிகளை உரு வாக்கி, அதற்கான செலவினங்களைச் செய்வதற்கும் நிரந்தர வருமானத்திற்கு வழி செய்து சென்றுள்ளனர்.
ஆனால் காலப்போக்கில் பல மடப்பள்ளி கள் சிதிலமடைந்தும், பராமரிப்பின்றியும், கவனிப்பாரில்லாமலும் உள்ளன. இதனால் ஆலயங்களுக்கு வழிபடவும், உழவாரப்பணி செய்யவும் வரும் அடியார்கள், சந்நியாசிகள் தங்குவதற்கு இடமில்லாமல், கோவில் வளாகத்தின் வெளியே ஆங்காங்கே தங்கும் நிலை உள்ளது. இதை சீர்செய்து மீண்டும் மடப்பள்ளிகள் உருவாக்கவேண்டிய நிலை உள்ளது.
மேலும் சில மகாமுனிவர்கள் ஒவ்வொரு இடத்திலும் தோன்றி பல்லாண்டு காலமிருந்து மக்களுக்கு நல்ல நெறிகளை போதித்து மறைந்து விடுவார்கள். அதே முனிவர்கள் வேறொரு இடத்தில் மீண்டும் தோன்றி மக்களை நல்வழிபடுத்துவார்கள். இப்படி பல இடங்களில் தோன்றி மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து பலபோதனைகளைக் கற்றுகொடுத்து பல சீடர்களை உருவாக்கி விட்டு ஜீவசமாதி அடைந்துள்ளார் அனுகூல நாத மகாமுனிவர். இவர் கொல்லிமலைப் பகுதியில் அத்தியூர் என்னும் ஊரில்தோன்றி பல்லாண்டுகள் இருந்துவிட்டு பெரம்பலூர், துறையூர் செல்லும் சாலையில், களரம்பட்டி பகுதியில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இவர் மூலநட்சத்திரத்தில் தோன்றியதால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழிமாத மூல நட்சத்திரத்தில் குருமகாபூஜை, அபிஷே கம், தீபவழிபாடு, அன்னதானம் நடத்தப் பட்டுவருகிறது. வரும் மார்கழி மாதம் இவரது 351-ஆவது குருபூஜை நடைபெறவுள்ளது.
இப்படி 350 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அனுகூலநாதாரின் மகத்துவங்கள் பற்றி தெரிந்துகொள்ள, அவர் ஜீவசமாதி யடைந்த இடத்திற்குச் சென்று அவரது வழிதோன்றலாகத் தொடர்ந்துவரும் சீடர்கள் சிலரை சந்தித்தோம்.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வை யகம்' என்ற பெரும் நோக்குடன் தோன்றி, மக்கள் கர்மம், பக்தி, ஞானம் கொண்டு, தர்மங்கள் செய்து மோட்சத்தை அடையட் டும் என கருதிய மாமுனிவர்களுள் ஒருவரா கிய அனுகூல மாமுனிவர் கொல்லிமலை, சதுரகிரிமலை, பொதிகைமலை ஆகிய இடங்களில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து, அவரது அனுக்கிரகத்தால் ஆத்மஞானத்தையும் அஷ்டமா சித்தி களையும் பெற்றவர்.
பிறகு தனது சித்திகளின் மகிமையால் வனத்தில் வாழும் மிருகங் களையும் தன்வயப் படுத்தி ஏவல் செய்ய வைத்தவர். அதன் பின் நாட்டிலுள்ள மக்களையும் தங்கள் வயப்படுத்தி, அவர் களுக்கு ஞானமார்க்கத்தை உபதேசித்து பல சீடர்களை உருவாக்கி னார். பின்னர் துறையூர் பகுதியிலுள்ள சின்னமடத்தில் தங்கி பல அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்ததோடு, பரமானந்த தீபம், நந்திகேஸ்வர மாலை, அடிமைப்பற்று, பிராயச் சித்த நிறுபண கட்டளை ஆகிய நூல்களை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளார். அடுத்து பல வளங்கள் நிறைந்த காமாட்சிபுரம் பகுதியிலுள்ள ஐயாற்றங்கரை யில் தோன்றி, அங்குள்ள அடியார்களையும் அன்பர்களையும் நல்வழிபடுத்தி, இறுதி யில் தனக்கு ஜீவசமாதிக்குகை கட்டச் செய்தார். அதனுள்ளே இறங்கியவர், "சில ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வெளிப் படுவேன். இப்போது குகையைமூடி, குருபூஜை முதலியவற்றைச் செய்து நற்கதி அடையுங்கள்'' என்று கூறினார்.
அனுகூலநாதரின் அதிசயத்தைக் கேள்விப் பட்ட அப்பகுதி ஜமின்தார், பக்தர்கள் இவருக்கு அமைந்த ஜீவசமாதிமீது சிறிய அளவில் ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் செய்ததோடு, சிறப்பான முறையில் குருபூஜை உட்பட பல்வேறு வழிபாட்டு முறைகளை நடத்திவர ஏற்பாடு செய்தார்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு அனுகூல நாதர் தனது யோக மகிமையினால் வேறுடலை எடுத்துக் கொண்டு, அனுகூல மாமுனிவர் என்னும் பெயருடன் பெரம்ப லூர் பகுதியில் உள்ள (களரம்பட்டி) புரசங்காட் டில் கற்பக சமாதிநிலை யில் தோன்றியிருந்ததை அப்பகுதிமக்கள் கண்டனர். இதைக் கேள்வியுற்ற தஞ்சையை ஆண்ட சரபோஜி மகாராஜா பலமுறை அனுகூலநாதரை நேரில் வந்து தரிசித்து ஆசிர்வாதம் பெற்றதோடு, அனுகூலநாதரைப் பாதுகாத்தும் வந்தார். பிறகு அனுகூலநாதர் சமாதிநிலையைவிட்டு வெளியேவந்து, மயிலாடுதுறை பகுதியிலுள்ள சித்தர்காட்டில் தங்கி, அங்கிருந்த பல சித்தர்களுக்கு அற்புத சித்திகளைச் செய்துகாட்டி, பிறகு அங்கிருந்தும் மறைந்துபோனார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mamunivar2.jpg)
கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக் கிடையே ஓடும் வெள்ளாற்றங்கரையில் ஏழு (சப்த) துறைகள் உள்ளன. அவற்றுள் சு. ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரர், திருவதிஸ்டத்துறை எனும் திட்டக்குடி வைத்தியநாத ஈஸ்வரர் ஆலயங்களுக்கு இடையில் தென்கரையில் அமைந்துள்ளது அத்தியூர் அய்யனார் கோவில். அங்குள்ள வனப் பகுதியில் அனுகூலநாதர் சமாதிநிலையில் இருக்கக் கண்டனர். இந்த அற்புத ஞானச் சித்தரின் மகிமை நடுநாட்டுப் பகுதி முழுவதும் பரவியது. பலதரப்பு மக்கள் அவரை வந்து தரிசித்துச் சென்றனர். அவருக்கு குருபூஜை உட்பட சிறப்பான பூஜைகள் செய்தனர். இவ்வாறு பல ஆண்டுகள் ஆங்காங்கு வெளிப்பட்ட அனுகூலநா தர் பல அன்பர்களுக்கு ஞான உபதேசம் செய்தார். பிறகு அவருடன் இருந்த சீட அன்பர்களிடம், "இந்த உடல் மறையும் காலம் வந்துவிட்டது. வெகுவிரைவில் எமக்கு சமாதிக்குகை கட்டுங்கள்'' எனக் கூறி, அந்தக் குகையில் இருந்துகொண்டு சமாதியை மூடச்செய்தார். "ஓராண்டு வரை என்னை வந்து வழிபடுபவர்கள் தங்களது குறைகளைக் கூறி, வாழ்வதற் கான வழிமுறைகளை எம்மிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து நல்வாழ்வு வாழுங்கள்'' என்று கூறினார்.
அதன்படி அவர் ஓராண்டுவரை ஜீவசமாதியுள்ளே இருந்தபடி அருள்வாக்கு கூறினார். அதன்பிறகு அவர் கூறியபடியே ஓராண்டுக்குப்பிறகு சமாதியிலிருந்து அவர்குரல் வெளிப்படவில்லை.
அதன்பிறகு அவரது சீடர்கள் தஞ்சை சரபோஜி மன்னர் வழிவந்தவர்கள்மூலம், அந்தக்கால கட்டடக் கலைப்படி அவரது ஜீவசமாதியில் சிறிய ஆலயம் எழுப்பி வழிபாடு செய்துவருகிறார்கள். குருபூஜை, மகாபிஷேகம், தீபவழிபாடு, அன்னதானம் போன்றவை ஆண்டுதோறும் தவறாமல் செய்யப்பட்டுவருகிறது என்கிறார்கள் அவரது வழிதோன்றலில் வந்த- அனுகூல நாதரை வழிபாடு செய்துவரும் ஜெயராமன், திட்டக்குடி சங்கர், தர்மகர்த்தா ராமலி-ங்கம், திருவட்டத்துறை மகேஸ்வரன் ஆகியோர்.
இவர்களில் இளவயதுமுதல் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுகூலநாதாரின் ஜீவசமாதியை வழிபாடு செய்துவரும் மகேஸ்வரன், "சிறுவயதில் சென்னையில் உள்ள ஒரு மடத்தில் சேர்ந்து ஆன்மிகப் பணியில் ஈடுபட்டேன். அதன்பிறகு சொந்த ஊருக்கு வந்தபோது, எமது குரு அமிர்த-லிங்க சரஸ்வதி சுவாமிகள் அனுகூலநாதரின் ஜீவசமாதியில், அவரது சீடர்கள் வழியில் அங்கே வழிபாடு செய்துவந்தார். அவருக்கு சீடராகச்சென்று, அடியேனும் அனுகூலநாதரின் ஜீவசமாதி ஆலயத்தில் வழிபாட்டு முறைகளைச் செய்துவந்தேன். அப்போது ஒவ்வொரு குருபூஜையின்போதும் பெரிய கொப்பரையில் சோறுசமைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பல்வேறு மகாசித்திகளை அவர் ஜீவசமாதி அடைந்தபிறகும், அவரது சீடர்களுக்கும் அவரது வழித்தோன்றல் களான எங்களுக்கும் உணர்த்தியுள்ளார். வயது முதிர்வின்காரணமாக தற்போது திருவட்டதுறை அமிர்தலி-ங்கசாமியின் ஜீவசமாதியை வழிபாடு செய்துவருகிறேன்'' என்கிறார் மகேஸ்வரன்.
அனுகூல மாமுனிவரின் சீடர்களாக இருந்தவர்களில், ஒகுளூரில் பிறந்த வேலாயுத சாமிகள் அனுகூலரின் பெருமையை நன்குணர்ந்தவர். அடுத்து திரு வட்டதுறை அமிர்தலிங்க சரஸ்வதி சுவாமிகள், ராமசாமி, கிருஷ்ணசாமி என ஒன்பதுக் கும் மேற்பட்ட அனுகூலநாத ரின் சீடர்கள், அவரது ஜீவ சமாதியை வழிபாடு செய்து, இறுதிக்காலத்தில் மோட்ச நிலையை அடைந்ததும் அப்பகுதி யிலேயே அவர்களுக்கும் ஜீவ சமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இவரது ஜீவ சமாதியில் எழுப்பப்பட்டிருந்த கோவில் சிதிலமடைந்து காணப் பட்டது. அதை அவரது சீடர்வழி வந்தவர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு, பழைய கட்டடக் கலையைத் தழுவி புதிய கோவில் எழுப்பி 4-3-2018-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். தற்போது இங்கு வெள்ளிக்கிழமைதோறும் கோமாதா பூஜை, அன்னதானம், மாத மிருமுறை பிரதோஷ வழிபாடு, மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி, பௌர்ணமி பூஜை, மாதந்தோறும் மூலநட்சத்திர வழிபாடு, ஆண்டுதோறும் மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் மகாகுருபூஜை ஆகியவை சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. தற்போது இவ்வாலயத்திக்கு ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்கு தமது மகாசித்திகளை அனுகூலநாதர் ஒளிவடிவில் காட்டிவருகிறார்.
உதாரணத்திற்கு சில சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சீடர் ஜெய ராமன். "ஒருமுறை ஆலயத்தின் முகப்பில் அமர்ந்து எனது பேரகுழந்தையை மடியில் வைத்தபடி திருவாசகம் படித்துக்கொண்டி ருந்தேன். திடீரென்று குழந்தை அழ ஆரம்பித் தது. அதனால் எனது கவனம் படிப்பதிலிருந்து திரும்ப, எதிரில் பெரிய நாகம் படமெடுத்து எங்களையே உற்றுநோக்கிய வண்ணம் நீண்டநேரம் நின்றது. நான் படிப்பதைத் தொடர்ந்தேன். அப்போதும் நாகம் அங்கிருந்து நகரவில்லை. பேரக்குழந்தை அதைக் கண்டு பயந்து பெரும் குரலெடுத்து அழுதது. அப்போதும் நாகம் அப்படியே நின்றது. நான் அப்போது "அய்யா அனுகூல நாதரே, உங்களை இந்த உருவத்தில் தரிசிக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு வணங்கு கிறேன். மற்றவர்கள் கண்களில் தாங்கள் இந்த தோற்றத்தில் காட்சிகொடுத்தால் பக்தர்கள் பயப்படுவார்கள். பொதுமக்கள் மிரண்டுபோவார்கள். எனவே வேறுவடிவத்தில் காட்சி கொடுங்கள்' என்று தீபாராதனை காட்டி வணங்கினேன். அப் போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. படமெடுத்து நின்ற நாகம் அப்படியே ஒளிவடிவாக மின்னல்போல மேல்நோக்கிச் சென்றது!'' என்று மெய்சி-லிர்ப்போடு கூறினார். அதன்பிறகு கோவிலுக்குள்ளே வழிபாடு செய்யும்போது எனது உடலில் தலையில் ஒளிவடிவத்தில் காட்சிகொடுத்துள்ளார். இதை நான் அறியவில்லை. அருகிலிருந்த பக்தர்கள் அந்த காட்சியை செல்போனில் படமெடுத்துள்ளனர். கோவில் உள்ள பகுதியில் வெயில்படாத அளவுக்கு மேலே சிமென்ட் தளம் உள்ளது. ஆனால் உள்ளே இருக்கும் மனிதர்மீது அந்த ஒளிவட்டம் விழுந்தது அதிசயம்.
"இதேபோன்று கோவில் கோபுரத்திலிருந்து ஒரு ஒளிவீச்சு முகப்பில் இருந்த மகிழமரத்தில் வந்து விழுந்தது. அதைக்கண்டு மெய்சிலி-ர்த்த பக்தர்கள் செல்போன்மூலம் அதை 'ஸூம்'செய்து பார்த்தபோது, வெண்தாடியுடன் அனுகூலநாதரின் உருவமைப்பு தோன்றியுள்ளதைக் கண்டு மெய்சிலிர்த்துள்ளனர். தற்போது அந்த மகிழமரத்திற்கும் வழிபாடு செய்யப்படுகிறது. இதேபோன்று அவ்வப் போது ஒளிவடிவில் தோன்றி தம்மை வெளிப்படுத்தி வருகிறார் அனுகூலநாத மாமுனிவர்" என்கிறார் திட்டக்குடி சங்கர்.
இவரது ஜீவசமாதியில் மூலவராக சிவலிங்கத்தை வைத்துதான் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு முறை பிரதோஷத்தன்று தயிர் அபிஷேகம் செய்த போது சிவலிங்கத்திலிருந்து இருகண்கள் ஒளிவீசியுள்ளன.
அதேபோன்று ஆலயத் தின் முன்புறம் விசேஷ காலங்களில் சிறிய அளவில் யாகங்கள் நடத்தப்படும். அப்போது தீபஒளியில் சிவ பெருமான்- பார்வதி, வெண்தாடியுடன் அனுகூலநாதர் போன்ற உருவங்கள் ஒளிவடிவில் காட்சியாக தெரிந்துள்ளனர். இப்படி அனுகூலநாதரின் சித்திகளை அறிந்து பல்வேறு மக்களும் இங்குவந்து பக்தியுடன் வழிபட்டுச் செல்கிறார் கள். அதோடு திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை, நோய்நொடிகளால் அவதிப்படுபவர்கள் என பலதரப்பினரும் அனுகூலநாதரிடம் வந்து வேண்டி காரியசித்தி அடைந்துள்ளனர்.
ஜாதகரீதியாக சில குறைபாடுள்ளவர்கள் சிவனடியார்களின் ஜீவசமாதிகளைத் தேடிச்சென்று வழிபடுவதன்மூலம் தோஷங் கள் நீங்கும். காரியசித்தி அடைவார்கள். அது போல அனுகூலநாதரின் ஜீவசமாதியை நாடி பல்வேறு பகுதிகளி-லிருந்து வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
இப்படிப்பட்ட அனுகூலநாதர் ஜீவசமாதி அமையப்பெற்றுள்ள இடம் அத்தியூர். பண்டைய தமிழ் அகராதிப்படி அத்தியூர் என்பதற்கு அதிசயம் நிகழ்ந்த இடம் என்றும், அத்தி- ஆன்மிகம் என்றும், அத்திர சத்திரம், அத்தியின் மரவகை (அத்திமரக்காடுகள் நிறைந்த பகுதி), அத்தியிலைஎன்றும் இப்படி பல்வேறு பெயர் களில் குறிப்பிடப்பட் டுள்ளது. வெள்ளாற்றின் தென்கரையில், ஊருக்கு மேற்கே அய்யனார் கோவிலுக்குப் பின்புறம், அழகிய பசுமைநிறைந்த சோலைப் பகுதியில் அனுகூல நாதரின் அமைதி தவழும் ஜீவசமாதி அமைந்துள்ளது. அமைதியை விரும்பும் பக்த அன்பர்கள் இங்குவந்தபிறகு அங்கிருந்து மீண்டும் தங்கள் இருப்பிடம் செல்ல மனம் வராத அளவில் அனுகூலநாதர் அவர்களை தன்வயப்படுத்திக்கொள்கிறார்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில், தொழுதூர் அருகிலுள்ள திருமாந்துறை சுங்கச் சாவடியி-லிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவிலும், திட்டக்குடியிலிருந்து தென்மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது அத்தியூர் அனுகூல நாதரின் ஜீவசமாதி. அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. தொடர்புக்கு: அலை பேசி: 99442 31659, 70947 81805.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/mamunivar_t.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mamunivar1.jpg)