லக செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம், தமிழக அரசு இணைந்து நடத்தும் செஸ் விளையாட்டின் மிகப்பெரிய போட்டியான 44-வது செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரானது, செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு ஒரு ஒலிம்பிக் திருவிழா போன்று இருந்து வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92.13 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.9 கோடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம் மற்றும் நிறைவு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வண்ண விளக்குகளால் ஓளிரூட்டப்பட்ட 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை (Logo) மற்றும் “தம்பி” என்கிற சின்னத்தினையும் (Mascot) அறிமுகப்படுத்தினார்.

ss

Advertisment

இந்தியாவின் 'பி' அணி சார்பாக களமிறங்கும் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார். இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட்க்கு கவுரவம் அளிக்கும் விதமாக மத்திய அரசு அதன் தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதில் வெள்ளை நிற வேட்டி, சட்டையில் குதிரை இருப்பது போன்ற லோகோ இந்த தபால் தலையில் இடம்பெற்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தர வரிசையை சர்வதேச செஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அசர்பெய்ஜான் 2-வது இடத்தில் இருக்கிறது. போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு 3-வது தரவரிசை அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் செஸ் ஒலிம்பியாட்டில் ரஷியா, சீனா அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த இரு நாடுகளும் இந்த போட்டியில் விளையாடவில்லை. உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா போட்டியில் இருந்து விலகி உள்ளது.

ஒலிம்பியாட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சென்னை போட்டியில் தான் 188 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 5 வீரர், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவாக வருகை தருவார்கள். இதில் இந்தியா தொகுத்து நடத்தும் நாடு என்பதால் 2 குழுக்கள் பங்கு பெறும்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா ஏற்கனவே இரண்டு அணிகளை அறிவித்து இருந்தது. தற்போது 3-வது இந்திய அணியும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 அணிகளில் 5 தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது.

அங்கு ஆட்டங்கள் நடைபெறவுள்ள அரங்கு 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக முதன்முறையாக மிகப் பெரிய இரு அரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 1,400 பேர் விளையாடக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே தற்போது தான் மிகப்பெரிய அரங்கில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஹால் 1-இல் 60 ஆடவர், மகளிர் ஆட்டங்கள், ஹால் 2-இல் 65 ஆட்டங்கள் நடைபெறும்.

நாள்தோறும் பிற்பகல் 3 முதல் இரவு 8 வரை ஸ்விஸ் முறையில் 11 சுற்றுக்கள் நடைபெறும்.

போட்டிக்காக மொத்தம் 205 டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப் படவுள்ளன.

போட்டியாளர்கள் இந்த போர்டில் ஆடும்போது அவர்களின் நகர்வுகளை அப்படியே திரையிலும் நேரடியாக நாம் காணலாம்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக் கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்த டீசரில் சென்னை மெரினா நேப்பியார் பாலம் செஸ் போர்டு வண்ணமான கருப்பு, வெள்ளையில் மாற்றப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான "வெல்கம் டு சென்னை” பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் பாடலில் முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான்களும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ் நம்ம பெருமை” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.