அது வித்தியாசமான உணர்வு. உலகத்து மொழிகள் எதுவானாலும்- அதன் வார்த்தைகளுக்குள் அடக்கி விடமுடியாத உணர்வு. ஆயிரம் ஆயிரம் காப்பியங்களும், கவிதைகளும், கதாபாத்திரங்களும் சொல்லியிருந்தாலும், ஒவ்வொருவரும் அனுபவிக்கும்போது- அது ஏற்கெனவே சொல்லப்பட்ட வார்த்தைகளின் போதாமையைச் சொல்லும். முன்கூறப்பட்ட எதனோடும் ஒப்பீடு செய்யமுடியாமல்- தனித்த உணர்வாக, தனிப்பட்ட உணர்வாக, தனித்துவமான உணர்வாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். அல்லது அதன் தனித்துவம்.
இந்த உணர்வு அனாதியானது. பிரபஞ்சத்தின் ஆதிப்பழமையானது. நித்தமும் புதுமையானது. இந்த உணர்வு எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் அவரவர் அனுபவிக்கும்போது அவர்கள் இல்லாமல் போயிருப்பார்கள். இன்மை ஆகியிருப்பார்கள்.
அவர்களின் இன்மையை அவர்கள் உணரமாட்டார்கள். சுற்றியிருக்கும் உறவுகளும். அன்பர்களும் நண்பர்களும் தான் அந்த உணர்வின் ஆழத்தில் ஆழ்ந்து போவார்கள். இது ஒரு வித்தியாசமான சூழல். இது ஒரு மர்மமான சூழல். ஜனனம், பிறப்பு- மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருவது. நிறைவும் நெகிழ்ச்சியும் தருவது. புல்லரிப்பும் புளகாங்கிதமும் தருவது. ஆனால் மரணம், இறப்பு- வலியும் வேதனையும் தருவது. சோகமும், துக்கமும் தருவது. சறுக்கலும் வழுக்கலும் தருவது.
மரணித்தவர்களுக்கு வலி இல்லை. மரணத்தைப் பார்த்தும்- உயிரோடிருப்பவர்களுகே அத்தனை வலியும். அவர்கள் சென்று விடுகிறார்கள். அவர்களின் நினைவு சுமந்து இங்கே இருப்பவர்கள் அனுபவிப்பது மரணத்தை விடவும் கொடுமையான வலி. நரகத்தை விடவும நரகச் சூழலை உயிரோடு அனுபவிக்கும் வாதை- வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
மரணம்- மனித உயிர்க்கான மரணம் மட்டுமல்ல. எந்தவொரு உயிரிக்கான மரணமும் வேதனையின் உச்சம்தான். அதன் அர்த்தமும், அனர்த்தமும் புரியாத குழந்தைமையிலும்கூட மரணத்தைக் கடந்து போவது எளிதன்று. கவிஞர் குழலி "நாயொன்று இறந்தது குறித்த கதை'' என்னும் கவிதையில் ஏதுமே அறியாத சிறு குழந்தை யின் மனவோட்டம் என்னவாக இருக்கிறது என விரித்துச் சொல்கிறார். தானும், நாயும் ஒத்த உணர்வுடைய நெருங்கிய தோழமையாளர்கள் என்பதாக அந்தக் குழந்தை உணர்கிறது. சிலாகிக்கிறது. சிலிர்க்கிறது. சிரிக்கிறது. அந்தக் குழந்தையின் அம்மா கையறு நிலையில் இருக்கிறாள். நாயின் மரணம் குறித்துக் குழந்தையிடம் கூறும் வார்த்தைகள்- அம்மாவின் கைவசம் இல்லை. அப்படியான வார்த்தைகளைக் கோர்த்துச் சொல்லுவதற்கான திராணியும் அம்மா விடம் இல்லை.
இறத்தல் என்பது ஏதென்று தெரியாமலே
நாயொன்று இறந்தது குறித்துக்கதை
சொல்லத் தொடங்குகிறாள் குழந்தை
இதற்குமுன் இறந்துபோகாத அந்த நாயும்
அதன் எஜமானியும்
உலவித் திரிகின்றனர் வீதியெங்கும்
கண்களை அகல விரித்துக்கதை சொல்லும்
குழந்தை திடீரெனக் குடை பிடிக்கிறாள்
மழை எனக் கூறி
தன்னை போலவே நாய்க்கும்
மழை பிடிக்கும் எனவும்
அது மழையில் நடப்பதாகவும் தொடர்கிறாள்
நெடுநேரமாக நடப்பதைப் பற்றிக்
கதை சொல்லியபடி இருந்தவள்
எழுந்து நிற்கிறாள்- நாய் பாலம்
ஒன்றைக் கடப்பதாக
நாய் இறந்தது குறித்துச்
சொல்லாமலே தூங்கிப் போயிருந்தாள்
குழந்தை
-இப்படியாகக் குழந்தை மனவோட்டம் குறித்த வெளிப்பாடு புலப்படுத்தும் சேதி ஒன்றுதான். மரணித்தாலும் மரணிக்காவிட்டாலும்- நாய் என்பது குழந்தைக்கான உயிரிதான். நாயுடன் தன்னைப் பொருத்திப் பார்க்கும் குழந்தையின் குழந்தைமைக்கு முன்னால் மரணம் தோற்று நிற்கிறது. எல்லாரையும் வென்றுவிடும் ஆகிருதியும், வல்லமையும் எனக்கு உண்டு என்கிற ஆணவத்தோடு களமாடும் மரணம். தலையைத் தொங்கப் போட்டுத் தோற்றோடும் களமாகிறது இந்தக் கவிதை.
பெரியவர்களின் வலி குறித்து சுஜா செல்லப்பன் சொல்லுவது நாம் அனைவருமே அனுபவித்த உணர்வாகவே இருக்கும். "துக்கம் புகுந்த வீடு' என்னும் கவிதையின் நலமும் அவலமும் நம்முள் ரணத்தை உண்டாக்குகின்றன. இந்த ரணம் ஆறாத ரணம். எப்போதும் குருதி கசியும் பச்சைப்புண்.
சாவு வீட்டுக்கென்றே சில இலக்கணங்கள் இருக்கின்றன அவசரம் அவசரமாக அந்த வீடு முழுக்க எல்லா இடங்களிலும் துக்கம் தெளிக்கப்படுகிறது
வெடித்துக் கதறி அழுவதெல்லாம்
நாகரிகத்தால் கட்டுப்படுத்தப்பட்டு
அடைத்து வைக்கப்பட்ட உணர்வுகளின்
நிசப்த வலி சுமந்திருக்கும்
சடங்குகளின் கைதிகள் ஒரு பக்கம்
அரவம் கேட்டதும் பறந்து செல்லும்
பறவையாய்த்
தங்களின் மரணபயத்தை
விரட்டும் முயற்சியில்
இதுவரை அறிந்த அத்தனை
மரணங்களைப் பற்றிய
சிலரின் அலசல்கள் ஒரு பக்கம்.
ஆங்காங்கே
சிரிப்பைத் துடைத்த முகங்களும்
மூக்கை உறிஞ்சும் சப்தங்களுமாக
சாவு வீட்டுச் சம்பிரதாய
அலங்காரங்கள்
செய்யப்பட்டு விட்டன
ஓடி விளையாடிய குழந்தைகளை
அடுத்த வீட்டுக்கு அனுப்பியாகி விட்டது
துக்கச் சூழலைக் கட்டிக்காக்க
அதிகப்படியான அழுத்தங்கள்
பதித்த முகங்களுடன்
அமைதியாக வருவதும்
சொல்லாமல் போவதுமாக
ஒரு மௌன வருகைப் பதிவேற்றமும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
பசியாறுவதும் படுத்துறங்குவதும் கூடப்
பதுங்கிப் பதுங்கித்தான் நடக்கின்றன
மெல்லிய அடிநாதமாக
இழையோடிக் கொண்டிருக்கும்
மரணம் மட்டுமே
அங்கே இயல்பானதாக இருக்கிறது
இந்தக் கவிதை அனாயாசமாகச் சொல்லும் பேருண்மை ஒன்றுதான். மரணம் மட்டுமே நிரந்தரம். மரணம் மட்டுமே இயல்பு.
பிற எல்லாமே தற்காலிகம்தான். பிற எல்லாமே ஒத்திகை மட்டும்தான். இந்தப் பிரபஞ்சம் முழுக்க மரணம் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது. பிற உயிரிகள் எல்லாமே மின்னல் போலக் குறுகிய இருப்போடுதான் இருக்கின்றன. ஆனால் நாம் நினைப்பது என்ன? நாமே சாசுவதம். பிற எல்லாமே அநித்தியம் என்பதே.
மரணம்- இங்கே நிற்கிறது.
அங்கே நிற்கிறது. பின்னே நிற்கிறது. முன்னே நிற்கிறது. தோளைத் தட்டுகிறது. முகத்துக்கு நேரே நடக்கிறது. கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கடக்கிறது. கைகள் உரச இடிக்கிறது. ஆனாலும் ஏதுமே அறியாத அப்பாவி போலவே நடிக்கிறது. எல்லாப் பொழுதும் எல்லா உயிரியையும் மரணம் தொட்டுத் தொடர்கிறது. எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து இழுத்துச் சென்றுவிடக் கூடிய வானளாவிய சர்வாதிகார உரிமை மரணத்துக்கு மட்டுமே சாசுவதமாக, சாத்தியமாக இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் ஆகப் பெரும் முரண்.
இயல்புச் சூழல் தவிர்த்து போர்ச் சூழல் மரணங்கள் தரும் வலியும் வேதனையும் சொல்லொணாத் தவிப்பைத் தருவன.
ஈழத்துக் கவிஞர் சிவரமணி தத்ரூபமான உளவியலைப் பதிவு செய்கிறார்.
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து
நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது
யுத்த கால இரவுகளின்- மரண
நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
வளர்ந்தவர்கள் ஆயினர்
மரணம் சூழலிலேயே வளரு
கின்ற குழந்தைகளின் உளப்பாதிப்பு என்பதற்கான தீர்வு எந்த அறிவியலும் தரமுடியாது. எந்த மருந்தும் தரமுடியாது. எந்த மருத்துவரும் தரமுடியாது. போர் மரணங்கள் நிறுத்தப்படுவது. இல்லாமல் தடுப்பதுமே ஒற்றைத் தீர்வாக இருக்கமுடியும். போர் இல்லாத உலகமே- மரணபயம் இல்லாத உலகமாக முடியும் என்பதைப் பெண் அன்றி வேறு யாரால் உரக்கச் சொல்லமுடியும்?
யாரையும் தப்பிக்கவிடாத, யாராலும் தப்பிக்கமுடியாத மாயவலை மரணம். அதன் அரூப இருப்பு பிரபஞ்சமெங்கும் வியாபித் திருக்கிறது. மாயம் செய்யலாம். மந்திரம் செய்யலாம். கண்ணாமூச்சி ஆட்டம் செய்யலாம். கண்கட்டு வித்தை செய்யலாம். ஒளிந்து கொண்டு வரமுடியாத என்று முரண்டு பிடிக்கலாம். கட்டுக் காவலோடு இரும்புக் கோட்டைக் குள் இருக்கலாம். கடலுக்குள் ளிருக்கும் பாசிப்பாறைக்கு அடியில் பதுங்கிக் கொள்ளலாம். பலன் ஏதுமில்லை. எந்த இடத்துக்கும். எந்த நேரத்திலும், மிகத் துல்லியமாக வந்து நிற்கும் வல்லமை பெற்ற அரக்கனே மரணம்.
அதன் கவிச்சி சூழ்ந்த விடியல்கள், பகல்கள், மாலைகள், இரவுகள், நடுநிசிகள், மின்னிரவுப் பொழுது கள் என ஒரு நாளின் இருபத்துநாலு மணிநேரமும் அது தனது ஆக்டோபஸ் கரங்களைப் பின்னிப் பிணைத்திருக்கிறது.
நீ மன்னிப்பு கேட்டாய்
நீ கண்ணீர் விட்டு அழுதாய்
நீ காலில் விழுந்தாய்
நீ கைகூப்பி மன்றாடினாய்
நடித்தாய் எனத் தெரியாமல்
மன்னித்தேன்
முதுகில் குத்தினாய்
துரோகம் செய்தாய்
சரி பரவாயில்லையோ
என்னை ஏமாற்றலாம்
எப்படி ஏமாற்றுவாய் தோழா
உன் மரணப் படுக்கையை
இந்தக் கவிதை கேட்கும் கேள்விக்கு, உலகத்தின் எந்த மூலையிலும் பதிலே கிடையாது.
அதனால்தான் சில்வியா பிளாத் சொல்கிறார் "மரணம் ஒரு கலை. பிற கலைகளைப்போலவே. நான் அதை அதிமேன்மையுடன் செய்கிறேன். ஒரு கவி உள்ளம்தான் மரணத்தின் செயல்பாட்டைக் கலை என்று சிலாகிக்க முடியும். கல்லறைமீது பூக்கின்ற பூக்களைக் கொண்டாடமுடியும்.
வாழ்க்கையில் ஒத்திகை இல்லாத ஒரு காட்சியாக வருகின்ற மரணத்துக்காக யாருமே மெனக்கெடத் தேவையில்லை. ஆனாலும் கவிஞர் பெருந்தேவி மரண ஒத்திகை செய்து பார்க்கும் இந்தக் கவிதை ஒரு பேரவலத்தின் உச்சம்.
இந்த அறைக்குள்ளேயே நடந்துகொண்டிருக்கிறேன்
சில நாட்களாக
கதவு சுவராகிவிட்டது
அறைக்கு வெளியே வீடிருக்கிறதா?
வெளியே நகரம் இருக்கிறதா?
கடல் அலை இன்னும் வீசுகிறதா?
இந்தச் சில நாட்களுக்குள்
சில ஆயிரம் பேராவது
இறந்திருக்கக் கூடும்
விபத்து கொலை புற்றுநோய் மாரடைப்பு
எல்லாரும் என்ன ஆனார்கள்
பிணங்கள் என்னாயின
அறைக்குள் என் நடையின்
வேகம் கூடியிருக்கிறது
ஒரு பூச்சி போலக்
கீழே விழுகிறேன்
செத்துப் பார்க்கிறேன்
என் பிணத்துக்கு
என்ன ஆகுமென
இப்போது தெரிந்தாக வேண்டும்
செல்வம் இருக்கலாம். சோறு இருக்கலாம். பட்டாடை இருக்கலாம். வாசனா திரவியங்கள் இருக்கலாம். புகழும், வெற்றிகளும் இருக்கலாம். இவை எல்லாமே அர்த்தத்தோடும், புளகாங்கிதத்தோடும் இருக்க வேண்டுமெனில் நம் மக்கள் புடை சூழ நாம் இருக்கவேண்டும். நம் மக்கள், சுற்றம், உறவு, மனசுக்கு நெருக்கமானவர்களை மரணம் அபகரித்துச் சென்ற பின்- இந்தப் புறக்காரணிகள் தங்களின் மேன்மை இழக்கின்றன. தங்களின் முக்கியத்துவம் இழக்கின்றன. மரணம் கற்றுத்தரும் ஒற்றை ஞானம் இதுதான்.
கவிஞர் தமிழச்சி "எஞ்சோட்டுப் பெண்' தொகுப்பில் ஆவலாதி சொல்கிறார்
எப்பொழுதும் போலவே
இந்தக் கோடையிலும்
எனக்காகக் காத்திருக்கும்
எல்லாமும் இருக்கின்றன
என் பிறந்த ஊரில்
ஒரு மாலை நேரத்து மாரடைப்பில்
பாராமல் எனைப் பிரிந்த
என் அப்பாவைத் தவிர
இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பான ஓர் ஓலம் இப்போதும் கண்ணீரின் பிசுபிசுப்பும் ஈரமும் சோகத்தின் சுமையுமாக இருக்கும் குரலாக பாரிமகளிர் குரல் கேட்கிறது.
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும்
பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று எறி முரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார்
யாம் எந்தையும் இலமே
நிலம் பறிபோன துக்கத்தினும் பெரும் துக்கம் தங்களைத் தாங்கும் நிலமாக இருந்த தந்தையை இழந்ததுதான். குன்றாக அரவணைத்து அன்பு செய்த தந்தையை இழந்ததுதான்.
எத்தனை குன்றும், எத்தனை நீளமான நிலப்பரப்பும் எத்தனை செல்வமும் ஒன்று சேர்த்து அள்ளி வைத்தாலும்- ஒற்றை உறவுக்கு ஈடாகாது. மரணம் வீட்டின் வாசலில் வந்து நின்று உயிருக்கு உயிரான உயிர்களைத் திருடிச் செல்லும்போது அபகரித்துச் செல்லும்போது ஏற்படும் கையறு நிலையை மரணம் தனது சனாதன வெற்றியாகக் கெக்கலிக்கிறது. இறையும்கூடத் தனது சர்வ வல்லமையை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்து ஒதுங்கி நிற்கும் ஒற்றைக் களம் மரணம் மட்டுமே.
கணவனை இழந்த பெண்கள் இழப்பது உறவு மட்டுமல்ல. ஒப்பனை இழப்பு, உணவு இழப்பு, வாழ்வியல் வசதிகள் இழப்பு என்ற கொடுமைக்கு ஆளாயினர் எனச் சங்க இலக்கியம் கூறுகிறது. இழை, வளை, தொடிகளையப் பட்டு, சுவை உணவுகள் மறுக்கப்பட்டு, கூந்தல் களையப்பட்டு, மலர் நீக்கம் செய்யப்பட்டு இருட்டுப் பள்ளத்தாக்கில் அடைக்கப்பட்ட கொடுமையை சங்கப் பாடல்கள் சொல்கின்றன. மரணத்தின் துர்நாற்றம் தாங்க இயலாதது. அதை வென்று தனது சுகந்தத்தைக் காற்றின் திசையெங்கும் தூவுகின்றன பூக்கள். மரணத்தின் கருமையை அழிப்பதற்காகவே வெளிச்சம் கொண்டு வருகிறது. தினசரி விடியல். சோகத்தின் பரப்பளவைக் குறைப்பதற்காகவே தனது பரப்பளவை விரித்துக் காட்டுகிறது வானம். ஆனாலும் மரணமும் மரணம் சார்ந்த இடமும் என்றே இருக்கும் பூமி- அதைப் புறந் தள்ளி உயிர்த்துக் கொண்டே இருக்கிறது.
-இன்னும் பெய்யும்...