டிகர் விவேக் அவர்களின் திடீர் மறைவு தாங்க முடியாத பெருந்துயர். இவ்வளவு விரைவாக சடாரென்று நாடக மேடையில் தோன்றி மறையும் காட்சியைப் போல மறைவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

இதய வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றுதான் எண்ணற்ற அவரது ரசிகர்களை போல நானும் நம்பினேன்.

ஆனால் நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு இந்த வாழ்வை விட்டு விடைபெற்றுவிட்டார். ஏப்ரல்18 ஆம் தேதி, காலை நம் இதயங்களை உடைத்தது போல 'நடிகர் விவேக் காலமானார்' என்ற செய்தி.

நேற்று சார்லி சாப்ளின் பிறந்த தினம். இன்று விவேக் மறைவு.

Advertisment

தன் மகன் இறந்த துக்கத்திலேயே நொறுங்கி போயிருந்தார் விவேக்.

தாங்கிக் கொள்ள முடிகிற சோகமா அது? ஏன் நகைச்சுவை நடிகர்களுக்கு இப்படியான விதியை இயற்கை எழுதுகிறது என்பது புரியாத பெரும் புதிர்.

ஆனாலும் அதிலிருந்து விடுபட்டு பொது வாழ்வில், நிகழ்ச்சிகளில், திரைப்படப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். காலம் அவரது காயத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறது நாம் என்று நம்புகிற வேளையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இதயம் நின்று விட்டது.

Advertisment

விவேக் -

ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல; பொறுப்புமிக்க கலைஞர், தேர்ந்த படிப்பாளி, தினந்தோறும் சிந்திக்கும் சிந்தனையாளர்.

நகைச்சுவையால் நம் உள்ளங்களை ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆண்டார்.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'ளனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

முதல் படத்தில் நடிப்பு ஆசை காரணமாக குடும்பப் பொறுப்பு சிறிதும் இல்லாத வேடத்தில் நடித்த அவர் பின்னாட்களில் அவருக்கு கிடைத்த பாத்திரங்களில் எல்லாம் நகைச்சுவையின் ஊடாக சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களை நுழைக்கத் தொடங்கினார்.

2000ம் ஆண்டு அவருக்கு ஒரு பொற்காலம். அவரது பயணத்தில் உச்சம் தொட்ட காலம் என்றே சொல்லலாம். வெளிவந்த பெரும்பாலான படங்களில் அவர் இருந்தார் . திருநெல்வேலி, ரன், தூள், சாமி, படிக்காதவன்.... என்று வரிசையாக அவர் நடித்த படங்கள் அவரது காட்சிகளுக்காகவும் பாராட்டும் வெற்றியும் பெற்றன. தொடர்ந்து ஏராளமான படங்கள்.

அவர் நடித்த அனைத்தும் கருத்துள்ள நகைச்சுவைகள் . மூட நம்பிக்கைக்கு எதிரான சிரிப்பு வெடிகள். சிந்தனைச் சாவிகள்.

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய காட்சிகளில் வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் எல்லாம் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, லஞ்சத்துக்கு எதிரான குரல், சுற்றுச்சூழல் குறித்த கவனம் இவற்றையெல்லாம் நகைச்சுவையோடு பதியம் போட்டு வளர்த்தார்.

நகைச்சுவை நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. வடிவேலு உடல் மொழியால் நகைச்சுவையை உருவாக் கினார் என்றால் மொழியால் நகைச்சுவையை உருவாக்கியவர் விவேக் என்று சொல்லலாம். அந்த மொழி மூலம் தன் கிண்டல் தொனியால் வெடிச்சிரிப்பை வரவழைத்தார்.

"எனக்கு கமிஷனர தெரியும்... ஆனா கமிஷனருக்கு தான் எனக்கு தெரியாது "

"லாரில 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு.... அதுல ஓடாத லாரி இந்த எலுமிச்சம் பழத்திலயாடா ஓடப் போவுதா?"

"டேக் டைவர்ஷன்... டேக் டைவர்ஷன்.. ன்னு சொல்லி திருப்பதிக்கே கொண்டு வந்து விட்டீங்களேடா..."

" எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா"

போன்ற வசனங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை.

"எட்டு போட்டுக் காட்டுனும் அவ்வளவுதானே... வண்டில ஏறி உட்காரும் ஓய் ... போட்டுக் காட்டுகிறேன்" என லஞ்சம் கேட்கும் போக்குவரத்து அதிகாரியை வண்டியில் உட்கார வைத்து தலை தெறிக்க விடுவது நகைச்சுவையின் உச்சகட்டம்.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், நடிக வேள் எம் ஆர் ராதா, நாகேஷ் போன்ற முன்னோடிகளின் சிறப்பம்சங்களைப் பயின்று அவற்றின் கலவையாக தன்னை உருவாக்கிக் கொண்டார்.

கலைவானரிடம் இருந்த பகுத்தறிவு கருத்து கலந்த நகைச்சுவையின் தொடர்ச்சியாக விவேக் அமைந்தார்.

அதனால்தான் கலைஞர் அவருக்குச் 'சின்னக் கலைவாணர்' என்ற படத்தை வழங்கினார். 'ஜனங்களின் கலைஞன்' என்றும் விவேக் கொண்டாடப்பட்டார்.

மைய அரசு வழங்கும் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

மாநில அரசு விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என்று வரிசையாக அவருக்கு விருதுகளும் புகழும் சேர்ந்து கொண்டே இருந்தன.

உடல் மொழியால் நகைச்சுவையை உருவாக்குவதில் தானும் சளைத்தவன் அல்ல என்பதை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை 'படிக்காதவன்' திரைப்படத்தில் தனுஷோடு சேர்ந்து செய்திருப்பார். 'அசால்ட் ஆறுமுகம்' என்ற அந்த ரவுடி கதாபாத்திரத்தின் உடல் மொழி நினைக்கும் போதெல் லாம் சிரிப்பை வரவழைக்கும்.

நகைச்சுவை என்பது மன இறுக்கங் களைத் தளர்த்தும் உளவியல் மருத்துவ மாகும். நகைச்சுவை கடினப்பட்டு கிடக்கிற மனங்களை இலகுவாக்குகிறது . ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் படத்தின் இறுக் கத்தையும் கொஞ்சம் தளர்த்தி திரைப் படம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே பார்வையாளர்களுக்கு மூச்சு விட்டுக் கொள்ளும் ஒரு சின்ன இடை வேளையை வழங்குகிறது.

vv

விவேக்கின் பங்களிப்பு வியாபார வெற்றிக்கு அவசியமாக இருந்ததால் இரண்டாயி ரத்தின் முதல் பத்தாண்டுகளில் வெளிவந்த பெரும் பான்மையான படங்களில் இடம்பெற்றார். நாயகனாகவும் சில படங்கள் நடித்தார். இயக்குனர் லிங்குசாமியின் 'ரன்' படத்தில் விவேக்கின் நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது. அதை ஒட்டி நான் இயக்க இருந்த 'தித்திக்குதே' திரைப்படத்தில் விவேக் இடம்பெற வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம்.

இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக அணுகினேன். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி அவர்களது மகன் ஜீவா நடிக்கிறார் என்றவுடன் மகிழ்வோடு ஒத்துக்கொண்டார். கதையைக் கேட்டார். எங்கெங்கே நகைச்சுவை காட்சிகளில் உண்டாக்கலாம் என்பதை ஒன் லைன் வைத்துக் கொண்டு இருவரும் விவாதித் தோம். அவரது டிராக் ஆறு காட்சிகள் இடம்பெறலாம் என்றும், கதையோட்டத்தில் நாயகனோடு சேர்ந்து வரும் காட்சிகளில் சில வசனங்கள் இடம் பெறலாம் என்றும் முடிவாயிற்று. 'தித்திக்குதே' சிறிய பட்ஜெட் படம் என்ப தால் அவர் வெளியில் பெற்று வந்த பெரும் சம்பளத்திலிருந்து ஓரளவு குறைத்துக் கொண்டு சம்பளம் பெற்றுக் கொண்டார்.

அப்போது நான் வசனம் எழுதி லிங்குசாமி இயக்கிய 'ஆனந்தம்' திரைப்படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றிருந்தது.

ஆகவே வசனத்தை நான் எழுதுகிறேன் என்றேன். படம் முழுக்க நீங்கள் எழுதிக் கொள்ளுங் கள். நகைச்சுவை காட்சிகளுக்கு மட்டும் பிரசன்ன குமார் இருக்கட்டும் என்று கூறினார். அப்படியே பிரசன்னகுமார் நகைச்சுவை காட்சிகளுக்கு எழுதி னார். உண்மையில் அந்த நகைச்சுவை காட்சிகளுக்கு எழுதிய வசனங்கள் அருமையாக இருந்தன.

பெரும்பாலும் புதுமுகங்களே நடித்த படத்தில் நாசர் மற்றும், விவேக் ஆகிய இருவர் மட்டுமே அனுபவமிக்க தொழில்முறை நடிகர்கள். மற்ற நடிகர்கள் புதுமுகமாக இருந்ததால் எனக்கு இயக்கம் எளிதாக இருந்தது. விவேக் அவர்களிடம் காட்சியை சொல்லிவிட்டு என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடமே விட்டுவிடுவேன். தன் காட்சிகளை ஜீவாவோடு ஒன்றுக்கு இரண்டு முறை ரிகர்சல் செய்து நடித்தார். ஜீவாவுக்கு நகைச்சுவை காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதன் சூட்சுமம் அப்போது கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

படப்பிடிப்பில் திடீரென்று ஒருநாள் விவேக் யாரையோ கோபமாக திட்டிக் கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பிற்கு எப்போது வரவேண்டும் என்பதைச் யாரும் அவரிடம் சொல்லவில்லை. அவரது ஒவ்வொரு மணித்துளியும் மதிப்புமிக்கதாக இருந்தால் அந்த நேரத்தில் வேறொரு படத்தின் ஒரு காட்சியில் நடித்து முடித்திருக்கக்கூடும். அதனால் வந்த கோபம் அது.

அங்கிருந்த அமைதியான சூழ்நிலை திடீரென்று அமிலம் ஊற்றியதைப் போல் ஆயிற்று. சிறிது நேரம் கழித்து விவேக்கிடம் போய் "சார்... இது என்னுடைய முதல் படம். என்னதான் இணை டைரக்டராக நான் பணிபுரிந்து அனுபவம் பெற்றிருந்தாலும் இயக்குனராக நான் ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் யோசித்து யோசித்துதான் எடுக்கிறேன். ஆகவே இங்கு சூழ்நிலை அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும். உங்கள் கோபம் என்னையும் பதட்டப்படுத்துகிறது," என்று கூறினேன். அவர் என்னை கட்டிப் பிடித்து, "இதெல்லாம் ஒன்னுமில்லை பிருந்தா... இந்த மாதிரி எவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஏன் பக்கத்துல ஒரு பாம் வெடிச்சா கூட அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் இயக்கப் பழக வேண்டும்" என்றார். பின்னர் செட்டுக்கு வந்தால் அவரது கோபத்தைக் கூட தணிவான குரலில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

'தித்திக்குதே' திரைப்படத்தில் 'பஞ்ச் பாலா' என்ற கதாபாத்திரம்தான் அவருடையது.

ஒரு பெரும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து திரைப்படத் துறையில் புகழ் பெற வேண்டும் என்று முயற்சி செய்யும் கேரக்டர். பஞ்ச் டயலாக் பேசி பாப்புலராக வேண்டும் என்று விதவிதமான பஞ்ச் டயலாக் பேசி நடித்துக் காட்டுவார். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடிகர்கள் பஞ்ச் டயலாக் பேசினால் அதை மக்கள் ரசித்துக் கை தட்டுவார் கள். ஆனால் நடிக்க வரும் முதல் படத்திலேயே பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பஞ்ச் பாலா நடிக்க வரும் முன்பே அப்படி இருப்பவன்.

பலரது நினைவுகளில் நிலைத்திருக்கும் பாத்திரம். தொலைக்காட்சிகளின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அக் காட்சிகளும் அவரது கருத்துள்ள நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டுகள்.

'பஞ்சம் பாலா' வின் அலப்பறைகள் பல காட்சிகளில் திரையரங்கை அதிர வைத்தன. நடிப்பதற்காக வாய்ப்பு கேட்கப் போய் தயாரிப்பாளர் முன் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் காட்டும் ஆரம்பக் காட்சியே அதகளப்படுத்தினார்.

"கடமையைச் செய்... பலனை எதிர்பார்க்காதே" இது கீதையில் கண்ணன் சொன்னது.

என்றவர் தொடர்ந்து " கைய பின்னாடி மடக்க முடியாது... காலை முன்னாடி மடக்க முடியாது" என்பார். உடனே தயாரிப்பாளர் "இது யார் சொன்னது?"என்பார்.

" ஒருநாள் போதையில நானே சொன்னது" என்பார்.

தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொள்வார்.

அதேபோல வசனம் பேசிக் கொண்டி ருக்கும்போதே கேமராவைப் பார்த்து பேசுவார் "ஏன் கேமரா பார்த்து பேசுற?" என்று தயாரிப் பாளர் கேட்க அப்பதான் " அப்பதான் சார் ஜனங்க கிட்ட இருந்து பதில் வரும்" என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டு விட்டுப் போவார்.

அதே போல- புதிய கார் வாங்கி காருக்கடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை எல்லாம் செய்பவர்கள் வண்டியை எடுக்கும்போது எப்படி எப்படி எல்லாம் ஆக்சிடென்ட் உருவாக்குகிறார்கள் என்பதை ஒரு சிறு கதையைப் போல் சொல்லியிருப்பார். மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பது அவரது மூச்சாகவே இருந்தது.

காதல் உணர்வில் நாயகன் எப்போதும் 'மௌத் ஆர்கன்' வாசித்தபடி இருப்பான். ஒருமுறை விவேக் அவனிடம் ,"ஏண்டா ஆனானப்பட்ட இளையராஜாவும், ஏ. ஆர் ரஹ்மானும் வெளியே வரும்போது வெறும் கையை வீசிக்கிட்டுதானே வாராங்க... நீங்க என்னடான்னா ஆன்னா ஊன்னா எதையாவது எடுத்து வாசிக்க ஆரம்பிச்சிடுறீங்க," என்று கிண்டல் செய்வார்.

இப்படி நிறைய...

ஒவ்வொரு படத்திற்கும் நகைச்சுவை காட்சிகளை தனக்கென ஒரு குழுவினரை அமைத்து விவாதித்து உருவாக்கி வந்தார். ஆகவேதான் அவர் நடித்த படங்களின் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்தன. தன்னோடு இருந்த கதை விவாதக் குழுவினரை நன்றாக கவனித்துக் கொண்டார்.

விவேக் வந்தாலே சிரிக்கக் கூடிய அளவுக்கு திரையில் அவர் புகழ் பெற்றார். 'பராசக்தி' படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சியில் சிவாஜி கணேசன் பேசிய நீண்ட வசனத்தை போல 'பாளையத்து அம்மன்' படத்தில் விவேக் பேசிய நீண்ட வசனம் அவரது பகுத்தறிவுக் கருத்துக்களுக்காக மட்டுமல்ல... அவரது நடிப்புத் திறனுக்கும் பெரும் சான்றாகும்.

அவருக்குள் ஒரு இயக்குனரும் இருந்தார். அந்த இயக்குநர் பிறக்கும் முன்பே விவேக் இறந்தது உண்மையில் ஒரு பேரிழப்பு.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மீது தீராக் காதல் கொண்டவர் விவேக். அவர் எண்ணங்களைத் தன் திரைப்படங்களில் ஒலித்தார். அவரது உந்துதல் காரணமாக மரம் நடுவதில் ஆர்வத்தோடு ஈடுபட்டார்.

'ஒரு கோடி மரக் கன்றுகள்' திட்டம் மூலம் சூழலியல் ஆர்வலராக அறியப்பட்டார். நடிகர் என்ற அடையாளத்தையும் மீறி ஒரு கோடி மரக் கன்றுகள் திட்டம் பெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது.

மூன்றில் ஒரு பங்கு கனவை தன் வாழ்நாளில் சாதித்தார். ஆம்... 33 லட்சம் மரக்கன்றுகள் அவரால் நடப்பட்டன அவற்றில் பல மரங்களாய் வளர்ந்து இன்று நிழலையும் கனிகளையும் தருகின்றன.

என் இனிய நண்பர் ஒருவரை இழந்து விட்டேன். திரையுலகில் பலருக்கும் இதே உணர்வு தான். இவ்வளவு நாள் சிரிக்கவைத்தவர் இன்று அழவைத்துவிட்டார்.

காலனின் வேட்டையில் கலைஞன் சாகலாம். கலை சாகாது. அவர் நடித்த காட்சிகளில் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவர் நட்ட மரங்களில் அவரது சுவாசம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

எங்கள் கலைஞனே!

நீ நடித்த பாத்திரங்கள்

திரையில் உலவிக்கொண்டே இருக்கும்.

நீ நட்ட மரங்களில் உன் சுவாசம் தொடர்துகொண்டே இருக்கும்.

மறையாக் கலைஞனாய்

எங்கள் மனங்களில் என்றென்றும்

நீ நிலைந்திருப்பாய்"