டபழனி ஏ.வி. பிரசாந்த் அரங்கில் இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கிய யாத்திசை திரைப்பட முன்னோட்ட காட்சிக்கு அழைப்பு வந்தது.

இயக்குநரின் "நானும் எனது பூனைக் குட்டிகளும்" என்ற சிறுவர் நாவலுக்கு மதிப்புரை எழுதிய விதத்தில், அவருடனான அறிமுகத்தால் கிடைத்த அழைப்பு இது.

சென்னையில் பிறந்து வளர்ந்த பொறியியல் பட்டதாரி யான அவர், தமிழ் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தால் கொடுத்த படைப்புகளில் அவரது எளிய தமிழைக் கண்டிருக்கிறேன். கிபி ஏழாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனை மையமாக வைத்து அன்றைய காலகட்டத்தில் நடந்தவையாக புனைவுக் கதையை இயற்றி,, யாத்திசை எனும் திரைப்படத்தை இவர் இயக்கியிருக்கிறார்.

அக்கால கட்டத்தில் பயன்படுத்திய போர்க் கருவிகளையும் இசைக் கருவிகளையும் உடை அலங்காரங்களையும் மக்களின் தோற்றத்தையும் அவர்களது வீரத்தையும் படை பலத்தையும் வெகு இயல்பாக இப்படத்தில் கொண்டுவந்திருக்கிறார். அன்றைய இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கும் அழகிய தமிழ்ச் சொற்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேலாக தேர்ந்தெடுத்து இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பழங்குடியினர் பாத்திரங்களை பயன்படுத்த வைத்து, அன்றைய பேச்சு மொழிக்கு உயிரூட்டம் கொடுத்திருக்கிறார். நிழலல்ல நிஜம் என்பதைப் போல உணரும்படி கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கே இப்படத்தினை காண்பவர்கள் சென்றுவிடுவார்கள்.

Advertisment

திரையில் பங்கு பெற்றிருக்கும் அனைவரும் இதற்கு முன்பு அறிமுகமாகாத புதிய முகங்கள் என்னும்போது வரலாற்றின் உண்மைத் தன்மையை இன்னும் அதிகமாகவே உணர வைக்கிறது.

yy

Advertisment

அதிக எண்ணிக்கையில் யானைகள் இடம்பெற்றிருக்கும் போர்ப் படையுடன் களத்தில் போர்க் காட்சிகளும் அதன் பின்னணி இசையோடு பொருந்தி பிரம்மாண்டத்தைக் கொண்டிருக்கின்றன. பாண்டிய நாட்டு முத்துக்கள் மீது மோகம் கொண்டு அவற்றை வாங்கிக் குவிப்பதற்காகவே ரோமானிய நாட்டு மன்னனது கஜானா காலியாகி ஆட்சி கவிழ்ந்ததையெல்லாம் வரலாறு கொண்டிருக்க, அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முத்துக்களை செல்வமாகக் கொண்டிருந்த பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்த தேவதாசிப் பெண்கள், அவற்றைக் கொண்டு ஆடை அலங்காரம் செய்து நடனம் புரிந்த உருவ அமைப்பையும் அணிகலன்களையும் நகலெடுப்பதில், அன்று சிற்பம் வடிக்கும் பொழுது மாதிரிகளாக நின்றுகொண்டிருந்த தேவதாசிகளை அதே சிற்பத்திலிருந்து உயிருடன் மீட்டு வந்ததைப் போல சிலைகளை உற்றுநோக்கி இயல்பாக இப்படத்தில் கொண்டு வந்தது பாராட்டுதலுக்குரியது.

கற்களால் அமைந்த மன்னர் காலத்து அரண்மனைகளையும் கோவில்களையும் பிறகட்டடங்களையும் காணும் பொழுது இவர்கள் எத்தனை உடல் வலிமை மிக்கவர்களாக இருந்திருக்க வேண்டுமென்கிற கற்பனையை ஈடுகொடுக்கும்படி, திரையில் இடம் பெற்றிருக்கும் நாயகர்கள் கதை மாந்தர்கள் யாவரும் அதே உடற்கட்டைப் பெரும் அளவிற்கு திரைக்குப் பின்னால் உழைத்திருக்கிறார்கள். மன்னர்கள் என்றாலே பிரம்மாண்டம் தான் எனும் பொழுது அதற்கேற்றவாறு காட்சிகளை அமைக்க போட்ட செட்டிங்குகளும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

2020 இல் இந்தியா எனும் அப்துல் கலாமின் கனவு கொரோனாவின் பெருந்தொற்றின்போது தேவைப்பட்ட ஊரடங்கின் காரணமாக முடங்கிப் போன செயல்களால், சற்றுத் தாமதமானாலும் உலக அளவில் உன்னதமான இந்தியாவை நாம் காணத்தான் போகிறோம். அந்நிலையில் நாம் நம் அடையாளமான மொழியை மறந்துவிட்டு பண்பாட்டின் வேர்களை அறுத்துவிட்டு நம்மை இழந்து நின்று விடக்கூடாது.

பழையன கழிந்து புதியனவாகும் இவ்வுலக இயல்பிலும் இழக்கக்கூடாத நமது பண்புகளை காத்துக்கொள்வதற்கு நமது மொழி முக்கியமான ஒன்று என்ற நிலையில், தாய்மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும் சொற்ப அளவிலேயே இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் மட்டுமே இவை யாவற்றையும் காக்கின்ற பொறுப்பினை ஏற்றிருக்கிறார்கள். இந்நிலையில் ஆங்கிலம் அதிகமாகப் புரளும் சென்னை மாநகரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன் தமிழின் மீது ஆர்வம் கொண்டு தானாகவே சங்க இலக்கியங்களை முயன்று கற்று இளையோருக்கு முன்மாதிரியாக நின்று நமது மொழியையும் கலாச்சாரத்தையும் உயிர்ப்பிக்கும்படி ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கும் பொழுது, இம்மாதிரியான இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

yy

தஞ்சாவூரை தன் பிறந்த மண்ணாகக் கொண்டிருக்கும் இயக்குனர் தரணி ராஜேந்திரன் அவர்களிடம் சோழர் மண்ணில் பிறந்துவிட்டு பாண்டியர்களை மையமாக வைத்து ஏன் படம் எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, "நான் தமிழன்" என்ற பதிலை கொடுத்திருந்தார். இப்படத்தில் இவர் குறுநில மன்னர்களுக்கிடையேயான பகையை ஊதிப் பெருக்கவில்லை. தமிழன் என்ற ஒற்றுமை உணர்வோடு அன்பால் பிணைந்த குழுவினர் இணைந்து எடுத்த படமாக யாத்திசை இருக்கிறது.

புதிய பாதை எனும் வெற்றிப் படத்தை இயக்கிய பார்த்திபன் தான் உள்ளே வெளியே படத்தையும் இயக்கியிருந்தார். அதற்கு அவர் கொடுத்திருந்த பதிலாவது, "கலையை முன்னிறுத்தி படங்களை எடுக்கும்பொழுது அவை மக்களால் பாராட்டப்படவில்லையென்ற கோபத்தில் எடுத்த படம்தான் தசையை முன்னிறுத்தி எடுத்த உள்ளே வெளியே" என்றார். அது மிகப்பெரிய அளவில் பொருளையும் ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனாலும் அதன் பிறகு அவர் அவ்வாறே தொடராமல் ஒத்த செருப்பு போன்ற படங்களைக் கொடுத்தவர். கலைஞர்கள் கலைஞர்கள்தான். அவர்களை முன்னெடுத்துச் செல்வது மக்கள் கையில் இருக்கிறது. பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை ஆதரித்த மக்கள் யாத்திசையையும் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தினை எடுத்த குழுவைச் சேர்ந்த அத்தனை பேரும் இதன் வெற்றியால் ஊக்குவிக்கப்படுவார்களாயின், இவர்களிடம் இன்னும் சிறந்த படங்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாம். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் தரணி ராஜேந்திரன் அளித்த பதிலில் இப்படத்தின் உழைப்பால் அவர் பெற்றிருந்த முதிர்ச்சி தெரிந்தது.