பெருங்கடலின் இரகசியங்களை அறிந்தவர்கள் எவருமிலர் என்பது வாக்கு.

ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கடல், காற்று ஆகியவற்றின் நாடித்துடிப்பு களைக் கணித்துப் பயணித்த சாகச இனத்தவர் கள், தமிழர்களும் பினீசியர்களும் என்கிறது வரலாறு. ஆழமான மர்மங்களும், ஆபத்து களும் நிறைந்த கடல்பாதையின் பெருவாயில் களைத் திறந்துசெல்லும் கலையை இக்கடலோடிகள் தான் உலகிற்குக் கற்றுத்தந்தனர். குறிப்பாக, வாணிபத்தேடலின் மீது தீராத்தாகம் கொண்டிருந்த பழந்தமிழரின், நீரோட்ட வேகம் பற்றிய கணக்கு, கப்பல் கட்டும் தொழில் நுட்பம் மற்றும் திசைகள் குறித்த அறிவாற்றல் ஆகியவை நம்மைப் பிரமிக்கச் செய்வன.

சடப்பொருளான மரத்தால் பெருங்கலங் களைக் சுட்டி, நுட்பமாய் நெய்த பெருஞ்சீலை களைப் பாய்களாகத் தொங்கவிட்டு, உள்நாட்டின் விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு, காண முடியாத காற்றை நூல்போல் சுக்கானோடுச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு ஆழ்கடலை அளந்த னர், பழந்தமிழர்கள். அவர்கள் அக்கரையில் குறு மிளகைக் கொடுத்துவிட்டு, ஈடாகக் குதிரைகளையும், தோகைகளை இறக்கி வைத்துவிட்டு, தங்கக்கட்டிகளைச் சுமந்து மீண்டதும் வரலாறே. இப்பெருஞ்சாகசத்தைக் கரையிலிருந்து கண்டு சிலிர்த்த புலவர்மரபு, புறநானூற்றிலும் பட்டினப்பாலையிலும் பாடமாய் அதைச் செதுக்கி வைத்தது. வணிகத் தமிழர் களுடன், பண்பாட்டுத் தூதுவர்களும், சமயவேர் களைத் தேடிய ஞானிகளும் இணைந்து பயணித்தனர்.

கரைகளில் பேரரசுகள் மாறியபோதெல்லாம், கலங்களின் பாதைகளும் மாறின. பாய்மர நுனியில் நாட்டுக் கொடியுடன் சமாதானத்தையும் இணைத்து ஏற்றிப் பறக்க விட்டுச் செல் வதே தமிழரின் பொதுவான பண்பாடு. ஆனால் இடைக்காலத்தில், போட்டி நாடுகளின் நடவடிக் கைகளால் வாணிபம் நங்கூரமிட்டுத் தேங்கிநின்றது. அவ்வாணிபத்தடையை உடைத்தெறிய, சோழப் பேரரசின் நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் "வெற்றிவேல், வீரவேல் என்று முழக்கமிட்டபடி, தென்கிழக்காசியக் கடற்பரப்பை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. அலைகடல் மீது வணிகக் கப்பலை மட்டுமே செலுத்தி வந்த தமிழரை, போர்க் கப்பல்களின் பக்கம் திருப்பியதும் வரலாறு தான். பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை வென்ற சோழப்படைகள், அந்நாடுகளை ஆளவும், அதில் வாழவும் விரும்பியதில்லை. வாணிபத்திற்கான கடல்பாதையைத் திறந்த பின்பு, தமிழ்கூறு நல்லுலகம் மீண்டன தமிழ்ப்படைகள்.

Advertisment

ship

பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் தமிழர் களின் தாய்நிலம், வேற்றுமொழியாளர்களின் சூதாட்டப் போட்டிகளில் பந்தயக்காயாக மாறி உருளத் தொடங்கியது. வாழ்வதே அரிதாக மாறிய சூழலில் வாணிபக்கலையை நினைக்க நேரமேது? தமிழரின் கலங்களைச் சுமந்தே பழகிய பெருங்கடல்பரப்பு, அடுத்த முன்னூறு ஆண்டுகள் தமிழர்கள் உலவாமல் கனத்த மௌனத்தில் ஆழ்ந்தது. நீர்த்தடம் கடக்கும் அறிவியல், காற்றின் திசையைக் கணித்தி டும் பேராற்றல் எல்லாம் மெல்லப் பழங்கதை களாயின. உலகநீரோட்டங் களில் மிதந்து சென்ற தமிழர் களின் வீரப்பொழுது களெல்லாம் உள்ளூர் ஓடை களில் கரைந்து மறைந்தன.

அவ்வேளையில், எல்லாத்திசை களிலிருந்தும் அசுரப்பசியுடன் ஐரோப்பியக் காலனியாதிக்கக் கப்பல்கள் முற்றுகையிடத் தொடங் கின. தமிழ்நிலத்தை எஞ்சியிருந்த தமிழரின் பெருமைகளை எல்லாம் ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள் அடியுடன் துடைத்தெறிந்தனர். நம் வாணிபச்சுவடுகளும், வீரமெய் கீர்த்திகளும் காலச்சமுத்திரத்தில் முறிந்து வீழ்ந்தன. அதே கடல்நீரைத் தொட்டு, முற்றிலும் புதிய வரலாற்றை ஐரோப்பியர்கள் எழுதத்தொடங்கினர். தமிழர்களை, அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து வேருடன் பிடுங்கி, பூமியின் வெவ்வேறு திசைகளிலிருந்த தேயிலை, காப்பி, இரப்பர், கொக்கோ மற்றும் கரும்புத்தோட்ட வயல்வெளிகளில் நட்டு வைத்தனர். அன்றைக்கு (18, 19- ஆம் நூற்றாண்டுகளில்) தமிழகத்தை உலுக்கிய பஞ்சங்களும் பட்டினிச்சாவுகளும் இதற்குப் பெருவழி சமைத்தன.

Advertisment

கூலிகளாய் வாழ்வை அக்கரை நாடுகளில் மீளவும் தொடங்கிய ஏழைத்தமிழர்களின் வாழ்க்கையை வடித்திட உலகின் எந்தமொழியிலும் சொற்கள் இல்லை. கருப்பின மக்களின் துயரங்களைவிட மேலதிகமான துன்பங்களால் வார்க்கப்பட்ட தமிழர்களின் குரல்கள் இதுவரை உலகச் சரித்திரத்தில் ஒலித்ததில்லை. நோய்கள், கொடுவதைகள் மற்றும் விலங்கினத் தாக்குதல்களில் பல இலட்சம் தமிழர்கள் மாய்ந்து மடிந்தனர். அடிமையாகப் பூட்டப் பட்ட நாட்டின் மேன்மைக்காக, அத்தமிழர் கள் கண்ணீரும் செந்நீரும் சிந்திப் பாடுபட்டனர். ஒடுக்கப்பட்ட வயிறுகளோடும், பிடுங்கப்பட்ட நகங்களோடும் கூலிகளாக உழன்ற தமிழர்கள். இந்தியா என்னும் பெருந்தேசத்தின் இருநூறாண்டுக்கால அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறியப் போகிறார்கள் என்று அன்றைக்கு எவரும் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். இந்திய விடுதலையின் இருமுனைப் போராட்ட வடிவங்களான அகிம்சைப்போர் மற்றும் ஆயுதப்போர்களை உருவாக்கிய பிதாமகர்களாக, இப்புலம் பெயர்ந்த இந்தியத் தமிழர்கள் பேருரு எடுத்தனர். பாரிஸ்டர் கரம்சந்த் காந்தியின் அகிம்சா சிந்தனைகளுக்கான பயிற்சிக்களத்தில், தங்கள் உயிர்களையே காணிக்கையாக ஈந்த தென்ஆப்பிரிக்கத் தமிழர்களின் புனிதப்பெயர்கள். நாராயணசாமி. நாகப்பன், வள்ளியம்மை என்று நூற்றுக்கணக்கில் நீள்கின்றன. இந்தியா திரும்பிய காந்தி, தில்லையாடி சென்று அம்மண்ணைத் தொட்டு வணங்கிக் கண்கலங்கி நின்றதற்குக் காரணம், புலம்பெயர்ந்த தமிழர்களின் பெருந்தியாகம்.

ss

ஆனால் இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதப்போர் ஒன்றே வழியென்று முடிவெடுத்த நேதாஜி நேரடியாக வந்துநின்ற இடம்; தமிழர்கள் நிறைந்து வாழ்ந்த மலாயாவும் பர்மாவும் தான். உங்கள் குருதியைக் கொடுங்கள்; நான் இந்தியாவிற்கு விடுதலையைப் பெற்றுத்தருகிறேன் என்று சிங்கப்பூரில் அவர் முழங்கியபோது, பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையை இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்தார்கள். அவர்களின் 90% பேர் இந்தியத்தமிழர்கள். சிங்கப்பூரில் தொடங்கி மலாயா, தாய்லாந்து, பர்மா என மூன்று நாடுகளைப் பசியோடும் பட்டினியோடும் வெறுங்கால்களால் கடந்த பெருவீரத் தமிழ்க்கூட்டம், இந்திய எல்லையில் பிரிட்டிஷ் படைகளை ஓடவிட்டதைக் கண்டு வல்லரசுகளின் இராணுவங்களும் திகைத்து நின்றன. ஏனென்றால், பெண்கள் இராணுவத்தில் பங்கேற்றது. உலகிலேயே அதுதான் முதல்முறை.

அகிம்சைநாயகரான காந்தியடிகளும் ஆயுதப் போராளியான நேதாஜியும், தாங்கள் மறுபிறவியில் தமிழர்களாகப் பிறக்கவேண்டும் என்று பதிவு செய்வதற்குக் காரணமானவர்கள்: புலம் பெயர்ந்த தமிழர்களே!

இந்தியாவின் வேறெந்த தேசிய இனத்திற்கும் கிடைக்காத பெருமிதம் இது.

கடந்த ஒரு நூற்றாண்டாக அன்னைத்தமிழை மங்காமல் காத்ததால்தான், மலாய்மொழி பேசும் பூமிபுத்திரர்களின் ஒடுக்குதல்களுக்கு இடை யிலும், மலேசியத் தீபகற்பத்தில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தேசியத் தமிழ்ப்பள்ளிகள் கம்பீரமாய் செம்மொழியை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சிலம்பாட்டம் ஒலிம்பிக் எல்லை வரை சென்று ஒளிவீசுகிறது. இலங்கையின் தேயிலை மலைச் சாரல் பள்ளிகளின் பாறையிடுக்குகளில் எல்லாம் கபிலனும், பாரதியும் செம்மாந்து உலா வருகின்றனர்.

கவிமணியின் தோட்டத்தில் மேய்ந்த வெள்ளைப் பசு தேயிலைத்தளிரினும் மென்மையான தமிழ்க் குருத்துகளின் இதழில் குதித்தோடி விளையாடுகின்றது. பக்தியை அமுதத்தமிழில் அழியாமல் இன்றும் காக்கின்றனர், மொரிசியஸ் மற்றும் தென்னாப் பிரிக்காவின் தமிழர்கள். தமிழே கற்றுத் தரப்படாத பர்மாவில், இராணுவத்தின் சீறும் துப்பாக்கி ஓசைகளைவிட ஓங்கி ஒலிக்கிறது, 150 தன்னார்வத் தமிழ்ப்பள்ளிகளின் செந்தமிழோசை.

இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் நாளிதழ்கள் நாள்தோறும் வெளிவருகின்றன. வார-மாத சஞ்சிகைகளின் எண்ணிக்கையோ நூற்றுக்கணக்காகும். இலங்கையின் தமிழ் வானொலி சேவையை மொழிவெறியர்கள் நிறுத்தி மகிழ்ந்த போது, இணையத்தமிழ் வானொலிகளை உலவ விட்டுத் தாய்த்தமிழைச் சரிந்திடாமல் தூக்கி நிறுத்தியது புலம் பெயர்ந்த தமிழ்ச்சொந்தங்கள்.

மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என்று பத்துக்கும் மேற்பட்ட நாட்டுத்தமிழர்கள் நேரடி தமிழ் வானொலி சேவைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். ஆங்கில வெள்ளத்திற்கிடையே, தமிழைத் துளியளவு கலந்து பேசும் வித்தகம் எல்லாம் அயலகத்தமிழர்கள் அறியாத கலை. இதயங்களை வருடிச்செல்லும் கொஞ்சு தமிழில், அவ்வானொலியின் ஒலிபரப்புகள், மனஅடுக்குகளில் வண்ணத்துப் பூச்சிகள் போல அமர்ந்து செல்கின்றன.

நவீனயுகத்தில் வாழும் தங்கள் நாகரிகப் பிள்ளைகள், எதிர்காலத்தில் தமிழை விட்டுத் தள்ளிப்போனால் என்னவாகும்? என்று சிந்தித்த புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் உன்னதமான வழியொன்றைக் கண்டுபிடித்தன. தங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பள்ளிகளில், மாணவர்கள் ஈட்டும் தமிழ்ப்பாட மதிப்பெண்களைத் தகுதிப்புள்ளியாகச் (ஈழ்ங்க்ண்ற்) சேர்த்திட அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட்டனர். தமிழ் மதிப்பெண்ணைக் காட்டி மருத்துவக்கல்லூரிக்குள் நுழைவது அங்கே மிக எளிது. தமிழர்கள் மருத்துவம் பயில்வதெப்படி? என்ற நம் கேள்விகளுக்கு மருந்தாக, தமிழைக் காண்பித்து மருத்துவம் பயிலும் தமிழ்ப்பரம்பரை, புலம் பெயர் தமிழர் நாடுகளில் அணிவகுத்து நிற்கின்றது.

அமெரிக்காவின் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாரும் ஊதியம் வாங்குவதில்லை. தமிழைக் கற்பித்தல் என்பது அங்கே தன்னார்வப்பணி மட்டுமே. ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தமிழ் ஆசிரியர்கள் தங்கள் வார இறுதிநாட்களை முழுமையாய் ஒதுக்கித் தருகின்றனர். வட அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தில், தமிழ்மொழிக்கெனத் தனிப்பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்குத் தேசிய அங்கீகாரங்களும் பெறப்பட்டுவிட்டன. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலும்கூட, தமிழ் சிகரங்களில் சிங்காரமாய்க் கோலோச்சுகின்றது. இணையவெளியிலும் செயலியிலும் தமிழைக் கற்றிடும் வழிமுறைகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் புதிய உயரங்களைத் தொட்டு விட்டனர்.

தன்னிறைவு பெற்ற புலம்பெயர்ந்த தமிழ்ச்சொந்தங்கள், இந்தியாவை நோக்கிச் சலிக்காமல் ஓடி வருவதற்குக் காரணங்கள் உள்ளன. கல்வி, நிதிவுதவிக் கோரிக்கைகளை ஏந்தியோ விருதுகளை வேண்டி விண்ணப்பங்கள் அளிக்கவோ அவர்கள் இங்கே வருவதில்லை. தமிழ்ப்பண்பாட்டின் வேர்கள் விதைக்கப்பட்ட மண் இதுவென்றும், தங்கள் மூதாதையர்களாகிய பேரான்மாக்கள் வாழ்ந்த புனிதத்தலம் இதுவென்றும் அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டுவதற்காக ஆண்டுதோறும் வலசைப்பறவைகள் போல அவர்கள் இந்தியா வந்து செல்கின்றனர்.

ஈராயிரம் ஆண்டுகளாகப் புலம் பெயர்ந்த தமிழர்களின் "கடலோடிய பெருங்கதை" காட்சிப் படுத்தப்பட வேண்டும். உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களின் தடயங்களின் ஆயிரக்கணக்கான நினைவுச்சின்னங்கள் சேகரிக்கப்பட வேண்டும். சுடல் கடந்து நாட்டிய அவ்வரலாறு இளந்தலைமுறையிடம் பாடமாகச் சொல்லப்படவேண்டும். குறிப்பாக, எல்லையற்ற தியாகங்களால் செதுக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்த பெருந்தியாகம் இந்திய வரலாற்றின் மைய இழையாகச் செதுக்கப் படுவதை இனியாவது செய்ய வேண்டும்.

விடுதலைக்கு அகிம்சைக்கனலைக் காந்தியின் கரங்களில் கொடுத்தனுப்பிய தென்ஆப்பிரிக்கத் தமிழர்களின் வரலாறும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, 1945-ஆம் ஆண்டிலேயே இம்பால் முனையில் இந்திய மூவர்ணக்கொடியை நாட்டி, இந்திய மண்ணை முத்தமிட்டு இறந்த தேசபக்தர்களின் வீரஞ்செறிந்த வாழ்க்கை, அவ்வரலாற்றின் ஆன்மாவில் அழுத்தமாக உச்சரிக்கப்பட வேண்டும். ஏனென்றால், இது இந்தியப் பெருநாடு, அயலகத் தமிழர்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் மட்டுமன்று; செஞ்சோற்றுக்கடனும் கூட!