நேற்று மாலை வீட்டில் பலவற்றையும் சிந்தித்தவாறு தனியாக அமர்ந்திருந்தபோது, சிறிதும் எதிர்பார்த்திராத அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த மனிதன் யாரென்று முதலில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அன்பும் பணிவும் நிறைந்திருந்த அந்தக் குரலைக் கேட்டபோது, "எனக்கு நீங்கள் யாரென்று தெரியவில்லையே!' என்று கூறவும் முடியவில்லை.

ஆனால், என் கவலையைப் புரிந்து கொண்டதைப்போல, அழைத்த மனிதன் உடனே கூறினான்: "சார்... நான் உங்களோட பழைய மார்ட்டின். அம்பலமேட்டிலிருந்த காலனியில சார்... உங்களுக்கு தினமும் பால் கொண்டுவந்து தந்த... சார்.. உங்களுக்கு ஞாபகம் இருக்குல்ல? உங்களோட பேரை பத்திரிகைகள்லயும் தொலைக்காட்சியிலயும் பார்க்கறப்பல்லாம் கூப்பிடணும்னு நினைப்பேன். ஆனா அந்த சமயத்தில தயங்கி சும்மா இருந்துடுவேன் சார்... நம்மையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்குமான்னு நினைச்சு... ஆனா சார்... இன்னிக்கு உங்க தொண்ணூறாவது பிறந்த நாளுங்கற தகவலை பத்திரிகையில பார்த்ததும், கூப்பிட்டே ஆகணும்ங்கற முடிவுக்கு வந்துட்டேன். அதனால...''

சந்தோஷத்தால் எனக்கு சில நிமிடங்களுக்கு எதுவுமே பேசமுடியவில்லை. பிறகு...

"மார்ட்டின்... நன்றி. என்னை நினைச்சதுக்கு... கூப்பிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.''

Advertisment

அப்போது மார்ட்டின், "சார்... கடவுளுக்குப் பொறுக்காததைச் சொல்லாதீங்க. நன்றியா? எதுக்கு சார்... நானில்லியா உங்களுக்கு நன்றி சொல்லணும்? நீங்க அன்னைக்கு செஞ்சது...''

ss

தொடர்ந்து பேசுவதிலிருந்து மார்ட்டினை விலக்கினேன். ஆனால், நினைத்துப் பார்ப்பதிலிருந்து விலக்க என்னால் முடியவில்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு...

அப்போதும் வழக்கம்போல அதிகாலை நான்கு மணிக்கு நான் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். வீட்டிற்கு சற்று முன்னால் நூற்றைம் பது ஏக்கர் பரப்பளவில் கோடைகாலத்திலும் மழைக்காலத்திலும் நிறைந்து காணப்படும் அழகான ஏரி... ஏரியின் ஓரத்தையொட்டிச் செல்லும் சாலை... ஏரியும் சாலையும்... உலகம் முழுவதுமே நிலவொளியில் குளித்து நின்றுகொண்டிருந்தது. வழக்கம்போல ஏரியைச்சுற்றி மூன்றுமுறை ஓடியபிறகு, காலனியின் சிறிய சாலைகளிலும் ஓடிவிட்டு வீட்டிற்கு வந்தபோது நேரம் ஐந்து மணி...

அதிகாலை வேளையிலேயே வந்துவிடக்கூடிய பத்திரிகைகளில் மூழ்கியவாறு வாசலில் அமர்ந்திருந்த என்னிடம் வந்து மனைவி கூறினாள்: "பால்காரன் இன்னும் வரலையே?''

"ம்' என்று சொல்லமட்டும் செய்துவிட்டு, பத்திரிகை வாசிப்பதைத் தொடர்ந்துகொண்டிருந்த என்னிடம், மெல்லிய கவலை கலந்த குரலில் மனைவி மீண்டும் கூறினாள்: "சொல்றது காதுல விழுதா? பால்காரன் இன்னும் வரலைன்னு... வரவேண்டிய நேரம் கடந்திருச்சு. இனி... இப்போ கட்டன் தேநீரைக் குடிச்சிட்டு அலுவலகத்துக்குப் போகவேண்டியிருக்கும்...''

அதேபோலதான் நடந்தது. பால் கலக்காத தேநீரைப் பருகிவிட்டு, மனைவி உரிய நேரத்திற்கு பல்கலைக் கழகத்திற்குச் சென்றாள். தேநீரோ காபியோ... எதுவும் அந்த அளவுக்கு கட்டாயம் வேண்டுமென்று நினைக்காத நான், கே.பி. நம்பூதிரியின் "தாக சாந்தி' இட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்த நீரைப் பருகிவிட்டு, என் அலுவலகத்திற்குச் சென்றேன்.

காலைவேளை சிற்றுண்டிக்குத் தேவையான ரெடிமேட் பொருட்கள் இருந்ததால், பிரச்சினை எதுவும் உண்டாகவில்லை. பெரும்பாலான நாட்களில் வழக்கமாக நடப்பது அதுதானே! மறுநாள் பாலில்லாத தேநீரைப் பருகிவிட்டு அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய நிலை உண்டாகவில்லை. வழக்கத்தைவிட சற்று முன்பே மார்ட்டின் பாலுடன் வந்தான். அவனது நடவடிக்கையில் எப்போதும் இருக்கக்கூடிய உற்சாகம் இல்லாமலிருந்தது. முழுமையான ஒரு பதைபதைப்பில் இருந்தான்.

"என்ன ஆச்சு?'' என்று கேட்டதற்கு மார்ட்டின் கூறினான்: "நேத்து எனக்கொரு பிரச்சினை நடந்திருச்சு சார். பாலுக்கான கொஞ்சம் கூப்பன் புத்தகங்க காணாம போயிடுச்சு. ஆலுவாயிலிருந்து வர்றப்போ, வழியில விழுந்திருக்கணும்.

இல்லன்னா... காலனியிலேயே எங்காவது...

அதைத்தேடி அலையவேண்டியிருந்தது.

அதனாலதான் நேத்து...''

மார்ட்டின் அழும் நிலையிலிருந்தான். அப்போது நான் கேட்டேன்: "இதைப்போல இதுக்கு முன்ன எப்போதாவது நடந்திருக்கா?''

"இல்ல சார்.'' மார்ட்டின் மெதுவான குரலில் கூறினான்: "இப்படிப்பட்ட ஒரு அனுபவம்... இதுதான் முதல் தடவை. என் சம்பளத்திலயிருந்து பிடிச்சுக்கோங்கன்னு நான் அழுதுகிட்டே சொன்னேன். ஆனா அப்பவும் அவங்க என்மேல சந்தேகப்பட்டாங்க. அதுதான் எனக்கு...''

அப்போது நான் கூறினேன்: "நில்லு...''

தொடர்ந்து உள்ளே சென்று நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வந்து மார்ட்டினிடம் கொடுத்துவிட்டுக் கூறினேன்:

"இதுதானே?''

மார்ட்டினின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை.

"சார்... இது...''

நான் சிரித்துக்கொண்டே கூறினேன்: "நேத்து அதிகாலையில காலனியோட சிறிய சாலையில கிடைச்சது... வழக்கமான என்னோட ஓட்டத்திற்கு மத்தியில... பார்த்தப்பவே எனக்கு விஷயம் புரிஞ்சிட்டது. காலையில பால் கொண்டு வர்றப்போ கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா நேத்து... மார்ட்டின் நீ வரலையே? இன்னைக்கும் வரலைன்னா... ஆலுவாவுக்கு வந்து உன்னைக் கண்டுபிடிச்சு தரலாம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா மார்ட்டின்... நீ இன்னிக்கு வந்துட்டியே?''

மார்ட்டினால் எதுவும் பேசமுடியவில்லை. முதலில் அவன் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க மட்டும் செய்தான். பிறகு...

நேற்று மாலை மார்ட்டினுடன் பேசியபோது, இந்த பழைய நினைவுகள் அனைத்தும் என் மனதில் ஊர்வலம் வந்தன. முதலில் சிறிதுநேரம் எதுவுமே கூறமுடியாமல் நின்றாலும், பிறகு அதிகமாகப் பேசியது மார்ட்டின்தான். தெய்வத்தைப் பற்றியும்... உண்மையைப் பற்றியும்... பாவத்தைப் பற்றியும்... நரகத்தைப் பற்றியும்... இவற்றைப் பற்றியெல்லாம் மார்ட்டின் பேசினான். ஒரு கட்டத்தில் நான் மார்ட்டினிடம் கேட்டேன்: "டேய்... இப்பவும் பழைய வேலையோட ஆலுவாவிலதானா?''

மார்ட்டின் உடனடியாகக் கூறினான். "அய்யோ... இல்லை சார். அதையெல்லாம் முன்னாடியே விட்டுட்டேன். என்னைவிட உறுதியா இருந்தவங்க என் பிள்ளைங்கதான். "அப்பா... உங்களுக்கு இந்த வேலை வேணாம்'னு அவங்க சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதனால... ஒருநாள் இருந்ததையெல்லாம் எடுத்து வித்துட்டு நாங்கள் பீருமேட்டுக்கு வந்துட்டோம். ரெண்டு... மூணு ஏக்கர் நிலம் வாங்கினோம். அருமையான... முதல்தரமான விவசாய நிலம்... ரெண்டு பசுக்களையும் வாங்கினோம். ஒரு சிறிய வீட்டையும் உண்டாக்கினோம். எல்லாத்துக்கும் பிள்ளைங்களோட உதவி இருந்தது. அப்படி இல்லாம என்னால தனியா எப்படி சார்... இப்போ வயசாயிடுச்சு... பழைய மாதிரி உழைக்கறதுக்கு முடியல. ரெண்டு மூணு உதவியாளுங்க இருக்காங்க. நேர்மையானவங்க சார்... பீருமேட்டுக்கு வந்திருக்கீங்களா? அருமையான இடம் சார். இங்க இருக்கறவங்க எல்லாரும் நல்லவங்க சார்... நீங்க பல இடங்களுக்கும் போயிருக்கறவர்தானே? இங்கயும் வரணும். நான் இப்பவே கூப்பிடறேன். அடுத்த ஓணத்துக்கு... இல்லன்னா... கட்டாயம் கிறிஸ்துமஸுக்கு...''

"வர்றேன்டா... கட்டாயம் வர்றேன்" என்ற என் உறுதிமொழி கிடைத்தபிறகுதான் மார்ட்டின் பேச்சையே நிறுத்தினான்.

பிறகு... என் சிந்தனை முழுவதும் பீருமேட்டைப் பற்றிதான். கொஞ்சம் கொஞ்சமாக நான் அதில் முழுமையாகக் கரைந்துபோகவும் செய்தேன். அதனால் என் இரவு உணவைத் தயாரிப்பதற்காக மாலை எப்போதும்போல ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தபோது, முதலில் நான் அவனைப் பார்க்கவில்லை. அப்போது அவன் சற்று உரத்த குரலில் கேட்டான்: "என்ன இப்படியொரு சிந்தனை? நான் வந்ததைக்கூட பார்க்கலையே!''

நான் அவனிடம் உடனடியாகக் கேட்டேன்: "டேய்... நீ பீருமேட்டுக்குப் போயிருக்கியா?''

அதைக் கேட்டதும் ராமச்சந்திரனுக்கு ஆச்சரியம் உண்டானது.

"பீருமேடா? அது எங்க இருக்கு? நான் போனதில்ல.''

அப்போது நான் கூறினேன்: "நானும் போனதில்ல... இருந்தாலும் போகணும்.''

ராமச்சந்திரன் என்னை சந்தேகத்துடன் பார்த்தான்.

"பீருமேட்டுக்குப் போற வழி உங்களுக்குத் தெரியுமா?''

"வழி..?'' நான் சிரித்தேன்: "நாம விசாரிச்சு... விசாரிச்சு போகக் கூடாதா? இப்படி நாம பல திசைகளுக்கும் போயிருக்கோம்ல..?''

அதற்குப்பிறகு ராமச்சந்திரன் எதுவும் கூறவில்லை. பிறகு நான்... பீருமேட்டில் கிறிஸ்துமஸ்... மார்ட்டின்...

மார்ட்டினின் பிள்ளைகள்... குழந்தை ஏசு... புல் வீடு... குழு பாட்டுகள்...