ங்க இலக்கிய காலத்திற்குப் பிறகு காப்பியக் காலம் என்று குறிப்பது வழக்கம். உலக இலக்கிய வரலாற்றிலும் சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்திலும் கூர்ந்து கவனிக்கும்போது அனைத்து இலக்கியங்களும் ஆணாதிக்க உணர்வையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. ஆண்கள் மட்டுமே மன்னர்களாகவும் தலைமை மாந்தர்களாகவும் விளங்கிவந்துள்ள னர். சிலப்பதிகாரம் இத்தகைய மரபை உடைத்து கண்ணகியைக் காப்பியத் தலைவியாக அறிமுகப்படுத்தியது. ஆனாலும் சமண மதத்தின் கோட்பாடு களை எடுத்துரைக்கும் மிகப்பெரிய பொறுப்பினைக் கண்ணகிக்குத் தராமல் கவுந்தியடிகளுக்கே வழங்கி யிருந்தது. மணிமேகலை காப்பியமோ காப்பியத் தலைமையையும் புத்த மதத்தின் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லும் பணியையும் முழுமை யாக மணிமேகலைக்கே வழங்கியிருக் கிறது. இரட்டைக் காப்பியங்க ளுள் இரண்டாவதாக வருகின்ற மணிமேகலையில் அறச் சிந்தனைகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஐம்பெரும் தமிழ்க் காப்பியங் களில் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையில், சிலப்பதி காரமானது இல்லறத்தையும், மணிமேகலைக் காப்பியம் துறவறத் தையும் வலியுறுத்துவதால், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.

மணிமேகலை மூலம் வெளிப்படும் அறம்

கோவலன் மாதவி இணையரின் மகளாக இயல்பிலேயே பண்புகள் அதிகம் பெற்றவளாக வளர்ந்த மணிமேலை புத்த மதப் பிக்குணியாவாள். தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் உதயணனைக் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் சலனமடையாமல் மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் மேற்கொண்டாள். பசிப்பிணியைப் போக்குவதையே தன் வாழ்நாள் வினையாகக் கொண்டு ஒழுகினாள் மணிமேகலை. இதனாலேயே அவள் மணிமேகலா தெய்வமாகப் போற்றப்பட்டாள். சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் போலவே இதுவும் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று பெரும் வாழ்வியல் கருத்துகளை உலகிற்கு மிக அழுத்தமாகக் கூறுகின்றது.

Advertisment

மாபெரும் பத்தினி கண்ணகி மகள் என்றே மணிமேகலையை அறிமுகம் செய்கிறார் சாத்தனார். மாதவி தன் மகள் ஆனாலும் அவளைக் ‘கண்ணகி மகள்’ என்று கூறுவதில் பெருமிதம் கொள்வதாகச் சாத்தனார் பாடுகிறார். தொடக்கத்தே அவளைக் கலைமகளுக்குரிய பேரழகியாகவே காட்டுகிறார். மணிமேகலையைக் கண்ட புண்ணியராசன் என்ற ஆபுத்திரன் "பெண் இணையில்லாப் பெருவனப்பு (அழகு) உற்றாள்' என வியக்கிறான். அழகின் தேவதையாகக் காட்சியளித்த மணிமேகலை பின் பௌத்த மதத்தின் புகழைப் பரப்பும் அறத்தின் தேவியாக மாறிவிட்டாள். மாதவி தன் அக வாழ்வைத் துறந்து, அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியாகிறாள்.

தன் மகள் மணிமேகலையையும் துறவி ஆக்குகிறாள். அப்போது புகார் நகரில் இந்திர விழா தொடங்கியது. முறைப்படி மாதவியும் மணிமேகலையும் ஆடல் பாடல்களில் கலந்துகொள்ள வேண்டும். கலை வாழ்க்கையைத் துறந்ததனால் இருவரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சினமுற்ற மாதவியின் தாய் சித்திராபதி, வயந்தமாலை என்பவளை அனுப்பி மாதவியை விழாவில் ஆடவருமாறு அழைக்கிறாள். மாதவியோ,

மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

Advertisment

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்

(ஊர் அலர் உரைத்த காதை: 55-57)

என்று கூறி மறுத்துவிடுகிறாள். மணிமேகலையைக் கற்பரசி கண்ணகியின் மகள் என்றும், அவள் தீயதொழிலில் ஈடுபடமாட்டாள் என்றும் அறிவிக்கிறாள்.

தீத்தொழிலை செய்ய மறுத்தலே அறம். மணிமேகலையின் குடும்பப் பின்னணியைக் கவனிக்கும்போது பொருள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த தாய், கணிகையே கதி என்று மோகத்தில் இருந்த தந்தை என்று அவளைக் குறித்ததான பிம்பம் தவறானதாகத் தோன்றலாம். ஆனால் சேற்றில் பிறந்த செந்தாமரையென ஊர் ஊராகச் சென்று உணவு அளிக்கும் பேரரறத்தை செய்தாள் மணிமேகலை.

உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்க வேண்டும் என்றால் உணவு வேண்டும்.

உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.இதனை,

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

(புறம் 18)

என்கிறார் குடபுலவியனார். இதை அடியொட்டி மணிமேகலையும்,

’உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’

என்கிறாள்.

சங்க காலத்தில் வாழ்ந்த குடபுலவியனார் உள்ளத்தில் தோன்றிய அதே அறச்சிந்தனை மணிமேகலை உள்ளத்திலும் தோன்றியிருக்கிறது. இவர்கள் காலத்தால் வேறுபட்டவர்கள். எனினும் கருத்தால் ஒன்றுபட்டவர்கள். உணவு அளிப்பது உயிருக்குப் பெருமை யான செயல் என்று பாண்டியனுக்கு அறிவுரை கூறியவர் சங்க காலத்தில் வாழ்ந்த குடபுலவியனார். அதை செயல் படுத்திக் காட்டியவள் மணிமேகலை. மணிமேகலையின் துறவு வாழ்க்கையை விரும்பாத சித்ராபதி உதயகுமாரனைத் தூண்டிவிடுகிறாள். இதனால் அரசன் மூலம் சிறைசெல்லும் நிலைமைக்குக் கூட மணிமேகலை தள்ளப்படுகிறாள். உதயணனின் தாய் மணிமேகலைக்கு மூன்று துன்பங்களை விளைவிக்கி றாள். மணிமேகலை அத்துன்பங்களிலிருந்து அறத் தோடு செயல்பட்டு விடுபடுகின்றாள். சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாகச் செய்கிறாள். செய்த தீமையை நினைத்து பயந்த உதயணனின் தாய் மணி மேகலையை வணங்குகிறாள். காமம், உயிர்க்கொலை, பொய் முதலானவற்றின் தீமைகளை அவளுக்கு எடுத்துரைக்கின்றாள் மணிமேகலை. மிக்க அறமே விழுத்துணை ஆவது என்கிறாள்.

(சிறைசெய் காதை: 135 - 138)

பசி எனும் நெருப்பு

பசி எனும் நெருப்பு ஒருவன் வயிற்றில் பற்றி எரியும்போது அதனை அணைப்பதற்கு பெயர்தான் ஜீவகாருண்யம் என்றார் வள்ளலார். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைந்த நாடுகள்கூட பசியை ஒழிக்கும் வழிதெரியாது முழிக்கின்றனர். மணிமேகலை காப்பியத்தின் தொடக்கத்திலேயே சாத்தனார், காப்பியத்தின் நோக்கத்தை, இந்திரவிழா புகார்நகரில் நடைபெறப் போவதை வள்ளுவன் முரசறைந்து தெரிவிக்கும் இடத்து, ஒருநாட்டில் முதலில் களையப்பட வேண்டியது பசி என்கிறார். இதனை,

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி

அணிவிழா அறைந்தான்.

(விழாவறைகாதை70, 72)-.

என்று உணர்த்துகிறார்.

1876- 78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியா வின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தைக் கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம், தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876- 78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இரு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளை (சென்னை, மைசூர், பம்பாய், ஐதராபாத்) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். இப்பஞ்சத்தின் விளைவாக பிரிட்டிஷ் அரசு பஞ்சக் குழுமத்தைத் தோற்றுவித்து பஞ்ச விதிகளை (எஹம்ண்ய்ங் ஈர்க்ங்) வகுத்தது. சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் பசிப் பிரச்சினையை உலகு நன்கறியும்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு

(குறள்.734)

என்று ஒரு நாட்டிற்கான இலக்கணத்தை வரையறுக்கிறார் வள்ளுவர்.

dd

பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பது ஔவையின் வாக்கு.

வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு பசி உணர்வைத் தந்ததும் வயிற்றுக்குச் சோறிட வேண்டும். இல்லை யேல் வயிற்றில் புண்களை ஏற்படுத்தி அசாதாரண நிலையை ஏற்படுத்திவிடும். நெருப்பை நீர் கொண்டு அணைத்துவிட வேண்டும். உலகில் உள்ள சில நாடுகளில் இன்றைக்கும் போதுமான உணவு இல்லாமையால் வறுமையும் பிணியும் பஞ்சமும் பட்டினியும் ஏற்படுகின்றன. இதனால் வலிமையற்று, பொறியற்று , உடல் மெலிவுற்று, கண்கள் மங்கி, உயிர் சுருங்கி

பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்

பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்

துஞ்சி மடிகின்றாரே - இவர்

துயர்கள் தீர்க்கவோர் வழியிலையே (பாரதி)-என்று கூக்குரலிடுகின்றனர். இந்நிலை மாற மணிமேகலையின் அமுதசுரபிகளின் அவசியம் மிகவும் தேவைப்படுகிறது.

சோறிடும் அறம் முதன்மையானது ஏன்?

இரு தாள்களை ஒட்டுவதற்குப் பசை தேவைப்படுகிறது.. உடம்பில் உயிர் தங்குவதற்கு, உடலையும் உயிரையும் ஒட்டுவதற்கு சோற்றுப் பசை தேவைப்படுகிறது. பெரியபுராணத்தில் 30-க்கும் மேற்பட்ட அடியார்கள் சோறிடும் அறத்தை விடாது செய்துவந்துள்ளனர். மனிதன் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைத்துக் களைத்து ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகிறது. உணவு உண்டால்தான் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். உடலின் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே அனைத்து உறுப்புகளும் செம்மையாகச் செயல்படும். உணவு உண்ட பின் மட்டுமே உடலில் உயிர் நிலை நிறுத்தப்படுகிறது. உணவின் மூலம்தான் உறுப்புகள் சீராக இயங்கமுடியும். ஆக முதலாவது இடத்தை உணவு தானம் (திடமும் திரவமும் கலந்தது) பெறுகிறது. பிற தானங்கள் அடுத்த இடத்தை அடைகிறது. உணவின்றி உறுப்புகள் இல்லை.

ஆபுத்திரன் மூலம் வெளிப்படும் அறம்

வாரணாசியில் வாழ்ந்த மறைகாப்பாளன் (அந்தணர்) அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் கிடத்திவிட்டுச் சென்று விட்டாள்.அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்குத் தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவ னாக்கினான். பெரியவன் ஆன ஆபுத்திரன் அவ்வூர் அந்தணன் தன் இல்லத்தில் செய்த வேள்வி ஒன்றில் பலியிட இருந்த பசு ஒன்றைக் காப்பாற்ற இரவோடு இரவாக அதனைக் கவர்ந்து சென்றான். அதனைக் கண்டுகொண்ட மறைகாப்பாளர் முரடர்களுடன் சென்று வழியில் மடக்கி, அடித்து “நீ அந்தணன் இல்லை. புலைமகன்” என்று திட்டி. அவனிடமிருந்த பசுவைக் கைப்பற்றிக்கொண்டனர். அப் பசு தன்னைக் கைப்பற்றிய அந்தணர் உவாத்தியைக் (ஆசிரியர் தலைவனைக்) கொம்பால் குத்தித் தள்ளிவிட்டு ஓடிவிட்டது..

ஆபுத்திரன் அறிவுரை

ஆபுத்திரன் அந்தணர்களுக்கு அறிவுரை கூறினான். பசும்புல் மேய்ந்து பால் தரும் பசு செய்த கொடுமை என்ன என வினவினான். “நீ ஆ புத்திரன் தானே! திருமால் தந்த மறைநூல் அறியாதவன்” எனச் சொல்லி ஆபுத்திரனை இகழ்ந்தனர். ஒடுக்கப் பட்டவர்கள்தான் ஒடுக்கப்படுகிறவர் துன்பத்தை உணரமுடியும்.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை

அந்தணர்களில் ஒருவன் ஆபுத்திரன் சாலி பெற்ற பிள்ளை என்னும் வரலாற்றை எடுத்துரைத்தான். பின்னர் ஆபுத்திரன் முனிவர் ஒருவர் தேவமகள் ஒருத்தியைப் புணர்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற கதையை எடுத்துக்காட்டித் தன் தாய் சாலியும் தவறிலள் என விளக்கினான்.

காணமுடியாதவர், கேட்கமுடியாதவர், நடக்கமுடியாதவர், பேணுநர் இல்லாதவர், குட்டம் போன்ற பிணிவாய்ப்பட்டோர் முதலானோர் பலருக்கும் உணவைக் கொடுத்து அறம் செய்தவன் ஆபுத்திரன்.

உணவிடுதல் அறம்

அடர் மழையின் இரவில் வழிப்போக்கர்கள் சிலர் கடும்பசியுடன் வந்து, ஆபுத்திரனிடம் கேட்க, அவர்களின் பசியைப் போக்க வழியறியாது திகைத்து வருத்தம் அடைகிறான். அதனை சாத்தனார்,

ஏற்று ஊண் வேற்றூண் இல்லோன்

ஆற்றுவது காணான் ஆர்ஆஞர் எய்த

(பாத்திரமரபு கூறிய காதை 7-8)

என்கிறார்.

"அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

(சிலப்பதிகாரம்: கொலைக்களக் காதை: 71-73)

என்று கூறிய கண்ணகியின் வார்த்தைகள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கவை. அவளுடைய வருத்தம் என்ன தெரியுமா? "என்னால் தர்மவான்களுக்கு உணவளிக்க முடியவில்லை. அந்தணரைப் பேண முடியவில்லை. துறவியரை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. நம்முடைய பழைய மரபுப் பெருமையான விருந்தினரை அழைத்துத் தக்கவற்றைச் செய்யமுடியவில்லையே என்பதுதான். கண்ணகியின் வாடிய பயிரைக் கண்டு வருந்தும் உள்ளத்தை ஆபுத்திரனிடம் உணரமுடிகிறது.

அருள் உள்ளம் கொண்ட ஒருவரால்தான் பிற உயிரின் துன்பத்தை நன்கு உணரமுடியும். தெய்வமாகிய சிந்தாதேவி, அமுதசுரபி பாத்திரத்தை ஆபுத்திரனின் பாத்திரம் அறிந்து கொடுக்கிறாள்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்

(குறள்.114)

என்கிறது குறள்.

அறம்வெல்லும்

ஆபுத்திரனால் தன்னிறைவு பெற்ற மக்கள் பசி நீங்கி செழிப்புடன் வாழ்ந்தனர். இறைவனைத் தேடு வதையே அவர்கள் மறந்துவிட்டனர். அத்தகையதொரு பூரண நிலையை அடையும் நேரம். உன்னிடத்தில் அன்பு கூர்வதுபோல பிறனிடத்திலும் அன்பு கூர்வாயாக என்ற இயேசு பெருமானின் வார்த்தை களுக்கு வடிவம் கொடுத்தான் ஆபுத்திரன். தேவர்களுக் குத் தலைவனாகிய இந்திரனையே தம் அறச்செயல் களால் அச்சம் கொள்ள வைத்தான். அறத்தை செய்யும் ஒருவன் நல்லவற்றின் பக்கம் எப்போதும் இருப்பான். அதனால் அவன் ஒருபோதும் எவரைக் கண்டும் அஞ்சுவ தில்லை. அமுதசுரபியைக் கொண்டு மக்களின் பசியைப் போக்கியதால் இந்திரன் கடுஞ்சினம் அடைந்து, பன்னி ரண்டு ஆண்டுகள் மழை இல்லா மல் இருந்த பாண்டிய நாட்டில் மழை பெய்யச் செய்தான். இதனால் பாண்டிய நாடு செழித்தது. அமுதசுரபியைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆபுத்திரன் தள்ளப்பட்டான். முதிய அந்தணன் வடிவில் வந்த தேவேந்திரனின் வார்த்தைகளும் வேலைகளும் ஒன்றுமில்லாமல் ஆபுத்திரனிடம் இல்பொருளா கின.

அறம் செய் மாக்கன் புறம்காத்து ஓம்புநர்

நல்தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்

யாவரும் இல்லாத தேவர் நல்நாட்டுக்கு

இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே.

(பாத்திர மரபு கூறிய காதை 40-43)

அறஞ்செய்வோர், ஏழைகளைக் காப்போர், தவம் செய்வோர், பற்றின்றி நிற்போர் எல்லோரும் இந்நிலவுலகில்தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் யாருமேயல்லாத உலகம்தான் இந்திரனாகிய தாங்கள் தலைவனாக இருக்கும் தேவர்நாடு என்கிறான் ஆபுத்திரன். அந்நாட்டைவிட அறம்செய்யும் இந்நிலவுலகமே சிறந்தது என்கிறான். மேலும், ஆபுத்திரன் அமுதசுரபியின் சிறப்பை, ’வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்துமுகம் காட்டும் என் தெய்வக் கடிஞை’ (பாத்திர மரபு கூறிய காதை 44-45)- பசியாறியவர்களின் முகங்களைப் பார்க்கும் போது, தேவர்கள் வாழும் உலகை விட சாதாரணமான இந்த இந்நிலவுலகமே சிறப்பானதாகத் தோன்றுகிறது என்கிறான் ஆபுத்திரன். தாம் செய்யும் அறத்திற்கு குறுக்கே யார் வந்து தடை போட்டாலும் அதனை முறியடித்து வெற்றிபெறுவான் என்பதை ஆபுத்திரனைக் கொண்டு சாத்தனார் நிறுவுகிறார். மேலும் கடவுளே வந்து அறச் செயலைத் தடுத்தாலும் நடுங்காமல் முன்னேறிச் சென்று அறத்தை செய்தான் ஆபுத்திரன் என்றும் நிறுவுகிறார் சாத்தனார். இனி சாவக நாட்டிலாவது அமுதசுரபியைக் கொண்டு நல்லது செய்யலாம் என்று எண்ணி புறப்படுகிறான். மணிபல்லவத் தீவில் தன் அறத்தை செய்ய முடியவில்லையே என பலவாறாக ஆபுத்திரன் வருந்துவதாக சீத்தலைச் சாத்தனார்,

மன் உயிர் ஒம்பும் இம் மாபெரும் பாத்திரம்

என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்.

(பாத்திர மரபு கூறிய காதை 87-88)

என்று கூறுகி றார். தன்னை மட்டும் பேணி வாழும் சுயநல வாழ்க்கையை வாழவிரும்பாதவன் ஆபுத்திரன். அதனால்தான் அறம் செய்யா மல் இருப்பதைவிட இறப்பதே மேல் என்று எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் நீங்குகிறான்.

தனக்குப் பிறகு தன்னிடம் இருந்த அமுதசுரபி பாத்திரம் உண்மைமிக்க மனிதரிடம் அதாவது பொருத்தமான ஒருவரிடம் சென்றுசேர வேண்டும் என்று இறைவேண்டல் செய்து பொய்கையில் ஆபுத்திரன் விட்டுச்சென்றான். கடமையில் தவறாதிருத்தலும் அறமாகும். இதனை,

அருள் அறம் பூண்டு ஆங்கு உயிர் ஓம்புநர்

உளர் எனில் அவர் கைப புகுவாய்

(பாத்திர மரபு கூறிய காதை 93-94)

என்று சாத்தனார் குறிப்பிடுகிறார்.

நிறைவுரை

மணிமேகலையில் அறம் எனும் இத்தலைப்பு, அறம் என்பதற்கான தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறது.

மணிமேகலையின் மூலம் வெளிப்படும் அறம், ஆபுத்திரன் மூலம் வெளிப்படும் அறம் என்று இரண்டு பகுப்புகளாக இத்தலைப்பு ஆராயப்பட்டிருக்கிறது.

பசியின் விளைவுகளும் அதைப் போக்க மணி மேகலையின் தீர்வும் கூறப்பட்டிருக்கிறது.

சோறிடும் அறத்தின் இன்றியமையாமை விவரிக் கப்பட்டிருக்கிறது.

அறம் வெல்லும் என்பதனை மணிமேகலை காப்பி யத்தில் ஆபுத்திரன் வரலாறு உறுதிப்படுத்துகிறது.