சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதில் கலை- இலக்கியத்திற்குப் பெரும் பங்குண்டு. கலை- இலக்கியத்திற்குக் காரணமான கலைஞர்களையும், படைப்பாளிகளையும் கொண்டாடும் சமுதாயம் நாகரிகத்துடன் உயர்ந்து நிற்கும். ஒரு படைப்பாளனுக்கு அல்லது ஒரு கலைஞனுக்கு விருதுதருவதாலும், பட்டங்கள் வழங்குவதாலும் மட்டுமே அந்தப் படைப்பாளியை அல்லது கலைஞனைக் கௌரவித்ததாக ஆகிவிடாது. அதைத் தாண்டி அந்தப் படைப்புகள் பேசுபொருளாக மாறும்போது அந்தப் படைப்பாளி அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த வகையில் கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒரு தமிழ்க் கவிஞனை உலகக் கவிஞனாக அடையாளம் காட்டியது என்றே சொல்லவேண்டும்.
கவிஞர் வைரமுத்துவின் எல்லா படைப்புகளையும் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகள் வழங்கும்விதமாக அமைந்த ‘வைரமுத்தியம்’ என்ற கவிப்பேரரசு வைரமுத்துப் படைப்பிலக்கியம் குறித்த பன்னாட் டுக் கருத்தரங்கம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சென்ற மார்ச் மாதம் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கருத்தரங்கில் வெளிநாட்டிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டது கூடுதல் சிறப்பு சேர்த்தது. இது உலகளவில் தமிழ்மொழிக்குக் கிடைத்த மரியாதையாகவே பார்க்கப்பட்டது. சென்னை, எம்.ஆர்.சி. நகரிலுள்ள லீலா பேலஸில் நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்தியம் என்ற ஆய்வுக் கோவையை வெளியிட மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஆதரவு கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
இலக்கிய வாழ்க்கையில் அரை நூற்றாண்டைக் கடந்தும் உயிர்ப்போடு இயங்கக்கூடிய கவிஞர் வைரமுத்து ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற ஒப்பற்ற படைப்புக்காகச் சாகித்திய அகாதெமி விருது வென்றார்.
இலக்கியப் பங்களிப்புக்காக பத்ம விருதுகளைப் பெற்ற இவரிடம் தேசிய விருது ஏழுமுறை அடைக்கலமானது என்பதே உண்மை! இந்தியப் பாடலாசிரியர்களில் இப்படி ஒரு சாதனையைச் செய்த ஒரே பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரைத் தமிழ்நாடு அரசும் ஆறுமுறை விருது வழங்கி அங்கீகரித்திருக்கிறது. தமிழின் மரபார்ந்த தளத்தில் நின்றுகொண்டு புதுமை உத்திகளைக் கையாண்டு வெற்றிபெற்றவர். சங்கக் கவிதையாகவும், சந்தக் கவிதையாகவும் படைக்கப்படும் இவரின் சொந்தக் கவிதை இன்று வரை புதுமை மாறா மல் படைக்கப்பட்டு வருவது படைப்பின் உச்சம்.
வைரமுத்துவின் படைப்புகள் எதைப் பேசும் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில்… புலம்பெயர் மக்களின் உணர்வுகளை வடித்துத் தருவதில் வெற்றிபெற்றவை இவரின் படைப்புகள். ஓர் இயற்கை ஆர்வலராகப் புவிவெப்பமடைதல் குறித்த பதற்றத்தைப் படைப்புகளாக்கி, அதனால் விழிப்புணர்வைக் கொண்டுவரவும் தவறியதில்லை. இவர் அரசியலில் இல்லாதபோதும் இவருடைய படைப்புகளில் அரசியல் ஊடாடிக் கிடக்கிறது. ஆனா லும் படைப்புச் சுதந்திரத்திற்காக அரசியல் கனவைக்கூடத் தள்ளிவைத்தார்.
கல்லூரியில் படிக்கும்போதே, கல்லூரிப் பாடத்திட்டத்தில் இவரின் ‘வைகறை மேகங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு பாடமாக்கப்பட்டது. வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசிய கீதம் என்று தொடங்கி வானம் தொட்டுவிடும் தூரம்தான், என் ஜன்னலின் வழியே, மௌனத்தின் சப்தங்கள், சிற்பியே உன்னை செதுக்குகிறேன், இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள், ஆயிரம் பாடல்கள், தமிழாற்றுப்படை என்று தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன இவரின் எழுத்துக்கள். கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலுக்குப் பிறகு கவிஞரின் எழுத்துக்கள் புதிய பாய்ச்சலோடு புறப்பட்டன என்று ஆய்வுலகம் கருதுகிறது.
அப்படிப்பட்ட படைப்புகளை ஆராயும் நோக்கில் ஒருநாள் நிகழ்வாக நடந்த பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கவிதை, நாவல், கட்டுரை, பாடல்கள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர் பெருமக்கள் வழங்கினர்.
கவிதைகளில் சங்க இலக்கிய கட்டமைப்பு, குறியீடுகள், உலக மானுடம் என்றும் நாவல்களில் வட்டார வழக்கு, மண்ணும் மக்களும், பண்பாட்டுப் பதிவுகள் என்றும் திரைப்பாடல்களில் அறிவியல் ஆளுமை, பெண்ணியம், மரபு சாரலும் மரபு மீறலும் என்றும் கட்டுரைகளில் தமிழ் நடை, இலக்கிய வரலாறு என்றும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் பெறப்பட்டன.
இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் உரையாற்றிய கருத்தரங்கை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தொடங்கி வைத்தார். நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கம், ஆய்வரங்கத்தின் கூறுகளை உள்ளடக்கிய தொய்வில்லாத நிகழ்ச்சி என்றே கூறவேண்டும். சிங்கப்பூர், மலேசியா, சீனா ஆகிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், இந்திய நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கருத்தரங்கத்தில் உரையாற்றியது தனி கவனம் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபு - பாரசீகம் - உருதுத் துறைத்தலைவர் முனைவர் அ. ஜாகிர் ஹூசைன் வைரமுத்துவின் கவிதையை அரபு மொழியில் சொல்லி எல்லோருடைய கரவொலியைப் பெற்றார். ‘கருவாச்சி காவியத்தில் நாட்டுப்புற மருத்துவம்’ என்ற தலைப்பில் அமைந்த சாத்தூர், இராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் வே. தனுஜாவின் கட்டுரை தமிழர்களின் மருத்துவத்தைக் கோடிட்டுக் காட்டியது.
நாவல்களில் நடையாடும் கவிதைச் சாயலை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கிய விதம் அழகிய கட்டுரையாக இனித்தது. வள்ளுவர் கருத்துடன் கவிஞர் வைரமுத்து நிற்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் வள்ளுவர் இவரின் கருத்துடன் நிற்கிறார் என்று சொல்லி வியப்பைத் தந்தார் தமிழ்நாடு பாடநூற் கழக இணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன்.
‘‘பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்”
என்ற குறளை வைத்து, இசை முக்கியமா அல்லது கவிதை வரிகள் முக்கியமா என்று கவிஞர் வைரமுத்துவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குக் கவிதை வரிகளின் மேன்மையைக் கவிஞர் கூறியதை நினைவுபடுத்தியவாறு வள்ளுவரும் கவிஞர் பக்கம் நிற்கிறார் என்றார். அதாவது பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை என்ற வள்ளுவத்தின் சிறப்பையும், கவிஞரின் எண்ணவோட்டத்தையும் விளக்கினார்.
தமிழ்மொழி தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் கட்டுரை வழங்கிய பேராசிரியர்கள் தமிழ்ப் படைப்புகள் மீது தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத் தினர். எழுத்தாளரும், விமர்சகருமான ந. முருகேச பாண்டியன் திரையிசைப் பாடல்களில் காணலாகும் இலக்கிய நயத்தை விருந்து படைத்தார். சீன பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் நிறைமதி, இணைய வழியில், தன் சீனத்தமிழில் கட்டுரையை வாசித்தார். தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் புகழ்சேர்க்கும் விழாவாக இந்தக் கருத்தரங்கம் அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
தமிழின் புகழை உலகமெங்கும் கொண்டுசேர்த்த கவிஞருக்கு மாண்புமிகு முதல்வர் புகழாரம் சூட்டியதுடன்,
கலைஞர் தான் ‘கவிப்பேரரசு’ என்ற பட்டம் வழங்கினார் என்பதையும் நினைவுகூர்ந்தார். தமிழ் இலக்கிய வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல், வரலாறு, பயணக் கட்டுரை, திரைக்கதை என எல்லாத் துறைகளிலும் கால் பதித்த இவர், மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார் என்பதையும் தவறாமல் குறிப்பிட்டார்.
தமிழுக்குப் பெருமை சேர்த்ததால் நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும், திராவிடக் கருத்தியலுக்கு வலுச் சேர்த்ததால் தி.மு.க.வின் தலைவர் என்ற முறையிலும், தலைவர் கலைஞரை இலக்கிய ஆசானாக ஏற்றதால் அவரின் மகன் என்ற பாச உணர்விலும், நான் விரும்பிக் கேட்கும் பாடல்கள் தந்தவர் என்பதால் ஒரு ரசிகன் என்ற முறையிலும் வாழ்த்தினார், பாராட்டினார்.
மேலும் நூறாண்டு கடந்தும் வாழவேண்டும் என்று மனம் திறந்து வாழ்த்தினார். விழாவில் முதல்வர் வெளியிட்ட வைரமுத்தியம் நூலை நாடாளுமன்ற உறுப்பினரும், பாரத் பல்கலை வேந்தரு மான எஸ். ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டு வர்ணனைத் தமிழில் தன் வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொண்டார்.
யாராலும் அடக்க முடியாத ஐம்பூதங்களை ஒரு கவிஞன் அடக்கிவிட முடியும் என்பதற்கு சாட்சியாக வெளிவந்த நூல் மகாகவிதை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நூலை வெளியிட்டபோதே முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். அதை நிறைவேற்றும் வகையில் முனைவர் மறைமலை இலக்குவனார் மொழிபெயர்த்த ஆங்கில நூலை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ எம். சரவணன் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைவாக ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து, மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக நெகிழ்ச்சி அடைந்தது தமிழ்ப் படைப்பாளர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. ‘
எனக்கு வெளிச்சம்போட ஆளில்லை என்பதால் என் விரல்களைக் கொளுத்தி நானே மெழுகுவத்தி ஏற்றிக்கொள் கிறேன்”, என்றும் ‘‘என்னை உங்கள் வீட்டுத் தேநீருக்கு அழையுங்கள்” என்றும் நெகிழ்ந்து பேசியபோது அரங்கமே உறைந்து போனது.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டதும் ஒரு கவிஞனைக் கொண்டாடு வதற்காகவே! ஆய்வுக் கோவை யைச் சிறப்பாக அச்சிட்டது முதல் கருத்தரங்கத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்த டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் மு. வேடியப்பன், கவிஞர் பாஸ்கர் மற்றும் கேசவன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்! அடுத்த கருத்தரங்கம் எப்போது நடக்கும் என்ற ஆர்வத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.