’யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’
என்றும் சொல்கிறது வள்ளுவம். யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் தங்கள் நாக்கை அடக்கி, தங்கள் மானம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவமானப்பட்டு, எல்லோரின் தூற்றுதலுக் கும் ஆளாக நேரும் என்று எச்சரிக்கை மணியையும் அது அடிக்கிறது.
ஆனால் கவர்னரோ, ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் தூற்றுதலுக்கு இன்று ஆளாகி யிருக்கிறார். தெரியாத விசயத்தில் எல்லாம் மூக்கு நுழைத்து கண்டதையும் அவர் உளறிக்கொட்டுகிறார்.
’பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.’
என்ற குறளின் படி,
அவர் இப்போது எல்லோராலும் இகழப்படும் நிலைக்கு வந்திருக்கிறார்.
ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லாத ஒன்று என்றார் அறிஞர் அண்ணா. அப்படி தமிழகத்தின் ஆட்டுக்குத் தாடியாக வந்திருக்கும் ரவி, எல்லாவற்றிலும் அத்து மீறுகிறார். அடாவடியாகச் செயல்படுகிறார்.
’அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.’
என்ற குறளின் எச்சரிக்கையை அறியா மல், அவர் ஆடினால், அது அவருக்கே கேடாகத்தான் முடியும்.
மாநில அரசையோ, மாநில மக்களின் உணர்வுகளையோ மதிக்காமல், மதிப்புவாய்ந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எல்லாம், தன் காலடியில் போட்டுக்கொண்டு, கவர்னர் ரவி மமதையாக அமர்ந்திருக்கிறார். போதாக்குறைக்கு தமிழக அரசோடு போட்டி போட்டுக்கொண்டு, தனியாக ஒரு அரசாங்கத்தை நடத்துவதாக நினைத்துக்கொண்டு, பல்கலைக்கழக நிர்வாகங்களிலும் கூத்தடிப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இப்போது தமிழ் மொழியோடும் தமிழ் இலக்கியங்களோடும் தமிழர் களின் உணர்வுகளோடும் விளையாடவும் ஆரம்பித்திருக் கிறார் கவர்னர். அதைத்தான் ஒட்டுமொத்த தமிழர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
கவர்னர் அப்படி என்ன செய்தார்?
*
கடந்த 26-ஆம் தேதி டெல்லியில் உள்ள சீனியர் செகண்டரி பள்ளியின் விழாவுக்குப் போனார். அங்கு திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தார். திறந்து வைத்தவர், தனக்குத் தெரிந்த எதையாவது பேசிவிட்டுப் போயிருக்கலாம்.
அதை விட்டுவிட்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல், திருக்குறளைப் பற்றியும், அதன் மூலாதாரக் கோட்பாடு பற்றியும் இஷ்டம்போல் பினாத்தி இருக்கிறார். தமிழே தெரியாதவர் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசுகிறாராம்.
அந்த விழாவில் பேசிய கவர்னர் ரவி, "திருக் குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப். அவருடைய மொழிபெயர்ப்பு இந்தியாவின் ஆன்மிக ஞானத்தை சிறுமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. திருவள்ளு வர் ஓர் ஒளிமிக்க ஆன்மிகவாதி. ஆனால் குறளை மொழிபெயர்த்த ஜி.யு. போப் அதிலுள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். திருக்குறளை வெறும் வாழ்வியல் அறநூல் என்பதுபோல் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக் கிறார்.
அதுமட்டுமல்லாமல், திருக்குறள் ஓர் இதிகாச நூல். அதில் ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. ஆதிபகவன் என்ற மையக்கரு ரிக் வேதத்திலிருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத் தின் மையப்புள்ளி. ஆனால் அதன் ஆன்மாவை, ஜி.யு. போப் வேண்டு மென்றே தனது மொழிபெயர்ப்பில் சிதைத்துள்ளார்.''
என்று வீரதீரத்தோடு, கிறிஸ்தவரான ஜி.யு.போப்புக்கு எதிராகப் பொங்கியதோடு, திருக்குறளின் உயரத்தையும் குறைத் துக்காட்ட முயன்றிருக்கிறார்.
திருக்குறள் நூலைக் கொடுத்தால் அதை நேராகப் பிடிக்கக்கூடத் தெரியாத ரவி, தன்னை அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு உளறிக் கொட்டியிருக்கிறார்.
ஒருவரை டெல்லி நினைத்தால் ஆளுநர் ஆக்கலாம். அறிவாளியாக்க முடியாது என்பதை ராஜ்பவன் தெரிந்துகொள்ள வேண்டும்.
திருக்குறள் என்றால் அது உலகப் பொதுமறை என்றும் அது உலகம் போற்றும் அறநூல் என்றும் சின்னக்குழந்தைகள்கூட சொல்லும். அனைவரும் உலகப் பொதுமறையாகத் திருக்குறளைப் போற்றுகிறார்கள்.
ஆனால் கவர்னர் ரவியோ, திருக்குறள் ஒரு ஆன்மீக நூல் என்றும், அது ஒரு இதிகாச நூல் என்றும் உளறிக்கொட்டி, உலகப் பொதுமறையை ஒரு சின்னச் சிமிழில் அடைக்க முயன்றிருக்கிறார். இப்படி ஒரு பயனற்ற வாதத்தை வைத்திருக்கிறார் கவர்னர் ரவி.
’பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
குழப்பமில்லாத, மாசில்லாத அறிவுடையோர், மறந்தும்கூட பயனற்ற கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். இதன் மூலம் கவர்னரைப் போன்றவர்கள் அறிவாளர்கள் இல்லை என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.
கவர்னர் சொல்வதுபோல் திருக்குறள் ஆன்மீக நூலா?
இல்லை. அது ராமநாமத்தையா பாராயணம் பண்ணச் சொல்கிறது? அனுமனுக்கு ஆலயம் அமைக்கச் சொல்லியா அது கெஞ்சுகிறது? சிவன், விஷ்ணு, விநாயகர் என்றெல்லாம் இங்கு உருவாக்கி வைத்திருக்கும் கடவுள்களை எல்லாம் வணங்கச் சொல்லியா அது வற்புறுத்துகிறது? இல்லவே இல்லை.
ஏனென்றால் திருக்குறள் அரைகுறைகளின் நூல் அல்ல. அற நூல்!
அது அனைவரையும் கல்வி கற்கச் சொல்கிறது. சாதிமத வேறுபாடுகளைக் களையச் சொல்கிறது. அன்பை வலியுறுத்துகிறது. ஒழுக்கத்தைப் போதிக்கிறது. நல்வழியில் நடக்கச் சொல்கிறது. உண்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்கச் சொல்கிறது. இல்லாதவர்க்குக் கொடுக்கச் சொல்கிறது. விருந்தோம்பலை வலியுறுத்துகிறது. நற்பண்புகளால் மேன்மையுற வேண்டும் என்று முழுக்க முழுக்க நீதியின் குரலையே திருக்குறள் எதிரொலிக்கிறது. அப்படி இருக்க, திருக்குறள் எப்படி ஆன்மிக நூல் ஆகும்?
அதேபோல், திருக்குறளை இதிகாசம் என்று முத்திரை குத்துகிறார் கவர்னர். இப்படி முத்திரை குத்துவதற்கும், அது ஒன்றும் ஒழுக்கமற்ற, வரம்பு மீறிய புனைகதைகளைப் போதிக்கவில்லை.
திருக்குறளை இதிகாசம் என்று கவர்னர் சொல்வது பொய். வேண்டுமென்றே அவர் புனைகிற பொய். இப்படி பொய் சொன்னால் என்ன ஆகும்?
அதற்கும் இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும் என்கிறார்.
’தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.’
ஆனால், இந்தக் குறள் மனசாட்சி இருப்பவர்களுக்கு தானே என்று சிலர் முணு முணுப்பதும் கேட்கிறது.
இறைப் பாத்திரங்களை வைத்துக்கொண்டு திருவள்ளுவர் ஒன்றும் கொக்கோக சாத்திரங்களை எழுதவில்லை. எனவே, திருக்குறளை இதிகாசம் என்று கவர்னர் சிறுமைப்படுத்துவதை எவராலும் ஏற்கமுடியாது.
உண்மையில் சொல்லப்போனால், திருவள்ளுவர், கடவுள் நம்பிக்கை அற்றவர். அகிம்சையைப் போதிக்கும் சமணவாதி. அவர் ஒரு அறநெறி போதிக்கும் அருளாளர்.
சமணர்கள் போற்றும் 24 தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரையே, வள்ளுவர் ஆதிபகவன் என்று குறிப்பிட்டார் என்ற கருத்து இங்கே நிலவுகிறது. இன்னொரு புறம், கடவுள் வாழ்த்து அதிகாரத்தை வள்ளுவரே எழுதவில்லை. பிற்சேர்க்கையாக யாரோ ஒருவரால் அது எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான வ.உ.சி. உள்ளிட்டோர் எடுத்துச் சொல்கிறார்கள். அப்படி இருக்க, வள்ளுவர் சொல்லும் ஆதிபகவன் என்பது ரிக்வேதத்தில் சொல்லப்படும் தெய்வம் என்று காற்றில் கயிறு திரிக்கிறார் கவர்னர்.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்’
என்று சனாதன நால்வர்ணத்துக்கு எதிராக, உயிர்களுக்குள் வேறுபாடு இல்லை முழக்கமிட்டவர் வள்ளுவர்.
’இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’
என்றெல்லாம் பகுத்தறிவின் சிகரத்தில் ஏறி சிந்தித்தவர் அவர்.
’அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்’
என்று வாழ்க்கையின் போக்கு பற்றி சிந்தித்த மனிதத்துவர் வள்ளுவர்.
அப்படிப்பட்ட வள்ளுவப் பேராசானை, இந்துமதப் பிரச்சாரகராக மாற்ற முயன்றிருக்கிறார் கவர்னர். இதை எப்படி அனுமதிப்பது?
அதோடு, ஜி.யு.போப், திருக்குறளை அறநூலாகக் காட்டியதன் மூலம் இந்தியாவின் ஆன்மீக மையத்தை சிதைத்துவிட்டார் என்றும் முக்கி முனகி முகாரி பாடியிருக்கிறார் கவர்னர்.
இதிலிருந்து ஜி.யு.போப் பற்றியும் ராஜ்பவன் சாருக்கு எதுவும் தெரியவில்லை என்பது தெரிகிறது.
ஜி.யு.போப் ஆன்மீகத்துக்கு எதிரானவர் அல்ல. பக்தி இலக்கண மான திருவாசகத்தில் மனமுருகிப்போய், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர். அப்படிப்பட்டவர் ஆன்மீகத்தைச் சிதைத்துவிட்டார் என்று கவர்னர் குற்றம் சாட்டுகிறார்.
ஆன்மீக ஈடுபாடு கொண்டவராக ஜி.யு.போப் இருந்தபோதும், அவர் திருக்குறளுக்கு வேண்டுமென்றே ஆன்மீக வண்ணத்தையோ காவி வண்ணத்தையோ பூசவில்லை. காரணம் அப்போது ஆர்.எஸ்.எஸ். கூட்டமோ, சங்பரிவார் அமைப்புகளோ, பா.ஜ.க. மேதாவிகளோ இல்லை. அதனால் அவர் வரலாற்றைத் திரிக்காமல்... உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறார்.
நல்லவேளை ஜி.யு.போப் இன்று இருந்திருந்தால், அவரையே ராஜ்பவனில் உட்காரவைத்து, அவர் மூலம் தமிழிலக்கியங்களை எல்லாம் புராண இதிகாச இலக்கியங்கள் என்று அறிவிக்க வைத்தாலும் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட மோடி மஸ்தான் வித்தைகள் அரங்கேறி இருக்கும். நல்லவேளை ஜி.யு.போப், இவர்கள் காலத்தில் பிறக்காமல் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு விட்டார்.
*
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர், இதிகாசமோ புராணமோ எழுதிக்குவிக்க வில்லை. மாறாக, நிறம், மொழி, சாதி, மதம் இனம் முதலான எல்லைகளைக் கடந்த சிந்தனையாளராக, உலகிற்கே நல்வழி காட்ட திருக்குறளை நீதி நூலாகப் படைத்தவர். அதனால்தான் அதை உலகப்பொதுமறை என்று உலகமே போற்றுகிறது.
ஜெர்மானிய அறிஞரான ஆல்பர்ட் சுவிட்சர், “வாழ்க்கைக்குத் தேவையான அன்பு நெறியைக் கூறும் உயர்ந்த நூல். இதுபோன்ற ஒரு நூல் உலக இலக்கியத்தில் இல்லை” என்று திருக்குறளை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்
”இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்’
என்ற திருக்குறளை, உலகின் மாபெரும் சிந்தனை என்று பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார்.
உலகம் போற்றும் நாடக மேதை பெர்னாட்சாவோ
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
-என்ற குறளை, தான் பேசுகிற இடங்களில் எல்லாம் எடுத்துச் சொல்லி நெகிழ்ந்திருக்கிறார்.
உலகமே திருக்குறளை அரிய அறநூலாக திருக்குறளைத் தலையில் வைத்துக் கொண்டாடும்போது, கவர்னர், அதை ஆன்மீக நூல் என்று கூறி, தான் ஒரு ஞான சூனியம் என்று அவராகப் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறார்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சங்கப்புலவர்கள் பலரும் திருக்குறளை அறநூல் என்றே போற்றியிருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் திருக்குறளில் தெரியாத ஆன்மீத தரிசனம், கவர்னரின் காவிநிறக் கண்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது என்றால் அது அவரது மனக்கோளாறன்றி வேறில்லை.
1820 ஏப்ரலில் கனடாவில் பிறந்த ஜி.யு.போப், இறைப் பணிக்காகத்தான் இங்கே வந்தார். தமிழின் இனிமையில் சொக்கிப்போய் தமிழறிஞராகவும் தமிழ்ப் படைப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் மாறியவர் அவர். திருக்குறள், நாலடியார்,
திருவாசகம் உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெருமகன் போப். தமிழ்க் காதலராக இருந்த அவர், தனது கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்ற வாசகத்தைப் பொறிக்கச் சொன்னவர். அப்படிப்பட்ட பேரறிஞரை, பதவிக்காக எதையும் செய்யும் கவர்னர் இழிவுசெய்திருக்கிறார். இதைத் தமிழுலகம் மன்னிக்காது.
-ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்