இயற்கை மிகப்பெரிய ஜனநாயகவாதி.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதில் என்றுமே கவனம் செலுத்தி வருகிறது. உயிர்களின் அடிப் படைத் தேவைகளான உணவு, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றை உறுதிசெய்வதில் எப்போதும் தவறியதே இல்லை. இயற்கையுடன் இணக்கமாக வாழும்போது இந்த வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது. ஆனால் எல்லா உயிர்களுக்கும் சமமான வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது என்ற உணர் வில்லாமல், ஆதிக்க மனநிலையுடன் வாழ முற்படும்போது சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் மலிந்துவிடுகின்றன.
பிறப்பின் வழியாகவே ஒருவர் உயர்ந்த இடத்தை அடைந்துவிடமுடியும் என்பது இயற்கைக்கு எதிரானது மட்டுமல்ல... அறிவியலுக்கும் புறம்பானது. தன் சமூகத்தை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநிலை கொண்டவர்கள் சூழ்ச்சியின் காரணமாகப் பொதுச் சமுதாயத்தில் பகுத்தறிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது மிகப்பெரிய அநியாயம். இதன் தொடர்ச்சி யாக, சக மனிதனை விலங்குபோல் நடத்தும் முறையை இன்றளவும் பார்த்துக்கொண்டி ருக்கிறோம். சமத்துவமான சமுதாயம் வளர எத்தனையோ சிந்தனையாளர்களும் சீர் திருத்த வாதிகளும் இந்த மண்ணில் தோன்றிக் கொண் டே இருக்கின் றனர். தங்கள் வாழ்க்கை யையே சமுதாயத்திற்காக ஒப்புக்கொடுத்த அவர்களை ஒரு தத்துவமாகக் கருதி இந்த உலகம் கொண்டாடிவருகிறது. அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் களுடைய பெயரை உச்சரிக்கும்போதே ஆதிக்க மனநிலை கொண்டவர்கள் பதற்றமடைகின்றனர்.
எங்கோ ஈரோட்டில் பிறந்து வெறுமனே ஈ.வெ. ராமசாமியாக இருந்தவரை ‘பெரியார்’ என்றே அழைக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டு நிறைவேற்றிய பெருமை பெண்கள் மாநாட்டுக்கே உண்டு. இந்த நூற்றாண்டிலும் தவிர்க்கமுடியாத தத்துவமாக ‘பெரியாரியம்’ வேரூன்றி இருப்பதால், தமிழ் மண்ணில் கால்பதிக்க முடியாமல் தவிக்கும் பாசிச கொள்கை எத்தனையோ குறுக்குவழிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. பெரியாரின் சிலையைப் பார்க்கும்போதே அச்சப்படும், தீண்டாமையைத் தூக்கிப் பிடிக்கும் அந்தக் கும்பல் அவரின் சிலைகளைச் சேதப்படுத்த முயல்கிறது.
அந்தச் சிலைகளை அசிங்கப்படுத்தவேண்டும் என்று இரவோடு இரவாக நாசகாரியங்களை அரங்கேற்றி வருகிறது.
தெய்வ பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்து, பல்வேறு பதவிகளை வகித்து, சுகபோக வாழ்க்கை வாழவேண்டிய ஒருவர் மனிதாபிமானத்தைவிட சிறந்தது வேறொன்றும் இருக்கமுடியாது என்பதற் காகத் தன்னுடைய வாழ்வையே பணயம் வைத்த வரலாறுதான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை. நான் சொல்லக்கூடிய கருத்துக்களை அப்படியே கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கும் தலைவர்களுக்கு மத்தியில், உன் அறிவுக்குச் சரியாகப்படும் கருத்துக் களை மட்டும் ஏற்றுக்கொள். உன்னுடைய அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்று தோன்றினால் அதை பெரியாராகிய நான் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று துணிவுடன் எடுத்துச் சொன்னவர். எத்தனையோ கூட்டங் களில் அவரைப் பேச விடக்கூடாது என்பதற்காக அவர் மீது சாணத்தையும், மனித மலத்தையும் வாரி இறைத்த இந்தச் சமூகத்தில் எல்லோருக்கு மான சுயமரியாதையைப் பெற்றுத் தரவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு செயல் பட்டார்.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் மனம் புண்படும்படியாக, நாம் பேசும் தமிழ் மொழியை இழிவுபடுத்தி, கோயில் கருவறைக் குள் நின்று பூசை செய்யும் பார்ப்பனர்களைச் சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஒரு பக்கம் பெண் விடுதலையைப் பேசிக் கொண்டே, இன்னொரு பக்கம் தன்னைவிட மிகச் சிறிய வயதில் இருக்கும் மணியம்மையைத் திருமணம் செய்துகொண்ட ஒருவரை ‘பெரியார்’ என்று அழைக்கவேண்டிய அவசியம் என்ன? இவரைச் சமுதாயம் கொண்டாடவேண்டிய கட்டாயம் என்ன? சமுதாயத்தில் எப்போதும் கலகம் செய்பவராக இருக்கக்கூடியவரை அந்தச் சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாக எப்படிக் கருத முடியும்?
திராவிட சித்தாந்தத்தைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சமத்துவத்திற்கு, சமூகநீதிக்கு, பெண் விடுதலைக்கு ஆதரவான மக்கள் நலத்திட்டங்கள் பெரியார் கொள்கைகளிலிருந்தே உயிர் பெற்றன! அப்படி யென்றால் அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு களில் உண்மை இல்லையா? பொதுமக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கைக் கெடுப்பதற்காகவே அவர் மீதான அவதூறுகள் இன்று வரை தொடர்கின்றன என்பதைப் பொதுச் சமுதாயம் புரிந்துகொள்ளும் நாள் விரைவில் வரவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
கிராமங்களை ஒரு நாட்டின் ஆன்மாவாகப் பார்க்கும் சூழலில் கிராமங்களில் இருந்து வெளியேறுங்கள் என்று பேசிய பெரியார் சமுதாயத் தின் எதிரிதான். செய்த பாவத்தின் விளைவாகத் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருக்கிறேன் - மாற்றுத்திறனாளியாகப் பிறந்திருக்கிறேன் என்று நம்பும் சமூகத்தில் முற்போக்குக் கருத்துக்களை வலியுறுத்திய பெரியார் சமூகத்தின் எதிரிதான். நான் வணங்கும் கடவுளைத் தவிர வேறு தெய்வத்தை வழிபடுபவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று ஆவேசம் கொள்பவர்கள் மத்தியில் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொள்ளவேண்டும் என்று போதித்த பெரியார் சமுதாயத்தின் எதிரி தான்.
காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை தன் குடும்பத்திற்காகவே உழைத்துத் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட காலத்தில் பெண் விடுதலையைப் போற்றிய பெரியார் சமுதாயத்தின் எதிரிதான். எல்லாம் விதிப்படியே நடக்கும் நம் முயற்சியால் ஆகப்போவது ஒன்று மில்லை என்று கற்பிக்கப்பட்ட இடத்தில் உழைக்கும் மனிதனுக்கு அதற்கான பயன் கிடைக்கவேண்டும் என்று போராடிய பெரியார் சமுதாயத்தின் எதிரிதான்.
தேர்தல் அரசியல் வழியாகச் சமூக மாற்றத் தைக் கொண்டுவர முடியும், சமத்துவத்தை நிலை நாட்ட முடியும், புரட்சிகரமான செயல்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்பும் சமூகத்தில் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டாம், ஆட்சியில் தவறுகள் நடந்தால் சுட்டிக் காட்டித் திருத்துவதற்குத் தேர்தல் அரசியலைத் தவிர்ப்போம் என்று நீதிக் கட்சியைக்கூட திராவிடர் கழகமாக மாற்றிய பெரியார், சமுதாயத்தின் எதிரிதான். திராவிடர் கழகத்தின் நோக்கம் என்ன என்பதை 05.01.1953-இல் அவர் ஆற்றிய உரையிலிருந்தே புரிந்து கொள்ளலாம். "பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகமும், நானும் சொல்லுவதெல்லாம், விரும்புவதெல்லாம் நாங்களும் கொஞ்சம்- வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்கவேண்டும் என்பதுதான்' என்ற அவரின் உரையை உண்மை மாறாமல் சொல்லக் கூடிய திராணியற்றவர்கள் பொய்ச்சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக்கொள்கின்றனர். உண்மையை மாற்றிப் பொய்யாக்க முயற்சிக்கின் றனர்.
எல்லோருடைய மூளைக்குள்ளும் கண்ணுக் குத் தெரியாத சாதிய இரும்பு விலங்குகள் பூட்டப் பட்டிருக்கின்றன. இதனால்தான் நாட்டு விடுதலைக் காக உழைத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்து கிறோம் என்ற பெயரில் அவர்களைச் சாதிய சட்டத்திற்குள் அடைத்து வைத்திருக்கின்றனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகமாக இருக்கும் அண்ணல் அம்பேத்கரை, கல்விக்கண் திறந்த காமராசரை, செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பர னாரை, தியாகி கடலூர் அஞ்சலை அம்மாளை - சாதி என்ற குப்பிக்குள் அடைக்க முயன்றுவருகின்றன ஒருதலைப் பட்சமாகச் செயல்படும் சாதியக் கட்சிகள்.
இந்தக் காலகட்டத்தில் பெரியார் இன்னும் இன்னும் தேவைப்படுகிறார்.
தந்தை பெரியாரைப் பள்ளிகள்தோறும் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங் களிலும் அவரின் கொள்கைகளைப் பாடமாக்கிச் சொல்லித் தரவேண்டிய கடமை நம் வசம் இருக்கிறது. பொய்களையே பேசி பொய்களையே அறுவடை செய்யும் நபர்கள் கூறும் பெரியார் வரலாற்றில் சொல்லப்படும் உண்மை என்ன என்பதைப் பிரித்துப் புரிந்து கொள்ள வருங்கால இளைய தலைமுறையினரிடம் நேர்மையான முறையில் பெரியாரை எடுத்துச் செல்லவேண்டும். இல்லையென்றால் அவதூறுகளே வரலாறு என்று நம்பிச் சமுதாயம் திசைமாறிச் சென்றுவிடும்.
இன்று வரலாறு தெரியாத நபர்கள் அல்லது வரலாற்றைத் திரிக்க முயற்சிக்கும் நபர்கள் பெரியார் மட்டும்தான் சீர்திருத்தவாதியா? பெரியாரைத் தாண்டி வேறு யாரும் இந்தச் சமுதாயத்திற்காகச் சிந்திக்கவில்லையா என்பன போன்ற முட்டாள்தனமான வாதங்களை முன்வைக்கின்றனர். தான் நினைத் திருந்தால் தேர்தல் அரசியலில் பங்கு பெற்று அதிகாரத் தில் அமர்ந்திருக்கலாம். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ அல்லது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ கொள்கை ரீதியில் சமரசம் செய்து கொள்ள வேண்டி யிருக்கும் என்பதால் தேர்தல் அரசியலைப் புறக் கணித்த தன்னலமற்ற ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசுவதற்கு முன்னால் பேசும் ஒவ்வொருவரும் தான் அடைந்த உயரத்திற்கு யார் காரணம் என்பதை மனசாட்சியுடன் நினைத்துப் பார்த்துவிட்டுப் பேசவேண்டும்.
இந்தத் தமிழ் மண்ணில் பக்கத்தில் இருக்கக் கூடிய நபரின் சாதியைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இந்த தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் பெயருக்குப் பின் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வது இல்லை. பெண்களுக்கு ஓரளவு கல்வியும், வேலைவாய்ப்பும், சொத்தில் பங்கும் கிடைத்திருக்கிறது. பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று தன் விருப்பத்தின் பெயரில் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு உயர்ந் திருக்கின்றனர். எனவே தீண்டாமை என்ற பெயரில் நடத்தப்பட்ட வன்முறைகளோ, பாலின அடிப்படை யில் அரங்கேறிய கொடுமைகளோ இன்றைய தலை முறைக்குத் தெரியாமல் போய்விட்டன.
ஐந்தறிவு உயிர்களான நாய்களும் பூனைகளும் நடந்து செல்லும் தெருக்களில் ஆறறிவு பெற்ற மனிதர் கள் நடந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலம் இருந்தது. இறைவன் மீது தீராத பக்தி கொண்டி ருந்தாலும் தீண்டத்தகாதவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட காலம் இருந்தது. கணவனை இழந்த பெண்கள் வீட்டிலேயே ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கவேண்டும், அவர்கள் வெள்ளைப் புடவையை உடுத்திக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு மறுமணம் இல்லை என்று கட்டாயப் படுத்திய காலம் ஒன்றிருந்தது. கல்வி என்பது ஆதிக்க சாதியினருக்கான உரிமை என்று சொல்லப்பட்ட ஒரு காலத்தில், மேலாடை அணிவது தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்ட காலத்தில் பெரியார் என்பவர் யார் என்பது புரிந்திருக்கும்! இன்று இவை போன்ற பிரச்சினைகளுக்குச் சமூகப் போராட்டத்தின் வழியாகத் தீர்வு கண்டிருப்பதால் பெரியாரைப் பற்றிய முழுமையான புரிதல் இன்றைய சமுதாயத்தில் இல்லாதது துரதிருஷ்டமானது.
இதனால் பெரியார் மீது எளிதில் சேற்றை வாரி இறைத்துவிடலாம் என்று கனவு கொண்டி ருக்கும் திராவிடத்திற்கு எதிரான கொள்கை கொண்ட வர்களைப் பார்த்துப் பொதுச் சமுதாயம் பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகிறது. புலி வாலைப் பிடித்த கதையாக - விடவும் முடியாமல், பிடித்துக் கொண்டே இருக்கவும் முடியாமல் பாசிச கூட்டம் கலங்கிநிற்கிறது. அதற்கு விலைபோனவர்கள் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தபடி, தங்களைத் தமிழினத்தைப் பாதுகாக்கவந்த தலைவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு அநாகரிக அரசியல் செய்துவருகின்றனர்.
உண்மையில் எது தமிழினப் பாதுகாப்பு, சங்கி என்ற சொல்லுக்குச் சொல்லப்பட்ட ‘சக தோழன், நண்பன்’ என்ற பொருளா? இல்லவே இல்லை. ஒரு மொழிக்குள் வேறு மொழியின் சொல் நுழைந் தால், அது தன் நிலத்தின் கலாசாரக் கேடுகளுடன் நுழையும். உதாரணமாக ‘‘ஒரு தமிழ் மகன் திருமணம் செய்யவேண்டுமானால் வாழ்க்கைத் துணைநலம்’ என்பான். ஆனால் ஆரியக் கருத்தில் பேசும்போது ‘கல்யாணம்’, ‘விவாகம், கன்னிகாதானம்’ என்கிறான்.
வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. வாழ்க்கைத்துணை என்பதில் சம உரிமையும், கன்னிகா தானம் என்பதில் அடிமைத்தன்மை யும் புகுத்தப்பட்டு விடுகிறது.” என்று மனம் குமுறியவர் பெரியார். இவரல்லவோ தமிழர் தலைவர்!
மனிதநேயத்தை மட்டுமே விதைத்துக் கொண்டிருந்தவரை நாத்திகன் என்று ஓயாமல் குறிப்பிடு வோரின் நோக்கம் என்ன என்பதைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். பிறப் பின் அடிப்படையில் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன் எப்படி இருக்கமுடியாதோ அதைப் போலவே என்னைக் காட்டிலும் தாழ்ந்தவன் இருக்கமுடியாது என்ற கொள்கை நிலையில் திராவிடத்தை வகுத்துத் தந்த வரை, குடும்பக் கட்டுப்பாடு போன்ற அறிவியல் சிந்தனையுடன் மனித சமுதாயம் மேம்படவேண்டும் என்று கொள்கை இயற்றியவரை, மணியம்மை யாரை ‘அம்மா’ என்ற சொல்லைத் தவிர வேறுசொல் லால் அழைக்காத குழந்தை மனம் கொண்டவரை, பிற்போக்குத்தனமான கருத்துக்களை விடுத்துப் புதிய சிந்தனையுடன் தமிழ் இலக்கியம் மலர வேண்டும் என்று விரும்பியவரை, கடவுளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டு மௌனித்துக் கிடக்கும் கடவுளைக் கண்டு நாத்திகரானவரை, சுதந்திரம் சாத்தியப்படுத்தாத விடுதலையைச் சுயமரியாதை மூலம் கொண்டு சேர்த்தவரை விமர்சிப்பதில் தவறில்லை; ஆனால் அவதூறு வழியாக இருட்டடிப்பு செய்ய நினைக்கும் அற்பப் பதர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!