முரட்டு சுபாவம் கொண்டவரைப் போல தோற்றத்தில் இருந்தாலும், உண்மையில் மிக இலகுவான குழந்தை மனம் படைத்த வர் எழுத்தாளர் பவுத்த அய்ய னார். சந்திக்கும் எல்லோரிடமும் அன்பு செய்வதையும், எல்லோரோடும் பேசுவதற்கான விஷயங்களையும் ஏராள மாக வைத்துள்ள இவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருக்கலாம். 2010-இல்‘அலையும் நினைவுகள், 2022-இல் காலத்தை வரைந்த தூரிகை கள்’ எனும் சிறந்த நூல்களைத் தந்த பவுத்த அய்யனார், தற்போது சென்னை கோவூரிலுள்ள மாதா மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். எப்போதும் ப்ரியமான சொற்களைக் கொண்டே எல்லோரோடும் உரையாடும் பவுத்த அய்யனார், வாசகர்களின் அருகிருந்து பேசுவது போன்றதொரு நெருக்கத்தை இந்த நேர்காணல் வழி ஏற்படுத்தியுள்ளார்.
தங்கள் சிறுபிராயத்து நினைவுகளில் இன்றளவும் ஈரமாய் இருக்கும் நினைவைப் பற்றிச் சொல்லுங்களேன்..?
என் நினைவில் இன்னமும் துல்லியமாக இருப்பது ஆரம்பப் பள்ளிக்குச் சென்றுவந்ததுதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள விநாயகபுரம் என்ற சிற்றூர் தான் எனது ஊர்.
முகம் தெரிந்துகொள்ளமுடியாத குழந்தையாக இருக்கும்போதே என் தாய் மறைந்துவிட்டார். அதனால், என் அப்பா வின் அப்பா, அம்மாதான் என்னை வளர்த் தார்கள். பாட்டி, தாத்தாவின் வளர்ப்பு முறை. சிறுவயதிலிருந்தே பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். படிக்காதவர்கள். ஆனால் அர்ப்பணிப்புடன் என்னைப் பாசத்துடன் நேசித்தார் கள். சிறுவயதில் அவர்கள்தான் என் உலகமாக இருந்தது. நினைவுதெரிந்த நாள்முதலே பயம் என்ற உணர்வு உடலின் உறுப்பாக இருந்துவந்தது.
முதலாம் வகுப்புப் படிக்க பக்கத்து ஊரான முனியாண்டிபட்டி ஆரம்பப் பள்ளிக்குத்தான் சென்றேன். எங்கள் ஊரிலிருந்து சிலரும் வந்தார்கள். பள்ளி முடிந்து திரும்பும்போது உடன்வருபவர்கள் பயம் காட்டுவார்கள். சிங்கம், புலி, யானை எல்லாம் துரத்தி வருவதாகச் சொல்லி முன்னால் ஓடுவார்கள். நான் மிகுந்த பயத்துடன் சிலேட் மட்டும் இருக்கும் நீளமான பையை தரையில் அடித்துவிட்டு, "அப்பத்தா'’ என்று அலறி ஓடுவேன். ஒன்றாம் வகுப்பு முடிவதற்குள் பத்து சிலேட்டாவது உடைத்திருப்பேன். அவ்வளவு வசதிகூட இல்லாவிட்டாலும் - பேரனுக்காக பாட்டியும் தாத்தாவும் இதைச் செய்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஆச்சர்யம் அளிக்கிறது. அப்போது அவர்கள் சிலேட் வாங்கத்தயங்கி இருந்தால் என்க்கு கல்வி கிடைத்திருக்காது.
புத்தகங்கள் வாசிக்கிற பழக்கத்தை எப்போதிலிருந்து கைக்கொள்ளத் தொடங்கினீர்கள்?
புத்தகம் வாசிக்கும் பழக்கம் நான் ஆறாவது படிக்கும்போதே தொடங்கிவிட்டது. எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலுக்கு பூஜை செய்ய வருபவர் தெற்குத்தெரு ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.
அவர் அப்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டு இருந்தார். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மேலூருக்கு ஒவ்வொரு ஞாயிறு அன்றும் என்னை சைக்கிளில் அழைத்துச்செல்வார். அங்கு தனது செலவில் கல்கண்டு, குமுதம் வாங்கித் தருவார். அப்படித்தான் வாசிக்கும் பழக்கம் வந்தது.
அந்தக் காலத்தில் எங்கள் சின்ன ஊரில் இருந்து, பெறுநர் பகுதியில் பெரிய கண்ணாடி தொப்பிப் போட்டு சென்னைக்கு கடிதம் போட்டால், மணிமேகலை பிரசுரத்திற்கு கடிதம் போய்விடும்.
அவர்கள் நான் கேட்கும் தமிழ்வாணன் அவர்களின் நூல்களை வி.பி.பி-இல் அனுப்புவார்கள். மிகவும் அதிசயமாக இருக்கும்.
தெற்குதெரு ஊரில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது என்னுடன் படித்த ஜெயம் வீட்டில் அவரது அண்ணன் வைத்திருந்த நூலகத்தில் இருந்த எல்லா நூல்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பெரியார் நூல்கள் முதல் கல்கி, சாண்டில்யன் தொடர்களின் பைண்ட் வால்யூம் அங்கு இருக்கும்.
அப்போது வகுப்பறையில்கூட பொன்னியின் செல்வன் பைண்ட் வால்யூம் படித்துக்கொண்டு இருப்பேன். எங்கள் வகுப்பு ஆசிரியை வசந்தா அவர்கள் எல்லா நூல்களையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார். பள்ளி நூலகத்திலும் அப்போது நல்ல நூல்கள் இருக்கும்.
பிளஸ் டூ படிக்க மேலூர் வந்தபோது அரசு கிளை நூலகம் அறிமுகம். மேலூர் கிளை நூலகம் எல்லாவகையான நூல்களும் படிக்க ஒரு பொக்கிஷமாக இருந்தது. மேலூரில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மூலம் அறிமுகமான கருப்பையா பாரதி தாத்தா அவர்களும் என் வாசிப்புக்குத் தூண்டுதலாக இருந்தார். மேலூர் எழுத்தாளர்கள் மேலூர் மாவேந்தன், ரோஜாகுமார், சிறந்த வாசகர் ஆன பஞ்சர் கடை நடத்திய வெங்கடாச்சலம் இப்படிப் பலரும் அப்போது படிக்கத் தூண்டுதலாக இருந்துள்ளார்கள்.
கவிஞர் அபியுடனான சந்திப்பே நவீன இலக்கியத்தின் பக்கமாகத் தங்களை அழைத்து வந்ததாகக் கூறியுள்ளீர்கள். அது எப்போது நிகழ்ந்தது?
1982-இல் ’நூலக வார விழா’மேலூர் நூலகத்தில் நடந்தது. அதில் ஆதவனின்‘என் பெயர் ராமசேஷன்’ நாவல் குறித்து கவிஞர் அபி பேசவிருந்தார். அன்னம் வெளியீடுகளில் பின்பக்க புத்தகப் பட்டியலில் ‘மௌனத்தின் நாவுகள் - அபி’ என்ற அளவில் மட்டுமே படித்திருந்த அதே‘அபிதான் இவர் என கருப்பையா பாரதி தாத்தா மூலமே அறிந்துகொண்டேன். என் பெயர் ராமசேஷனை படித்திருந்தாலும் கவிஞர் ஒருவர் பேச உள்ளார் என்பதாலும்‘நூலக வார விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.
அப்துல் ரகுமான், மீரா, நா.காமராசன், சிற்பி போன்றவர்களின் கவிதைகளையே அதுவரை படித்திருந்ததால் ‘புதுக்கவிதை’ என்றால் இப்படித்தான் என்ற வரையறை என்னுள் ஏற்பட்டிருந்தது. மௌனத்தின் நாவுகளும் அதேபோல்தான் இருக்கும் என்ற நினைப்பில் நிறைய புத்தகங்கள் படித்தவன் என்ற மமதை மனதில் நிற்க அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் மேலூரிலேயே இருந்ததால் ஓய்வு கிடைக்கும்போது வரச்சொன்னார். எல்லா நேரமும் ஓய்வாக இருந்ததால் அடுத்த நாளே அவர் வீட்டிற்குச் சென்றேன். மிகுந்த கூச்சத்துடன், உள்சுருங்கிய சுபாவத்துடன், பரபரப்பு மேலிட ஆரம்பித்த பழக்கம் சௌஜன்யமிக்கதாக விசாலமாகியது. தினந் தோறும் அவர் வீட்டிற்கு சென்றேன். காலை, மாலை இருவேளையும்கூட போதாததற்கு பணிபுரிந்த கல்லூரிக்கும் சென்றேன்.
தினந்தினம் புதிய புதிய புத்தகங்கள், அறிந்திராத கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கள் என இலக்கியத்தின் எல்லாப் பக்கங்களையும் எந்த வித குழு மனப்பான்மையுமின்றி அறிமுகப்படுத்தினார் அபி.
மௌனி, லா.ச.ரா, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி, தர்மு அரூப்சிவராம், அம்பை, கி.ரா, ந.முத்துசாமி, கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, நாணோ ஜெயராமன், நகுலன் உள்ளிட்ட எழுத்தாளர்களையும், கசடதபற, பிரக்ஞை, சதங்கை, மீட்சி, கொல்லிப் பாவை ஆகிய இலக்கிய இதழ்களையும், என் பெயர் ராமசேஷன், அந்நியன், குட்டி இளவரசன் போன்ற நூல்களையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. .
கவிஞர்களுக்கேயுரிய டிரேட் மார்க்கையும் பேராசிரியர்களுக்கே உரித்தான வறட்டுத்தனத்தையும் கிஞ்சித்தும் காணமுடியாத அபி, புத்தகங்களை மட்டுமல்லாது இலக்கிய நண்பர்கள் ஐ.சி.பாலசுந்தரம், ஜி.ஆர்.பி.கென்னடி, விஜயதிருவேங்கடம், ஆகியோரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
1982 முதல் 1985 வரை புத்தகங்கள் படிப்பதும் எழுத்தாளர்களைச் சந்திப்பதுமாகக் கழிந்த காலம். 1982-இல் கவிஞர் அபி அவர்கள் எனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்திய அந்தக் காலகட்டம் இன்றுவரை என்னிடம் செல்வாக்கு செலுத்தி வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த உங்களைச் சென்னை நோக்கிப் பயணப்பட வைத்தது எழுத்தா? வேலைவாய்ப்பா?
1982 முதல் ஒரு புத்தகம் படித்தால் அந்த எழுத்தாளரைத் தேடிப் போகும் பழக்கம் இருந்தது. அதனால் பல ஊர்களுக்கும் சென்றுள்ளேன். கல்யாண்ஜி அவர்களைத் தேடி நிலக்கோட்டை, தேவதச்சனைத் தேடி கோவில்பட்டி, கி.ராஜநாராயணன் அவர்களைத் தேடி இடைசெவல், சுந்தர ராமசாமி அவர்களைத் தேடி நாகர்கோவில், நகுலனைத் தேடி திருவனந்தபுரம், கலாப்ரியாவைத் தேடி இடைகால், மேலாண்மை பொன்னுசாமி யைப் பார்க்க மேலாண்மறைநாடு இப்படி பல ஊர்களுக்கும் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று இருக்கின்றேன். பெங்களூரில் பணிபுரிந்தபோது எழுத்தாளர்கள் சுஜாதா, ஆதவன், தமிழவன், கோ.ராஜாராம் இவர்களையெல்லாம் தேடிச்சென்று பார்த்துள்ளேன். இன்னும் எத்தனையோ ஊர்கள். சிவகங்கையில் கவிஞர். மீரா, மொழிபெயர்ப்பாளர்கள் இளம்பாரதி, நா.தர்மராஜன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதெல்லாம் எனது 25 வயதுக்குள் நடந்தவை.
இதுபற்றி நான் விரிவாக எழுதிய‘இலக்கியத் தொடர்புகள்’ என்ற கட்டுரை 1998-இல் 'வேர்கள்' ராமலிங்கம் மூலம் வேர்கள்’ இதழில் வெளியானது.
1977-ஆம் ஆண்டில் 7-ஆம் வகுப்பு படிக்கிற மாணவராக இருந்தபோதே, கடிதம் எழுதத் தொடங்கி விட்டீர்கள். கடிதங்களின் மீதான காதல் தங்களுக்கு எதனால் உண்டானது?
கடிதங்களால் மட்டுமே உயிர் வாழ்ந்த காலமொன்று இருந்தது. தமிழ்வாணன் அவர்களின் துப்பறியும் சங்கர்லால் புத்தகம் கேட்டு மணிமேகலை பிரசுரத்திற்கு எழுதிய கடிதம்தான் நானெழுதிய முதல் கடிதமாக இருக்கும்.
1982-ல் நிலக்கோட்டையில் பணிபுரிந்த கல்யாண்ஜிக்கு எழுதிய கடிதம்தான் முதன்முதலாக ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதிய கடிதம்.
அப்போது கல்யாண்ஜி எனக்கெழுதிய சில கடிதங்கள் வண்ணதாசன் கடிதங்கள் நூலில்கூட இருக்கும். பொடிப்பொடியாக அரிசியைப்போல் அழகான கையெழுத்தில் அன்பை ஏந்திவரும் கல்யாண்ஜி கடிதங்களுக்காகக் காத்திருந்திருக்கிறேன். பரவசத்துடன் திரும்பத் திரும்பப் படித்து, பாதுகாக்க இடமில்லாத எங்கள் வீட்டிலும் அவற்றைப் பாதுகாத்திருக்கிறேன்.
1983-இல் கவிஞர் மீரா எனக்கு எழுதிய போஸ்ட் கார்டை இன்னும் வைத்துள்ளேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் கடிதங்கள் அச்சு அசல் ஓவியங்கள் போலவே இருக்கும். அவர் ஓவியரும்கூட. 1985-இல் பெங்களூருக்கு வேலை சார்ந்து சென்றபோது கவிஞர் அபியின் கடிதங்கள் வரத் தொடங்கியது. அவரது கவிதையைப் போலவே கச்சிதமாக இருக்கும்; மிக அழகிய கையெழுத்தில். பெங்களூரில் இருந்தபோது 1986-இல் பாவண்ணன் திருப்பதியில் இருந்தும், சுப்ரபாரதிமணியன் செகந்திராபாத்தில் இருந்தும் கடிதமெழுதி இருக்கிறார்கள். மேலூர் மஸ்தான் அண்ணன் அந்தமானில் இருந்து எழுதிய கடிதங்கள், நண்பர் அருண் வெற்றிவேல் சவுதியில் இருந்து எழுதிய கடிதங்கள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
1986-இல் சுந்தர ராமசாமி அவர்களை முதன்முதலாகச் சந்திக்கிறேன். அப்போது என் வயது 23. அப்போதிலிருந்து சுந்தர ராமசாமி அவர் களுக்கு நான் கடிதம் எழுதுவது என் வாழ்வின் ஒரு பகுதியாக மாறியது. சுந்தர ராமசாமியின் மறைவு வரை தொடர்ந்தது. அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக எழுதியது கலிபோர்னியாவில் இருந்து எனக்கு எழுதிய மின்னஞ்சல் கடிதம்தான்.
இன்னும் முக்கியமான பலரின் சில நூறு கடிதங்கள் இப்போதும் வைத்துள்ளேன். கையெழுத்து என்பது மறைந்துவிட்ட இந்தக் காலத்தில் இந்தக் கடிதங்கள் மதிப்புக் கொண்டவை.
தமிழில் முதன்முதலில் மேன்ஷன் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் எனும் வகையில் தனித்த கவனிப்பை பெற்ற ‘மேன்ஷன் கவிதைகள்’ நூலை எழுதத் தூண்டியது எது?
2002-ஆம் ஆண்டு‘காலச்சுவடு’ பணிக்காக சென்னை வந்தபோது ஐஸ் ஹவுசில் உள்ள நோபிள் என்ற பெயர் கொண்ட மேன்சனில் தங்கி இருந்தேன். மெரினா கடற்கரை நடக்கும் தூரத்தில்தான். தனிமை எனக்கு மனதில் தினமும் கவிதைகள் தோன்றச் செய்துகொண்டே இருந்தது. அதுவரையில் நான் எழுதிய கவிதைகளில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. சுனாமி வருவதற்கு பல மாதங்கள் முன்பு அது பற்றிய முன்னறிவிப்பு போன்ற ஒரு கவிதைகூட அப்போது எழுதினேன். அப்போது எழுதிய கவிதைகளை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் காண்பித்தேன். அவர்தான் மேன்சன் கவிதைகள்’ என்ற தலைப்பிட்டவர். அப்போது அந்தக் கவிதைகளை ஞாநி நடத்திய ‘தீம்தரிகிட’ இதழுக்கு அனுப்பியிருந்தேன். ‘தீம்தரிகிட’ இதழில்தான் முதன்முதலில் ‘மேன்சன் கவிதைகள்’ என்ற பெயரில் வெளியானது.
2005-இல் எனது கவிதைகள் ‘மேன்சன் கவிதைகள்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. புதுமுயற்சியாக வெளியீட்டு விழா முதல் முன்னுரை வரை எல்லாமே மேன்சனை மையப்படுத்தி செய்திருந்தேன்.
வாழ்வின் பெரும்பகுதி மேன்சனில் வாழ்ந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன். அவரே மிகச் சிறப்பான முன்னுரை எழுதித் தந்தார். வாழ்க்கை முழுக்க மேன்சனில் வாழ்ந்தவர் அய்யா சின்னக்குத்தூசி. அவரது அறையில்தான்‘மேன்சன் கவிதைகள்’ நூல் வெளியிடப்பட்டது. அய்யா சின்னக்குத்தூசி வெளியிட, எழுத்தாளர் பிரபஞ்சன் பெற்றுக் கொண்டார். கவிஞர் ஞானக்கூத்தன், ஞாநி, பிரசன்னா ராமசாமி, எம்.ஜி.சுரேஷ் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலையில் கோவையிலிருந்து வாழ்த்து தந்தி அனுப்பி இருந்தார் அண்ணன் நக்கீரன் கோபால். அந்தத் தந்தியை இப்போதும் வைத்துள்ளேன்.
சென்னை நகரைப் பற்றி ‘அலை புரளும் வாழ்க்கை’ எனும் நூலை எழுதியுள்ளீர்கள். சென்னைக்கும் உங்களுக்குமான நெருக்கம் பற்றி...
‘காலச்சுவடு’ பணிக்காகச் சென்னை வந்தபோது தான் பெருநகரத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத் தது. சென்னை வந்த சமயத்தில் எல்லாவற்றையும் பார்த்து அதிசயப்பட்டுக்கொண்டே இருந்தேன்.
ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்திற்காக ‘உலகத் தமிழ்’ என்ற பெயரில் இணைய இதழினைக் ‘காலச்சுவடு’ நடத்தியது. அந்த இணைய இதழில் சென்னையைப் பார்த்து அதிசயப்படும் குணத்தை எழுத்தாக்கலாம் என்று‘உலகத்தமிழ்’ இணைய இதழ் ஆசிரியர் அரவிந்தன் ஆலோசனை கூறினார்.
2002-இல் சென்னையிலுள்ள மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களுக்குச் சென்று (உ-ம்: மெரினா கடற்கரை, ஸ்பென்சர் பிளாசா, மியூசியம்) ஒரு நாள் முழுக்கக் கவனித்து, அதை நம் ஆச்சரிய அனுபவங்களுடன் கட்டுரையாக எழுதினேன். அந்தத் தொடர் உலகம் முழுக்கப் பரவலான கவனத்தைப் பெற்றது. நான் மீண்டும் ஆச்சரியப்படும் அளவில் அந்தக் கட்டுரைகளின் தொகுப்பை காலச்சுவடு ‘ அலைபுரளும் வாழ்க்கை’ என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டது.
2002 முதல் 2004 வரை சென்னையில் இருந்த நாட்கள் எப்போதும் மறக்கமுடியாதவை. மேக்ஸ்முல்லர் பவன், அல்லயன்ஸ் பிராங்க்ஸ், ரஷ்யன் கலாச்சார மையம், கூத்துப்பட்டறை இப்படிப் பல இடங்களில் முக்கிய சினிமா, நாடகம், கூத்து என பல நிகழ்வுகளைப் பார்க்க பெரும் வாய்ப்பாக அமைந்தது சென்னை வாழ்க்கை.
பல பத்திரிகைகளோடு நல்ல தொடர்பு இருந்தும், எதிலும் பணியில் சேராமல் சுதந்திரமான பத்திரிகையாளராக (ஃபிரிலேன்ஸ்) இருக்கும் முடிவை எதனால் எடுத்தீர்கள்?
எனது நோக்கம் பத்திரிகையாளராவது அல்ல; சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்பதே. 80-கள் முதல் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். பிறகு புத்தக மதிப்புரைகள் எழுதினேன். 90-களுக்குள் சிறந்த படைப்புகள் பெரும்பான்மையானவற்றைப் படித்து படைப்புகள் சார்ந்து ஒரு வாசகனாக எனக்கான கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளும் வண்ணம் தேர்ந்தேன். என் மனம் சிற்றிதழ் சார்ந்த மனோபாவம் கொண்டது. புகழ்பெற வேண்டுமென்பது என் நோக்கமாக எப்போதும் இருந்ததில்லை.
90-களில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் ஆசிரியராக இருந்த ‘சுபமங்களா’ இதழ்தான் எனக்கு நேர்காணல் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் காரணம். தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பலரின் நேர்காணலை சிறந்த புகைப்படங்கள், அழகிய வடிவமைப்பில் அதிக பக்கங்களுடன் ‘சுபமங்களா’ இதழ் வெளியிட்டது மிகவும் முக்கியமானது.
அது நின்ற பிறகு, ‘புதிய பார்வை’ இதழ் வந்துகொண்டு இருந்தது. அப்போது அதன் ஆசிரியர் எழுத்தாளர் பாவை சந்திரன். நானும் என் மனைவியும் 1996-இல் சென்னை சென்றிருந்தபோது ‘புதிய பார்வை’ இதழில் பணிபுரிந்து கொண்டிருந்த நண்பர் நா.கதிர்வேலன் அவர்களைப் பார்க்க ஆழ்வார்பேட்டையில் இருந்த ‘புதிய பார்வை’ அலுவலகம் சென்றோம். அப்போது கதிர்வேலனிடம் எனது நேர்காணல் எடுக்கும் ஆர்வத்தைச் சொன்னேன்.
என் விருப்பத்தைப் பாவை சந்திரன் அவர்களிடம் சொல்ல, உடனே அவர் நேர்காணல் எடுக்கவுள்ள பெயர்களைக் கேட்டார். அப்போது எனக்குப் பிடித்தமான ஒரு பட்டியலைக் கொடுத்தேன்.
அவர் எந்தவித மறுப்பும் கூறாது நேர்காணல் எடுக்க அனுமதி கொடுத்தார். 1996- 1997-ஆம் ஆண்டுகளில் நான் எடுத்த நேர்காணல்கள் தொடர்ந்து வெளியாகின. ஜெயமோகன் முதல் பிரம்மராஜன் வரையிலான முக்கியமான பலரின் முதல் நேர்காணல்கள் ‘புதிய பார்வை’ இதழில் வெளிவந்தது அப்போது நான் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். பிடித்தமான எழுத்தாளர்களின் நேர்காணல் எடுக்கவேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பமாக இருந்தது.
நீங்கள் நினைப்பதுபோல் பத்திரிகை சார்ந்த தொடர்பு எனக்குப் பெரிதாக ஒன்றுமில்லை. 2002-இல் ‘காலச்சுவடு’ இதழில் பணிபுரிய சென்னை வந்த பிறகுதான் பத்திரிகை தொடர்புகள் வந்தது.‘காலச்சுவடு’ இதழில் பணிபுரிந்தபோது மட்டுமே அலுவல் சார்ந்து நேர்காணல்கள் எடுத்துள்ளேன். அதுகூட மூன்றாண்டுகள் மட்டுமே. வேறு பணியில் இருந்து கொண்டுதான் எல்லா நேர்காணல்களையும் எடுத்துக்கொடுத்தேன்.
தீராநதி, போதி, தலித், ஆழி, தினமணி கதிர் முதலிய இதழ்களுக்கும் நேர்காணல் எடுத்துக் கொடுத்துள்ளேன். பத்திரிகையாளர் ஆவதற்காக நான் நேர்காணல் எடுக்கவில்லை. எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் நேர்காணல் வரவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே. இதில் பணரீதியான எந்தப் பயனும் எனக்குக் கிடையாது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் பழகிய நாட்கள் பற்றி…
80-களில் எழுத்தாளர்களைத் தேடித் தேடிப் பார்த்துப் பழகியுள்ளேன். வண்ணதாசன் அவர்களிடம் நான் ஆட்டோகிராப் வாங்கும்போது என் வயது 20-க்குள் இருக்கலாம். கவிஞர் மீரா, கவிஞர் அபி எல்லாம் நான் பிளஸ் டூ படிக்கும்போது பழக்கம். ஜே.ஜே. சில குறிப்புகள் படித்தவுடன் சுந்தர ராமசாமி அவர்களைப் பார்க்க 1986-இல் நாகர்கோயில் போனேன். அன்றுமுதல் அவரது இறப்பு வரை எந்தவித சங்கடமும் இல்லாத நட்பு இருந்தது. எங்கள் கிராமத்தில் நடந்த எனது திருமணம் சுந்தர ராமசாமி தலைமையில்தான் நடந்தது.‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் முதல் நூல்‘107 கவிதைகள். சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு. அதை எனக்கும் என் மனைவி முத்துமீனாளுக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார். 20 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார். இறப்பதற்கு முன்பு கடைசியாக எழுதிய எழுத்துக்கூட எனக்கு எழுதிய கடிதம்தான்.
என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி. 1988-இல் மேலூரிலுள்ள கணேஷ் திரையரங்கில் திரைப்படம் இயக்குபவரின் உதவியாளராக இருந்தேன்.
அப்போது எங்கள் கிராமத்தில் இருந்து மேலூர் செல்ல ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள் வாங்கித் தந்தார். அப்போது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கடிதங்கள்கூட அவருக்கு எழுதுவேன். அதிகமும் படித்த புத்தகங்கள் பற்றித்தான் இருக்கும். பிறகு சில மாதங்களில்,‘உங்கள் மனநிலைக்கு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் பணிபுரிந்தால் நன்றாக இருக்கும்’ என கடிதமெழுதி இருந்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் நாகர்கோவில் வரச் சொல்லி இருந்தார். அந்த நாளில் நாகர்கோவில் சென்றேன். அன்று சுந்தர ராமசாமி வெளியூர் சென்று இருந்தார். அப்போது ‘காலச்சுவடு’ கண்ணன் பெங்களூர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
கண்ணனிடம் விபரம் சொல்லிச் சென்று இருந்தார். கண்ணனின் வீட்டிற்கு அருகிலிருந்த விவேகானந்த கேந்திரா அலுவலகத்திற்கு நடந்துசென்றோம். இப்போதுகூட நன்றாக நினைவிலுள்ளது. கண்ணனின் பின்னால் நான் ஒரு ஆட்டுக்குட்டிபோல நடந்துசென்றேன். அந்த அலுவகத்தில் இருந்த சுந்தர ராமசாமி அவர்களின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அப்படிதான் நான் விவேகானந்த கேந்திரத்தில் சேர்ந்து, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்காக வ.உ.சி. மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தும் பணி கிடைத்தது. அப்போது முதல் இப்போதுவரை எங்கள் வாழ்வாதாரமாக இருப்பது எனது மருத்துவமனை பணிதான். இடையில் 2002-2004 வரை மட்டும் ‘காலச்சுவடு’ பணி. என் வாழ்க்கையயுடன் பின்னிப் பிணைந்தது சுந்தர ராமசாமி என்ற பெயர்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களும் உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவராக இருந்துள்ளார். அந்த உறவு பற்றி.
என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகிய இருவரும் மிகவும் முக்கியமானவர்கள்.
பேராசிரியர். இரா. மோகன் தொகுத்த தமிழ் நாவல் வளர்ச்சி நூல் தமிழின் ஐம்பது நாவல்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஆகும். அதில் தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் நூல் பற்றி அய்யா கட்டுரை எழுதி இருந்தார். 1986இல் அந்தக் கட்டுரையைப் படித்தவுடன் அய்யாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அந்தக் கடிதத்தை படித்தவுடன் என்னை அவரை நேரில் சந்திக்கும்படி கடிதம் எழுதி இருந்தார். அய்யா அப்போது புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருந்தார். இப்படி ஏற்பட்ட தொடர்பு இன்றுவரை தொடர்கிறது. எப்போதும் மாறாத அன்புகாட்டி வருபவர் பேராசிரியர். சாலமன் பாப்பையா.
அம்மா அவர்களும் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் மிகவும் அன்புடன் உபசரிப்பார்கள். சமீபத்தில் அம்மா அவர்கள் மறைந்தபோது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இதனால் அய்யா அவர்களுக்கு ஏற்படும் துயரம் குறித்து அதிக வருத்தம் ஏற்படுகிறது.
சுந்தர ராமசாமி அவர்களின் உதவியால் விவேகானந்த கேந்திரத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தில் சாலமன் பாப்பையா அவர்களின் உதவியால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 1991 இல் வேலைக்குச் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் அக்கறைகொண்டு எனக்கு உதவிய இவர்கள் இருவரும் என் இரு கண்கள் போன்றவர்கள். .
2002 இல் காலச்சுவடு பணிக்காக கண்ணன் அழைத்தபோது, மீனாட்சி மிஷன் மருத்துவமனை பணியில் இருந்து விடுபட்டு சென்னை செல்வதற்கு முன்பு அய்யா அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்று இருந்தேன். அவர் அப்போது சில அறிவுரைகள் கூறினார். எப்போதும் எழுத்தையும் வேலையையும் தனித்தனியாக வைத்துக்கொள்வது நல்லது. பத்திரிகை வேலைக்கு செல்ல முடிவு செய்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் சென்று வாருங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார்.
அப்போது ஒரு அலுவலகக் கவர் ஒன்றைக் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னார். அதில் 10,000 ரூபாய் பணம் இருந்தது. நீங்கள் முதன்முறையாக சென்னை செல்கிறீர்கள். இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி கொடுத்தார். அய்யா எங்கள்மீது கொண்ட அன்பு எப்போதும் மறக்கமுடியாதது.
2010-ஆம் ஆண்டில் நேர்காணலுக்கென்றே ‘நேர்காணல்’ எனும் இதழினைத் தொடங்கினீர்களே அந்த இதழ் குறித்து...
1996-இல் கவிஞர். பிரம்மராஜனைப் ‘புதிய பார்வை’ இதழுக்காக நேர்காணல் எடுக்க தர்மபுரி சென்றிருந்தேன். அப்போது அவர் 'பாரிஸ் ரிவ்யூ' இதழ் பற்றியும் அதில் வெளியாகும் உலகப் புகழ்பெற்ற நேர்காணல்கள் பற்றியும் கூறினார்.
நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதிகளின் நேர்காணல்கள் எல்லாம் அதில் வெளிவரும் என்றும் சொன்னார். அவர் கூறியது மனதில் இருந்துகொண்டே இருந்தது.
‘நேர்காணல் முதல் இதழ் 2010-இல் கொண்டுவந்தேன். ஒருவரின் விரிவான நேர்காணல், அவரைப் பற்றி பல அறிஞர்களின் கட்டுரைகள், கருத்துக்கள் இடம்பெறும். ஓர் இதழ் முழுக்கவே குறிப்பிட்ட ஒரு ஆளுமை பற்றி மட்டுமே இருக்கும். ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் உள்ளடக்கம் கொண்டது.
‘நேர்காணல்' முதல் இதழ் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி பற்றியது. என் மனைவி முத்துமீனாள் எழுதிய ‘முள்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, எனது‘மேன்சன் கவிதைகள்’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது. இரு ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களையும் திரைப்பட ஆளுமை கமல்ஹாசன் வெளியிட்டார். அந்த விழாவில் ந.முத்துசாமி பற்றிய நேர்காணல்’ இதழை எங்களால் எப்போதும் மறக்கமுடியாத அய்யா சின்னக்குத்தூசி வெளியிட்டார். அந்த விழாவிற்கு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களும் வந்திருந்து சிறப்பித்தார்.
நேர்காணல் ஆறு இதழ்கள் கொண்டுவந்தேன். நவீன நாடக ஆளுமை ந.முத்துசாமி, எழுத்தாளர் வண்ணநிலவன், மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம், திரைப்பட ஆளுமை நாசர், நவீன ஓவியரும் திரைப்பட கலை இயக்கத்திற்கு தேசிய விருது பெற்றவருமான கிருஷ்ணமூர்த்தி, ஈழக் கவிஞர் தீபச்செல்வன் ஆகியோர் பற்றியது. 50 இதழ்கள் வரை கொண்டுவர திட்டம் வைத்து இருந்தேன். ஆறு இதழ்கள்தான் கொண்டுவர முடிந்தது. எனது விருப்பம் சார்ந்து மட்டுமே ஆளுமை தேர்வு இருந்தது; எனது தனிப்பட்ட பயன் சார்ந்து அல்ல.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய 200 கடிதங்களை நூலாகத் தொகுக்கும் எண்ணம் எதனால் உண்டானது?
சுந்தர ராமசாமி அவர்களை முதல்முறையாகப் பார்க்கப் போனபோது என் வயது 23. வாசகனாக அறிமுகமான முதல் சந்திப்பில் இருந்து அவர் என்மீது காட்டிய அன்பும் கருணையும் அவர் மறையும் வரை இருந்தது.
1986 முதல் 2005 வரை சுந்தர ராமசாமி அவர்கள் மறைவு வரையில் எனக்கு எழுதிய கடிதங்கள் 500-க்கும் மேற்பட்டவையாக இருக்கலாம். ஆனால் என் வாழ்வின் நெருக்கடியில் வேலையின் நிமித்தம் பல ஊர்களுக்குப் புலம்பெயர்ந்ததில் 250-க்கும் குறைவான கடிதங்கள் மட்டுமே இப்போது உள்ளன. அவரது கடிதங்கள் பெரும்பாலும் டைப் செய்யப்பட்டவை. மின்னஞ்சல் வருவதற்கு முன்பு அவர் அமெரிக்கா சென்றபோது எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே அவரது கையெழுத்தில் இருக்கும். மின்னஞ்சல் வந்த பிறகு அமெரிக்காவில் இருந்து மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதுவார். அதற்காகவே என்னை மின்னஞ்சல் தொடங்கச் செய்தார். அதனால் எனக்கு கணிணி அறிமுகமும் கிடைத்தது.
ஒரு வாசகனுக்கும் ஒரு எழுத்தாளருக்கும் உள்ள உறவைக் கடிதங்கள் இல்லாமல் போன இக்காலத்தில் ஆவணமாகக் காண்பிக்க கடிதங்களை நூலாக்க விரும்பினேன்.‘காலச்சுவடு’ கண்ணனிடம் இதுபற்றி சொல்லவும், அவர் ஏதும் மறுப்புத் தெரிவிக்க வில்லை. ஆனால் உரிமை: அம்மாவின் பெயர் போட வேண்டும் என்றார். பிறகுதான் அறிந்துகொண்டேன் சுந்தர ராமசாமி அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களின் தாள் மட்டுமே எனக்கு உரிமையானது.
எழுதியவருக்கு மட்டுமே கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் சட்டபூர்வமாக சொந்தமானது என்று.
பிறகு‘அன்புள்ள அய்யனார் சுந்தர ராமசாமி யின் 200 கடிதங்கள் என்ற பெயரில் 2010-இல் வெளியானது.
மூத்த படைப்பாளி நகுலன் தொடங்கி, சமகால எழுத்தாளர்கள் வரை பலரையும் நேர்காணல் செய்திருக்கி றீர்கள். உங்களால் மறக்கவே முடியாத நேர்காணல் என்று எதைக் குறிப் பிடுவீர்கள்?
எல்லாமே மறக்கமுடியாத நேர்காணல்கள்தான். ஏனென்றால் நேர்காணல் எடுப்பதற்காக மட்டுமே நேர்காணல் எடுப்பது அல்ல. அவர்களது படைப்பு களைப் படித்து, அதில் நம்மை கவர்ந்து பாதித்தவர்களை மட்டுமே நேர்காணல் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். தனிப்பட்ட அன்பு நட்புக்காக யாரையும் எடுத்தது இல்லை.
உங்களுக்காகச் சொல்வது என்றால் நகுலன் நேர்காணல் எடுத்ததை எப்போதும் மறக்கமுடியாது. 1986-இல் நகுலனைத் தேடி திருவனந்தபுரம் சென்றுள்ளேன். பிறகு 1996-இல் புதிய பார்வை’ நேர்காணல் எடுக்க திரும்பவும் திருவனந்தபுரம் சென்றேன். அப்போது அவரைப் பார்க்கப்போனவுடன் அருகில் இருந்த மதுக்கடையில் 'பி ஜாய்ஸ்' என்ற மதுபானம் அரை வாங்கி வரச் சொன்னார். அதை வாங்கிவந்தவுடன் அவர் எப்போதும் மது அருந்தும் குவளையும் இன்னொரு அளவுக் குடுவையும் இருந்தது. பாட்டிலில் இருந்து அளவுக் குடுவையில் ஊற்றி அளந்து அளந்து குவளையில் ஊற்றி முழுமையாகக் குடித்துவிட்டார். எனக்கு என்ன அதிசயம் என்றால் அதை எதற்கு அளந்து அளந்து ஊற்றிக் குடிக்க வேண்டும். ஆனால் இரவு பல மணி நேரம் ஒதுக்கி, என் கேள்விகளுக்கு அற்புதமான பதிலாகத் தந்தார். அதை டேப்பில் பதிவுசெய்து, பிறகு ஊருக்கு வந்து கேட்டு எழுதும்போது கண்ணீர் வருவதைத் தடுக்கமுடியவில்லை. அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அவ்வளவு துயரமாகப் பேசியிருந்தார். அந்த நேர்காணல் பரவலான கவனம் பெற்று, பல இதழ்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மறு பிரசுரம் கண்டது.
(காஞ்சிபுரத்தில் இருந்து வெளிவந்த ‘சமவெளி’ இதழிலும், தினமணி’ இணைய இதழிலும் வெளியானது).
அதேபோல எழுத்தாளர் ரவிக்குமாரின் ‘தலித்’ இதழுக்காக ஈழக் கவிஞர் ஔவை நேர்காணல் எடுத்ததும் மறக்கமுடியாத ஒரு முக்கிய அனுபவம். ஔவை சென்னை வந்திருந்தபோது அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரது வாழ்வையும் படைப்பு பற்றியும் பதிவுசெய்தேன். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு தப்பிவந்த அனுபவங்கள் பற்றி அவர் சொல்லியது ஒரு திரைப்படப் புனைவு போன்று இருந்தது.
இப்படி ஒவ்வொருவர் நேர்காணலிலும் வெவ்வேறுவிதமான அனுபவங்கள் உண்டு.
அய்யனார், பவுத்த அய்யனாராக மாறியது ஏன்? எப்போது?
‘மேன்சன் கவிதைகள் நூலாக்கம் பெற்ற சமயம் எழுத்தாளர் ரவிக்குமார், ஆய்வாளர் பொ.வேல்சாமி ஆகியோருடன் மதுரையில் இருந்த சமயம், ரவிக்குமார் சொன்னார்;“அய்யனார் என்பதே ஒரு பவுத்த பெயர்தான். நீங்கள் பவுத்த அய்யனார் என்றே பெயர் வைத்துக்கொள்ளலாம்’ என்றார். இப்படித் தான் என் பெயர் பவுத்த அய்யனார் ஆனது. முதன்முதலாக என் ‘மேன்சன் கவிதைகள்’ நூலில் பவுத்த அய்யனார் என்ற பெயரைப் பயன்படுத்தினேன்.
2006-ஆம் ஆண்டு மதுரை காந்தி அருங்காட்சி யகத்தில் நடந்த பவுத்த விபாசன தியானப் பயிற்சி சென்றபோது, பவுத்த துறவி பிக்கு போதிபால அவர்களைச் சந்தித்தேன். அவர் மதுரையில் மத்திய அரசுப் பணி யிலும் இருந்தார். அவருடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிறு சடங்கின் மூலம் என்னைப் பவுத்த மார்க்கத்திற்கு மாற்றினார். ஏற்கெனவே பவுத்த அய்யனார் என்றே பெயர் இருந்ததால் அதே பெயர் பவுத்த பெயராகவும் இருக்கட்டும் என்றார்.
நீங்கள் எடுத்த நேர்காணலிலேயே மிகவும் சவாலாக அமைந்த நேர்காணல் யாருடையது?
எண்பதுகளில் கவிஞர் அபி வைத்திருந்த சிற்றிதழ் -கசடதபற, பிரக்ஞை - தொகுப்புகளில் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஓவியங்களை பார்த்து பிரமித்து உள்ளேன். அதன் தாக்கமே கிருஷ்ணமூர்த்தி ‘நேர்காணல்’ இதழ் கொண்டுவர காரணம். எனக்கு அவர் நேரடியான தொடர்பு கிடையாது. சென்னையிலுள்ள அவரது நண்பர்கள் பலரிடம் கேட்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடம் சொன்னார்கள். அப்போது வசிக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.
ஆறு மாதம் முயற்சி செய்து, அவர் மாமல்லபுரத்தில் இருப்பதை அறிந்து சந்தித்தேன். அவரது நேர்காணல் பதிவுசெய்ய பலமுறை அவரது மாமல்லபுரம் வீட்டிற்குச் சென்றேன். அந்த நேர்காணல் ஒரு சிறந்த ஆவணமாக அமைந்தது. ஓவியர் கிருஷ்ணமூர்த்தி மறைந்தபோது அந்த நேர்காணல்’ இதழை மையப்படுத்தி, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் அவரது ஆவணப்படத்தை ஒளிபரப்பினார்கள்.
தங்களின் இணையர் முத்துமீனாள் ஓர் எழுத்தாளர் என்பதை எப்போது கண்டுகொண்டீர்கள்?
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. நான் அந்தச் சமயம் எழுதும் நோட்டு மட்டும் வாங்கிக் கொடுத்தேன். அவ்வபோது தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார். எழுதி முடித்த பின்பு நான் படிக்கவில்லை.
‘காலச்சுவடு’ பணிக்காக சென்னை வந்தபோது தமிழினி வசந்தகுமார் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஒரு சமயம் முத்துமீனாள் எழுதி உள்ளதைச் சொன்னேன். அவரும் பெண்கள் எழுதுவதை அவசியம் படிக்கவேண்டும். அடுத்த முறை மதுரை செல்லும்போது அதைக்கொண்டு வாருங்கள், படித்துப் பார்ப்போம் என்றார். அவரிடம் இரண்டு பெரிய நோட்டுகளை கொடுத்துவந்தேன். சில நாட்களில் அதை டைப் செய்து கொடுத்தார். அவர்தான் முதலாவதாகப் படித்தது. பின்புதான் நான் படித்தேன். மேலும் மிகவும் நன்றாக உள்ளது. தமிழில் இப்படியான அனுபவம் நூலாக்கம் பெறவில்லை என்று வசந்தகுமார் சொன்னார். அவரே நூலகக் கொண்டு வருவதாகச் சொன்னார். பிறகு ஆழி பதிப்பகம் மூலம் வெளிவந்து இதுவரை பத்துப் பதிப்புகளுக்கு மேல் மூன்று வெவ்வேறு பதிப்பகங்கள் மூலம் வெளிவந்துள்ளது.
தற்போதைய தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் இலக்கியச் சூழல் எழுத்து சார்ந்து சிறப் பாகவே உள்ளது. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் கதை, கவிதை, நாவல், கட்டுரை, மொழி பெயர்ப்பு என்று சிறப்பாகச் செயல் படுகிறார்கள். புத்தக வெளியீடும் எளிமை யாகி விட்டது. ஆனால் விருப்பு வெறுப்பின்றி செயல் படும் விமர்சகர்கள் மிகவும் குறைவாக உள்ளார்கள்.
எஸ்.ராம கிருஷ் ணன், அ.ராமசாமி, சரவணன் மாணிக்க வாசகம் போன்ற சிலர்தான் புதிய படைப்பாளிகளைப் பற்றி எழுதி உற்சாகப்படுத்துகிறார்கள்.
ஆனால் எழுத்தாளர்களின் தனிப்பட்ட நட்பு என்பது குறைந்துவிட்டது என்றே நினைக் கிறேன். 80, 90-களில் எந்த எழுத்தாளர் வீட்டிற்கும் வாசகனாகச் செல்லமுடியும். அப்போது நமது பின்னணி பார்த்து யாரும் பழகமாட்டார்கள். என்ன சாதி, ஏழையா, பணக்காரனா, பிரபலமா, அரசியல் பலம் உள்ளவரா, பத்திரிகை - சினிமா சார்ந்தவரா இவரால் நமக்கு என்ன பலன் கிடைக்கும், ஏதாவது விருது, பரிசு இவரால் கிடைக்குமா என்றெல்லாம் அப்போது யாரும் பார்க்கமாட்டார்கள்.
இப்போது யாரிடமும் பேசவே தயக்கமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பழைய எழுத்தாளர் ஒருவரின் வாரிசிடம் போனில் பேசினேன். உடனே பதட்டமாகிவிட்டார். அவரால் எனக்கு ஏதோ காரியம் ஆகவேண்டும் என்று நினைத்து விட்டார். ஏனென்றால் அப்படியானவர்களிடம் மட்டுமே அவர் பழகியுள்ளார் என்று நினைத்துக் கொண்டேன்.
செல்பேசி வந்த பிறகு இன்றைக்கு கடிதம் எழுதுவதே வெகுவாக குறைந்துபோய் விட்டது. நீங்கள் இப்போதும் எழுதுகிறீர்களா?
இப்போது யாருக்கும் நான் கடிதம் எழுதுவது இல்லை. ஆனால் என்னிடமுள்ள பல முக்கிய எழுத்தாளர்கள், நண்பர்களின் நூற்றுக்கணக்கான கடிதங்களை ஆவணம் ஆக்கவேண்டும் என்று நினைக்கி றேன். வருங்கால தலைமுறையினருக்கு காண்பிக்க இது உதவக்கூடும். ஆனால் இதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்தால் மட்டுமே சாத்தியம்.
இப்போதும் நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் அந்தப் பிரபலம் யாரென்று சொல்லமுடியுமா..?
பொதுவாக இதுவரை பிரபலமானவர் கள் யாரையும் நேர்காணல் எடுக்கத் தோன்றியதில்லை.
இலக்கிய முக்கியத்துவம் சார்ந்து மட்டுமே நேர்காணல் எடுத் துள்ளேன். இப் போது நேர்காணல் எடுக்கும் எண்ண மில்லை. படிப்ப தையே முக்கியம் என்று நினைக் கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கனடாவில் இருந்து கடிதமெழுதி இருந் தார். கமல்ஹாசன் நேர்காணல் எடுத்து தர இயலுமா என்றும் கேட்டிருந் தார். அப்போது எடுத்து தரவேண்டுமென்று முயற்சி செய்தேன். இயலவில்லை.
நேர்காணல் செய்வதிலேயே பல்லாண்டுகள் கடந்தோடி விட்டன. நம் படைப்புகளை எழுத முடியாமல் போய்விட்டதே என்று என்றேனும் வருத்தப்பட்டதுண்டா?
அப்படியெல்லாம் எப்போதும் நினைத்த தில்லை. ஏனென்றால் எல்லாம் மகிழ்ச்சிக்காகச் செய்தது தானே. ஆனால் அதனுடன் சேர்ந்தே படைப்புகள் சார்ந்தும் செயல்பட்டு இருக்க வேண்டுமென்று நினைத்துள்ளேன்.
"இனிய உதயம்' இதழைப் பற்றிய உங்களின் கருத்தென்ன..?
‘இனிய உதயம்’ இதழில் நேர்காணல்கள் தொடர்ந்து வெளியிடுவதை முக்கியமாகக் கருது கிறேன். எல்லா தரப்பு வாசகர்களுக்கும் நேர்காணல் என்ற வடிவத்தைக் கொண்டு செல்வது முக்கியமானது.
தொண்ணூறுகளில் சுபமங்களா, புதிய பார்வை, இரண்டாயிரத்தில் தீராநதி, தடம் போன்ற இடைநிலை இதழ்கள் அந்தப் பணியைச் செய்தன. இப்போது அப்படியான இதழ்கள் எதுவுமேயில்லை. நான் 1996 முதல் எவ்வளவோ நேர்காணல் செய்துள்ளேன். ஆனால் என்னுடைய விரிவான நேர்காணல் இதுவரை வந்த தில்லை. மீண்டும் என் எழுத்துப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் இப்படியானதொரு நேர்காணலைச் செய்த "இனிய உதயம்' இதழுக்கு என் நன்றி.