ன் அன்பே... இது உன் கதை. என்னுடையதும்... நான் இதை எழுதுவதற்கு பல நேரங்களிலும் முயற்சித்தேன். பல வேளைகளில் வேண்டாமென்று ஒதுக்கி வைக்கவும் செய்தேன். வேண்டிய அளவிற்கு என்னிடம் தைரியம் இல்லாமலிருந்தது. இப்போதும் இதன் ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய நினைவில் வேதனையையும் சுமையையும் தாங்கிக்கொண்டு கூலியாட்களைப்போல எழுந்து நிற்கின்றன. என் கண்கள் ஈரமாகும்போது, நான் ஆச்சரியப்படுகிறேன். எவ்வளவு வருடங்களுக்குப்பிறகு இப்போது நான் உன்னிடமிருந்து விடுதலையாகாமல் இருக்கிறேன் என்பதை நினைத்து!

நம் உறவு எப்போது ஆரம்பித்தது? காதல் உறவு என்று நான் அதை அழைக்கமாட்டேன். காரணம்- உனக்கு என்மீது காதல் இல்லாத காரணத்தால் மட்டுமே அன்று இரவில் என் கணவர் உன்னிடம் கொடுத்த சாவியை எடுத்துக் கொண்டு வந்து எங்களுடைய வீட்டின் கதவைத் திறந்து நீ உள்ளே வந்தாய். நீ மது அருந்திய ஒரு மிருகமாக இருந்தாய்- அப்போது. என் சரீரத்தில் உன் கை வந்து விழுந்தபோது, நான் கண்விழித்தேன்.

"யார் இது?'- நான் பயத்தை நீக்குவதற்கு முயற்சித்தவாறு கேட்டேன்.

"நான்தான். பயப்பட வேண்டாம்.' உன் குரல் கனமாக இருந்தது. நான் போர்வைக்குள் சுருண்டவாறு மீண்டும் கேட்டேன்:

Advertisment

ss

"யாரு?'

"நான்... உன்னிகிருஷ்ணன்.'

அதற்குப் பிறகும் நான் உன்னுடைய கெட்ட நோக்கத்தை நம்புவதற்குத் தயங்கினேன். காரணம்- நீ என் கணவரின் மிகுந்த அன்பிற்குரிய நண்பனாக இருந்தாய். ஒரு அக்காவிடம் நடந்துகொள்ளும்போது பயன்படுத்தக் கூடிய மரியாதையுடனும் பணிவுடனும் மட்டுமே நீ என்னிடம் நடந்திருக்கிறாய்.

"என்ன ஆச்சு?'- நான் கேட்டேன்: "இந்த நேரத்தில எதற்கு இங்க வந்தே?'

பிறகு சில நிமிடங்களுக்கு நீ எதுவுமே கூறவில்லை. உன் கைகள் ஒரு காதலனின் கைளாக இருந்தன. உன் தாகம் என்னை பயமுறுத்தியது. நான் அந்த நேரமெல்லாம் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்- நான் என்ன செய்யவேண்டும்? சத்தம்போட்டு கத்தி, பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களை எழுப்பவேண்டுமா? இல்லாவிட்டால்... கதைகளில் லட்சியப் பெண்கள் செய்வதைப்போல என்னை முத்தமிடும் மனிதனை கழுத்தை இறுக்கிக்கொல்வதா? என் சரீரத்தின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக செய்யக்கூடிய ஒரு கொலைச் செயல்... ஆனால், ஒருநாள் சாம்பலாகப் போகவோ... இல்லாவிட்டால்... புழுக்களின் உணவாகப் போகவோ செய்யக்கூடிய இந்த சரீரத்தின் மானம் அந்த அளவிற்கு விலை மதிப்புள்ளதா? நான் என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் குழம்பினேன். என் அழுகையைக் கேட்டதாலோ என்னவோ... நீ என் கால்களில் பரிதாபத்துடன் வந்து விழுந்தாய். என் கால் விரல்களில் விழுந்த கண்ணீர்த் துளிகள் என்னை மேலும் அழச்செய்தன. அவமானத்தால் உண்டான அழுகை அல்ல அது. எவ்வளவோ பெரிய.... என்றும் அறிமுகமற்ற இந்த உலகத்தில் காமத்தின், கோபத்தின், கவலையின் அடிமைகளாக நேர்ந்த உன்னையும் என்னையும் பிற எல்லாரையும் எண்ணி நான் அழுதேன். நம்முடைய தர்மசங்கடமான நிலையை நினைத்து... நீ அதைப் பார்த்துவிட்டு.... பதைபதைப்புடன் கூறினாய்:

"என்னை மன்னிக்கணும்.''

நீ என் பாதங்களில் முகத்தை வைத்துக்கொண்டு கிடந்தாய். சாளரத்தின் வழியாக... ஆகாயத்தின் இருட்டு மங்கலாகி சாம்பல் நிறமாவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன கூறவேண்டுமென்றோ என்ன செய்யவேண்டுமென்றோ எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அறையில் தங்கி நின்றிருந்த மதுவின், வியர்வையின் வாசனை என்னிடம் வெறுப்பை உண்டாக்கவில்லை. இரக்கத்தை உண்டாக்கின. என் இதயத்தை நம்ப என்னாலேயே முடியவில்லை. என்னிடம் மிருகத்தனமாக நடந்துகொண்ட அந்த மனிதனிடம் நான் ஏன் கோபத்துடன் பேசவில்லை? அவன் ஒரு காட்டு மிருகம்... நான் எனக்குள் கூறிப் பார்த்தேன்: "அவன் நம்பிக்கை துரோகி... உன்னை அவமானப்படுத்தியவன்...' எனினும், பொழுது விடிந்தபோது, துருவ நட்சத்திரம் என் ஜன்னனுக்கு எதிராக இடம் பிடித்தபோது, நான் எழுந்து, உறங்கியவாறு படுத்திருந்த உன்னை முத்தமிட்டேன். நீ அப்போது ஏதோ கனவுகண்டுகொண்டிருந்தாய். உன்னை முத்தமிட்டபோது, நான்தான் என்று நீ புரிந்து கொண்டிருக்கவில்லை. நீ என் கைகளுக்கிடையே ஓய்வு தேடி, மீண்டும் உறங்கிக் கொண்டிருந்தாய். நான் என்னவோ சிந்தித்தேன். என்மீது அன்பு வைத்திருக்கும் கணவரைப் பற்றி... திருமண உறவின் புனிதத் தன்மையைப் பற்றி... என் தந்தை, தாயைப் பற்றி... நான் உன்னுடைய அவமானச் செயலை ஏற்றுக்கொண்டேன். உன் களங்கத்தை என்னுடைய தாக்கினேன். அதனால்.... பிறகு... எந்தவொரு சமயத்திலும் ஒரு அவமான உணர்வு காரணமாக அழவேண்டிய சூழ்நிலை உனக்கு உண்டாகவில்லை. ஆனால், நீ நன்றி கூறுவதற்கு முயற்சிக்கவில்லை. பல நேரங்களில் நீ என்னுடைய மன வேதனையை மறந்து, பேசிக் கொண்டிருந்தாய்.

"அமிர்தா... நீ இப்படிப்பட்ட ஒரு பெண் என்று முன்பு சிறிதுகூட நான் நினைத்ததில்லை.' பிறகு... நீ சிரித்தாய். "உனக்கு அறிவு இல்லையா? விவேகம் இல்லையா?' என்று எனக்குள் கேள்விகள் உயர்ந்துகொண்டிருந்தன. நான் ஒரு மோசமான பெண் என்று உனக்கு எப்படித் தோன்றியது? உன்னைத் தவிர, நான் வேறொரு ஆணைத் தொட்டதே இல்லையே! ஆனால், நான் எதுவும் கேட்கவில்லை. எதுவும் கூறவில்லை. நீ என்னைத் தவறாக நினைத்துவிட்டாய். ஆனால், உன்னை வருத்தப்படச் செய்வதற்கான எண்ணம் எனக் கில்லை. அதனால் உன் கண்ணில் எப்போதும் நான் "இப்படிப்பட்ட ஒரு பெண்'ணாகிவிட்டேன்.

அப்போதெல்லாம் நீ எனக்கு மட்டுமே இருந்தாய். இல்லை என்று நீ கூறியிருக்கலாம். நீ ஒரு காலத்தில் காதலித்த தேவதை யைப்போல பரிசுத்தமானவளான ஒரு இளம்பெண்ணைப் பற்றி நீ கூறினாய். ஆனால், அதைக் கூறும்போதுகூட நீ புல்வெளியில் என் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்தாய். அருகில் தடிமனான எருமைகள் புல்லை வாசனை பிடித்தவாறு அலைந்துகொண்டிருந்தன. சில அடிகளைத் தாண்டி, கறுத்த பாறைக் கற்களின்மீது வந்து மோதியவாறு அரபிக்கடல் ஒரு பேரிரைச்சலுடன் திரும்பிக்கொண்டிருந்தது. மீண்டும்.... மீண்டும் வருவதற்காக மட்டுமே நான் உன்னுடைய கண்களில் திடீரென வந்துசேர்ந்த ஈரத்தைப் பார்த்தேன்.

ஆனால், அதைப் பார்த்ததாகக் காட்டிக்கொள்ள வில்லை. காரணம்- முன்பு காதலித்த ஒரு இளம் பெண்ணும், உன் தாயும், சிவப்புநிறக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உன் பெரிய மாளிகையும் தொட முடியாத ஒரு தனி உலகத்தில் என்ற விஷயம் எனக்குத் தெரியும். அவை பற்றிய நினைவுகளில் மூழ்கி, சலனமே இல்லாமல் நீ இருக்கும்போது, என் கை ஸ்பரிசம்கூட உனக்கு சந்தோஷத்தைத் தராது என்பதை நான் புரிந்து கொண்டிருந்தேன். நான் உனக்கு யாராக இருந்தேன்? உன் மிருகத்தனம் கொண்ட ஆசைகளை நிறைவேற்றுவதற்கு எப்போதும் தயாராக இருந்த ஒரு பெண்!

அவ்வளவுதான்... நீ ஒருமுறை என்னிடம் கூறினாய்:

"அவளுக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன? என்னைப் பற்றி அவளுக்கு இருக்கக்கூடிய அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ளலாமே?'

"யாருக்கு? எதற்காக?' என்று எதுவுமே கேட்கவில்லை. நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டு கூறினேன்:

"சரிதான்... கடிதத்தை எழுதினால் அவளுடைய மனதைத் தெரிந்துகொள்ள முடியுமே!'

எனக்கு அழவேண்டும்போல இருந்தது. உன் கால்களில் விழுந்து, உன் காதலுக்காக கெஞ்ச வேண்டும்போல எனக்குத் தோன்றியது. ஆனால், அது எதுவுமே நடக்கவில்லை. காரணமே இல்லாமல் நான் குலுங்கிக் குலுங்கி சிரித்தேன். நீ கூறிய சுவாரசியமற்ற தமாஷ்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக நான் நடித்தேன். நான் நடிக்கக்கூடிய பகுதி அதுவாக இருந்தது அல்லவா? "இப்படிப்பட்ட ஒரு பெண்'....

என் வீட்டிலும் நான் நடிக்கவேண்டியதிருந்தது.

"நீ எங்கே இருந்தே?' என் கணவர் கேட்டார். அன்று நான் உன்னிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, பொழுது சாயங்காலத்தைத் தாண்டியிருந்தது. நான் பொய்களைக் கொண்டு ஒரு இருண்ட வீட்டைக் கட்டினேன். அதிலிருந்து என்னாலேயே தப்பிப்பதற்கு முடியாமல் போய்விட்டது.

என் கணவர் நகரத்திலிருந்த இரவுகளில் நான் உன் கைகளை நினைத்துக்கொண்டு, உறங்கு வதற்கோ ஓய்வெடுக்கவோ முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். என் கணவர் தன்னுடைய மெலிந்த கைகளைக்கொண்டு என்னைக் கட்டிப் பிடிக்கும்போதெல்லாம் நான் வேதனையாலும் குற்ற உணர்வாலும் நெளிந்தேன். என் சரீரத்திலிருந்து "நான்' என்ற பொருள் எவ்வளவோ தூரத்தில் விலகி நின்றுகொண்டிருக்கிறது என்றும், அந்த மெலிந்த... கறுத்த கைகள் அனைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் உருவத்துடன் எனக்கு எந்தவொரு உறவும் இல்லை என்றும் இடையே எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால், வேறு சூழ்நிலைகளில் நீ என்னுடன் சேர்ந்து இருந்தபோது, நான் முழுமையை அடைந்தவளாக உணர்ந்தேன். உன் இளம்... சிவந்த உதடுகளை கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன. காதுகள் உன் வார்த்தைகளைக் கேட்டன. கைகள் உன்னைக் கட்டிப்பிடித்தன. என் இதயமும் உனக்காகத் துடித்தது. மொத்தத்தில்... நான், நீயாகிவிட்டேன். உன் குலுங்கல் சிரிப்பும், கபடமும், உன் குரூர குணங்களும்.... அனைத்தும்... அனைத்தும்... என்னுடையவையாயின. உன்னைப் பற்றி நினைத்தபோது, காதல் என்ற வார்த்தை மட்டுமே எனக்குத் தோன்றியது. அதற்கு வேறு பெயர்கள் இருக்கின்றன என்று நீ கூறினாய்.

"உன்னைத் திருப்திப்படுத்துவதற்கு உன் அப்பிராணி கணவரால் முடியவில்லை'- நீ அதைக் கூறிவிட்டு, அவ்வப்போது சிரிப்பதுண்டு. அந்த வார்த்தைகளின் கடுமையோ, இரண்டு பக்கங்களிலும் காதல் இல்லாத ஒரு உறவின் குறையோ.... எதுவுமே என்னை அதிர்ச்சி யடையச் செய்யவில்லை. உன்னைப் பார்க்காமல் வாழ்வதற்கு என்னால் இயலவில்லை...

இறுதியில் நீ திருமணமானவனாகிவிட்டாய். தேவதையைப் போன்ற பரிசுத்தமான அந்த இளம்பெண்ணே உன் மனைவியானாள். எந்தச் சமயத்திலும் அவளை என்னுடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வரவில்லை. திருமணத்திற்குப் பிறகு நீ வரவும் இல்லை. காயம்பட்ட இதயத்தை வைத்துக்கொண்டு நான் உனக்கு முன்னால் எவ்வளவு முறை காரை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன்! சாளரத்தின் வழியாகவோ வேறு வகையிலோ உன் அழகுநிறைந்த அந்த உருவம் தோன்றக்கூடாதா? நான் உன்னைப் பார்ப்பதற்கு விரும்பினேன். மேலும் ஒருமுறை பார்ப்பதற்கு... மேலும் ஒருமுறை முத்தமிடுவதற்கு... ஆனால், திருமணத்திற்குப்பிறகு நீ என்னை மறந்து விட்டாய். என் கடிதங்களுக்கு பதில் வரவில்லை. தொலைபேசியில் என் குரலைக் கேட்டவுடன், நீ அதைக் கீழே வைத்தாய். என்னை எத்தனை முறை நீ வேதனை படுத்தியிருக்கிறாய்?

எனினும் வருவாய் என் நான் எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தேன்...

ஒருநாள் உன் ஒரு கடிதம் எனக்கு வந்தது. இரண்டு வார்த்தைகள் மட்டும்... "தயவுசெய்து எனக்கு கடிதங்கள் அனுப்பியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தொல்லைப்படுத்த வேண்டாம். உங்களுடன் எனக்கு எந்தவொரு உறவும் இனிமேல் உண்டாகாது.'

நான் தரையில் விழுந்து தேம்பி அழுதேன். நீயும் நானும் சேர்ந்து ஓய்வெடுத்த மர நிழல்களிலும் கடற்கரையிலும் நான் உன்னை நினைத்து அழுதேன். என் கணவர் கேட்டார். "உனக்கு என்ன ஆச்சு?' என்று.

"எனக்கு என்ன ஆச்சு? நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்' என்று கூறுவதற்கான தைரியம் எனக்கு இல்லை. எந்தக் காலத்திலும் அனுபவித்திராத சந்தோஷத்தை எனக்கு நீ தந்தாய். அது இல்லாமற்போனது. எந்தக் காலத்திலும் பார்த்திராத அழகு இந்த உலகத்தில் இருக்கிறது என்பதை நீ காட்டினாய்.

அது இல்லாமற்போனது. என் கைகளில் வெறுமை மட்டுமே இருக்கிறது. இரவு வேளைகளில் நான் கறுத்த இருளை இறுக அனைத்தவாறு முணுமுணுத்தேன். "என் உண்ணீ! என் உண்ணீ!'

உன்னை மறப்பதற்கு என்னால் முடிந்திருந்தால், நான் அதிர்ஷ்டசாலியாக இருந்திருப்பேன். அது எதுவுமே நடக்கவில்லை. சாயங்கால வேளைகளில் காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, கல்லூரிகளுக்கு முன்னாலும் பூங்காங்களுக்கு அருகிலும் வண்டியின் வேகத்தைக் குறைத் தேன். உன் முகத்தின் சாயலைக்கொண்ட ஏதாவறு இளைஞர்களைப் பார்ப்பதற்கு நான் ஆசைப்பட்டேன். உன் கண்களைப்போல கருப்புநிற கண்களைக் கொண்டவர்களை.... இல்லாவிட்டால்... உன் உதடுகளின் இளம் சிவப்பு நிறத்தைக் கொண்ட உதடுகளையும் உன் சுருண்ட தலைமுடியையும் உள்ளவர்களை...

அந்த மக்களின் கூட்டங்களில் இப்படிப்பட்ட பலரும் இருந்தார்கள். நான் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களிடம் நெருங்கினேன். அன்பு செலுத்துவதற்கு மட்டுமே மனிதர்கள் தயங்குகின்றார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். என் காதலர்களில் ஒவ்வொருவரையும் நான் "உண்ணி' என்று உழைத்தேன். அவர்களுக்கு அது ஒரு வேடிக்கையாகத் தோன்றியது.

எனக்கு நல்ல ஒரு பெயர் இல்லாமற்போனது.

அன்பு செலுத்தக்கூடிய ஒரேயொரு காதலன் கூட இல்லாமற்போனேன். நான் தனிமை யானேன். பலரும் கட்டிப்பிடித்த என் சரீரத்தின் அழகு மட்டும் அழியவில்லை. அது ஒரு சாபத்தைப்போல நிலைபெற்று நின்று கொண்டிருந்தது. பெண்கள் என்னை சந்தேகத் துடனும் வெறுப்புடனும் பார்த்தார்கள். என் கணவரும் என்னிடமிருந்து விலகி... விலகிச் சென்றார். ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தும், எந்தவொரு வார்த்தையையும் ஒருவரோ டொருவர் பேசிக்கொள்ளாமலே, நாங்கள் மாதங்களைக் கடத்திவிட்டோம்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான ஒரு மனிதர், நல்ல மது கிடைக்காத சூழல் வரும்போது, தரமற்ற சரக்குகளைக் குடிப்பதைப்போல என்னுடைய காதல் உறவுகள் ஒவ்வொன்றும் இருந்தன. ஒரு நாள் என்னைவிட எட்டுவயது குறைவான ஒரு இளைஞன் உன்னைப் பற்றி என்னிடம் கூறினான்:

"என் அலுவலகத்திலிருக்கும் மிஸ்டர் உண்ணி கிருஷ்ணன் அமெரிக்காவிற்குச் செல்கிறார். அங்கு புதிய வேலை கிடைத்திருக்கிறது.'

அவன் காலையில் எழுந்து என் அறையில் நின்றுகொண்டு ஆடைகளை அணிந்து கொண்டிருந்தான். உன் பெயரைக் கேட்டவுடன், நான் அவனை அருகில் அழைத்தேன். எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும் என்று நான் நினைத் தேன். இன்னும் சிறிதுகாலம் கடந்தபிறகுதான் நீ இந்தியாவிற்குத் திரும்பி வருவாய் என்ற விஷயத்தை நான் அவனிடமிருந்து தெரிந்துகொண்டேன். அந்த காரணத்தால்தான் நான் உனக்கு கெஞ்சல் நிறைந்த அந்த கடிதத்தை அனுப்பினேன். மேலுமொருமுறை பார்ப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என்று நான் கெஞ்சிக்கேட்டிருந்தேன். ஐந்து நிமிடங்களுக்காக நான் கெஞ்சினேன். வெறும் ஐந்து நிமிடங்களுக்கு... நீ எழுதினாய்.

"வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் சேர்ந்து நான் அமெரிக்காவிற்கு விமானம் ஏறுகிறேன். விமான நிலையத்திற்கு வந்தால் பார்க்கலாம்.'

அந்தக் கடிதத்தை நான் முத்தமிட்டேன். அதை சொர்க்கத்திலிருந்து வந்து விழுந்த ஒரு வரமாக நான் நினைத்தேன்.

வெள்ளிக்கிழமையன்று எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கக்கூடிய நீலநிறப் பட்டுப் புடவையையும் நீல ரவிக்கையையும் நான் அணிந்தேன். என் கூந்தலை வாரி... வாரி... பளபளப்பாக்கினேன்.

என் உதடுகளில் இளம் சிவப்பு சாயத்தைத் தேய்த்தேன். என் இதயத்தில் அமர்ந்துகொண்டு ஒரு கிளி, ஆனந்தமயமான பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் காரை மிகவும் வேகமாகவே ஓட்டினேன். ஆனால், சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இருந்தன. எப்போதையும்விட அதிகமாக... எனினும், அரைமணி நேரத்தில் நான் விமான நிலையத்தை அடைந்துவிட்டேன். அங்கு இரும்புக் கம்பிகளைப் பிடித்தவாறு நின்றுகொண்டிருந்த மக்கள் என்னை இரக்கத்துடன் பார்த்தார்கள். நான் தாங்கமுடியாமல் மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தேன்.

"இப்போதுதான் தரையிலிருந்து மேலே உயர்ந்தது'- அவர்களில் ஒரு மனிதர் கூறினார். உன் விமானம்... கண்களை உயர்த்தி நான் ஆகாயத்தைப் பார்த்தேன். ஆகாயத்தை சூரியன் ஒரு நெருப்பு அடுப்பாக மாற்றியிருந்தது. என் கண்கள் தாமே மூடின. இன்னும் சிறிதுநேரம் அங்கு நின்றால், நான் அழுதுவிடுவேன் என்று எனக்குத் தோன்றியது. வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு நடந்து செல்வதற்கு மத்தியில் நான் மேலுமொரு முறை ஆகாயத்தைப் பார்த்தேன். வெள்ளை நிறத்தியிருந்த ஆகாயத்தின் ஒரு மூலையில் ஒரு வெள்ளி அஸ்திரத்தைப்போல வேகமாகப் பாயந்துபோய்க்கொண்டிருக்கும் அந்த விமானத்தை நான் பார்த்தேன். சிறிதுநேரம் கடந்தபிறகு, என் கண்களில் சூரியன் மட்மே தெரிந்தது. எனக் குள்ளிருந்து திடீரென ஒரு அழுகை வெளியே வந்தது...

என் செல்லமே... இனி எந்தக் காலத்திலும் உன்னை நான் பார்க்க போவதில்லை. அதனால் மட்டுமே நான் இந்தக் கதையை எழுதுகிறேன். இந்தக் கதைக்கு உயிர் உள்ள காலம்வரை, உன்னை நான் முழுமையாக இழந்துவிடவில்லை என்று எனக் குத் தோன்றுகிறது. ஆனால், எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்குமென்று யாருக்குத் தெரியும்?

மொழிபெயர்ப்பாளரின் உரை

வணக்கம். இந்தமாத "இனிய உதய'த்திற்காக மூன்று அருமையான மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

"பூட்டப்பட்ட வீடுகள்' சிறுகதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், தேசிய சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான உறூப். இந்தக் கதை 1954-ஆம் வருடத்தில் எழுதப்பட்டது. இதில் வரும் அம்முக்குட்டி என்றும் நம் உள்ளங்களில் உயிர்ப்புடன் வாழ்வாள். முரட்டுத்தனமான சுகுமாரன் நாயருக்குள் இப்படியொரு கனிந்த இதயமா! கதையின் இறுதிப் பகுதி... யாராலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. அதற்காகவே நாம் உறூப்பை உவகையுடன் பாராட்டவேண்டும்.

"சூரியன்' சிறுகதையை எழுதியவர் மலையாளப் பெண் எழுத்தாளர்களின் திலகமும், தேசிய சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. கயிறுமீது நடப்பதைப்போன்ற மாறுபட்ட கதைக்கரு. அதை எந்த அளவுக்கு முதிரிச்சியுடன் கையாண்டிருக்கிறார் மாதவிக்குட்டி! ஒரு பெண்ணின் மனவோட்டத்தை மிகவும் சிறப்பான கதையாக எழுதிய மாதவிக்குட்டிக்கு ஒரு பூச்செண்டு!

"சிகா' சிறுகதையை எழுதியவர் கவித்துவத் தன்மைகொண்ட கதைகளை எழுதுவதில் மன்னரும், தேசிய சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான டி. பத்மநாபன். மருத்துவமனைப் பின்னணியில் எழுதப்பட்ட கதை... ஒரு சிறுகதையில் சம்பவங்களை எப்படி உயிரோட்டத்துடன் எழுதுவது, உணர்ச்சிகளை வாசிப்பவர்களின் இதயங்களுக்குள் எப்படிக் கடத்துவது ஆகிய விஷயங்களை நாம் பத்மநாபனிடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

அதற்கு சரியான உதாரணம்... "சிகா' என்னும் இந்தக் கதை.

எனக்குப் பிடித்த இந்த மூன்று கதைகளும் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்ற திடமான நம்பிக்கை என்றும் எனக்குண்டு. "இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்

சுரா