வேதனையுடன் நான் இந்தக் கதையையும் கூறுகிறேன். ஒன்பது மாத காலம் உயிரின் துடிப்பென நான் அவளை நினைத்தேன். ஒன்பது மாதங்கள் அவள் இந்த உலகத்தின் வெளிச்சத்தையும் காற்றையும் சுவாசித்து வளர்ந்தாள்.
மனைவியின் வீட்டி-ருந்து வரும்போது, பிஞ்சு மகளுக்கு மெல்லிய காய்ச்சல் இருந்தது. எனினும், பிடிவாதத்துடன் அவளைக் கொண்டுவந்தேன். அந்தப் பயணத்திற்கான வழியனுப்புதல் இப்போது இதய வேதனை தரக்கூடியதாகத் தோன்றுகிறது.
ஃப்ளாஸ்க், ஃபீடிங் பாட்டில், ஆஸ்டர் மில்க் டின்கள், மில்க் ஆஃப் மெக்னீஷியா, ஸிரப், வைட்ட மின் பி காம்ப்ளெக்ஸ் டப்பாக்கள், ஆலிவ் எண்ணெய்... இவையனைத்தையும் பிஞ்சு மகளுக்காக ப்ளாஸ்டிக் பைக்குள் வைத்து தூக்கிப்பிடித்தவாறு தாத்தா காரில் கொண்டுவந்து வைத்தார். என் மடியில் படுத்திருந்த பிஞ்சு மகளை அவளுடைய தாத்தா ஆர்வத்துடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்.
முன் தலையிலும் கன்னத்திலும் நெற்றியிலும் எத்தனை முத்தங் களைப் பதித்தார் என்பதற்கு ஒரு கணக்கே இல்லை. பாட்டி தன் பேத்தியின் கையில், சாவி கொடுத்தால் தானாகவே தலையை ஆட்டக்கூடிய பொம்மையைக் கொடுத்தாள். தலையை ஆட்டுவது டன் சேர்ந்து பொம்மையின் கண்கள் சந்தோஷத்தால் அகல விரிந் திருந்தன. காரைக் கிளப்புவதற்கு முன்னால் என் மனைவியின் தந்தை நான் கேட்பதற்காகக் கூறினார்: "பேத்தி போய்ட்டா இந்த வீடு இருட்டாயிடும். இவள் திரும்ப வந்தாதான் இனி எங்களுக்கு இந்த வீட்ல சந்தோஷம்ங்கறதே இருக்கு. அதனால அன்னம் ஊட்டுற நிகழ்ச்சி முடிஞ்சவுடனே இவளைக் கொண்டு வரணும். தாத்தாவோட ஆசை முத்தே... போய் வா...'' மீண்டும் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்.
தாத்தாவின் கவலை நிறைந்த வார்த்தைகளைக் காதில் வாங்காததைப்போல காட்டிக்கொண்டேன். என் குழந்தையை என் வீட்டிற்குக் கொண்டுசெல்வது நான் விரும்பக்கூடிய நேரத்தில்தானே?
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் முத்தாக இருக்கலாம். ஆனால், எனக்கு அதுவெல்லாம் இப்போது முக்கியமான விஷயமாகப் படவில்லை. நான் அதையெல்லாம் கூறவில்லையெனினும், என் முக வெளிப்பாட்டிலிருந்து அதைத் தெரிந்துகொள்ளலாம். மனைவி பிரசவமாகி ஒன்பது மாதங்களாகிவிட்டன. பிரசவத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். ஒரு வருடத்திற்கும் மேலாக மனைவியின் வீட்டில் இருக்கச் செய்ததே தப்பானது. இனிமேல் இதே செயலைத் திரும்பச் செய்யக்கூடாது. என் மனதில் அப்போது பலவும் தோன்றின.
கார் கிளம்பியது. தாத்தாவின் கண்ணீர்த் துளிகள் விழுந்து காய்ந்த அடையாளம் பிஞ்சு மகளின் முகத்தில் இருந்தது. ஒருவேளை பிஞ்சு மகளும் அழுதிருப் பாளோ? சின்ன குழந்தைகளுக்கு முதிர்ந்தவர்களிடம் இருப்பதை விட தீர்க்கதரிசனம் அதிகமாக இருக்குமல்லவா? சிவப்பு நிறத்திலிருந்த மெல்லிய சில்க் ஆடையை அணிந்து, குழந்தை ஒரு பன்னீர் மலரைப்போல சிவந்து காணப்பட்டாள். குட்டி மகள் அவளுடைய தாயின் அமைதியான முகத்தைப் பார்த்து ஈறைக்காட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். பல் முளைத்திராத ஈறைக் காட்டி குட்டிமகள் ஏன் சிரித்தாள்?
தந்தையின் வீட்டிற்குச் செல்லும் சந்தோஷம் காரணமாக சிரித்திருப்பாளோ? பிஞ்சு மகளின் வருகையை எதிர்பார்த்து வேறொரு தாத்தாவும் பாட்டியும் காத்துக் கொண்டிருப்பதை குட்டிமகள் பார்த்திருப்பாளோ? அவர் களைப் பார்ப்பதற்கான ஆவலை வெளிப்படுத்து வதைப்போல கைகளையும் கால்களையும் அடித்து, அவள் ஆனந்தமாக படுத்துத் துடித்துக்கொண்டிருந்தாள்.
அவள் கையை உயர்த்தி, தூக்குவதற்காக முதுகை உயர்த்தினாள். நான் அவளைத் தூக்கி மார்போடு சேர்த்து வைத்துக்கொண்டேன். முளைத்து வந்துகொண்டி ருந்த முடிச்சுருள்களை நான் என் முகத்தைக்கொண்டு அழுத்தினேன்.
காய்ச்சப்பட்ட தேங்காய் எண்ணெய்யும் வசம்பும் கலந்து சேர்ந்த ஒரு மெல்லிய வாசனை என் ஆன்மாவுக்குள் வலிய நுழைவதைப்போல உணர்ந்தேன். குட்டிமகள் என் மடியில் படுத்துக்கொண்டு தன் தாயிடம் என்னவோ குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.
கன்வ முனிவரைவிட்டுப் பிரிந்த சகுந்தலையின் மன நிலையை காரில் அமர்ந்து என் மனைவி வெளிப்படுத்திக் கொண்டிருந்தாளோ? மனைவி கவலையுடன் காணப்பட்டாள். வேகமாக ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்றிரண்டு கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பியபோது, என் சரீரத்தின்மீது மனைவி சாய்ந்துவிழுந்தாள். நான் அவளின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.
எனினும், கடுமையானவனைப் போலவே அமர்ந்திருந் தேன். சில நிமிடங்கள் கடந்தபிறகு காருக்குள் வெயிலின் ஜுவாலைகள் வந்து விழ ஆரம்பித்தன. இடையே வெளியிலிருந்து வரக்கூடிய காற்று காருக்குள் நுழைந்து சுற்றிக்கொண்டிருந்தது. காற்று வீசியபோது, பிஞ்சுமகளின் முடிச் சுருள்கள் பறக்க ஆரம்பித்தன.
காற்றின் குறும்புத்தனம் குட்டிமகளின் முடிச் சுருள்களை மேல்நோக்கி ஒரு ப்ரஷ்ஷைப்போல நிறுத்துவதைப் பார்ப்பது புதுமையான அனுபவமாக இருந்தது. அப்போது ஒரு ஆண் குழந்தையின் சாயல் தெரிந்தது. மேல்நோக்கி இழுத்துக்கட்டி ஒரு மயில்பீலியைச் சூடினால்..? எந்த அளவுக்கு அழகாக இருக்கும்!
என் முதல் குழந்தை ஒரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமென்பது விருப்பமாக இருந்தது. ஆனால், மனைவிக்கும் அவளுடைய தந்தை- தாய்க்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கவேண்டுமென்பது விருப்பமாக இருந்தது. என் மனைவிக்கும் எனக்குமிடையே பந்தயம் வைத்தோம். நான் உறுதியான குரலில் கூறினேன்: "முதல் குழந்தை ஆண் குழந்தைதான்...''
"இல்லை. பெண் குழந்தைதான்...''
"அந்த அளவுக்கு எப்படி உறுதியா சொல்றே?''
"சங்கரன் குளங்கரை பகவதியோட அருளிருந்தா, பெண் குழந்தைதான் பிறக்கும்.''
"ஆண் குழந்தையா இருந்தா..?
"குருவாயூரப்பனோட சக்திங்கறதை ஒத்துக்குவோம்.''
நாங்கள் இருவருமே வெற்றிபெறுவோம் என்பதைப் போல வாதம் செய்வோம். பெண் குழந்தை பிறந்தால் அதற்குத் தேவைப்படும் எல்லா நகைகளையும் நான் செய்து வைத்துக் கொடுப்பதெனவும், ஆண் குழந்தை பிறந்தால், மனைவியின் தந்தையின் சார்பாக அனைத்தையும் தயார்செய்து தரவேண்டும் எனவும் தீர்மானித்தோம்.
தொடர்ந்து நடைபெற்ற வாதம், என்னென்ன நகைகள் என்பதைப் பற்றியானது. பெண் குழந்தையாக இருந்தால், இடுப் பிற்கு பொன்னாலான அரை ஞாண், கால்களுக்கு தங்கக் கொலுசு, கைகளில் வளையல்கள், கழுத்திற்கு பச்சைக் கல் பதிக்கப் பட்ட சங்கிலி... அனைத் தையும் சேர்த்தால் ஆயிரம் ரூபாய் அளவுக்கு வரக்கூடிய ஒரு பட்ஜெட்டை அவள் சமர்ப்பித் தாள். நான் அதற்கு ஒப்புக்கொண் டேன். ஆண் குழந்தைகளுக்குத் தேவைப்படும் பட்டியலை நானும் கூறினேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். ஒப்புக்கொள்வதில் அவளுக்கு சிரமமில்லை. அவளுடைய தந்தையின் கையில் நிறைய மலேசியன் டாலர்கள் இருக்கின்றனவே!
இருவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஒன்றோ இரண்டோ மாதங்கள் கடந்தபிறகுதான் மனைவியைப் பார்ப்பேன். நாட்கள் கடக்க கடக்க... அவள் வெளிறிப் போய் சோர்வுடன் காணப்பட்டாள். மனைவியை அருகில் பிடித்து அமரவைத்து வயிற்றை மெதுவாகத் தடவியவாறு விளையாட்டாகக் கூறினேன்: "இந்த வயித்துக்குள்ள ஒரு குட்டிமகன் இருக்கான். உன் ஆயிரம் ரூபாய் போன கதைதான்..!''
"என் வயித்துல இருக்கறது பெண் குழந்தைன்றது உறுதி.''
"காரணம்?''
"ஆண் குழந்தையா இருந்தா, கால்லயும் கைலயும் தண்ணி வரும். பிறகு... வயித்துல கிடந்து மோதிப் புரளும். மிதிச்சு உதைக்கும்.''
"உனக்கு இந்த தகவல் எல்லாம் எங்கேயிருந்து கிடைச்சது?''
"விளக்கேத்துற குஞ்ஞிமாளு அம்மாக்கிட்ட சொல்றதைக் கேட்டேன்.''
"அப்படின்னா... உனக்கு உடம்புக்கு எதுவுமில்ல.
எனக்கு அதுபோதும்.''
நாங்கள் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் குழந்தையைப் பற்றி நினைத்து சந்தோஷத்தில் இருந்தோம். பெண் குழந்தையாக இருந்தால் மருமகனுக்கு கட்டிவைக்க வேண்டும். மருமகனோ குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். மூன்று வயதுள்ளவன். தன்னுடைய மனைவியைப் பற்றி கனவு கண்டுகொண்டிருப்பான்.
மனைவி மருத்துவமனையில் படுத்துதான் பிரசவித் தாள். தகவல் அறிந்தவுடன் நான் ஆவல் குடிகொள்ள ஓடிச்சென்றேன். ஒரு ஆண் குழந்தையின் உருவத்தை மனதில் கற்பனை செய்தவாறு, பிரசவ மருத்துவமனையின் ஏழாம் எண் அறைக்குள் நுழைந்தபோது, மனைவி ஒரு நீலவண்ணக் கம்பளியால் கழுத்துவரை மூடப்பட்டுப் படுத்திருந்தாள். அவளுக்கருகில் சிவப்புநிற மெல்லிய துணியால் போர்த்தப்பட்டு என் குழந்தை படுத்திருந்தது. ஒரு ஆண் குழந்தையின் முகத்தைப்போல தோன்றியது. நீலவண்ணப் போர்வையால் கழுத்துவரை போர்த்தி கண்களைமூடிப் படுத்திருந்த என் மனைவியும், சிவப்பு நிற மெல்லிய துணியால் கழுத்துவரை போர்த்திப் படுக்க வைக்கப்பட்டிருந்த பிஞ்சு மகளும்- இருவரும் ஒருவரே என்பதைப்போல எனக்குத் தோன்றியது. ஒரே வார்ப்பு!
பிஞ்சுமகள் பிரசவித்த பெரிய ஒரு பெண் சுனந்தா எனவும், சுனந்தா பிரசவித்த ஒரு குழந்தை... குட்டிமகள் எனவும் தோன்றியது. அந்த அளவுக்கு உருவ ஒற்றுமை இருந்தது. கடவுளின் சித்துவேலைகளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டேன். பிறப்பில் தெய்வம் கையாளும் உருவ வெளிப்பாட்டு ஆற்றல் எந்த அளவுக்கு ஆச்சரியமளிக்கக் கூடியது!
மனிதக் குழந்தைகளும் நாய்க்குட்டிகளும் அவற்றின் பெற்றோரின் உருவத்திலும் குணத்திலும் நிறத்திலும் பிறப்பதை நாம் பார்க்கிறோம். இது எப்படி நடக்கிறது?
"தாயும் குழந்தையும் சுகமா தூங்கிக்கிட்டு இருக்காங்க''
கூத்தாட்டுக் குளத்திலிருந்து பணிமாறுதல் பெற்று, நேற்று வேலையில் சேர்ந்த... பணியில் ஈடுபட்டிருக்கும் நர்ஸ் இனிய குரலில் கூறினாள். நல்ல குரல்... சுத்தமானதாகவும் அழகானதாகவுமிருந்த ஒரு அறையில் நாங்கள் நால்வரும் இருந்தோம். அருகிலிருந்த நாற்காலியை எனக் கருகில் நகர்த்தியவாறு கேட்டாள்:
"குழந்தையோட அப்பாதானே?''
"ஆமா...''
"பார்த்தவுடனே சாயல் தோணுச்சு...''
"யாரோடது..?''
"சார்... அந்த குழந்தைக்கு உங்களோட காதும் மூக்கும்தான் இருக்கு.''
நர்ஸ் சாதாரணமானவள் அல்ல. மன அறிவியல் அறிந்தவளாக இருக்கிறாள். பழகத் தெரிந்திருக்கிறது. யாருக்கும் பிடித்துவிடும். அழகி...
நான் நர்ஸிடம் கேட்டேன்: "சிஸ்டர்... நேத்து ராத்திரி பிரச்சினைகள் எதுவும் உண்டாகலையே?''
"சொல்லக்கூடிய அளவுக்கு பிரச்சினை எதுவும் உண்டாகல... ஆனா, பிரசவ வேதனைங்கறது தலை வேதனை இல்லையா?''
"கொஞ்சங்கூட தூங்கலையா?''
"முதல் பிரசவமில்லியா? கொஞ்சம் சிரமப்பட்டாங்க. ராத்திரியில வலி அதிகமானவுடனே, அழுத்திப் பிடிக்கறதுக்காக "வெய்ட் பாக்ஸ்' வச்சேன். ஆண்களுக்கு இதெல்லாம் ஏதாவது தெரியுமா?''
வயதைவிட அதிகமான பக்குவத்தைக் கொண்டிருந்த இந்த அழகான நர்ஸ் ஒரு முறையாவது பிரசவித்திருக்க மாட்டாளா? நான் அவளைப் பார்த்து உள்ளர்த்தத்துடன் சிரித்தேன். திடீரென மனைவி கண் விழித்துவிட்டாள். கட்டிலுக்கு நெருக்கமாகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் என்னைப் பார்த்ததும், எல்லா வேதனைகளையும் சுனந்தா மறந்துவிட்டதைப்போல காணப்பட்டாள்.
சந்தோஷத்துடன் அவள் சிரித்தாள். நாங்கள் இப்போது தந்தையும் தாயுமாக ஆகியிருக்கிறோம். நேற்றுவரை குழந்தைகளாக இருந்தோம். பிறகு... மனைவியும் கணவனுமாக ஆனோம். எப்படிப்பட்ட பெரிய மாறுதல்களெல்லாம் நடைபெறுகின்றன!
குட்டிமகளைப் பார்க்கவில்லையா என்பதைப்போல சுனந்தாவின் கண்கள் சிவப்புநிற மெல்லிய துணியை நோக்கித் திரும்பின.
"நீ ஜெயிச்சுட்ட. உன்னோட சக்திகுளங்கரை பகவதி யும்... நானும் குருவாயூரப்பனும் உங்ககிட்ட தோத்துட் டோம்.''
எங்களுடைய தமாஷான உரையாடலில் தலையிடு வது அழகல்ல என்பதைப் புரிந்துகொண்ட நர்ஸ் அறையைத் திறந்து எதையோ எடுத்துக்கொண்டு வருவதைப்போல வெளியே சென்றாள்.
நான் குட்டிமகளைத் தொட்டேன். அவளின் கன்னத் தில் முத்தமிட்டேன். பிஞ்சுமகளைப் பார்ப்பதற்காக பலரும் மருத்துவமனைக்கு வந்தார்கள். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் இருந்தார்கள். அறையில் இருப்பதற்கு இடமில்லாத அளவுக்கு ஒவ்வொருவராக வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருந்தார்கள். இது ஒரு தெய்வப் பிறவியொன்றும் இல்லையே? நான் அப்போதே சந்தேகப்பட ஆரம்பித்தேன்.
பதினெட்டு வருடங்களுக்குப்பிறகு, அவளுடைய வீட்டில் முதல்முறையாகப் பிறந்திருக்கும் பெண் குழந்தை!
ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்புப் பலகாரங்கள் கொடுத்தோம். ஆதரவற்ற தாய்மார்களுக்கு எண்ணெய் கொடுத்தோம்.
குட்டிமகள் கவிழ்ந்து நீந்த ஆரம்பித்தாள். அவளு டைய கைகளும் கால்களும் சதைப்பிடிப்பாயின. எடுத்தால் தூக்கமுடியவில்லை. கன்னத்தில் இலேசாக பூ மலர்ந்தது. கருத்த விழிகளில் நீலம் பூசியிருப்பதைப்போல தோன்றியது. எந்த அளவுக்கு ஆர்வத்தைக் கொண்ட கண்கள்! நான் சந்தோஷப்பட்டேன். என் மகள் எந்த அளவுக்கு அழகானவளாக இருக்கிறாள்! அவளைத் தோளில் இட்டுக்கொண்டு வராந்தாவிலும் முற்றத் திலும் நடப்பதற்காகச் செல்வேன்.
மூடப்பட்டிருக்கும் சூழலி-ருந்து, திறந்து கிடக்கும் காற்றுவெளியில் குதிப்பதற்கு அவள் ஆசைப்பட்டாள். நான் ஒவ்வொரு திசைக்கும் தூக்கிக்கொண்டு நடப்பேன். அவள் எதைப் பார்த்தாலும் சிரிப்பாள். நீல வானம், மேகங்கள், பூக்கள், செடிகள்... இவற்றுடன் குட்டிமகள் மிகவும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தாள்.
என்னவோ தெளிவில்லாமல் உச்சரிக்க, எங்கிருந்தோ அதற்கு பதில் வந்து சேர்ந்திருப்பதைப்போல எண்ணி, பிஞ்சுமகள் ஆழமான சிந்தனையில் மூழ்கி தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருப்பாள். யாருடைய அசரீரியைக் கேட்டு அவள் சிந்திக்கிறாள்? எதை நினைத்து இப்படி சிரிக்கிறாள்?
என்னைப் பார்க்கும்போதெல்லாம் குட்டிமகள் சிவந்த வாயால் சிரிப்பதென்பது வழக்கமான ஒரு விஷய மாக இருந்தது. சில நேரங்களில் அந்தச் சிரிப்பில் வேதனை கலந்திருப்பதைப்போல தோன்றும். ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரங்களையும் என் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டும், சில வேளைகளில் கண்களை ஈரமாக்கிக்கொண்டும் இருப்பதற் குக் காரணம் என்ன?
நாளை பிஞ்சுமகளுக்கு சோறூட்டும் நாள். நான் என் மகளுக்கு தேவைப்படும் எல்லா நகைகளையும் செய்து வாங்கி வைத்துவிட்டேன். பந்தயத்தில் தோல்வியடைந்த காரணத்தால் செலவு முழுவதையும் நானே செய்ய வேண்டியதாகவிருந்தது. கழுத்தில் பச்சைக் கல் பதிக்கப் பட்ட சங்கிலி, கால்களுக்கு கொலுசு, தங்கத்தாலான அரைஞாண் ஆகியவற்றை அணிவித்து, குட்டிமகளை ஒரு புதுமணப் பெண்ணைப்போல அலங்கரித்துக் கொண்டுசெல்கிறோம்.
வீட்டின் வாசலில் கார் நின்றதும் என் மூன்றரை வயதுள்ள பிடிவாதக்காரனான மருமகன் தன் எதிர்கால மனைவியைப் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் கேட்டில் காத்து நின்றிருந்தான். காரின் ஹாரன் ஒலியைக் கேட்டதும் அவன் பாய்ந்துவந்தான்.
"மகனே... இதுதான்டா உன் முறைப்பொண்ணு. விழாம இடுப்புல வச்சிக்கோ...'' நான் அவன் இடுப்பில் குட்டி மகளை வைத்தேன். விழாமலிருப்பதற்காக நான் பிடித்துக் கொண்டேன்.
பழத்துண்டு போலிருந்த குட்டிமகளை இடுப்பில் வைத்தபோது, அவனால் அந்த பாரத்தைத் தாங்க முடிய வில்லை. நான் குழந்தையை வாங்கினேன். அவன் எனக்குப் பின்னால் துள்ளிக்குதித்து ஓடிவந்துகொண்டிருந்தான்.
"மாமாவோட மருமகன்தானே? பெண்கள்மேல கொஞ்சம் காதல் இருக்கும்.'' என் கடந்தகால வாழ்க்கையின் மிகவும் சக்திபடைத்த ஒரு நெருக்கத்தின் முகமூடியைக் கிள்ளியெடுக்க மனைவி முயன்றாள்.
பரவாயில்லை... சகோதரிதானே?
என் இரு தோள்களிலும் எதிர்கால மணமகனையும் மணமகளையும் அமர வைத்தவாறு உள்ளே கால்களை எடுத்து வைத்தேன். அவர்களின் சிரிப்பும் நடவடிக்கையும் பார்வையும், சிரிக்கக்கூடிய வகையில் எங்களுக்கு இருந்தது.
டேராடூனிலிருந்து இரண்டு மாத விடுமுறையில் வந்திருந்த என் மைத்துனர் எங்களுடைய தமாஷ்களைப் பார்த்து விழுந்துவிழுந்து சிரித்தார். மிடுக்கான தோற்றத் தைக் கொண்டிருந்த அவர் கைகடிகாரத்தைப் பார்த்து சிரிக்கக்கூடிய பழக்கத்தைக் கொண்டிருந்தார். தாய், தந்தை, மைத்துனர், சகோதரி, எதிர்கால மணமகன், எதிர்கால மணமகள், நாங்கள் இருவர்... பிறகு... பூனை, நாய்க்குட்டி.. அனைவரும் சேர்ந்து பங்கெடுத்த ஒரு திருவிழாவாக இருந்தது... அன்று உச்சிப்பொழுது வரை. இரண்டு சீமை பூனைக்குட்டிகளையும், ஒரு ஸ்பேனியல் நாயையும் மைத்துனர் கொண்டு வந்திருந்தார். சிரிப்பின்... தமாஷின் ஆட்சி! கதைக்கான கரு மருமகனும் மருமகளும்... சமீபகாலத்தில் எந்த சமயத்திலும் எல்லாரும் ஒன்றுசேர்ந்து இப்படிக் கூடிய ஒரு காட்சி என் வீட்டில் நடந்ததில்லை. இது நடைபெற்றது 1965 ஏப்ரல் 13-ஆம் நாளன்று. மறுநாள் விஷு... அன்றுதான் அன்னத்தை ஊட்டும் நிகழ்ச்சியும்...
மருமகன் தன் புதுமணப் பெண்ணை அழைப்பதைக் கேட்டேன்- வேணுகா... இந்தப் பெயர் இவனுக்கு எங்கிருந்து கிடைத்தது? அவன் வாய்தவறி கூறியிருப்பானோ? ரேணுகா அவனுடைய மொழியில் வேணுகா என்றாகிவிட்டதோ? என்னுடைய கல்வி வாழ்க்கை அந்தக் காலத்தில் நின்றுபோனதற்கு அந்தப் பெயருடன் உறவிருக்கிறது. ஒருவேளை குறும்புக்காரியான சகோதரி கூறியிருக்கலாம்.
ஆமாம்... அந்தப் பெயரே இருக்கட்டும்! அவளுக்கு வேணுகா என்றே பெயர் வைப்பதற்குத் தீர்மானித்தோம். சகோதரியின் முகம் மலர்வதைப் பார்க்க நேர்ந்தது. அவள் அந்த அளவுக்கு மனதில் நினைத்து அதைக் கூறியிருக்க மாட்டாள். ஆனால், இதயத்தை நெருப்புக் கொள்ளியால் குத்தக்கூடிய ஒரு பெரிய சம்பவம் அதற்குப் பின்னால் இருக்கிறதென்ற விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்கும்.
நாளை சோறூட்டும் நாளென்பதால் உறவினர்களும் நண்பர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். அன்னம் ஊட்டுவதும் விஷுவும் ஒன்றுசேர்ந்து வருவதால், செலவு குறையும். நான்கு பக்கங்களிலும் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்தன. பொறிவாணத்தின், மத்தாப்பின் மங்கலான வெளிச்சம் பக்கத்து வீடுகளில் தெரிந்தது.
சாயங்காலம் வந்தபோது குட்டிமகளுக்கு காய்ச்சல் வந்தது. மிகவும் இலேசான ஒரு வெப்பம்... அதைப் பெரிதாக எடுக்கவில்லை. சரியாக ஏழு அடித்தபோது, குட்டிமகளின் காய்ச்சல் அதிகமானது. இரவு பத்துமணி ஆனபோது, பிஞ்சுமகளின் சரீரம் சுட்டு பொசுக்கும் நிலையில் இருந்தது. அவள் முனகிக்கொண்டிருந்தாள். அடிக்கடி வாயைத் திறந்துகொண்டும் மூடிக்கொண்டும் இருந்தாள்.
க்ளுக்கோஸும் பார்லியும் கலந்த நீரை துணியில் நனைத்து வாயில் சிறிது சிறிதாகக் கொடுத்தோம்.
பதினோரு மணிக்கு டாக்டர் வந்தார். காய்ச்சல் நூற்றிரண்டு டிகிரி! தலையில் "ஐஸ் பேக்'கை வைத்தார்.
"பயப்படுறதுக்கில்ல. பிரச்சினை இருக்கும் பட்சம், சொன்னா போதும்...'' டாக்டர் காரில் ஏறிக் கிளம்பினார்.
பதினொன்றரை மணியிலிருந்து கண்ணின் மணி ஒரே நிலையில் இருந்தது. மொத்தத்தில் பதைபதைப்பான சூழல் உண்டானது. டாக்டரைத் தேடி மீண்டும் ஆளை அனுப்பினோம். அவர் வரும்போது ஒரு மணி தாண்டி விட்டிருந்தது. ஊசி போட்டபோதும், மாத்திரை கொடுத்தபோதும் கண்கள் அசைவில்லை. ஒரே நிலையில் இருந்தது. கண்களை அசையச் செய்வதற்காக டாக்டர் முகத்தில் விரல்களால் வருடினார். எந்தவொரு உணர்ச்சி வேறுபாடுமில்லை. எனிமோ கொடுத்தார். க்ளிஸரின் வேக்ஸ் போட்டார். வயிறு அசையாமல் நின்றிருந்தது. ஒரே கிடப்பு... ஒரு பொம்மையைப் போல...
கிளம்பும்போது டாக்டர் மீண்டும் கூறினார்: "பயப்பட வேணாம்...''
பயப்படுவதற்கில்லை என்று எல்லாரும் அவ்வப் போது கூறிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் அதிக மாக பயந்தோம். அப்போது நேரம் இரண்டு மணி ஆகி விட்டது. பெண்களின் அழுகைச் சத்தம் உள்ளேயிருந்து கேட்டது.
புகழ்பெற்ற அந்த குழந்தை மருத்துவரை அழைத்துக் கொண்டு வருவதற்காக ஆளனுப்பினேன். அவர் வந்த போது மணி மூன்று. அவருக்கு எண்பது வயதிருக்கும். வந்தவுடனே குழந்தையின் வயிற்றின்மீது தட்டிப் பார்த்தார். பலூனின்மீது விரல்களால் தொடுவதைப் போல... கண்களின் பகுதிகளை விரித்துப் பார்த்தார்.
அவருடைய முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடு மில்லை.
சந்தோஷமோ, பதைபதைப்போ... எதுவுமே. மரணத்தைப் பார்த்துப் பழகிப்போன கண்கள். புருவங்கள்கூட நரைத்து வெளுத்துக் காணப்பட்டன. எண்பது வயது கடந்துவிட்ட அவருக்கு வேண்டிய அளவுக்கு நினைவாற்றல் இருக்குமா? சந்தேகங்கள் உண்டாயின.
நாடித் துடிப்புகளைக்கொண்டு உயிரின் நிமிடங் களை எண்ணத் தெரிந்திருக்குமோ? காயகல்ப சிகிச்சையை அறிந்திருக்கும் மனிதர்... ரிஷிகளின் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத விற்பன்னர். அவர் எதுவுமே கூறவில்லை. ஒரு குளிகையை நொறுக்கி நாவில் தடவினார்.
அந்த குளிகையின் வாசனை அறையில் தங்கி நின்றிருந் தது. அவர் சென்றபிறகும்... என் மனைவி குட்டிமகளின் கால்களுக்கருகில் கவிழ்ந்து படுத்து உரத்த குரலில் அழுதுகொண்டிருந்தாள்.
எல்லா பெண்களும் அழ ஆரம்பித்தார்கள். என் தாய் தலைசுற்றி விழுந்தாள். சகோதரி ஒவ்வொன்றையும் கூறி அழ ஆரம்பித்தாள்.
எல்லாவற்றையும் கேட்டவுடன், என்னால் நிற்கமுடியவில்லை. மனதின் உறுதித்தன்மை முழுமையாக இல்லாமற் போனது. அழுதால் மட்டுமே எனக்கும் மன அமைதி கிடைக்கும் என்ற நிலை உண்டானது.
மனைவியையும் சகோதரியையும் தாயையும் ஒரே அறையில் இருக்கச் செய்து கதவை அடைத்தேன்.
குட்டி மகளின் கண்கள் ஒரே நிலையில் நின்று கொண்டி ருந்தன. கண்மணி நீலநிறத்தில் ஒரு பளிங்கு கோலியைப்போல அசைவே இல்லாமல் நின்றுகொண்டிருந்தது.
தெய்வமே... அவளுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு எந்தவொரு வழியும் இல்லையா? மரணத்தின் பேரமைதி யான நிமிடங்கள்! நகர்ந்து நகர்ந்து வந்துகொண்டிருக் கின்றன.
என் மனதிற்குள் இருந்தவாறு யாரோ ரகசியமாகக் கூறினார்கள்: "உங்கள் குழந்தை இறக்கப் போகிறது. அதற்கு முன்னால் நீங்கள் அவளுடைய தாத்தாவுக்கு தகவல் கொடுங்கள். இனி சிறிதும் தாமதிக்க வேண்டாம். தாமதப்படுத்தினால், அது என்றென்றைக்கும் ஒரு குறையாக இருக்கும்.''
அன்றிரவே ஒரு வாடகைக்காரை எடுத்து குட்டி மகளின் தாத்தாவிடம் தகவலைக் கூறுவதற்காக ஆளை அனுப்பினேன்.
அதிகாலை ஐந்து மணிக்கு முன்பே அவளுடைய தாத்தா வந்துவிட்டார். மரணம் தாலாட்டுப்பாடித் தூங்க வைத்துக் கொண்டிருக்கும் பேத்தியை நீண்டநேரம் ஒரு சிலையைப் போல பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். அமைதியான...
மரணத்தின் நிழல் படிந்த நிமிடங்கள்! எல்லாம் முடியப் போகிறது. குட்டிமகளின் கண்கள் அசைந்தன. உதடுகள் கோணின. உள்ளே போன மருந்து முழுவதும் திரவ வடிவத்தில் வெளியே வழிந்தன. நான் ஆவேசமாகி கடவுளிடம் வேண்டினேன்: "என் குழந்தையோட உயிரை அவளுக்குத் திரும்பத் தரணும்!''
இப்படிப்பட்ட வேண்டுகோள்களை தெய்வம் கேட்பதில்லையென்று தோன்றுகிறது. அனைத்தும் அவளுடைய இறுதி அசைவுகளாக இருந்தன. மரணம் அவளை ஆசீர்வதித்தது. தேவதைகளின் உலகத்தில் மேலுமொரு நட்சத்திரக் குழந்தை பிறந்தது.
விஷுவின் புலர்காலைப் பொழுது கிழக்கு திசையிலிருந்து கிளம்பி வந்தது. என் வீட்டில் இருள் நிறைந் திருந்தது. அங்கு திரியும் வெளிச்சமும் இல்லை. ஒரு முழம் துணியைக்கொண்டு குட்டிமகளை மூடிப் போர்த்தி மண்ணுக்குள் படுக்கச் செய்தபோது, வாழ்க்கையில் முதல்முறையாக நான் என் தலையில் அடித்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போல வாய்விட்டு அழுதேன். மூன்றரை வயதுள்ள மருமகனின் கண்களும் நிறைந்திருந்தன.
அவனுடைய வேணுகா இனி திரும்பிவரப் போவதில்லை. பொம்மை கல்யாணத்தின் மணமகனின் கையைப் பற்றியவாறு நான் பிணக்குழியிடம் விடை பெற்றேன்.