லங்கையில் நடைபெற்ற அதிரடிக் கிளர்ச்சியும் அங்கு நிலவும் வெப்ப நிலையும், மிதக்கும் ரணிலின் ஆட்சியும் உலக நாடுகளுக்கு பல்வேறு பாடங்களைப் போதிக்கின்றன.

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜபக்சேக்களின் சாம்ராஜ்ஜியத்தை வேரோடு வீழ்த்தியிருக்கிறது சிங்கள மக்களின் புரட்சி ! அங்கே அதிபர் நாற்காலியில், அதிகாரத் திமிரோடு அமர்ந்திருந்த கோத்தபாய ராஜபக்சேவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்த்தி இலங்கையிலிருந்தே விரட்டியடித்திருக்கிறார்கள் சிங்களர்கள்.

srilanka

Advertisment

புதிய அதிபராக ராஜபக்சேக்களின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ! ஆனால், எதற்காக ராஜபக்சேக்களை அதிகாரத்திலிருந்து விரட்டியடித்தார்களோ அந்த காரணங்கள் அப்படியே நீடிப்பதால் ரணிலுக்கு எதிராகவும் கிளர்ச்சி தொடரும் என்ற நிலையே இலங்கையைச் சூழந்திருக்கிறது.

இலங்கையின் அதிபராக கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவும், சிங்கள ராணுவத்தின் செயலாளராக, அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவும் கோலோச்சிய 2009-ல் தான் தமிழீழ விடுதலை புலிகளின் ஈழத் தமிழினத்துக் கான விடுதலை போராட்டத்தை அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு, சர்வதேச சதி களின் துணை யுடன் ஈழத்தமிழினம் அழிக்கும் கொடூரம் நடத்தப்பட்டது. இதில் பெரும் பேரழிவைச் சந்தித்தார்கள் ஈழத் தமிழர்கள்.

சிங்கள ராணுவம் தொடுத்த ஈழத்தமிழினஅழிப்பில் ஒன்னரை லட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த இறுதி யுத்தத்தில் காணாமல் போன பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் நிலை என்ன வென்று இப்போது வரை யாருக்கும் தெரியாது. தமிழர் களை கொன்றழித்தோம் என்கிற இறுமாப்பில் மிதந்தார்கள் ராஜபக்சே சகோதரர்கள்.

2009-க்கு பிறகு இலங்கையில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறின. அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே பிரதமரானார். ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபாய அதிபராக உட்காந்துகொண்டார். சிங்களப் பேரினவாதத் தின் ஆகப்பெரிய அவதார புருஷர்களாகத் தங்களை காட்டிக் கொண்டதால் இவர்களை அரியணையில் அமர்த்தியது சிங்களப் பேரினவாதம். ஆனால், சிங்களவர்களாலேயே தூக்கியெறிப்படுவோம் என ராஜபக்சேக்கள் அப்போது நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ss

Advertisment

ராஜபக்சேக்களின் அரசியல் சாம்ராஜ்ஜியத்தில் அவர் களின் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகமானது. சகோதரர் கள், மகன்கள், உறவினர்கள் என அவரவர்களின் படிநிலைக் குத் தகுந்தவாறு அமைச்சர்களாகவும் அதிகாரிகளாகவும் அவர்களை நியமித்தார் கோத்தபாய ராஜபக்சே. ராணுவ அதிகாரிகளை அரசின் உயர் பதவி களுக்குக் கொண்டு வந்தார். இது அப்போதே சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்ச்சியாக நடந்த நிலையில் ராஜபக்சேக்களின் குடும்பம், அரசு அதிகாரத் தைப் பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தையும் விருப்பம்போல் சுரண்டிக் கொழுத்தது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ராஜபக்சே தரப்பினர் சொத்துக்களைக் குவித்தனர். பல்வேறு நாடுகளில் உள்ள ரகசிய வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தனர். ஆனால், அரசு அதிகாரத்தைப் பயன் படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த எந்தஅக்கறையையும் காட்டவில்லை. மாறாக கோத்தபாய நடைமுறைப் படுத்திய பல திட்டங் களும் சட்டங்களும் பொருளாதார நெருக் கடியை உருவாக்கியது. இதனை எதிர்க்கட்சி கள் எதிர்த்தபோதிலும் அதனை பொருட்படுத்த வில்லை ராஜபக்சேக்கள்.

srilanka

இதனால் இலங்கையில் உருவான பொருளா தாரப் பேரழிவு நாட்டையே நிர்மூலமாக்கியது. குறிப்பாக இலங்கையின் சுற்றுலா தொழில் முடங்கியது.இதனால் அந்நிய செலவாணி கையிருப் பும் தீர்ந்து போனது. உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அனைத்து அத்யாவசியப் பொருட்களுக்கும் தட்டுபாடு ஏற்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்த பொருளாதாரப் பேரழிவை இனியும் பொறுக்க முடியாத நிலையில் வெகுண்டெழுந்தனர் சிங்கள மக்கள். ராஜபக்சேக்களுக்கு எதிராக அரசியல் நெருக்கடிகள் அதிகரித்தன. முதல்கட்டமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சேவை விரட்டியடித்தனர். பதவியைத் துறந்து ஓடிப்போன மகிந்தா, ராணுவ உதவியுடன் தலைமறைவானார். .

இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் புதிதாக இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஆனால், பொருளா தார சிக்கலி-ருந்து இலங்கையை மீட்க எந்த செயல்திட்டத் தையும் கொண்டுவர ரணிலாலும் முடியவில்லை. பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் மாறவில்லை. சிங்கள மக்களின் கோபம் போராட்டங்களாக தினமும் புதிய புதிய வடிவில் எழுச்சிப்பெற்றுக்கொண்டே இருந்தன. இதனை ஒடுக்க கோத்தபாய ராஜபக்சே அமல்படுத்திய அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்தபடி விஸ்வரூபம் எடுத்தபடியே இருந்தது மக்களின் எழுச்சி. இந்த எழுச்சி, அதிபர் பதவியிலிருந்து கோத்தபாய வெளியேற வேண்டும் என்பதாக உருமாறியது.

srr

’கோத்தபாயா நாட்டைவிட்டு வெளியேறு’ என்ற முழக்கம் இலங்கை முழுவதும் உரத்து எதிரொலித் தது. ஆனாலும் பதவியை விட்டு விலகாததால், கடந்த ஜூலை 9-ந் தேதி கோத்தபாயவுக்கு எதிரான சிங்களத்தின் கோபம் ஆவேசமாக மாறியது. காலி துறைமுக முகத்திடலில் ஒன்றுகூடியது சிங்களம். தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்கள் சாரை சாரையாக காலி முகத்திடலில் குவிந்தனர். கொழும்பி லிருந்த கோத்தபாயவின் அதிபர் மாளிகையை நோக்கிவிரைந்தது மக்கள் திரள். அதிபர் மாளிகையை ஆவேசமாக முற்றுகையிட்டனர். மாளிகையை நோக்கி மக்கள் திரள் வருவதை அறிந்து அச்சப் பட்ட கோத்தபாய ராஜபக்சே அவசரம்அவசரமாக மாளிகையை விட்டு வெளியேறினார். உயிருக்குப் பயந்து ஓட்டமெடுத்த அவரை தங்களின் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பதுக்கி வைத்தது சிங்கள ராணுவம்.

கோத்தபாயவுக்குஎதிராக கிளர்ச்சி வெடித்தபடி இருந்ததால் இலங்கையை விட்டு தப்பியோட முயற்சித்தார் கோத்தபாய. இந்தியாவில் தஞ்சமடைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டார். இந்த தகவல் பிரதமர் மோடி யின் கவனத்துக்குச் செல்ல,கோத்தபாய இந்தியாவுக் குள் வருவதை அவர் விரும்பவில்லை. தமிழகத்தின் அரசியல் சூழல்களை கவனத்தில் கொண்ட பிரதமர் மோடி, கோத்தபாயவுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால், மாலத்தீவுக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக அரபு நாடுகளிடம் அடைக்கலமாகி யிருக்கிறார் கோத்தபாய. அதிபர் பதவியையும் ராஜினாமாசெய்து விட்டதால், அகதியாக தலைமறைவாகி விட்டார்.

இலங்கையின் சூழல் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களில் ஒருவர், ‘’ விடுதலைப் போராளிகளும் அப்பாவித் தமிழர்களும் பதுங்கு குழிக்குள் அடைந்து கிடக்கும் அவலத்தை ஏற்படுத்திய கோத்தபாய ராஜபக்சே தற்போது அதே சூழல்களுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார் அழுத்தமாக.

அதிபர் மாளிகையை நோக்கி சென்ற மக்கள்படை ஆவேசமாக உள்ளே நுழைந்தது. அவர்களை தடுக்க முயன்ற ராணுவத்தையும் தாக்கி தூக்கி எறிந்தார்கள் சிங்களவர்கள்.

அங்கே அதிபரின் மாளிகையும் பிரதமரின் மாளிகையும் மக்கள் வசமாயின. அங்கே மக்கள் அதிகார மையத்தின் ஆடம்பரங்களை நேரிலேயே கண்டு களித்தனர்.

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள், ராஜபக்சேக்கள் வாழ்ந்த சொகுசு மாளிகையைக் கண்டு அசந்து போனார்கள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தும், படுக்கையில் உருண்டு புரண்டும், நீச்சல் குளத்தில் குதித்து மகிழ்ந்தும் அதிகாரத் திமிரை ஏளனம் செய்தனர்.

அந்த மாளிக்கைக்குள் ரகசிய பாதாள அறை ஒன்று இருந்துள்ளது. அதற்குள் நுழைந்த மக்கள், அங்கு கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கை பணத்தையும் வெளிநாட்டுக் கரன்சிகளையும் கண்டு மிரண்டனர். பொருளாதார சீரழிவால் கையில் பணம் இல்லாமல் மக்கள் தவித்துவரும் நிலையில், கோத்தபாயவின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணக்குவியலை கண்டதால் அவர்களின் கோபம் பலமடங்கு அதிகரித்தது.

இதற்கிடையே கோத்தபாய ராஜபக்சேவின் சொந்த பங்களா, ரணிலில் சொந்த வீடு, மகிந்த ராஜபக்சேவின் மகன் வசிக்கும் பங்களா என அனைத்தையும் தீயிட்டு கொளுத்தினர். மக்களின்போராட்டம் உக்கிரம் அடைந்து கொண்டே இருந்தது.

அதிபர் மாளிகையை விட்டு மக்கள் வெளியேறவும் இல்லை. முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். இந்த நிலையில், இலங்கை அரசின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே. ஆனால், அவரையும் பதவி விலகும்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவர் ஆரம்பத்தில் மறுத்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார் ரணில். இலங்கையில் அதிபர் நாற்காலியும், பிரதமர் நாற்காலியும் ஒரே சமயத்தில் காலியாக இருந்ததால் , தற்காலிக அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டார் ரணில்.

புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. நாடாளு மன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு எம்.பி.கூட இல்லை. ஆனால், ராஜபக்சேக்களின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சிக்குத்தான் பெரும்பான்மை பலம் இருந்தது. யாருடைய ஆட்சி தேவையில்லை என சிங்கள மக்கள் தூக்கியெறிந்தார்களோ அவர்களின் ஆதரவைப் பெறும் ரகசிய முயற்சிகளை எடுத்தார் ரணில் விக்கிரமசிங்கே. இலங்கைக்குள் தலைமறைவாக இருக்கும் மகிந்த ராஜபக்சேவுடன் விவாதித்தார் ரணில்.

நினைத்ததை நிறைவேற்றும் அதிகாரம் மிக்க அதிபர் பொறுப்பில் எதிர்க்கட்சிகள் அமர்ந்து விடக் கூடாது என்று திட்டமிட்ட மகிந்த ராஜபக்சே, தனது அரசியல் எதிரியான ரணிலை ஆதரிக்க முன் வந்தார். தனது கட்சி எம்.பி.க்களிடம் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராணுவத்தின் உதவியில் தலைமறைவாக இருந்துகொண்டே அரசியல் காய்களை ரணிலுக்காக நகர்த்தினார் மகிந்த ராஜபக்சே. தேர்தலும் நடந்தது. ரணில் உட்பட மூன்று பேர் அதிபர் தேர்தல் களத்தில் நின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப்பெற்றார் ரணில். நாடாளுமன்றத் தில் அவரை தவிர ஒற்றை எம்.பி. கூட இல்லாத ரணில் அதிபர் ஆகியிருப்பதை, போலி வாக்கு களைப் பெற்று அதிபராகியிருக்கிறார் என்றே வர்ணிக் கின்றனர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.

இலங்கைக்குள் ஏற்பட்டுள்ள அரசியல்நெருக்கடி யையும், மக்களின் கிளர்ச்சிகளையும் உலக நாடுகள் உற்று கவனித்து வந்தன. இலங்கைக்குதேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என இந்திய ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார்.

தற்போதைய சூழல் குறித்து இலங்கை ஊடகத்தினரிடம் நாம் பேசியபோது,”இலங்கை யின் அதிபராகவும், பிரதமராகவும் ராஜபக்சேக் கள் இருந்த போது, இந்தியாவை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சீன நாட் டிற்கே விசுவசமாக இருந்தனர். சீனாவின் செல்லப்பிள்ளைகள் என்றே ராஜபக்சே சகோதரர்களை உலக நாடுகள் வர்ணித்தன. பொதுவாகவே, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்றே அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஆலோசிக்கும். அதற்கேற்ப, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சர்வதேச நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பியதில்லை. அப்படிப் பட்ட சூழலில், இந்தியாவை மிரட்ட, இலங்கைக்குள் சீனா காலூன்றியது. சீனாவுக்கு அதிகப்பட்ச முக்கியத்துவம் தரக்கூடாது என ராஜபக்சேக்களிடம் இந்தியா பல முறை கேட்டுக்கொண்டும், அதனை மதிக்கவில்லை அவர்கள்.

இதனால் அவர்கள் மீது கோபம் ஒரு பக்கமும்,ஆதரவு ஒரு பக்கமும் என இரட்டை வேடம் போட்ட இந்தியா, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி சீனா வின் செல்லப்பிள்ளையான ராஜபக்சேக்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்; தங்களுக்கு தோதான ஒரு பொம்மை அரசாங்கத்தை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின்அஜெண்டாவாக இருந்தது.

அதற்கேற்ப அது தன் உளவுப்பிரிவின் (ரா) மூலம் மக்களின் போராட்டங்களுக்கு மறைமுக ஆதரவை அளித்தது. ரா அதிகாரிகளின் சிலசெயல் திட்டங்கள் மெல்ல மெல்ல சிங்களப் பேரினவாத மக்களுக்குள்ளே புகுந்தன. இந்தியா நினைத்தது நடந்தது. ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்திருக்கிறார். ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சிகளிடம் சென்றுவிடக்கூடாது. ரணில் விக்கிரமசிங்கே அதிபர் அதிகாரத்துக்கு வரவேண்டும் என விரும்பிய இந்தியா, ராஜபக்சேக்களின் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள ரணிலுக்கு யோசனை சொல்லியது. அது மட்டுமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியான மகிந்தா ராஜபக்சேவிடம் ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்திய இந்திய உளவுப்பிரிவு. கையறு நிலையில் இருக்கும் மகிந்தா, இந்தியாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டே, ரணிலை ஆதரிக்க வேண்டும் என தனது கட்சி எம்.பி.க்களை வலியுறுத்தினார். அவர்களும் ஆதரிக்க, புதிய அதிபராகியிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே! இந்தியா நினைத்தபடி ஒரு பொம்மை அரசாங்கம் இலங்கையில் உருவாகியிருக்கிறது. ஆனால், ராஜபக்சேக்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், ரணிலை நோக்கியும் எப்போது வேண்டுமானாலும் பாயும் என்பதே இலங்கையின் கள நிலவரம் ! என்று சுட்டிக் காட்டினார்கள் இலங்கை ஊடகத்தினர்.

இலங்கையில் சிங்கள மக்கள் நடத்திய அத்தனை கிளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்கள் உற்று கவனித்தப்படி இருந்தனர். இந்த கிளர்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கவில்லை. காரணம், ஈழத்தமிழர் களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்கள் இவை அல்ல என்பதே ! அந்த வகையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்மாற்றம், சிங்கள பேரினவாதத்தின் அதிகார மாற்றமே தவிர, ஜனநாயக புரட்சிக்கான மாற்றம்இல்லை.

ஜனநாயக புரட்சி எனில் ஒன்றுபட்ட அத்தனை இலங்கை வாழ் மக்களும் இணைந்து போராடியிருக்க வேண்டும். அப்படி எதுவும் இலங்கையில் நடக்கவில்லை என்பதாலேயே சிங்கள பேரினவாதத்தின் ஆவேசத்தை பார்வையாளர் களாகவே நின்று ரசித்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். ஆனால், இதுபோன்ற ஒரு போராட்டத்தை, கிளர்ச்சியை தமிழீழத் தமிழர்கள் நடத்தியிருந்தால் இலங்கை என்னவாக ஆகியிருக்கும் என்பதை இனியாவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அது குறித்து அந்த நாடுகள் ஆராய வேண்டும். தந்திரத்தின் மூலம் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் ஆட்சியும் விரைவில் வீழ்வதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

எனினும், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில் ஈழமக்களின் எதிர்பார்ப்பு மிகச்சிறியது. இலங்கைக்குள் ஈழ மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் அவர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தவும் ராஜபக்சே சகோதரர்களை தூக்கிலிட் டுத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பே ஈழத்தமிழர்களிடம் இப்போது இருக்கிறது. இதற்கு ஏற்ப, இலங்கையைவிட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மற்றும் அவர்களின் கூட்டாளிகளை இனப்படுகொலைக் காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் கைது செய்ய, சர்வதேச கைது வாரண்ட்டைப் பிறப்பிக்க வேண்டும் என்று பிரிட்டனைச் சேர்ந்த -பரல் டெமாக்ரட்டீஸ் கட்சித் தலைவர் எட் டேவி ( ஊக் உஹஸ்ங்ஹ் ), பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கி றார். இது ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போதுள்ள இலங்கை பலவீனமான நிலையில் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு அங்குள்ள ஈழத்தமிழ் மக்கள் கிளர்ச்சியில் இறங் காமல் பெருந்தன்மையுடம் அமைதி காத்துவருகிறார் கள். ஆனாலும், விடுதலைப் புலிகள் தரப்பு சில வியூகங்களை வகுத்துவருவதாக சர்வதேசத் தகவல்கள் கசிகின்றன. எனவே, தமிழீழம் மலரும் நாள் தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை வெளிச்சமும் அங்கே பரவி வருகிறது.

சிங்கள பேரினவாதம் ஒருநாளும் வெல்லாது. அது சிங்களர்களுக்கே ஆபத்தாக ஒருநாள் முடியும் என்று அடிக்கடி சொன்ன பிரபாகரனின் வாக்கு அங்கே பலித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.