"இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.'

-என்று உண்மையான நட்புக்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.

ஒருவரோடு நட்பு கொள்ளும்போது அவர் இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் என்று மற்றவர்கள் காதுபடப் புகழ்ந்து பேசினாலே அது உண்மையான நட்பாக இருக்காது என்பதே இதன் பொருள்.

உண்மையான உயர்ந்த நட்பு என்பது தம்பட்டம் அடித்துக்கொள்ளாது.

ஆனால், இப்போது பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. மீண்டும் ஏற்படுத்திக்கொண்டி ருக்கும் வெட்கம் கெட்ட நட்பில், சம்பந்தப் பட்ட இரு தரப்பினருமே ஒருவரையொருவர் புகழ்ந்து தம்பட்டம் அடித்துக்கொள்கிற கேவலமான காட்சிகளை தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

e

டெல்லியோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக முகம் திருப்பிக்கொண்டிருந்த எடப்பாடி, திடீரென்று கடந்த 25-ஆம் தேதி டெல்லிக்குச் சென்று, ஒன்றிய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க.வின் சீனியருமான அமித்ஷாவை சந்தித்து,சால்வை போர்த்தி சரணாகதி அடைந்திருக்கிறார்.

கேட்டால் டெல்லியில் உருவாகிவரும் அ.தி.மு.க. அலுவலகத்தைப் பார்வையிடப் போன அவர், அப்படியே தமிழகத்தின் நன்மைக்காக அமித்ஷாவைச் சந்தித்து கோரிக்கைகளை வைத்தார் என்று, புனைகதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது அவர் தரப்பு.

Advertisment

இந்த சந்திப்பு பற்றி 27-ஆம் தேதி வீடியோ வெளியிட் டிருக்கும் அ.தி.மு.க. மாஜி மந்திரி உதயகுமார், "இந்திய தேசத்தின் இரும்பு மனிதராகப் போற்றப்படு கிற சர்தார் வல்லபாய் பட்டேலின் மறு உருவம்' என்று அமித்ஷாவுக்கு குளிரக் குளிரப் பாராட்டிப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

அதேபோல், தமிழக பா.ஜ.க.வின் அந்த மாநில நிர்வாகியும், இந்த சந்திப்பு பற்றிக் கேள்வி எழுப்பியபோது, "எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வேண்டுமானா லும் இணையலாம்' என்று, இத்தனை நாள் கடுமையாக எதிர்த்து வந்ததை மறந்துவிட்டு, வெட்கமில்லாமல் அ.தி.மு.க.வுக்கு வரவேற்பு வாசிக்க, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.க.வின் ஊதுகுழல்களும் அ.தி.மு.க.வை ஏகத்துக்கும் பாராட்டி வருகின்றன.

இதைப்பார்த்து அவர்களின் கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் "அடக்கொடுமையே' எனத் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

Advertisment

காரணம், இரு தரப்பினரும் வீசிக்கொண்ட கணைகளும் ஆயுதங்களும் அவ்வளவு மோசமானவை.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க. அதன்பின், பா.ஜ.க.வோடு முரண் பட்டது. காரணம், அ.தி.மு.க.வின் தலைவியான ஜெயலலிதா பற்றி பா.ஜ.க. மாநில நிர்வாகி வைத்த ஊழல் விமர்சனம்.

ஒட்டுமொத்த தமிழகமும் ஊழலில் ஊறி இருக்கிறது. இங்கு ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சர்கூட ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றிருக்கிறார் என்று, அந்த பா.ஜ.க. நிர்வாகி, ஜெ.வை அட்டாக் செய்தார். உடனே ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் அவருக்கு மிகக் கடுமையாக பதிலடி கொடுத்தனர்.

ee

குறிப்பாக அவரை "கட்டுச் சோத்துல கட்ன பெருச்சாளி என்றும், அவருக்கு வாயும் நாக்கும் நீளம் என்றும், அவர். ஒரு வாய்ச் சவடால் பேர்வழி என்றும், இதோடு அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் வாங்கிக் கட்டிக்கொள்வார்' என்றும், அ.தி.மு.க.வில் இருக்கும் ஜெயக்குமார் போன்றவர்கள் சீறிப் பாய்ந்தனர்.

இதன்பிறகும் அந்த பா.ஜ.க. நிர்வாகி.... "என்னுடைய தாய் ஜெயலலிதாவைவிட 100 மடங்கு பவர்ஃபுல். என்னுடைய மனைவி ஜெயலலிதாவைவிட 1000 மடங்கு பவர்ஃபுல்' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் அ.தி.மு.க.வினரைச் சீண்டியபடியே இருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார். உடனே, பா.ஜ.க. தொழில்நுட்ப அணியினர், எடப்பாடியின் உருவத்தை எரித்துப் போராட்டம் நடத்தி, தங்கள் அ.தி.மு.க. வெறுப்பை ஏகத்துக்கும் உமிழ்ந்தனர்.

இந்த இரு தரப்பு மோதலின் விளைவாக, 2023 செப்டம்பரில் அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் மற்றும் நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்துவிட்டு, "அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் அ.தி.மு.க. இன்று முதல் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது' என்று அக்கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதேபோல் "யோக்கியரான' எடப்பாடியும் தான் போகும் இடங்களில் எல்லாம் பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி இல்லை என்று திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளைபோல் சொன்னார்.

குறிப்பாக 2023 அக்டோபரில் நடந்த அ.தி.மு.க.வின் 52-ஆம் ஆண்டு தொடக்க விழா, ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தபோது, அங்கே பூத் கமிட்டியினரிடம் பேசிய அவர், "பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை மக்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். இந்த செய்தி மக்களிடம் பரவவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இருந்தும் அ.தி.மு.க. மீது நம்பிக்கை வைக்காத பத்திரிகையாளர்கள், 2024 நவம்பர் 14-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தி.மு.க.வுக்கு எதிராக மெஹா கூட்டணியை அமைப்போம் என்கிறீர்களே. பா.ஜ.க.வுடனும் கூட்டணி வைத்துக் கொள்வீர்களா?" என்று கேட்டனர்.

அப்போதும்கூட ரோசமாகவே, "வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று தெளிவுபடுத்திவிட்டோம். தி.மு.க. அரசை அகற்றவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுப்பது பா.ஜ.க.வைத் தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளுக்குத்தான்' என்று வியாக்யானம் செய்தார்.

இந்த நிலையில்தான் அரக்கப்பரக்க டெல்லிக்கு திடீரென்று ஓடி, அமித்ஷாவின் முன் போய் நின்றிருக்கிறார். கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி அமித்ஷா உத்தரவுகளைப் பிறப்பிக்க, பவ்யமாக அவர் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டியிருக்கிறார் எடப்பாடி.

வந்தபிறகு, எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். அதை எதிர்க்க எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று, கூட்டணி விசயத்தில் பா.ஜ.க.விடம் தான் அபௌட்டர்ன் ஆகி விட்டதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எடப்பாடியைப் பொறுத்தவரை ஜனவரி மாதமே, எடப்பாடியின் சிண்டு டெல்லியிடம் வசமாகச் சிக்கிக்கொண்டது.

கொங்குமண்டலத்தில் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் அவருடைய நெருங்கிய உறவினரான ராமலிங்கத்தைக் குறிவைத்து, ஜனவரியில் அமலாக்கத்துறையும் வருமானவரித் துறையும் அதிரடி ரெய்டுகளை நடத்தின. இதில் பல கோடி மதிப்பிலான மோசடிகளும் குளறுபடிகளும் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அந்த ராமலிங்கம் எடப்பாடியின் பினாமி என்றும் அமலாக்கத்துறை சொல்லிவருகிறது. அதனால் இந்த ரெய்டுகளில் கிடைத்த ஆவணங்களைத் திரட்டி வைத்த டெல்லி, எடப்பாடியை மடங்கவைக்கும் தருணத்தை எதிர்பார்த்திருந்தது.

ஆனால், இந்த சிக்கலில் இருந்து தான் தப்பிவிட்டதாகக் கணக்குப் போட்ட எடப்பாடி, வழக்கம்போல் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் தன்னை சூராதி சூரராகக் காட்டிக்கொள்வதிலேயே ஆர்வமாக இருந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் வேலூரில் கட்சியின் பாசறை மாநாட்டில் பேசிய அவர், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கையில் மாற்றமில்லை. மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல. அதேபோல் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வதும் சரியல்ல' என்று வசனம் பேசி கைத்தட்டலை வாங்கினார்.

இந்த நிலையில், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டமான, தொகுதிச் சீரமைப்புத் திட்டத்தை தடுத்துநிறுத்துவது குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் கடந்த 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்திற்கும் தைரியமாகத் தங்கள் கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பினார்.

அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு 7.18 சதவீதத்தில் இருந்து குறையக்கூடாது என்பதையும் பிரதமர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தீர்மானத் தைத் திருத்த வேண்டும்'' என்றதுடன் தமிழக அரசின் முயற்சியைப் பாராட்டினார்.

ஆனால் அங்கிருந்து வெளியேறியதும், பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வெறும் கண்துடைப்பு என்றார். அதேசமயம், தமிழக செய்தி ஒளிபரப்புத் துறை அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெயக்குமார் பேசியதை ஏற்கெனவே ஒளிபரப்பியிருந்ததால் இந்த முன்னுக்குப் பின்னான முரணான பேச்சு அம்பலமானது.

இதையெல்லாம் பார்த்த பா.ஜ.க. தலைமை, எடப்பாடி இதுபோல் தங்களுக்கு எதிராக செயல் படுவதையும், கருத்துக்களை உதிர்ப்பதையும் கண்டு எரிச்சலாகி, அவருக்கு அரசியல் மீடியேட்டர்கள் மூலம் எச்சரிக்கை கொடுத்தது.

இதனால் மிரண்டுபோன எடப்பாடி, தமிழகத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளை மறைக்கவே, பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் பேசியிருக்கிறார் என்று அப்படியே பல்டி அடித்திருக்கிறார்.

அடுத்து ஈரோடு ராமலிங்கம் விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிரான ஆவணங்களை வைத்துக் கொண்டு, சம்மன் அனுப்பாத குறையாய் டெல்லி அழைத்ததும், குடுகுடுவென ஓடிப்போய் அமித்ஷா விடம் சாஷ்டாங்கமாக சரணாகதி அடைந்திருக்கி றார் எடப்பாடி.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே, டெல்லிக்கு விசுவாசமான அடிமையாக இருந்து, தமிழகத்தின் நலன்களை டெல்லியிடம் அடகு வைத்த எடப்பாடி, இப்போது தன்னை அமலாக்கத்துறை சிக்கலில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், உட்கட்சி எதிரிகளிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும் அமித்ஷாவிடம் அடிமை சாசனத்தை எழுதிக்கொடுத்துவிட்டு வந்திருக்கி றார்.

தனக்கு ஒரு இக்கட்டு வந்ததும் தமிழையும், தமிழர்களின் நலனுக்கு இக்கட்டு தரும் தொகுதி மறுவரையறை பிரச்சனையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமான பா.ஜ.க.வுடனே கூட்டணிக்கான அச்சாரத்தைப் போட்டுவந்திருக்கிறார்.

ஆக, பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என்ற வேஷம் அம்பலமாகி, பூனைக்குட்டிகள் வெளியே வந்துவிட்டன. நல்லா இருக்கு உங்க வேஷம்!

-ஆதங்கத்துடன்,

நக்கீரன்கோபால்