கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில், சென்னை ட்ராமாஸ் நிறுவனர்.
டாக்டர். ஏ. பி. வைத்தீஸ்வரன் குழுவினர் 10.6.2023 அன்று மும்முடிச் சோழன் நாடகத்தை உயிர்ப்பாக அரங்கேற்றினர்.
இந்த நாடகத்தில், கதை நகர்வுக்கு ஏற்றார்போன்று, அரங்கின் பின்புலத்தில் கஊஉ திரை அமைத்து, முப்பரிமாண ஒளி ஒலி காட்சிகளை யும், பாடல்களையும் திரையிட்டு, நாடக அரங்கை நவீன அரங்காக மாற்றிய விதம், ஒரு வித்தியாசத்தைக் கொடுத்தது.. இந்த நவீன யுத்தியை கையாண்டதன் மூலம், இந்த நிகழ்வு பார்வையாளர்களை நாடகத்தின் கடைசி காட்சி முடிகிற வரை, இருக்கையிலேயே அவர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது.
கோயம்பேடு கோசை நாகூர் குழுவினரின் இசைக் கருவிகள் முழங்க, நாடகத்தின் நாயகன்’ முத்துக்குமார் என்கிற ” ராஜராஜ சோழனும்’பஞ்சவன் மாதேவியாக சுஜாதா பாபு மற்றும் நாடகக் குழுவினர் அனைவரும் மேடை ஏற்றப்பட்டபோது அது சங்க இலக்கியக் காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்தது.
இசையமைப்பாளர் தாஜ்நூர் அவர்களின் பின்னணி இசை, காட்சிக்கு உயிரோட்டமாக அமைந்தது. கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் பாடல் வரிகள், இளவரசர் அருண்மொழிவர்மன், பஞ்சவன்மாதேவி மீது கொண்ட காதலை எந்தவித அருவருப்புக்கும் உள்ளாக்காமல் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவுக்கு படமாக்கப்பட்டிருந்தது.
இந்த நாடகத்தின் வெற்றி என்பது“உன்னோடு கா’என்ற திரைப்படத்தின் இயக்குநர், தஞ்சை. ஆர்.கே., இந்த வரலாற்று நாடகத்தை மேடையில் ஒரு சினிமாவாக காட்ட வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே தோன்றுகின்றது.
குந்தவையாக நாஞ்சில் ரேவதி, ராஜேந்திர சோழனாக ஆதேஷ் பாலா, தலைமை அமைச்சராக விவேக் சின்ராசு, ரவிதாசனாக சிங்கராஜா, கருவூர் சித்தராக ஏ.பி. வைத்தீஸ்வரன், மேலை சாளுக்கிய மன்னனாக விஜயகுரு, பாஸ்கர ரவிவர்மனாக பிரபாகரன் போன்ற ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருந்தார்கள்.
காலத்திற்கு ஏற்றார்போன்று இவர்கள் செய்திருக்கக்கூடிய புதுமை வரவேற்கத்தக்கதாகவும், கலைக்கு இவர்கள் செய்யும் அர்ப்பணிப்பாகவும் அமைந்திருந்தது.
தமிழர்களின் பெருமைகளையும், சிறப்பு களையும் எடுத்துக் கூறும் இந்த நாடகத்திற்கு, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகரும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருளும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள்.
விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின்உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் முன்னிலை வகிக்க. சிறப்பு அழைப்பாளராக வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர். வி.ஜி.பி. சந்தோஷம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர். எஸ்.வி. சேகர். திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கவிஞர் மெய்ஞானி பிரபாகர் பாபு, இணை தயாரிப்பாளர் கஜேந்திர பாபு, மருத்து வர் மணி வாசகன், மணி போன்றோர் பங்கு பெற்றிருந்தனர்.
நாடகத்தின் இயக் குனர் தஞ்சை ஆர்.கே. நாடகம் குறித்து அவர் குறிப்பிடும்போது…
இது ஒரு சேலஞ்சிங் கான விஷயம் என்ன அப்படின்னா, பொன்னி யின் செல்வனுக்கு கதை உண்டு. அது ஒரு புதினமாக இருக்கிறது. அதை எடுத்து எல்லாருமே நாடகமாக போடுகிறார்கள். அதை படமாக பண்ணுகிறார்கள். ஆனால் ராஜ ராஜனுக்காக தனியான ஒரு கதை என்று எதுவுமே இல்லை. அவை அனைத்துமே கல்வெட்டுப் பதிவுகளாக ஆங்காங்கே இருக்கின்றன. சோழர்கால செப்பேடுப் பதிவுகள் போன்று குறிப்புகளாகத்தான் தென்படுகின்றன. அதை கோர்வை யாக ஒரு கதையாக உருவாக்கித்தான் இந்த மும்முடிச் சோழன் நாடகத்தை உருவாக்கினோம்.
முதன்முதலில் நெற்களஞ்சியங்கள், ஆடு வளர்ப்பு திட்டங்கள், இன்னைக்கு நடக்கக்கூடிய அரசியலுக் கான மக்கள் நலத்திட்டங் கள்,பயன்பாடுகள் அனைத்துமே ராஜராஜன் போட்ட பிள்ளையார் சுழிதான். அந்த செய்திகளை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் இந்த நாடகம்.
பஞ்சமன் மாதேவி என்கின்ற கதாபாத்திரம் எந்த நாடகத்திலும், எந்த கதையிலும் இதுவரை வந்ததில்லை. முதன்முதலில் பஞ்சமன் மாதேவி என்கின்ற கேரக்டரை நாடகத்தில் எடுத்துவந்தது இந்த ’மும்முடிச் சோழன்’நாடகத்தில்தான்.
வரலாற்றில் ஒரு மகன் முதன்முறையாக சித்திக்கு கட்டிய கோவில் பஞ்சமாதேவி கோயில்தான். ராஜராஜ சோழனுடைய முதல் மனைவி. வானமாதேவிதான், ராஜேந்திர சோழனுடைய தாய். ஆனால் ராஜேந்திர சோழனை வளர்த்தது முழுதும் பஞ்சமன்மாதேவிதான். முதல் மனைவிக்கு பிறந்த, ராஜேந்திர சோழன் இருக்கும்போது எனக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் என்று அவள் எடுத்த வைராக்கியம், அந்த நன்றிக்காகத்தான் ராஜேந்திர சோழன் பஞ்சமன்மாதேவிக்கு கோயிலை கட்டினான்.
ராஜேந்திர சோழனுக்கு வாள் பயிற்சியில் இருந்து, அனைத்து பயிற்சிகளையும் கற்றுத் தந்து,வீரத்தையும் ஊட்டி வளர்த்தது பஞ்சமன் மாதேவிதான்.
இப்படியான வரலாற்றை, இது மாதிரியான அணுகுமுறையில் கொண்டுசென்றால் அது மிக சுலபமாக மக்களை சென்றடையும். பாட்டிகள் இருந்தும்கூட கதை கேட்பதற்கு பிள்ளைகள் தயாராக இல்லை. அதற்கு காரணம் இந்த ஸ்மார்ட் போன், இந்த சோசியல் மீடியா இவை அனைத்துமே கதை கேட்கக்கூடிய ஒரு சூழல் இல்லாமல் செய்துவிட்டது.” என்றவர்... நம் இனிய உதயம் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.
”நான் இனிய உதயம் மாத இதழின் வாசகன். அந்த இதழினை விடாமல் படிப்பேன். இப்போது இருக்கக்கூடிய புத்தகங்களில் இலக்கிய இதழ் என்று பார்த்தால் அது நக்கீரன் வழங்கும் ’இனிய உதயம்’இதழ் மட்டும்தான். இதை நான் ஒரு வாசகனாக இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.
இனிய உதயம் என்பது ஒரு நாடகம் மாதிரி. எப்படி நாடகத்தை நாம இப்ப நவீன முறையில் கொண்டுவருகிறோமோ, அதே போன்று இனிய உதயம், இலக்கியத்தை நவீனபடுத்தியும், எழுத்தாளர்களின் நிழற்படத்தினை வண்ண வண்ணமாக அலங்கரித்து, எழுத்தாளர்களை குதூகலப்படுத்தியும் புதுமை செய்கிறது. வேறு எந்த புத்தகமும் இலக்கியத்தைப் பற்றி பேசுவதில்லை. இங்கு வேறு மொழி எழுத்தாளர்களுடைய கதை களையும் மொழிபெயர்த்து கொடுக்கிறார்கள். இந்த புத்தகம் சிறப்பாக இன்னும் சென்று சேர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றார் அழுத்தமாய்.
விழா மேடையில் பேசிய வி.ஜி.பி. சந்தோஷம் "உலகை தமிழால் உயர்த்திடுவோம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அன்னையும் தந்தையும் ஆசானும் முன்னெறி தெய்வம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. யாதும் ஊரே யாவரும் கேளிர். தமிழகத்தில் அரங் கேற்றப்படும் நாடகங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் அரங்கேற்றப்படவேண்டும் என்று வாழ்த்து மகிழ்கிறேன்" என்றார்.
அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடகக் கலை என்பது உயிரோட்டம் உள்ள கலை என்றால் அதை யாரும் மறுத்து விட முடியாது. மறுக்கவும் முடியாது. அந்த உயிரோட்டம் உள்ள கலையை தாங்குவதற்கு இவ்வளவு பேர் வருகை புரிந்து இருப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக நான் கருதுகிறேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார்கள். ஆனால் நிலைத்திருக்கக்கூடிய வாக்கி யம் ஓல்ட் இஸ் கோல்ட் ” என்பதுதான். பழையது என்றாலும் நாடகம் தங்கத்திற்கு நிகரானது" என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்:
"நான் உண்ணும் ஒரு படி அன்னத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயர் எழுதி இருக்கிறது. நான் சுவாசிக்கின்ற சிறு மூச்சு அவர் பெயர் எழுதிய உயிர்க் காற்றால் நிரம்பியது. நான் உறங்குகின்ற ஓர் இரவு நல் உறக்கம் அவர் பெயர் எழுதிய நாட்களால் நிறைந்தது.இந்த விழாவிற்கு அக்கா விஜயா தாயன்பன் என்னை அழைத்த போது, நான் தென் சென்னை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அல்ல, ஒரு நாடகக் கலைஞராக நான் அங்கு வருகை புரிகிறேன் என்று கூறினேன். ஒரு நாடகக் கலைஞருக்கு, நாடக மேடையைவிட மிகுந்த மன மகிழ்ச்சி யையும், திருப்தியையும் தரக்கூடிய இடம் வேறு எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட ஏழு எட்டு நாடகங்களுக்கு மேல் நான் நடித்திருக்கின்றேன்.
கலைஞர் அவர்களின் நாடகக் கலையை தன்னுடைய அரசியலுக்கு, பெண்களுடைய முன்னேற்றத்திற்கு என்று பல்வேறு தளங்களிலேயே கையில் எடுத்துக்கொண்டார். கிட்டத்தட்ட உதயசூரியன், வெள்ளிக்கிழமை, மணிமகுடம், நச்சுக்கோப்பை, சிலப்பதிகாரம் இப்படி பல்வேறுவிதமான நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். முதன்முதலாக அவர் எழுதிய நாடகம் “ பழனியப்பன்தான் ”.
நாடகக் கலையை அவர் எவ்வளவு மிக நுட்பமான விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார் என்று பார்த்தால் “ பரபிரம்மம் என்று ஒரு நாடகம் எழுதுகிறார்.
அது புறநானூற்றின் ஒரு பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாடகம். அந்த நாடகத்தின் மூலம் வந்த வருவாயை அன்றைய தினம் தஞ்சை புயலில் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு அவர் வழங்குகிறார்.
அதுபோல திருவாளர் தேசியம் பிள்ளை என்கின்ற நாடகம் குறிப்பாக அரசியல் அங்கதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.’உதயசூரியன் சின்னம் நமக்கு வழங்கப்பட்டபோது அதனை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்காக’உதயசூரியன்’என்கின்ற பெயரிலேயே ஒரு நாடகத்தை எழுதுகின்றார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவருடைய நாடகப் பங்களிப்பை. இவையெல்லாம் என் நினைவுக்கு வருகின்றன..
ஒரு முக்கியமான சொற்றொடர் ஒன்று உண்டு. ஆதியிலே சொற்கள் இருந்தன என்று நாடகக்காரர்கள் நம்புவதில்லை. சொற்களைத் தாண்டியும்’உடல் மொழியின்’மூலமாக, பாவங்களின்” மூலமாக, இசையின் மூலமாக அரங்கத்தை முழுவதுமாக வசப் படுத்துகின்ற வல்லமை நாடகக் கலைஞர்களுக்கு மட்டும்தான் உண்டு. அந்த வகையிலே அனைவருக்கும் என்னுடைய அன்பான பாராட்டுக்கள்" என வாழ்த்தியமர்ந்தார்.
எஸ்.வி.சேகர்:
நான் கிட்டத்தட்ட ஒரு 7000 நாடகம் இயக்கி நடித்து இருக்கிறேன். ஒரு 1000 நாடகம் இதே ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடித்து நடத்தி இருக்கிறேன்.
ஆனால் குடும்பம் குடும்பமாக, அதுவும் இது மாதிரியான ஒரு காலகட்டத்தில் இவ்வளவு கூட்டத்தை பார்ப்பது என்பது எனக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் மேடையேறியபோது, "தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இந்த ஆண்டு முழுக்க தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ் கொள்கை களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை தொடங்கி கொண்டாடி வருகிறது, என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஔவை அருள் (தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்):
என்னுடைய நண்பர் வைத்தீஸ்வரன் அவர்களின் பெருமுயற்சியினால் இந்த’மும்முடிச் சோழன் நாடகம் அரங்கேறுகிறது. மன்றங்களில் தலைசிறந்த மன்றமான ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்த விழா நடைபெறுவது என்பது நாடக உலகுக்கே ஒரு திருப்புமுனையாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது. தீந்தமிழில் எவ்வளவு அழகாக இந்த நாடகத்தை தீட்டி இருக்கிறார்கள் என்பதை இப்போது நீங்கள் பார்த்து களிக்க போகிறீர்கள்.
இந்த முயற்சிக்கு எங்களுக்கு தோளுக்குத் தோளாக துணை நின்றவர் சோமசுந்தரம். அவரது பங்கு நமது இயல் இசை நாடக மன்றத்திற்கு ஒரு மாபெரும் பங்கு என்றுதான் நான் கருதுகிறேன். காரணம் எந்தையார் காலத்தில் இருந்து ஒரு 30 ஆண்டுகளாக இயல் இசை நாடக மன்றத்திற்கும், கலை பண்பாட்டுத் துறைக்கும் ஒரு பெரும் பாலமாக அவர் தம்மை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய பணியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
எதைக் கேட்டாலும் இல்லை என்ற சொல்லே சொல்லாதவர் அண்ணாச்சி வி.ஜி.பி. சந்தோசம்.
அவர்களுடைய குடும்பம் தலைமுறைகளைத்தாண்டி வாழ்வாங்கு வாழவேண்டும் என்று இந்த நேரத்திலே நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.
நெல்லை ஜெயந்தா:
"உண்மையிலேயே நிரந்தர எழுச்சியோடு நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். இயலிசை நாடக மன்றம் என்பது இத்துணை காரியங்களை செய்ய முடியுமா என்கிற அளவுக்கு இன்றைய தலைவர் அவர் களும், செயலாளர்களும் செய்திருக்கிறார்கள் என்பதை நினைகின்றபோது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி பிரதாப் :
ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு அண்ணன் கஜேந்திர பாபு’மூலமாக சென்னை ட்ராமாஸ் நிறுவனர் முனைவர். வைத்தீஸ்வரன் வந்தார். பல ஊர்களில் பல நாடகங்கள் போட்டு இருக்கிறோம்.
ஆனால் சென்னையில் மட்டும் நாங்கள் நாடக அரங்கேற்றம் செய்யவே இல்லை. சென்னையில் நாடகம் போடவேண்டும் என்பது என்னுடைய 23 வருடத்தின் கனவு என்று கூறினார். உடனே தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர் ஔவை அருள் அவர்கள், நாம் இயல் இசை நாடக மன்றம் மூலமா இதற்கு உதவி செய்யலாம் என்று சொல்லிவிட்டு, இயல் இசை நாடக மன்றத்தில் சோமசுந்தரம் என்று ஒருவர் இருக்கிறார் நீங்க அவர போய் பாருங்கள். இதற்கு நாங்களும் நிதியுதவி கொடுக்கிறோம்..
அதன் மூலமாக தலைவர் வாகை சந்திரசேகர், விஜயா தாயன்பன் இவர்கள் மூலமாக இதை சிறப்பாகச் செய்யலாம் என்று கூறினார்.. அதன்படி இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது" என்று கூறியமர்ந்தார்.
என்னதான் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ரோஸ் கோல்ட் என்று உலோகங்கள் பல்வேறு அணிகலன்களாக படை எடுத்த பொழுதும், தங்கம் தங்கமாகவே தான் இருக்கிறது என்பதற்கு, இந்த’மும்முடிச் சோழன் நாடகம் வரலாற்றுச் சான்றாக அமைகிறது.