ந்த ஒரு பறவையும் வானமளக்க விண்ணில் பறந்தாலும் இரையெடுக்க இந்த மண்ணுக்குத்தான் இறங்கிவர வேண்டும்’ என்பார்கள். இது பறவைகளுக்கு மட்டுமல்ல; படைப்பாளர்களுக்கும் பொருந்தக்கூடியதே.

ஒரு படைப்பாளன் என்பவன் எப்போதுமே தான் வாழும் சமூகத்தின் கண்ணாடியாக இருந்து, சமுதாய நடப்புகளைப் பிரதிபலிக்க வேண்டும். சமுதாயத்தில் எது நடந்தாலும் எனக்கென்ன என்று கனவுலகில் சஞ்சரிக்கும் படைப்பாளனைச் சமுதாயமும் காலமும் புறந் தள்ளிப் போய்விடும்.

தன்னைச் சுற்றி நிகழும் சமுதாய நிகழ்வுகளைக் கூர்ந்து பார்ப்பதோடு, அடுத்துவரும் தலைமுறைக்கு எதைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும், எதனைத் தவிர்க்கவேண்டும் என்பது குறித்த தெளிவும் புரிதலும் படைப்பாளனுக்கு மிகவும் அவசியம். ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதுதான் எவ்வளவு சத்தியமான வரிகள்.

dd

Advertisment

நாமும் எழுத வேண்டும், புத்தகம் போட வேண்டுமென்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனாலும் எழுத நினைக்கிற எண்ணம் இருக்கிற அளவுக்கு, எழுதுகிற உந்துதல் பலரிடத்தும் இருப்பதில்லை.

எழுத வேண்டுமென்கிற கட்டாயத்தில் பேனா எடுத்தால், எதை எழுதுவது, எங்கிருந்து தொடங்குவது, எப்படி எழுதுவது என்கிற பல கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்துநின்று, எழுதவிடாமல் செய்துவிடுவதுமுண்டு.

ஓர் எழுத்தாளன் என்பவன் தனி மனிதன் கிடையாது; அவன் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதி. எழுத்தாளனுக்கு அமைப்பு தேவையா என்கிற பழைய கேள்வி வலுவிழந்து விட்டது. இன்றைக்கு எழுத்தாளர்களும் ஓர் அமைப்பாகத் திரண்டு, சமூக மாற்றத்திற்காக சிந்திக்கிறார்கள்; எழுதுகிறார்கள்; களத்தில் நின்று குரல் கொடுக்கிறார் கள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ எனும் மகத்தான குரல் எங்கெங்குமாய் ஒலி−க்கத் தொடங்கியுள்ளது.

1975-ஆம் ஆண்டில் இந்தியத் திருநாட்டின் கருத்துரிமை முடக்கப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் மதுரையில் பிறந்த இலக்கிய அமைப்பே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். கடந்த 48 ஆண்டுகாலமாக உலகில், இந்தியாவில், தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிராக எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும், அதற்கெதிராக உரக்க குரலெழுப்பி வருவதோடு, அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளைக் கூர்ந்து பார்த்து, மக்களைப் பாதிக்கும் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாற்றும் எழுத்தாளர்களை ஒன்று திரட்டி, ஓரணியாக களத்தில் நின்று செயலாற்றி வரும் இலக்கிய அமைப்பு த.மு.எ.ச. ஆகும்.

d

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்கிற பெயர் மாற்றத்தோடு, இளம் படைப்பாளிகளை உருவாக்கும் பட்டறையாகவும் விளங்கிவரும் த.மு.எ.க.ச., பல்வேறு பயிலரங்குகளையும், பயிற்சி முகாம்களையும் அமைப்பிலுள்ள எழுத்தாளர்களுக்காக நடத்தி வருகிறது. அவ்வகையில், கடந்த 2023 ஜூன் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் திருநெல்வேலி− மாவட்டம் பாபநாசத்தில் ‘புறவுலகும் புனைவுலகும்’ எனும் தலைப்பிலான எழுத்திலக்கிய முகாம் ஒன்றினை நடத்தியது.

இம்முகாமில் படைப்பிலக்கியத் தளத்தில் ஆர்வத்தோடு எழுத வந்திருக்கும் நாற்பது வயதிற்கு உட்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட இளைய படைப்பாளர்கள் தமிழகம் முழுவதுமிருந்தும் வந்து பங்கேற்றனர்.

ஒவ்வொரு படைப்பாளரும் இலக்கியத்தின் எவ்வகை படைப்பினைப் படைப்பதில் ஆர்வமுடன் இருக்கிறார் என்பதை முன்னரே கேட்டறிந்து, அதன்படி கவிதை, சிறுகதை, நாவல் என மூன்று பிரிவுகளின்கீழ் தனித்தனி அமர்வுகளாக நடத்தியது எழுத்திலக்கிய முகாமின் சிறப்பான முன்முயற்சியாகும்.

ஓர் எழுத்தாளன் என்பவன் யார்?, இன்றைய சமூகச் சூழலில் ஓர் எழுத்தாளனின் கடமை எதுவாக இருக்க வேண்டுமென்பது குறித்து த.மு.எ.க.ச.-வின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கத்தின் தலைமையுரையோடு தொடங்கிய இம்முகாமில், இந்த எழுத்திலக்கிய முகாமை த.மு.எ.க.ச. நடத்துவதன் தேவையென்ன என்பது குறித்து மாநிலப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா விளக்கிப் பேசினார்.

மூன்று நாட்களும் நடைபெற்ற கவிதை அமர்வில், கவிஞர்கள் லிபி ஆரண்யா, மு.முருகேஷ், வெய்யில், ஸ்டாலி−ன் சரவணன், தேவசீமா ஆகியோர் கவிதை குறித்த பல்வேறு பொருண்மைகளில் வகுப்புகளை எடுத்தனர். கவிதைப் பிரிவில் பங்குபெற்ற கவிஞர்கள் உற்சாகத்தோடு குறிப்புகளை எடுத்துக்கொண்டதோடு, கவிஞர்களிடம் தங்களது சந்தேகங்களைக் கேள்விகளாக எழுப்பி, விளக்கமும் பெற்றனர்.

சிறுகதைப் பிரிவில் எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், அழகியபெரியவன், உதயசங்கர், எஸ்.தேன்மொழி, மணிமாறன், இரா.நாறும்பூநாதன் ஆகியோரும், நாவல் பிரிவில் எழுத்தாளர்கள் பாமா, எம்.எம்.தீன், மதன் கார்க்கி, முகமது யூசுப், மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ ஆகியோரும் உரையாற்றியது சிறுகதை எழுதுவதிலுள்ள நுட்பங்களைப் புரிந்துகொள்ள பேருதவியாக அமைந்தது.

மூன்று நாட்களும் தினமும் நடைபெற்ற பொது அமர்வுகளில் பேராசிரியர் பக்தவத்சல பாரதி, திரைக்கலைஞர் ரோகிணி, எழுத்தாளர்கள் வண்ணதாசன், வ.கீதா, இமையம், நக்கீரன், பேராசிரியர் ரத்னகுமார், ஓவியர் சந்ரு ஆகியோரின் உரைகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

Advertisment

ss

தேனி மாவட்டத்தின் மூன்று தலைமுறை படைப்பாளர்களாக பவனிவரும் தேனி சீருடை யான், ம.காமுத்துரை, அராபத் உமர் ஆகியோர் தமது படைப்பனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது நெகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது.

ஒவ்வொரு அமர்வுகள் முடிந்த பின்னரும், யாரும் கலைந்து சென்றுவிடாமல், உரையாற்றிய கருத்துரையாளரிடம் சென்று, மேலும் சில விளக்கங்களைப் பெற்றதும், ஒருவருக்கொருவர் எழுதிய படைப்புகளைக் காட்டி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதுமாகவும் நிற்கும் காட்சிகள் எல்லா அமர்வுகளிலும் நடந்தேறின.

மனம் முழுக்க கனவுகள் சுமந்து பங்கேற்ற இளம் படைப்பாளர்களுக்கான தெளிவையும் புரிதலையும் இந்த முகாம் தந்திருப்பதோடு, அவர்கள் எழுதுவதற்கான உத்வேகத்தையும் பெற்றுச்சென்றார்கள் என்பதை அவர்கள் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் சொன்ன கருத்துக் களினூடாக அறிந்துகொள்ள முடிந்தது.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் படைப்பு சார்ந்து தனித் தனியாக பல கனவுகள் இருக்கும். ஆனாலும் இந்த சமூகம் மேன்மையுற தன் எழுத்தும் அதிலொரு துளியாகவேனும் இருந்திட வேண்டுமென் கிற உயரிய எண்ணம் கொண்ட எழுத்தாளர் கள் ஒன்றாகச் சங்க மிக்கவேண்டும். சாதி, மதப் பிரிவினைகள் பேசி, மக்களைத் துண்டாட முயலும் மதவாத சக்திகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல், நெஞ்சுரத்தோடும் மத நல்−லிணக்கம் எனும் ஒப்பற்ற பேராயுதத்தோடும் எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

‘பல்வேறு நெருக்கடியான சூழல்களுக்கு மத்தியிலும் வாழ்வோடு போராடி, நம்பிக்கையோடு வாழ்வைத் தொடரும் எளிய மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஆழமும் அடர்த்தியும் சமூக அக்கறையும் மிக்க படைப்புகளை இனிவரும் காலங்களில் படைப்போம்’ எனும் நம்பிக்கையோடு முகாமை நிறைவுசெய்து, பாபநாசத்திலி−ருந்து விடைபெற்றனர் இளம் எழுத்தாளர்கள்.

பெருமழையொன்று பெய்வதற்கான அறிகுறி யோடு மேற்குவானில் கருமேகக்கூட்டம் அப்படியே இருட்டிக்கொண்டு வந்தது. இனி, மழையின் தாளமும் மண்வாசமும் நிச்சயம் என்பதை உறுதி செய்வதாக, வலசைப் பறவைகள் வேகமாக கூடடையத் திரும்பிக்கொண்டிருந்தன.