பழமையான இலக்கியப் போக்கிலிருந்து விடுபடும் ஆர்வம், புதுமை காணும் நாட்டம், மேனாட்டு இலக்கியப் பாதிப்பு முதலியவை பாரதியாருக்குப் பின்னர் வசன கவிதையைத் தமிழ் மண்ணில் காலூன்ற வைத்தன. மணிக்கொடிக் காலத்திலும் (1939) எழுத்துக் காலத்திலும் (1959-1970) இதழ்களிலும் எழுதிவந்தோரைப் பாரதிக்குப் பின் வந்த புதுக்கவிதை முன்னோடி கள் என்றழைக்கலாம்.
பாரதிக்குப் பின்னர் வசன கவிதை எழுதியோரில் ந,பிச்சமூர்த்தி (1900-1976), கு.ப.ரா (1902-1944), புதுமைப்பித்தன் (1906-1948), க.நா,சு (மயன்) (1912-1988), வல்லிக்கண்ணன்(1920-1999) ஆகியோரைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். எம்,வி.வெங்கட்ராம், ந.சிதம்பர சுப்பிர மணியம், சிட்டி முதலானோரும் ஓரளவு எழுதிவந்துள்ளனர்.
புதுக்கவிதை முன்னோடிகளாக விளங்கிய இக்கவிஞர்களின் இயல்புகளில் ஒரு பொதுமரபு காணப்படுகிறது.
.சிறுகதையில் அமையும் போக்கு கவிதையிலும் வெளிப்பட்டிருத்தல் .பழமையின் தாக்கங்களுக்கு ஓரளவு ஆட்பட்டமை.
.புதியன படைக்கப்படவேண்டும் என்ற தணியாத தாகம்.
வடிவத்திலும் பொருளிலும் மாற்றம் விழைந்தமை .கலை, இலக்கியம் தொடர்பான சிந்தனையில் ஒன்றுபட்டமையும் வேறுபட்டிருத்தலும் எள்ளல் சுவையினைக் கவிதையின் ஊடே இழையோடவிட்டமை மேலைநாட்டாரின் கவிதை உத்திகளைக் கையாண்டமை ஆகிய போக்குகளைப் புதுக்கவிதை முன்னோடிகளாக விளங்கிய முதல் ஐவரிடத்தும் காணமுடிகிறது.
எழுபதின் தொடக்கத்தில் மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை ஆகிய மூன்று வகைகள் பற்றிய விவாதங்களும், கருத்து முரண்களும் நிகழ்ந்தன. பாரதி மேனாட்டுப் பாணியில் எழுதியவை வசனமா? புதுக்கவிதையா என்ற மோதலும் இருந்துள்ளது, வசன கவிதை என்ற வழக்கிலிருந்து விடுபட்டு இலகு கவிதை என்றாகிப் பின்னர்ப் புதுக்கவிதை என்ற பெயர்ப் பூண்டு வளர்ச்சி கண்டது.
புதுக்கவிதை முன்னோடிகள் யாப்புப் பற்றியும் அறிந்திருந்தனர். ந.பிச்சமூர்த்தி, ( ந..பி) கு.ப.ரா, புதுமைப்பித்தன் (பு.பி) ஆகியோரிடத்து மரபின் ஆளுமை உண்டு. பு.பி கவிதைகள் மரபிலக்கணத்தோடு திகழ்பவை. மற்ற இருவரது கவிதைகளில் பெரும்பான்மையும் புதுமை தழுவிய போக்கே வெளிப்பட்டுள்ளது. க.நா.சு 'யாப்பினைத் தெரிந்து வைத்திருப்பது தவறில்லை', என்றாரே யொழிய அவர் எழுதியவற்றுள் யாப்பமைதி கடந்தவையே மிகுதி. வசன கவிதையை இலக்கிய இரட்டையர்களான ந.பி.யும், கு.ப.ராவும் ஏற்றனர். பு.பி. வசனகவிதையில் உடன்பட்டவராயிருந்தார். யாப்பிலும் புதுக்கவிதை செய்யலாம் என்று கூறிய ந.பி., 'கவிதையைப் பொருளில் காட்டவேண்டுமே யல்லாது, சொல்லடுக்கில் காட்டக்கூடாது'’ என்றார். க.நா.சு இக்கூற்றையெல்லாம் ஏற்கவில்லை. கவிதை பற்றிய கருத்து மோதல்கள் தொடக்க காலத்திலும் நிகழ்ந்தன என்பதற்கு இவை அடையாளங்கள்.
பாடுபொருள் என்ற அளவில் தொடக்க காலப் புதுக்கவிஞர்களின் கவிதைகளைச் சில பகுப்புகளில் தொகுத்துக் காணலாம்.
கலை, இலக்கியம் பற்றிய சிந்தனை
கலை, இலக்கியம் பற்றிய கொள்கைகளில் கலைஞனின் ஆற்றல், போலிக் கவிதையின் புன்மை, பழைமையைச் சாடல், காசிற்குக் கலையை விற்றல் ஆகியவை வெளிப்பட்டுள்ளன. கவிஞனின் ஆற்றலைக் கூறும் ந.பி.யின் 'கொம்பும் கிளியும்' என்ற பாடல், வானமும் பூமியும் அவன் வசப்படத்தக்கன என்பதைச் சுவைபடக்கூறுகிறது. மாறாக, 'சொல்லை வைத்துக்கொண்டு உண்மைப் பொருளைக் காட்டாமல் வாய்ப்பந்தல் போடும் பழைமைக் கவிஞர்களைச் சாடுகிறது, 'கிளிக்கூண்டு' என்ற தலைப்பில் அமைந்த கவிதை 'வார்த்தையை மணலாகவும், ஓசையை நீராகவும் கொண்டு பிசைந்து செய்த கிளிக் கூண்டாகிய கவிதையில் அழகுக் கிளியைத் தேடமுடியுமா என்ற கருத்தில் அமைந்த கிளிக்கூண்டு ந.பி.யின் படிமக் கவிதையாகும்.
இவருடைய இன்னொரு கவிதை 'பிறப் பிடம்', கவிதையின் பிறப்பிடத்தைக் கடவுளும் அறியமுடியாது; அது தோன்றிக் கொண்டே இருப்பதைத் தெரிவிக்கும். கவிதையின் உட்பொருள் நுட்பமானது. உண்மையின் பொருளை அதில் கவிஞன் தொட்டுக்காட்ட இயலும். இதனைக் குறியீடாகக் காட்டும் ந.பி.யின் பிறிதொரு கவிதை, 'கவிதைக் கருடன்' என்பதாகும். இதே போன்று 'கலை' என்ற கவிதையில் நெட்டிப்பூவைக் குறியீடாகக் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்க கவிதையாகும் கவிதையைப் பெண்ணாகக் கொண்டு அவன் கவிஞனோடு இரண்டறக் கலந்து உயிர்ப்புடன் திகழ்வதும், அவன் அவளுக்கு அடிமையாவதுமான உருவகக் கவிதையைக் கு,ப,ரா எழுதியுள்ளதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
கலை பற்றியும், கவிஞர் குறித்ததுமான பதிவு பு.பி. உடையது. எள்ளல் இழையோடும் படியான மரபுநிலையில் அவர் பாடியுள்ள பாடல்கள் சில. 'ஓடாதீர்' என்ற கவிதையில் உலகம், 'உண்மையான கலைஞனை வாழவைக்காது; அவன் இறந்தபிறகு அவனது புகழில் குளிர் காய்வோரை'ச் சாடுகிறார். எழுத்துலகைக் கொச்சைப் படுத்திக் கலையை விலையாக்கும் இயல்பைப் பு.பி. இகழ்ந்துரைத்திருப்பது அழகிய எள்ளல்.
'கிழட்டு ரசனையும் வறட்டுக் கலைஉணர்ச்சியும் சாகவேண்டும்' என்பதை மையப்படுத்தியிருப்பதை, பு.பி.யின் 'நிசந்தானா? சொப்பனமா?' 'உருக்கமுள்ள வித்தகரே', 'தொழில்', 'பாட்டுக் களஞ்சியமே' முதலிய கவிதைகளில் காணலாம்.
க.நா.சு எழுதிய 'கவிதை' என்னும் பாடல், கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பழைமை யைச் சாடி, பலவழிகளில் கவிதை புத்துயிர் பெற்று நிற்கவேண்டும் என்று இக்கவிதை சுட்டுகிறது.
கலையில் உள்ள அழகின் வெளிப்பாட்டைப் புலப்படுத்தும் எம்.வி.வி.யின் 'அன்னபூரணியின் சந்நிதியில்' என்னும் கவிதை அவர் எழுதிய குறிப்பிடத்தக்க கவிதைகளில் ஒன்று இயற்கையும் பின்புலமும் இயற்கைப் பொருளை மனித இயல்பின் பின்னணியில் வெளிப்படுத்துவது கவிமரபு. இயற்கையை வாழ்வியல் நுகர்வோடு அணுகுவதற்குக் கவிதை துணைசெய்கிறது. ந.பி. எழுதிய 'மணல்' என்னும் கவிதை, வாழ்க்கையில் வருவனவற்றை அப்படியே எதிர்கொள் என்பதை உட்பொருளாகக்கொண்டது. 'காட்டுவாத்து' என்ற நீண்ட கவிதை ந.பி.யின் சிறந்த கவிதைகளில் ஒன்று. வேடந்தாங்கலுக்கு வலசை வரும் காட்டு வாத்து ஒரு நனவோடைக் குறியீடு. மனிதன் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையில் அமைந்த கவிதை அது. ந.பி.யின் பல பாடல்கள் இயற்கையை வாழ்வியல் நெறிக்காகவும், தத்துவ நோக்கிற்காகவும் இணைத்துப் பாடப்பெற்றுள்ளன.
இயற்கை அழகைத் திரையிட்டு மூடக்கூடாது என்பதனை க.நா.சு. 'மணப்பெண்' என்னும் கவிதையில் குறிக்கும் பாணி அழகிது. புறத்தே நிகழும் துல்லிய ஓசைகளை உணர்வுபட 'இரைச்சல்' என்ற கவிதையில் உணர்த்துவார். அகத்தே நிகழும் உணர்வுகளுக்குப் புறத்தே தோன்றும் காட்சி, கவிதைக்குப் பொருளாவதை அவரது 'கடல்' என்னும் கவிதை உணர்த்தும். அதனைத் துயரின் பிறப்பிடமாக உணர்த்துகிறார்.
வல்லிக்கண்ணன் பார்வையில் 'கடல்', உழைத்து ஓய்ந்திடும் மனிதனை நினைவூட்டுகிறது. மனிதரின் மெய்ப்பாடுகளைத் திங்கள் மீது ஏற்றிக்கூறும் வல்லிக்கண்ணனின் 'திங்கள்' என்ற கவிதை தனிப் பார்வைக்கு உரியது.
இயற்கையைத் தன்மை நவிற்சியாகக் காட்டும் பாடல்களாக கு.ப.ரா.வின் 'ஏர் புதிதா? மயனின், 'மின்னற்கீற்று', 'விளையாடும் பூனைக்குட்டி' ஆகிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடதத்க்க கவிதைகளாகும்.
காதலுணர்வு
மரபிற்கும் புதுமைக்கும் விலக்கு இல்லாதது காதல் என்ற பாடுபொருள். இரண்டிலுமே அது சாகாவரம் பெற்றது எனலாம். காதலைப் பல பரிமாணங்களில் புதுக்கவிஞர்கள் பாடியுள்ளனர். இவர்கள் சொல்லும் பாணியில் மெருகேற்றியுள்ளமை அறிதற்குரியது. 'காதல்' என்ற தலைப்பில் அமைந்த இரு கவிதைகள் ந.பி. உடையது. ஒன்றில் ஆன்மிகத் தேடலும், மற்றொன்றில் கேட்பதல்ல காதல் தருவதுதான் என்ற நோக்கும் விழுமிய நிலையில் சொல்லப் பட்டுள்ளன.
கு.ப.ரா.வின் கவிதைகள் பல ஆண், பெண் மன உணர்ச்சியும், பாலியல் சிந்தையும் கொண்டவை. ஆனால் சொல்லக்கூடிய முறையில் நேர்த்திமிக்கவை. இவ்வகையில் 'எதற்காக, ஏன்?' 'உரம்', 'என்னதான்பின்', 'ராக்கம்மா நெனப்பு' முதலானவை நுண்ணிய மெல்லிழை உணர்வான சித்ரிப்பில் அக்கவிதைகளின் போக்கு அமைந்துள் ளது. வல்லிக்கண்ணனின் 'உன் கண்கள்', 'இனியவளே' ஆகிய இரண்டுமே இவ்வகையில் சுட்டிக்காட்டத்தக்கன.
சமூகப் பொருளாதாரச் சிந்தனைகள்
புதுக்கவிதை முன்னோடிகள் சமூகப் பொருளாதார வெளிப்பாட்டினைத் தம் கவிதையில் பதிவுசெய்துள்ள முறை எண்ணிப் பார்க்கத்தக்கது. ந.பி. சமூக உணர்வுகளைப் படிமம், குறியீடு ஆகிய உத்திகள் மூலம் தெரியப்படுத்துவர். வறுமை, பசிப்பிணி, கலப்படம், விலைவாசி ஏற்றம், நியாயமற்ற பங்கீட்டு முறை, தன்னலப் போக்கு முதலியவற்றைத் தம் கவிதையில் சிந்தித்துள்ளார்.
ந.பி.யின் 'மார்கழிப் பெருமை' என்னும் கவிதையில் பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒரு காட்சிவழியே காட்டப்படுகிறது. செல்வக்குழந்தை, தோட்டிச்சிக் குழந்தை என இரண்டு முரண்பட்ட பார்வைகளில் அது பற்றிச் சிந்திக்கின்றார். 'பெட்டிக் கடை நாராயணன்' என்ற அவரது கவிதை தனித்த சிறப்புக்குரியது. பல கோணப் பார்வையில் அன்றிருந்த பங்கீட்டு முறையை இந்த நீண்ட கவிதையில் காட்டியுள்ளார். பல பரிமாணங்களைக் கொண்ட கவிதை அது. சமூக மேம்பாட்டுக்குத் தடைக்கற்களாக விளங்கும் நாரணன் போன்றவர்களை இனங்குறிக்கும் அவரது பார்வை வித்தியாசமானது. மக்களைப் புரிந்துகொண்டு பணமே குறிக்கோளாக எண்ணி வாழும் நாராயணனின் வார்ப்பு இயல்பாகவும் அருமையாகவும் உணர்த்தப்பட்டிருக்கிறது. 'பொங்கல்' என்னும் கவிதையில் தன்னலத்தைப் பொங்கலிட்டும் உள்ளுணர்வைப் பொங்கச் சொல்லியும் கேட்கப்படும் கேள்வியில் பொங்கல் எதற்கு என்ற புதுப்பார்வையைத் தரும்படியான கவிதை அது.
உழைப்பின் அருமையை ந.பி.யின் பல பாடல்கள் உணர்த்தும். "புதுமைக்குப் பயணம்" என்ற கவிதை, நாகரிகத்தின் ஈரெல்லைகளைக் காட்டி, எங்குமே மனிதன் உழைக்கவேண்டும் என்ற கருத்தை அடியொற்றியது. இக்கவிதை, உழைப்பதற்குரிய காலையும், கையையும் போற்றுகிறது. சத்தியத்தின் கூரையையும், வேலிகளையும் பெயர்த்து எடுத்து வந்து நவபாரதத் தெருக்களில் எரிக்கும் போலிப் பண்டிகையாகக் காட்டும் பார்வை புதிது. சமூகத்தில் மனிதன் யார் என்பதற்குரிய விடையைத் தரும் க.நா.சு.வின் 'நாலடி பாய' என்னும் கவிதையும், 'மன்னுலகின் அசுரனே உண்டு' என்பதற்கான காரணங்களைத் தரும் 'இக்காலம்' என்னும் கவிதையும் குறிப்பிடத் தக்கவை.
அரசியல் பற்றிய எண்ணங்கள்
இந்திய நாடு, உலகளாவிய சிந்தனை முதலியன பற்றிப் புதுக்கவிதை முன்னோடிகளின் பார்வை பரந்துபட்டது. பாரதிக்குப்பின்னர், அவரது அடிச்சுவட்டில் வந்தவர்கள் விடுதலை, நாடு, மொழி, பற்றிய சிந்தனைகளில் அதிக கவனம் செலுத்தாதது சுட்டிக்காட்டத்தக்கது. காந்தியின் அகிம்சை பற்றிய கொள்கை ந.பி.யின் 'பூக்காரி' என்னும் கவிதையில் அழகுற வெளிப்பட்டுள்ளது. அன்பிற்கு எதிரானது போர் என்பதையும், அன்பிற்கு அழிவில்லை என்பதையும் சுட்டுகிறது.
ந.பி.யின் வியட்நாம் என்னும் தலைப்பிலமைந்த கவிதை வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த அவலத்தைக் குறிப்பிடும். இது வளர்ச்சிபெற்ற ஒரு நாட்டின் நாகரிகமாகுமா? என்ற கேள்வியை எழுப்பும்படியான கவிதை.
பு.பி.யின் 'இணையற்ற இந்தியா' என்னும் கவிதை தனக்கே உரிய அங்கதப் பாணியில் அமைந்த பாடலாகும். இந்தியர் எதையும் விற்கத் தயங்கமாட்டார்கள் என்பதைக் குறிப்பாகச் சுட்டுகிறது.
வல்லிக்கண்ணனின் 'பாரதபுத்திரரே' என்ற கவிதை விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்தியா இருக்கும் அவலநிலையை நேரடியாக எடுத்துரைக்கிறது. அவருடைய பிறிதொரு கவிதையான 'அமரவேதனை' உலகக் கண்ணோட்டம்மிக்க கவிதையாகும்.
அரசியலையும், அரசியல் தலைவனாகத் தகுதிபெறுவதையும் கூறும் க.நா.சு.வின் 'இனம்', 'தகுதி' ஆகிய இரு கவிதைகள் குறிப்பிடத்தக்கவை யாகும் இவ்வாறு புதுக்கவிதை முன்னோடிகளின் பாடுபொருளை அணுகும்போது, ந.பி.க்கு வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறந்து மனிதனை நிகழ்கால அழிவினின்றும் மீட்கவேண்டும் என்ற நோக்கம் இருந்துள்ளது. கு.ப.ராவுக்கு ஆண்-பெண் ஈர்ப்பே பெரும் பான்மையான கவிதைகளில் பாடுபொருளாக அமைந்துள்ளது. பு.பி.க்கு எள்ளல் கைவந்த கலையாக உள்ளது. க.நா.சு.வுக்கு தனிமனித உணர்வே பாடுபொருளாயிற்று. வல்லிக்கண்ணனிடம் எவ்வகைப் பொருளையும் நேரடியாகப் பேசும் எளிமையைக் காணலாம்.
இங்குக் குறிப்பிட்ட கவிஞர்களின் பாணியிலேயே பின்னர் வந்த கவிஞர்கள் எழுதிவந்துள்ளனர். அவர்களுக்கு இம்முன்னோடி களின் கருத்தாக்கமும், வடிவமும் ஓரளவு துணைசெய்துள்ளன. பிறகு கவிஞர்கள் காலச்சூழலுக்கு ஏற்ப வடிவத்திலும், கருத்தாக்கத்திலும் புதிய பார்வை செலுத்தித் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இச்சூழல் எழுபதில் இறுதிக்கட்டத்திற்குப் பிறகு வெகுவாக வளர்ச்சி கண்டுள்ளது.