ந்தவித தெளிவும் இல்லாமல் படுத்திருக்கிறார்.

திசையைப் பற்றிய உணர்வை இழந்துவிட்ட மாலுமியாக ஆகி விட்டிருக் கிறார். மனம் செயல்படுவதற்கு ஏற்ப சரீரம் செயல்பட தயாராக இல்லை. தளர்ச்சி...

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலவீனங்கள்...

இலக்கை வைத்து செயல்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், அடைய வேண்டிய இடத்தை அடைய முடியவில்லையே என்ற கவலை பாடாய்படுத்த ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

சிரமப்பட்டு அரை ஏக்கர் நிலமும் பழைய பாரம்பரிய வீடும்தான் பாகத்தைப் பிரித்தபோது கிடைத்தன.

அவருக்கு உரிமை உள்ள சொத்துகள்தான்.

மற்ற மூன்று பேர்களுக்கான உரிமைக்கு ரொக்கமாக பணத்தைக் கொடுத்து, சம்பாதித்த சொத்து...

அனைத்தையும் விற்றுத் தொலைத்தாலும் குடியிருக்கும் வீடும் நிலமும் இன்னொருவரின் கையில் இருக்காது என்ற விஷயம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இறுதிக் காலத்தில் சொந்தமென இருக்கும் வீட்டில் வாழ்வதையும் சொந்த நிலத்தில் இறுதி ஓய்வை அடைவதையும் அவர் விரும்பினார்.

பல தலைமுறைகளாக சிரமப்பட்டு உண்டாக்கிய சொத்து.... அப்பாவும் அம்மாவும் மூத்த மாமாவும் சொத்துகளைக் காப்பாற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

நீண்டகால கடுமையான உழைப்பின் காரணமாக அவர்களின் சரீரத்தில் தளர்ச்சி உண்டானது. சோர்வு அடைந்தவர்களாகவும் செயலற்ற நிலைக்கு வந்துவிட்டவர்களாகவும் ஆகிவிட்ட அவர்கள் மூவரையும் நோயும் சிரமங்களும் இறுதியில் இந்த உலகத்தைவிட்டு கொண்டு சென்றுவிட்டன.

தங்கையும் அவளின் மூன்று பிள்ளைகளும் சொத்தைப் பிரித்துத் தரும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

ss2

நிலத்திற்கும் வீட்டிற்கும் தொகை தீர்மானிக்கப்பட்டது. அந்த பணத்தைத் தருவதற்கு அவர் அந்த காலகட்டத்தில் இயலாத நிலையில் இருந்தார். கடன் வாங்கி, கொடுக்கவேண்டியதைக் கொடுத்து பத்திரத்தைப் பதிவு செய்தார்.

தங்கைக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் கிராமத்தில் வாழ்வதற்கு விருப்பமில்லை.

Advertisment

வீட்டையும் நிலத்தையும் தங்கைக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் பத்திரம் எழுதிக்கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். ஆனால், அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.

அவர்களுக்கு நிலமும் வீடும் வேண்டாம்.

விற்பனை செய்து கிடைக்கக்கூடிய பணத்திலிருந்து அவர்களுக்கான உரிமைத்தொகை கிடைத்தால் போதும்.

Advertisment

யாருக்கும் விற்பனை செய்வதற்கும் அவர்கள் தடைகள் விதிப்பவர்களாக இல்லை. மதம், ஜாதி ஆகிய பிரச்சினைகள் பரிசீலனையிலேயே இல்லை. நல்ல தொகை கிடைக்கவேண்டும். மிகவும் அதிக விலைக்கு யார் வாங்குகிறார்கள் என்ற விஷயத்தில் மட்டுமே அவர்களின் கவனம் இருந்தது.

இறுதியில் குடும்பத்தில் மூத்தவர் என்ற தகுதியை இழக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக பெரிய தொகையைக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு உண்டானது.

லட்சக்கணக்கில் கடன் வந்துசேர்ந்தது. கடனை மீட்டு தீர்ப்பதற்கு பல வருடங்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருந்தது.

தங்கையும் பிள்ளைகளும் பாகத்தைப் பிரித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றபோது, அவர் தேம்பித் தேம்பி அழுதார்.

"பாகத்தைப் பிரித்துக்கொண்டு சென்றாலும், நீங்கள் இடையே அவ்வப்போது இங்கு வரணும். வந்து தங்கணும். இறந்துபோன நம்முடைய அப்பாவையும் அம்மாவையும் மறக்கக்கூடாது. பெரிய மாமாவையும்....''- நெகிழ்ந்த குரலில் அவர் கூறினார்.

"உண்ணி அண்ணே.... நீங்கள் எங்களை மறந்துவிட்டாலும், நாங்கள் உங்களை மறக்க மாட்டோம். அப்பா, அம்மா ஆகியோரின் நினைவுநாள் சடங்குகளைச் செய்வதற்காக வருடத்தில் இரண்டு முறைகள் இந்த வீட்டுக்கு வருவோம். உண்ணி அண்ணே.. அப்போ நீங்கத்தடை சொல்லக்கூடாது.முகத்தைக்கோண வைத்துக் கொள்ளக்கூடாது.''

தங்கை எதையோ மனதில் வைத்துக்கொண்டு கூறினாள்.

"உனக்கும் பிள்ளைகளுக்கும் எப்போதும் இங்கு இடம் இருக்கு. நான் இறப்பது வரையாது நீங்கள் எனக்கு அந்நியர்கள் அல்ல. ஒரே தந்தை- தாயின் குருதியில் பிறந்த வர்கள் நாம். எனக்கு இருப்பதே ஒரேயொரு தங்கைதான். உனக்கு உடன்பிறந்தவன் என்று இருப்பது ஒரேயொரு அண்ணன்தான். நான் இந்த குழந்தைகளை என் சொந்த குழந்தைகளாகவே கருதி வளர்த்திருக்கேன்.

இவர்கள் அருகில் இல்லாத வாழ்க்கை எனக்கு வேதனை நிறைந்தது. இறந்துபோனவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதால்தான் நான் இந்த வீட்டையே பொறுப்பில் வைத்திருக்கிறேன். இந்த வீட்டின் ஒரு மூலையில்தான் நம்முடைய அப்பாவும் அம்மாவும் இறுதி ஓய்வு எடுத்துக்கொண்டிருக் கிறாங்க... அவர்களை மறக்க என்னால் முடியாது.''

கண்ணில் நீர் நிறைந்திருக்க, அவர் மேலும் சில சமாதானங்களைக் கூறினார்.

ஆனால், தங்கைக்கும் பிள்ளைகளுக்கும் மைத்துனனுக்கும் அவர் கூறியதில் சிறிதும் நம்பிக்கை உண்டாகாததைப்போல இருந்தது.

அவர் எந்தவொரு வேலைக்கும் முயற்சிக்க வில்லை. விவசாயியாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது என்பது அவரின் முடிவாக இருந்தது. இறந்து போனவர்களின் ஆசிர்வாதம் இருந்தால், என்றைக்காவது பசுமை படராமல் இருக்காது. நல்ல செயல்களைச் செய்பவரை எந்தச் சமயத்திலும் தெய்வம் கைவிடாது.

அவர் உறுதியான நம்பிக்கையுடன் மண்ணுடன் சேர்ந்து போராடினார். பல வருடங்கள் கடந்து சென்றதே தெரியவில்லை.

அன்றைய அந்த இளைஞன் இப்போது முதியவராக மாறிவிட்டிருக்கிறார்.

திருமணமே ஆகாதிருக்கும் அவரைத் திரும்பிப் பார்ப்பதற்கு யாருமே இல்லாத நிலை உண்டானது.

திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டியவர்கள் அனைவரும் பல முறைகள் கூறியும், அதில் கவனமே செலுத்தாமல் இருந்த மனநிலைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கிறது.

யாருக்கும் யாரையுமே தேவைப்படாத இந்த உலகத்தில் எதற்கு புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டும்? சுதந்திரத்தை இழந்து, எதற்கு பிறப்பை நாசமாக்கவேண்டும்?

சொந்த உடன்பிறப்பால் அளிக்கமுடியாத அன்பையும் பாசத்தையும் மனைவியிடமிருந்து எதிர்பார்ப்பது தவறல்லவா?

தவறுகளைத் திருத்திக்கொண்டு வாழ்வது தானே மிகவும் முக்கியமான விஷயம்?

பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில், பிணைப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

இளமையின் துடிப்பையும் உற்சாகத்தையும் கையில் பொக்கிஷமாக வைத்திருக்கக்கூடிய நாம் எதற்கு மற்றவர்களுக்கு பயப்படவேண்டும்? யாருக்கும் பணியாமல் தலையை உயர்த்திக் கொண்டு இந்த பூமியில் நடக்கவேண்டும். இங்கு வாழவேண்டும்.

ஒரு மனிதரின் வாழ்க்கை... அதை வாழ்வதற்கான வழி இருக்கிறது.

இறுதியில் விதிக்கப்பட்டிருப்பது ஆறடி மண்தான்.

எப்படிப்பட்ட பெரிய ஆளாக இருந்தாலும், கொம்பு முளைத்த ஆளாக இருந்தாலும்...

வாழ்க்கை முடிவது என்னவோ ஆறடி மண்ணில்தான்.

ஆறடி மண்ணுக்குள் போய்ச் சேர்ந்தவர்களின் ஒரு பட்டியலை அவர் தயார் பண்ணி வைத்திருந்தார். அதில் புகழ் பெற்றவர்களும், யாரென்று தெரியாதவர்களும் இருந்தார்கள்.

குசேலர்களும் குபேரர்களும் இருந்தார்கள்.

அந்த கூட்டத்தில் அப்பாவும் அம்மாவும் மாமாவும் இருந்தார்கள். அவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன.

அவர்களுடைய கொடைகள் ஏராளம்...

போகும்போது அவர்கள் எதையும் கொண்டு போகவில்லை.

இறுதியாக மூடி போர்த்தப்பட்ட பிண துணியைத்தவிர, அவர்களின் சரீரத்தில் வேறு எதுவுமே இல்லை.

முதலில் இறந்தவர் மூத்த மாமாதான். அவர் கூலி வேலை செய்துதான் அப்போதைய குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றினார்.

அவர் திருமணம் செய்துகொள்ளாமலே காலத்தைக் கழித்தார். வாந்தியும் வயிற்றுப் போக்கும் வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து திடீரென மரணத்தைத் தழுவினார். காலரா பாதித்ததால், இறந்துவிட்டார் என்று ஊரில் உள்ளவர்கள் கூறி, பரவச் செய்தார்கள்.

அப்போது அவருக்கு பதினெட்டு வயது. பிணத்தை அடக்கம் செய்வதற்கு ஊரில் இருப்பவர்கள் உதவவில்லை.

இறுதியில் வீட்டில் வேலை செய்பவர்களும் அவரும் தந்தையும் சேர்ந்துதான் பிணத்தை அடக்கம் செய்தார்கள்.

பிணத்தை எரிய வைக்கவேண்டும். வசிக்கும் இடத்தில் வெட்டுவதற்கு மாமரம் இல்லை. விறகு வாங்கி எரிக்கும் அளவிற்கு பொருளாதாரநிலை இல்லை. வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கூட்டத்தில் உள்ள அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேறு வழியே இல்லாத சூழலில் பிணத்தைக் குழியைத் தோண்டி புதைத்தார்கள்.

காலராவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மனிதரை எரிக்கக் கூடாது என்ற ஊரின் கட்டுப் பாடும் இருந்தது. ஊரின் கட்டுப்பாட்டை மீறியிருக்கலாம்...

பணம் இருந்திருந்தால்.

மாமாவின் மரணமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களும் அவரை ஒரு கோபக் காரராக மாற்றின. எழுபது வயதைத் தாண்டிய மாமாவை சாதாரணமாக குழியைத் தோண்டி புதைக்க வேண்டிய அவலநிலை உண்டானதைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இதயம் மிகவும் வேகமாக துடிக்கும். எரிக்கப்பட வேண்டிய இறந்த உடலைக் குழிக்குள் புதைத்து மூடவேண்டிய சூழ்நிலைகள்..‌

உறவினர்கள் என்று கூறப்படுபவர்களும் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களும் கழன்று கொண்டார்கள்.

இப்படிப்பட்ட சூழல்களுக்கு மாற்றங்கள் உண்டாக வேண்டும். தந்தை மலேஷியாவிற்குச் சென்றார். அம்மாவும் தங்கையும் பிள்ளைகளும் தனிமையில் இருக்கும் நிலை உண்டானது.

குடும்பத்தின் சுமை இளம்வயதிலேயே தோளில் வந்து விழுந்தது. பல வருடங்களின் காத்திருப்பிற்குப் பிறகு, அப்பா திரும்பி வந்தார்... நிறைந்த சம்பாத்தியத்துடன்.

பல இடங்களிலும் நிலத்தை வாங்கிச் சேர்த்தார். அப்பாவின் காலத்திற்குப் பிறகு, எஞ்சியிருந்த சொத்தைத்தான் பாகமாகப் பிரித்தது. அம்மா மரணமடையும் வரை தங்கையும் பிள்ளைகளும் பாரம்பரிய வீட்டிலேயே இருந்தார்கள். இறந்து ஒரு வருடம் ஆனவுடன் பாகத்தைப் பிரிக்கவேண்டும் என்ற விஷயத்தை ஞாபகப்படுத்தினாள்.

அவ்வப்போது உண்டான வற்புறுத்தலுக்குக் கீழ்ப்படிந்து தங்கைக்கும் பிள்ளைகளுக்கும் உரிமைப்பட்டதைப் பிரித்துக்கொடுத்தார். பிறந்த வீடும் நிலமும் அந்நியரிடம் போய் சேர்ந்துவிடக்கூடாது என்று கருதி விலையைக் கொடுத்துவிட்டு, தானே வைத்துக்கொண்டார்.

அப்பாவையும் அம்மாவையும் மாமாவையும் அடக்கம் செய்த இடத்தில் அவர் வழக்கமாக மாலை நேரங்களில் விளக்கேற்றி வைப்பார். வருடக்கணக்கில் அந்த வழக்கமான செயலைத்தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார்.

எதுவுமே செய்ய முடியாத சூழலில், சடங்குகளையும் வழக்கமாக செய்யும் செயல் களையும் நிறுத்திவிட்டார்.

அப்பா உயிருடன் இருந்தபோது, கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாது. நிறைய உறவினர் கள் வீட்டிற்கு வந்து விருந்துண்டார்கள்.

பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையே நட்பு உண்டானது.

பலருக்கும் பொருளாதாரரீதியாக உதவினார்.

வரவு என்ன என்பது தெரியாமலே அப்பா ஏராளமான பணத்தைச் செலவிட்டார். வீண் செலவுகள் செய்யவில்லை.

மற்றவர்களின் பரிதாப கதைகளையும் கஷ்டங்களையும் கேட்க நேரும்போது, மனதில் நெகிழ்ச்சி உண்டாக அமர்ந்திருப்பார். அது ஒரு பலவீன குணமாக வளர்ந்தது. பலரும் ஆதாயம் அடைந்தார்கள். சிலர் குளத்திற்குள் இறக்கிவிட்டார்கள்.

முதுகெலும்பு நொறுங்கி எழுந்திருக்க இயலாமல் படுத்திருந்தபோது, கவனித்துப் பார்த்துக் கொள்வதற்கு யாருமே இல்லை.... மனைவியையும் மகளையும் தவிர. மகன் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். குடும்பத்தின் சுமையையும் செலவுகளையும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை உண்டாக, கடன் வாங்குவதற்காக ஓடித்திரிந்தார். வாங்கிய கடனைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு வழியில்லை.

குடும்பத்திற்குப் பெரியவர் என்ற பொறுப்பை தன்மீது அவரே விரும்பி சுமத்திக்கொண்டார். எங்காவது போய் ஒளிந்து கொள்ளவேண்டுமென நினைத்தார்.

சொத்தும் பணமும் வேண்டாம். மனதில் நிம்மதி கிடைத்தால் போதும்.

பாரம்பரிய பெருமையை நிலைநிறுத்து வதற்காக சிரமப்பட்டதற்கு ஒரு கணக்கே இல்லை.

இப்போது ஆதரவு என்று கூறுவதற்கு யாருமே இல்லாமல் நோய் வாய்ப்பட்டு படுத்திருக்கிறார்.

இருப்பதைப் பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லை. உழைப்பதற்கான தெம்பு இல்லாமல் போயிருக்கிறது. ஞாபக சக்திக்கு அவ்வப்போது குறை உண்டானது.

நடக்கும்போது முதுகின் மத்தியில் வேதனை... இறுதிக்காலத்தில் அப்பாவைப் பிடித்த நோய் தன்னையும் வந்து பிடித்துக்கொண்டதோ? இடையே அவ்வப்போது தலைசுற்றல்... களைப்பு..

நினைவாற்றலுக்கு பிரச்சினை...

கைகளும் கால்களும் வலிக்கின்றன.

மூட்டுகளில் வேதனை... மரத்துப்போன நிலையால் செயல்படும் தன்மை இல்லாமல் போய் விட்ட சரீரம்....

இப்படிப்பட்ட நிலையில் இனி வேறு வழிகளுக்கான வாய்ப்புகளே இல்லை. உள்ளவை அனைத்தையும் பொறுக்கி விற்று எங்காவது சேமித்து வைக்கவேண்டும். நல்ல காலத்தில் பெண்ணைக் கட்டியிருக்கவேண்டும். தன்னை கவனித்துப் பார்த்துக்கொள்வதற்கு ஒரு இணையைப் பார்த்திருக்க வேண்டும்.

பெண்ணைக்கட்டாதவன் இறுதியில் பெண்கள் பின்னால் அலையக் கூடியவனாக ஆகிவிடுவான் என்று கூறியவர்களைக் கிண்டலாக நினைத்தார். வயதாகிவிட்டது. மிகுந்த முயற்சி செய்யாமல் எழக்கூட முடியவில்லை.

______________

மொழிபெயர்ப்பாளரின் உரை

வணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 சிறந்த சிறுகதைகளை மூன்று மொழிகளிலிருந்து நான் மொழிபெயர்த்திருக்கிறேன் "முதுமை' என்ற கதையை எழுதியவர்... கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், நட்சத்திர மலையாள எழுத்தாளருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.

வயதான ஒரு மனிதரை மையமாக வைத்து எழுதப்பட்ட கண்ணீர்க் கதை. இறுதி வரை திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அந்த பெரியவரின் மீது நம் அனைவருக்கும் அளவற்ற பரிதாப உணர்ச்சியும் இரக்கமும் கட்டாயம் உண்டாகும். இது ஒரு உண்மைக் கதை. தன் உறவினர் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவில் வைத்து, கதையாக எழுதியிருக்கிறார் உண்ணிகிருஷ்ணன் புதூர். இந்தக் கதையை வாசிக்கும்போது, நம்மில் பலரை இதில் வரும் கதாபாத்திரத்தில் நாம் பார்க்கலாம். இப்படிப்பட்ட எத்தனை மனிதர்களை நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் நித்தமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

"பச்சோந்தி' என்ற கதையை எழுதியவர்... ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான சிற்பிகளில் ஒருவரான ஆன்டன் செக்காவ்.

இரு காவல்துறை அதிகாரிகளையும், ஒரு நாய்க்குட்டியையும், நாயால் கடிக்கப்பட்ட மனிதனையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றவுடன், காவல்துறையில் அதிகாரியாக இருப்பவர்கூட எப்படி பச்சோந்தியாக மாறுகிறார் என்பதே கதை. நம் நாட்டில் இதுதான் எப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. ரஷ்யாவிலும் இப்படிப்பட்ட அவல நிலைதான் இருந்ததா? உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். உலகின் போக்கே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

"தாக்கூரின் கிணறு' என்ற கதையை எழுதியவர்... இந்திய இலக்கியத்தின் மாபெரும் அரசர்களில் ஒருவரான பிரேம்சந்த்.

இது ஒரு இந்தி மொழிக் கதை. 1932-ஆம் வருடத்தில் இந்த கதையை எழுதியிருக்கிறார் பிரேம்சந்த். "தாக்கூர் கா குவான்' என்ற இக்கதை "ஜக்ரான்' என்ற பத்திரிகையில் வெளிவந்து, பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. வட இந்தியாவின் ஒரு கிராமத்தில் குடிநீருக்காக எப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையில் ஏழை மக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்த கதையின் மூலம் நம்மால் உணர முடிகிறது. இதில் வரும் கங்கி என்ற பெண்ணை நம்மால் மறக்கமுடியுமா?

கதையின் இறுதிப் பகுதி நம் கண்களைக் கசிய வைக்கும். இந்த கதைகள், இவற்றை வாசிக்கும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களைத் தரும் என்பது நிச்சயம்.

என் மொழிபெயர்ப்பு படைப்புகளை "இனிய உதயம்' மூலம் வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

.