மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி, மீன்குகைவாசிகள், ஜின்னா வின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன், சாமானியரைப் பற்றிய குறிப்புகள், ஞாயிறு கடை உண்டு, இத்தா ஆகிய நாவல்களை எழுதிய கீரனூர் ஜாகிர்ராஜா வின் நாவல்களில் ஒன்று வடக்கேமுறி அலிமா. ஒருசில நாவல்களில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை சொல்லிக் கொண்டே போவார்கள், எங்கேயோ ஒரு இடத்தில்தான் மைய கதாபாத்திரமே அறிமுகம் ஆகும். அதன்பின்னர் அவரை மையமிட்டு நாம் கதையைப் புரிந்துகொள்ள மெனக் கிட வேண்டியிருக்கும். அப்படியான எந்த சிக்கலுமில்லாமல் இந்த நாவலின் முதல் வரியின் முதல் வார்த்தையிலேயே அலிமா நமக்கு அறிமுகம் ஆகிறார். அடுத்தடுத்த பக்கங்களின் வாசிப்பில் அலிமாதான் மையக் கதாபாத்திரம், அவரைச் சுற்றித்தான் இந்த நாவல் இயங்குகிறது என்று புரிந்து விடுகிறது.

கதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற அடிப்படைகளை ஒரு எடுப்பும் அதற்கென்று ஒரு தொடுப்பும் பிறகு முடிப்பும் இருக்கவேண்டும் என்று சொல்லியதைக் கேட்டதுண்டு. அதாவது, அறிமுகமும் கதையின் மையச்சிக்கலும் பிறகு தீர்வும் சொல்லப்படுகி றதா? அல்லது தீர்வு வாசகரின் கைகளில் விடப் படுகிறதா என்று முடிப்பதுண்டு. இவ்வாறான கதைகளே வாசிப்பின் சுவாரசியத்திற்குள் இட்டுச் செல்லும். இல்லையென்றால் வாசிப் பில் ஒரு தொய்வு மனநிலையை உருவாக்கும். இப்படியான எந்தவிதமான தியரிக்குள்ளும் பொருந்திப் போகாமல் வேறொருவிதமாக இருக்கிறது இந்த ரநாவல்.

dass

அலிமாவின் பிறப்பிலிருந்து அவளது குணாதிசயம், இளமைப்பருவம், அவளின் வாழ்வு பயணப்படும்விதம், அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, அவமானம், கழிவிரக்கம், போதை, காதல், மனப்பிறழ்வு, விருப்ப உடல் உறவு, வண்புணர்ச்சி, எழுத்தாளராக, நடிகையாக, தான்தோன்றித்தனமாக ஊர்சுற்றித் திரிகிறவளாக பல்வேறு பரிமாணங்களில் நமக்கு அலிமாவின் வாழ்க்கையைச் சொல்கிறார் நாவலாசிரியர்.

வாசிப்பாளன் ஆதங்கப்பட லாம், வருத்தப்படலாம், தன்னுடைய வாழ்வில் எங்கேயோ கேள்விப்பட்ட, பழக்கப்பட்ட யாரோ ஒருவரை அலிமாவோடு ஒப்பிட்டுப் பார்த்து பொருந்திப்போகாமால்கூட இருக்கலாம். அப்போதுதான் இந்த நாவலின் மிகை புனைவின் அர்த்தம் நமக்கு விளங்கக்கூடும். அதற்கும் நாவலாசிரியர் நமக்கு ஆரம்பத்திலேயே ஒரு விளக்கம் சொல்கிறார், “ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள், இந்த சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்” என்கிறார். கேள்வி எழுப்புகிறவர்கள் தாராளமாக எழுப்பலாம்.

Advertisment

பால்யகாலந் தொட்டு சீண்டல்களையும், பிறகான காலத்தில் வண்புணர்ச்சியையும் அனுமதியின்றி தீண்டப்பட்டு காட்சிப் பொருளாகவே பார்க்கப்படுகிற அலிமாவின் வாழ்க்கையின் ஒரு நாள்கூட அவளுக்கு விரும்பியபடி அமைந்ததே இல்லை. அவளாகவே மனதார ஆசைப்படுகிறவனிடமிருந்துகூட துரோகத்தையே பரிசாகப் பெருகிற துரதிர்ஷ்டசாலியாகவே இருக்கிறாள்.

ஆசிரியர் சமூக அவலங்களை அலிமா மட்டுமே தாங்குகிற தன்மையோடு நாவலை நகர்த்தியபோது திடீரென எள்ளி நகையாடுகிற போக்கை ஒரு பேட்டியின் ஊடே காணமுடிகிறது. விலங்கின் பெயரைக் கொண்ட இதழுக்கு எடுக்கிற பேட்டியில் இங்கிருக்கிற இலக்கிய எழுத்துகளும், எழுத்தாளர்களும் அவர்களிடையே நடக்கிற கோஷ்டி மோதல்கள், விருதுகள், பாராட்டு விழாக்கள் என எல்லாவற்றையும் கிண்டலடிக்கும்விதமாகவே கற்பனையான உரையாடலை உருவாக்கி சுவாரசியத்தை உண்டுபண்ணுகிறார். நமக்குத் தெரிந்த எழுத்தாளர்களையும், சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றாமல் தப்பித்துக்கொள்ள இயலாது.

உலகப்புகழ் பெற்ற நாவலான ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை அதன் ஆசிரியர் கூகி வா தியாங்கோ சிறை யிலுள்ள கழிவறையில் உட்கார்ந்து துடைக்கும் தாளில் எழுதி அதை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வந்து தொகுத்து பிரசுரம் செய்ததாக வாசித்ததுண்டு. இந்த நாவலுக்குள்ளேயும் ஒரு நாவல் எழுதப்படுகிறது. அதீத பக்கங்களைக் கொண்ட புனைவினை முழுக்க முழுக்க ஒவ்வொரு கழிவறைச் சுவரில் எழுதியதாகவும் அதனைத் தொகுத்து புத்தகமாக்கியதாகவும் நாவலுக்குள் சொல்லப்படுகிறது.

Advertisment

நாவல்கள் பெரும்பாலும் தன் சுயத்தினை கேள்வி யெழுப்புவதாகவும், அல்லது தன்னைப் பற்றிய பார்வையை தன் வரலாற்றை மிகையாக புனைவுபடுத்தி கற்பனை குதிரையை ஓடவிட்டு எழுதியதாக பல உண்டு. யதார்த்த வாழ்வில் தன்னால் சாத்தியப்படுத்தி பார்க்கமுடியாத ஒன்றை, கற்பனை கதாபாத்திரத் திற்கு கொடுத்து எழுத்தில் சாத்தியப்படுத்தி பார்க்கிற தன்மையைத் தான் பல எழுத்தாளர்கள் செய்கிறார்கள். இலக்கிய ஆளுமைகள், அவர்களின் எழுத்துக்களின் மீது இருக்கிற நாவலாசிரியரின் விமர்சனத் தன்மையை வெளிப்படையாக இந்த நாவல் காட்டுகிறது. என்னால உன்னை பகிரங்கமாக விமர்சிக்கவோ திட்டவோ முடியவில்லை. என்னுடைய எழுத்தின் வழியாக என்னுடைய ஆற்றாமையை நிறைவேற்றிக்கொள்கிறேன் என்றாக பார்க்கவேண்டியுள்ளது.

திரையில் காண்கின்ற சினிமாவிற்குள் இருக்கிற தணிக்கைபோல எழுத்திற்கு இல்லாமல் இருப்பதால்தான், எந்த தடையுமின்றி விரசமான வர்ணனைகளை எழுதிவிட முடிகிறது. சிலசமயம் அது சிக்கலாகவும் முடிந்துவிடுகிறது. கதையின் தன்மைக்கு ஏற்ப அதனை புரிந்துகொள்ளாமல் வெறும் கிளுகிளுப்பு மனநிலையை உருவாக்கி விடக்கூடாது என்பதில் நாவலாசிரியர் கவனமாகக் கையாண்டதால், அலிமாவின் மீது அழுத்தப்படுகிற மற்றும் கட்டவிழ்த்து விடப்படுகிற உடல் மீதான வன்முறைகள் வாசிப்பாளனுக்கு கிளர்ச்சியூட்டுவதாக அமைந்துவிடாமல், அவளின் வலியினை வேதனையினை அப்படியே கடத்துவதாக உள்ளது.

dass

முதல் முறை காமம் கண்டபோதான அலிமாவின் மனவோட்டத்தின் வெளிப்பாட்டி னைத் தெளிவாக உணர்த்துகிற நாவலாசிரியர், ஏன் ஒருமுறை கூட தனக்கு ஏற்படுகிற, தன்னுடைய அனுமதியின்றி உடலில் நடக்கிற வன்முறைக்கு அவள் எதிர்ப்பேதும் காட்டாமல் இருந்திருக்கி றாள் என்ற கேள்வி வாசகனுக்குள் எழுகிறது. இது ஆணாதிக்க மனோபாவமாகக்கூட இருக்கலாம்.

குறைந்தபட்சமேனும் பெண்ணியப் பார்வை யிருந்திருந்தால் அவள் ஒருமுறையாவது தன்னை அனுமதியின்றி நெருங்குகிறவனை எட்டி உதைத்தாள் என்ற ஒரு வார்த்தையினையாவது நாவலில் வாசித்திருக்க முடியும்.

தமிழகத்தில் டீக்கடை வைத்திருக்கிற ஒரு மலையாளிக்கு இலக்கிய பரிட்சயம் உண்டு என்பதையும், ஆனால் தமிழர்களில் பெரும்பாலானோருக்கு இலக்கியம்னா என்னவென்று கேட்கும் நிலையில் இருப்பதாக போகிற போக்கில் விமர்சனத்தை இடைச்செருகலாக வைத்திருக்கிறார். சில இடங்களில் முற்றுப் பெறாத வாக்கியங்களை வாசகனின் கையில் நிரப்பிக்கொள்ள கொடுத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கு விட்டுள்ளார் நாவலாசிரியர்.

வட்டார வழக்கு சார்ந்த புதினங்களில், கதாபாத்திரங்கள் பேசுகிற வார்த்தையின் அர்த்தத்தை வெகுஜன மக்களுக்கு புரியாமல் போய்விடுமே என்று அர்த்தம் தனியாக விளக்கப்படும். அப்படியாக இந்த நாவலில் மலையாளம், தமிழ் கலந்து அதிகம் பேசப்படுகிற வார்த்தைகளுக்கு சிலசமயம் அர்த்தம் புரிந்துகொள்ள இயலவில்லை. வாசகரின் மீது நம்பிக்கைவைத்து விட்டுவிட்டாரோ….

இப்படியான விமர்சனங்களையெல்லாம் இன்னும் சில கேள்விகளெல்லாம் 140 பக்க நாவலில் 70 பக்கம் வரும் வரை வாசகனின் மனங்களில் தோன்றுகிறவையாக இருக்கும். நாவலாசிரியர் அதை அதிபுத்திசாலித்தனமாக நாவலின் உள்ளேயே வாசகனும் எழுத்தாளரும் பேசுவதாக வைத்து தோன்றுகிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார். இது புதுவகையாக வாசகனைக் கையாண்ட விதமாகவும், சிறப்பாகவும் வியக்கும் வண்ணமும் இருந்தது.

இது புனைவு என்பதையும் தாண்டி மலையாள தேசத்திலிருந்து தமிழுக்கு வந்த பல நடிகைகளை அலிமாவோடு பொறுத்திப் பார்க்க வாசக மனம் தீவிரத் தேடலை அடைந்தாலும் தோல்வியாகவே முடிகிறது. ஏனெனில் தமிழுக்கு கடவுளின் தேசத்திலிருந்து வந்த நடிகைகளோ கொஞ்சம்நஞ்சமல்லவே.

மத அடிப்படைவாதங்கள் மனிதனுக்குத் திணிக்கப்படுகிறதே தவிர அது காப்பதற்காக வராது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இசுலாமிய பெண்ணான அலிமாவிற்கு நடக்கின்ற எதற்குமே மதம் பொறுப்பேற்கவுமில்லை. அதை பின்பற்றுகிறவர்களும் அதை சரிசெய்ய முனைய வுமில்லை. அப்படியாக அடிப்படைவாதங்களை அடித்து நொறுக்குகிற, மதக் கட்டமைப்பை கேள்வி கேட்பதாகவும் பொருளாதார ரீதியில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையாகவும் அமைகிறது வடக்கேமுறி அலிமா. எழுத்தென்பது எழுதியவரின் கண்ணோட் டத்தில் அப்படியே வாசகனுக்கு போய்ச் சேருவதில்லைதானே? வாசகன் வாசிப்பின் பரந்து பட்ட பார்வை, அனுபவ அறிவினை மையப்படுத்தித் தான் புரிந்துகொள்ளப்படும். அப்படியாகத் தான் என் வாசிப்பு அனுபவமும் கீரனூர் ஜாகிர்ராஜா வின் வடக்கேமுறி அலிமாவைப் பற்றிய எழுத்தாக அமைந்திருக்கிறது