சாயங்கால வேளை... திருவனந்தபுரத்திற்குச் செல்லும் வண்டி புறப்படுவதற்குத் தயாராகி நின்றுகொண்டிருந்தது. நடைபாதையின் கூட்டத்திற்கு மத்தியில் எங்களுடைய கம்பார்ட்மென்டை நோக்கி சிரமப்பட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, ஆகாயத்திலிருந்து சிதறி விழுந்ததைப்போல அந்த இளைஞன் எனக்கு முன்னால் தோன்றினான். அவன் என்னை வழிமறித்து நின்றுகொண்டிருந்தான். தொடர்ந்து என் கையை பலமாகப் பிடித்தவாறு அவன் கேட்டான்:
"என்னைத் தெரியலையா?''
அப்போது அங்கு எங்கும் மதுவின் கடுமையான வாசனை பரவியது. இளைஞனின் கால்கள் தடுமாறிக்கொண்டிருந்தன.
நான் என்னுடைய வெறுப்பை முடிந்த அளவிற்குக் கட்டுப்படுத்திக்கொண்டு கூறினேன்:
"இல்லையே!''
உண்மையிலேயே அப்படிப்பட்ட ஒரு ஆளை நான் அதற்கு முன்பு ஒருமுறைகூட பார்த்ததில்லை.
இளைஞன் கூறினான்:
"சார்... நான் உங்களின் மிகப்பெரிய ஒரு ரசிகன். எல்லா நூல்களையும் வாசித்திருக்கிறேன். பார்க்கணும், அறிமுகமாக ணும்னு நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்...''
நான் வெறுப்புடன் கூறினேன்:
"நீங்கள் குடிச்சிருக்கீங்க...''
இளைஞனின் பார்வை திடீரென கடுமையானது. அவன் கூறினான்:
"ஆமாம்... குடிச்சிருக்கேன். அதனால என்ன...? நான் எப்போதும் குடிப்பதுண்டு. அது இந்த அளவிற்கு மோசமானதா?''
தொடர்ந்து ஏதோ சிந்தித்ததைப்போல அவன் இதையும் சேர்த்துக் கூறினான்:
"நான் குடிச்சிட்டுத்தான் எழுதவே செய்றேன்.''
நான் அவனின் கையை விடுவித்துக்கொண்டு கூறினேன்:
"பாருங்க... நான் இந்த வண்டியில போகணும்...''
அவ்வாறு கூறிவிட்டுப் போக ஆரம்பித்தபோது, அவன் மீண்டும் வழியைத் தடுத்தான். பிறகு... அவனுக்குப் பின்னால் பயத்துடன் நின்றுகொண்டிருந்த...
நான்கோ ஐந்தோ வயது மட்டுமே இருக்கக்கூடிய... மிகவும் வெளிறி, மெலிந்துபோய் காணப்பட்ட ஒரு சிறுவனைச் சுட்டிக் காட்டியவாறு கூறினான்:
"இது... என் மகன். கணபதி... நீங்கள் அவனை ஆசீர்வதிக்கணும்.''
பொருட்கள் நிறைந்த ஒரு கோணியைத் தரையில் பலமாக இழுத்துச் செல்வதைப்போல அந்தச் சிறுவனைப் பிடித்து இழுத்து, அவன் எனக்கு முன்னால் நிறுத்தினான்.
சிறுவனின் பயம் நிறைந்த முகத்தைப் பார்த்ததும் நான் ஒரு மாதிரி ஆகி விட்டேன். தெய்வமே... இது என்ன ஒரு...
நான் கூறினேன்:
"பாருங்க.. இவனை ஆசீர்வதிக்க வேண்டியது நானல்ல... நீங்கள்தான்.''
தொடர்ந்து... அங்கு மோசமான வார்த்தைகளின் பெருமழையாகி விட்டது:
"ஒரு கதாசிரியர்! நான் கேட்கவே வேண்டாம். தெரு நாயே! வாழ்க்கையில் நீ இதுவரை நல்ல ஒரு கதையை எழுதியிருக்கியா? நீ பத்திரிகைக்காரங்க பின்னாடி நடந்து...''
நான் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டேன். என் காலுக்குக் கீழேயிருந்து பூமி பிளந்துவிட்டது. அப்போது நண்பர் கூறினார்:
"வாங்க... வண்டி இப்போ கிளம்பிடும்.''
என் வார்த்தைகளுக்குக் காத்திருக்காமல் என்னைப் பிடித்துக் கொண்டு அவர் கம்பார்ட்மென்டை நோக்கி ஓடினார். கம்பார்ட்மென் டின் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெர்த்தில்... நீண்ட நேரம் பல வற்றையும் சிந்தித்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தேன். இறுதியில் நண்பர் கேட்டார்:
"அந்த ஆளைத் தெரியுமா?''
நான் "இல்லை' என தலையை ஆட்டினேன். தொடர்ந்து ஒரு இரண்டாவது சிந்தனையில் கூறினேன்:
"வேணும்னா... யூகிக்க முடியும்.''
நண்பர் ஆர்வத்துடன் கேட்டார்:
"யார...?''
நான் கூறினேன்:
"ஏதாவதொரு புதிய கதாசிரியராக இருக்கணும்.''
நண்பருக்கு இலக்கியமோ புத்தக வாசிப்போ... எதுவுமே தெரியாது. அதனால், ஆச்சரியத்துடன் அவர் கூறினார்:
"கதாசிரியரா.? கதாசிரியர்கள் இப்படி.?''
நான் என்னிடம் கூறிக்கொள்வதைப்போல அப்போது கூறினேன்:
"கதாசிரியர் என்று உறுதியான குரலில் கூறமுடியாது.
ஒருவேளை... புதிய ஒரு விமர்சகனாகவும் இருக்கலாம். அதற்கும் ஒரு சாத்தியம் இருக்கிறது.''
இப்படி கூறும்போது நான் புன்சிரிக்க முயற்சித்தேன்.
ஆனால், அது மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு முயற்சியாக இருந்தது.
நண்பர் அதை கவனிக்காமல், தன்னிடம் கூறிக்கொள்வதைப் போல கூறிக்கொண்டேயிருந்தார்:
"அந்தச் சிறுவன்! அந்தச் சிறுவன்! அவனைப் பற்றிதான் நான் சிந்திக்கிறேன்...''