எனக்கு முன்பு எப்போதும் இப்படி பயம் உண்டானதே இல்லை.இப்போது எனக்குத் தோன்றுகிறது...
அவன் என்னைக் கொல்வான் என்று. நான் அவன்மீது அன்பு வைத்திருக்கிறேன். அவனுடைய வசதிகளைப் பற்றி விசாரிக்கிறேன். நல்ல சம்பளத்தைத் தருகிறேன்.
இப்போதும் அவன் முன்பைப் போலவே சிரிக்கிறான். நான் கூறியபடி நடக்கிறான். என்னிடம் மரியாதையுடன் நடந்து கொள்கி றான்.
வெளியே எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு மாற்றமும் இல்லை. ஆனால், நான் புரிந்து கொண்டு விட்டேன்- அவன் என்னைக் கொல்வான். என்னைக் கொல்வது என்பது எளிதானது.
நான் இங்கு தனியாகத்தானே இருக்கிறேன்!
இந்த மண் நகரத்தின் ஒரு பகுதிதான். எனினும், இது நகரமல்ல.இந்த அளவிற்கு ஒதுங்கிக் கிடக்கும் ஒரு இடம் வேறு எங்குமே இருப்பதற்கு வாய்ப்பில்லை.
கிட்டத்தட்ட நாற்பது சென்ட் பரப்பளவு இருக்கும். காடென வளர்ந்து கிடக்கும் இந்தச் சிறிய நிலப் பகுதி... அதன் மத்தியில் என் வீடு... முன்பு அது தலையை உயர்த்தி நின்றிருந்தது. இப்போது அதன் தோள்கள் சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன.
பக்கத்து வீட்டுக்காரன் என்று கூறுவதற்கு ஒரு ஆள் மட்டும்... நிறைய வேலைகளைக் கொண்ட கம்பெனி எக்ஸிக்யூட்டிவ். எப்போதும் அவன் பயணத்தில்தான்...
அவன் இங்கு இருந்தால்கூட, என்னுடன் பெரிய அளவில் உறவு வைத்துக் கொள்வதில்லை. இடையே இருக்கக்கூடிய செம்பருத்திச் செடிகளுக்கு மத்தியில் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க நேர்ந்தால், அவன் சற்று பற்களால் இளிப்பான். கையை வீசி காட்டுவான். நானும் பற்களைக் கொண்டு இளிப்பேன்.
அவ்வளவுதான்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் இங்கு வாழ ஆரம்பித்தபோது, நான் நல்ல உடல் நிலையுடன் இருந்தேன்.
பார்ப்பவை அனைத்துமே அழகாக இருப்பதைப் போல தோன்றும். நான் நடந்து கொண்டே கூறுவேன்... "நண்பர்களே! இந்த நகரத்தில் ஒரு சிறிய சொர்க்கம் இருக்கிறது என்றால், அது இதுதான். இதுதான்... இந்த துண்டு நிலப் பகுதிதான். அப்போதும் இப்போதும் இந்த நிலத்தில் கருங்குயிலும் புள்ளிகள் போட்ட பறவைகளும் வருகின்றன.
பின்னாலிருக்கும் ஆற்றின் ஓரத்திலிருக்கும் புதர்களிலிருந்து தலையைத் தொங்கப் போட்டவாறு குள கோழிகள் மெதுவாக... மெதுவாக வருகின்றன.
வண்ணாத்திக் கிளியும் வாலாட்டிக் கிளியும் காகங்களும் மீன்கொத்தியும் வருகின்றன. பிறகு... கறுத்த கிரீடத்தையும் கண்களைச் சுற்றிலும் குங்கும நிறத்தையும் வெளுத்த வயிற்றையும் கொண்டிருக்கும் பெயர் தெரியாத பறவை... பிறகும் இருக்கின்றன.பல வகைகளில் உள்ள கிளிகள்... நீளமான மூக்கைக் கொண்ட அவை தேனீக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, பூக்களிலிருந்து தேனைக் குடிக்கும்.
பூக்களுக்குள் நீளமான நாசியை நுழைத்து, சிறகை அடித்தவாறு சிறிது நேரம் அசைவின்றி வெட்டவெளியில் தங்கி இருக்கும்போது, இந்த நீளமான நாசியைக் கொண்ட கிளிகள் ஹெலிகாப்டர்கள் போல காட்சியளிக்கும்.
இவற்றிற்கெல்லாம் தேவைப்படும் அளவிற்கு சாப்பிடுவதற்கு புதர்கள் மண்டிக் கிடக்கும் இந்த நிலப் பகுதியில் உணவுகள் இருக்கின்றன.
பூசணிக்காய், கொய்யா, அலங்கார பனைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் பாக்கு குலைகள், உரிய காலத்தில் வரக்கூடிய மாம்பழம், பலா, எப்போதும் இருக்கக்கூடிய செத்தி பழங்கள்... இவை தவிர, தரையில்... புழுக்கள், சிவந்த வாலைக் கொண்ட சிறிய புழுக்கள்...
மீன்கொத்திக்கும் ஈர்க்குச்சியைப் போன்ற கால்களால் மெதுவாக நடக்கும் ஆயிரம் கால் பூச்சிக்கும் மிகவும் பிடித்த உணவு...
இவ்வாறு காலம் நகர்ந்து கொண்டிருக்க, இந்த சிறிய சொர்க்கத்தில் நான் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், எனக்கு அப்பத்தையும் மதுவையும் தந்து கொண்டிருந்த அரசாங்க பதவியை நான் தாங்கிக் கொண்டு நடந்து திரிந்தபோது... எல்லாவற்றிற்கும் என்ன ஒரு பிரகாசம் இருந்தது!
அதிர்ஷ்டத்தின், பாதுகாப்பின் சக்கரங்கள் திரும்பி, எங்கு சேற்றிற்குள் புதைந்தன?
எதனால்?
என் அனைத்துமான மனைவி இறந்தாள்.
எவ்வளவு நாட்கள் அழ முடியும்?
தெய்வம் எனக்குத் தந்த வெகுமதிகளை நான் நினைத்துப் பார்த்தேன்.
ஆங்கிலத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்துக் கூறுவதாக இருந்தால், எனக்குக் கிடைத்த கொடுப்பினைகளை நினைத்துப் பார்த்தேன்.
மகனும் மகளும் ஒரு இடத்தை அடைந்து விட்டார்கள் அல்லவா?
இருவருக்கும் திருமணமாகி விட்டது அல்லவா?
மகனுக்கு பரவாயில்லாத வேலை... மகளின் கணவனுக்கும் பரவாயில்லாத பணி... நான் தாத்தா ஆகி விட்டேன்.
கவலைகளை மறப்பதற்கு ஒரேயொரு வழிதான்...
சந்தோஷத்தின் சாயல்களைப் பின்தொடர்வது...
மனமெனும் ஒட்டகத்திற்கு எங்கேயோ தாகத்தைத் தணிக்கும் தண்ணீர் இருக்கிறது.
வயது ஏறும்போது, மனதின் பலம் தூர்ந்து போகும் என்று நான் எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை.
ஐம்பத்தைந்து என்பது அவ்வளவு பெரிய வயதல்ல.
ஆனால், நான் ஒரு அரசாங்க பணியாளனாயிற்றே!
ஐம்பத்தைந்தை அடைந்தபோது, இங்கு தனியாக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருந்த நான் வாழையைப் போல விழுந்து விட்டேன்.
என்னை வெட்டி வீழ்த்தியது... என்னுடைய ரிட்டயர்மெண்ட்.
அதிர்ஷ்டம் முடிவிற்கு வந்துவிட்டது. பாதுகாப்பு முடிவிற்கு வந்து விட்டது.
முன்பு எனக்கு வாழ்க்கை என்பது பூகோள வகுப்பின் பூமி உருண்டையைப் போல இருந்தது. அசைவற்ற நிலை... தொட்டால், சுழலும். மீண்டும் நிற்கும். வாழ்க்கை உருண்டையாக இருந்தது. என்னை மிதிக்கக் கூடிய உயரதிகாரிகளும், என் மிதிகளுக்கு இடம் தரக்கூடிய கீழ்நிலையில் பணியாற்றக் கூடியவர்களும் இருந்தார்கள்.
அனைத்துமே எதிர்பார்த்ததுதான். உறுதியாக நடக்கக் கூடியது.
தீர்மானிக்கப்பட்ட பாதைகள். ரவுண்ட்... லைஃப் வாஸ் ரவுண்ட்.
பென்ஷன் வாங்கியபோது,(பூகோள அறிவியலின் மொழியையே பயன்படுத்தட்டுமா?) நான் 'மார்க்கட்டர்ஸ் பரொஜக்சன்' பிரகாரம் இருக்கக்கூடிய ஃப்ளாட் பொருளாகி விட்டேன்.
அப்போதும் நான் என்னுடைய ஆசீர்வாதங்களின் மணிகளை எண்ணிப் பார்த்தேன்.
மனைவி மரணமடைந்து விட்டாள். பிள்ளைகள் தூரத்தில்...எனினும், யாரையும் சாராமல் என்னால் வாழமுடியுமே!
ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் வரும்.
பென்ஷனின் ஒரு பகுதியை எடுத்து, பொதுவாக நல்ல ஒரு தொகையை வங்கியில் போட்டிருக்கிறேன்.
பிறகு... நடந்தது என்ன?
நடந்தது நடக்கவில்லை.
அதுதான் விஷயமே.
ஒரு எட்டு முன்னோக்கி வைக்க முடியவில்லை. பாதங்களில் அப்பத்தைப் போல நீர்... இடுப்பில் வலி... தொடை எலும்புகளில் பரவிக் கொண்டிருக்கும் வேதனை...
எலும்புகளின் உட்பகுதியில் காரம் அதிகமான மசாலா கூட்டு கலந்து விட்ட உணர்வு... காலின் பாதத்தில் பல்லாயிரம் ஊசிகள் ஒன்றாகச் சேர்ந்து குத்தும் உணர்வு...
பக்கத்து வீட்டுக்காரனான பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ் செம்பருத்திச் செடிகளைக் கடந்து வந்து என் நோய் பற்றிய தகவல்களை விசாரித்தான்.
என் பழைய அலுவலக ப்யூன் இடையே அவ்வப்போது வந்து சென்றான். ஒருமுறை அவன் ஒரு ஜோதிடரை அழைத்துக் கொண்டு வந்தான். ஜோதிடர் கூறினார் : "சனி தசை... சனி பாதத்தைப் பாதிக்கக் கூடியதாச்சே?"
எனக்கு கோபம் வந்தது.
நான் பாதத்தில் பாதிப்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆயிற்றே!
என்மீது அன்பு வைத்திருக்கும் அந்த ப்யூன் கூறினான்:
"சார்... நான் அவ்வப்போது வருகிறேன். உங்களின் பிள்ளைகள் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை அல்லவா? அதனால், ஒரு மகனைப் போல உங்கள்மீது அன்பு வைத்திருக்கக் கூடிய ஒரு பையனை நிரந்தரமாக இங்கு தங்க வைக்கவேண்டும்''.
"சீனியர் பிரஜைகள்' என்ற நல்ல பெயரில் அறியப்படும் ஆதரவற்ற கிழவர்களை... குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுத்தால்... ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கும் முதியோர் இல்லங்களைப் பற்றியும், "ஹெல்ப்பேஜ்' போன்ற நிறுவனங்களைப் பற்றியும் நான் எப்போதோ எங்கு வைத்தோ மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்தேன்.
வேண்டாம்... அது எதுவுமே நடக்காது. இந்த இடத்தில் பறவைகளையும் அழகான சூரிய உதயங்களையும் ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் அஸ்தமனத்தையும் கண்டு வாழ்ந்த எனக்கு ஒரு நிறுவனத்தின் செயல்முறைகள் தொந்தரவுகளாக இருக்கும் என்பதாக நினைத்தேன்.
பிள்ளைகளுடன் சேர்ந்து தங்கினால் என்ன? வேண்டாம்.
அவர்களுக்கு நான் சுமையாக இருப்பேன்.
அன்பு கொண்டிருந்த அந்த ப்யூன் கூறிய உண்மை என் மனதில் மிகப் பெரிய உண்மையாக வளர்ந்தது.
நான் குமாரனைப் பற்றி சிந்தித்தேன்.
அவனை என்னுடன் தங்க வைத்தால் என்ன?
அவனுக்கு இப்போது இருபத்தொரு வயது.
அவனுக்கு நான்தான் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கிக் கொடுத்தேன். என் கேட்டிற்கருகில் பந்தலிட்டு நின்றுகொண்டிருக்கும் "டக்கோமா' மரத்தின் மஞ்சள் வர்ண மலர்களை ஒரு திருட்டுத்தனமான காரியத்தைச் செய்வதைப் போல அவன் பறிக்கும்போதும்...
அதன் கிளைகளை ஒடிக்கும்போதும்...
அப்போதுதான் முதல் தடவையாக நான் அவனைப் பார்த்தேன். அப்போது அவனை நான் திட்டினேன்.
அன்று அவனுக்கு பன்னிரண்டு வயது.
பிறகு.... இடையே அவ்வப்போது அவன் வந்துபோக ஆரம்பித்தான். நான் அவன்மீது அன்பு வைத்திருந்தேன். படிக்கத் தூண்டினேன்.
பள்ளிக்கூட இறுதி வகுப்பு என்ற கடுமையான விஷயத்தைத் தாண்டிச் செல்ல இயலாமல் அவன் கீழே விழுந்தபோது, எனக்குத் தெரிந்த ஒரு மனிதரின் கடையில் சாதாரண பணியைச் செய்பவனாக ஆக்கினேன்.
இரண்டு, மூன்று, ஐந்து ரூபாய்கள் என்று அவனுக்கு நானும் இடையே அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருந்தேன். அவனை நான் ஒரு ஓட்டுநர் பள்ளியில் சேர்த்துவிட்டேன். அவன் லைசன்ஸ் எடுத்தான்.
நல்லவன்.
எங்காவது ஒரு நிரந்தர ட்ரைவிங் வேலை கிடைத்திருந்தால், அவன் தப்பித்திருப்பான்.
அவனுக்கு அது கிடைக்கவில்லை.
எனக்கோ கார் இல்லை.
நான் படுக்கையில் கிடந்த பிறகும், அவன் என்னைப் பார்ப்பதற்காக வருவான். எப்படிப் பார்த்தாலும், எனக்கு ஒரு உதவி வேண்டும்.
அன்பிற்குரிய என் பழைய ப்யூன் எனக்கு ஆலோசனை கூறியபோது,நான் இந்த குமாரனைப் பற்றி இயல்பாகவே நினைத்துப் பார்த்தேன்.
இல்லையா?
நான் அவனை இங்கு முந்நூறு ரூபாய் சம்பளத்தில் நியமித்தேன்.
ஹோட்டலிலிருந்து உணவு வாங்கி வர வேண்டும். அது அவனுக்கும் எனக்கும்தான். நடந்து போக வேண்டாம். சைக்கிள் வாங்கிக் கொடுத்தேன். வீட்டில் கேஸ் இருக்கிறது. காபித்தூளும், தேநீர், தூளும், தினமும் காலையில் வந்து சேரும் பால் பாக்கெட்களும் இருக்கின்றன.
இடையே ஒரு காபி தயார் பண்ண வேண்டும். சில நேரங்களில் என் கால் வலி அதிகமாகும்போது, நான் கூறுவேன் :
"குமாரா... ஒரு நிமிடம் என் காலைப் பிடித்துவிட முடியுமா?'' என்று.
அவன் சம்மதிப்பான்.
அவனுடைய நடத்தை ஒரு மகனின் நடத்தையாக இருந்தது.
சிறிய... சிறிய பொருட்களை வாங்குவதற்கும், இடையே வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கும் குமாரன்தான் போவான்.
அவனுக்கே தெரியாமல், அவனைப் பற்றி நான் சில தீர்மானங்களை எடுத்தேன். இந்த நிலத்தின் தெற்கு மூலையில், அவனுக்கு இலவசமாக பத்து சென்ட் இடத்தைத் தரலாம். எஞ்சி இருப்பதை விற்று விடலாம். விற்று கிடைக்கும் பணத்தைப் பிள்ளைகளுக்குப் பிரித்துத் தந்துவிடலாம்.
நேரம் வரும்போது...
அதாவது... என் இறுதி நெருங்கும்போது.
காலையில் அறைகளையும் வாசலையும் பெருக்குவதற்காக நடுத்தர வயது கொண்ட ஒரு பெண் வருவாள். பிறகு... நானும் குமாரனும் இங்கு தனியாக இருப்போம். நான் பத்திரிகைகளை வாசிப்பேன்.
வானொலியைக் கேட்பேன். படுத்து உறங்கு வேன். நல்ல ஹோட்டல் உணவைக் குமாரன் கொண்டுவருவான்.
அவனுக்கும் எனக்கும் சந்தோஷம்.
நாட்கள் இவ்வாறு நீங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இங்கு ஒரு பிச்சை எடுக்கும் பெண்ணின் தொல்லை ஆரம்பித்தது.
நடந்து இங்கு வருவாள். வாய்க்கு வந்ததைப் பேசுவாள்.
யாசிப்பதை ஒரு உரிமையாக நினைப்பாள். ஒரு ரூபாய்க்குக் கீழே வாங்க மாட்டாள். நான் குமாரனுக்கு எப்போதுமே கூறியிருக்கிறேன்...
"அந்தப் பெண் வரும்போது,ஒரு ரூபாயைக் கொடுத்து தொல்லையை விலக்கி, மன அமைதியை விலைக்கு வாங்கிக் கொள்" என்று.
ஒருநாள் அந்தப் பெண்... அந்த ஆதரவற்ற பெண்... என் படுக்கையறையின் சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்தாள். என்னைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினாள்.
எப்போதும் தரக்கூடிய ஒரு ரூபாயை வாங்கியபிறகு தான்.. அந்தப் பெண் கிட்டத்தட்ட இப்படி கூறினாள்: "இந்த நிலத்தில் பன்னிரண்டு தென்னை மரங்கள் இருக்குல்லடா? எனக்கு பத்து தேங்காய்கள் தாடா... மயிரு...!''
நான் அவளை விரட்டி விட்டேன்.
எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், திறக் கப்பட்ட சாளரத்தின் வழியாக நான் காணுகிற மாதிரி, ஒரு தென்னை மரத்திற்கடியில் கால்களை விரித்து அமர்ந்து மலம் கழித்தாள். அதாவது...
அவ்வாறு நடித்தாள்.
"குமாரா!''- நான் அழைத்தேன்.
குமாரன் அந்த பிச்சைக்காரியை அடித்து விரட்டினான்.
ஆனால், அவனுக்கு அவள் மீது இரக்கம் இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அன்று சாயங்காலம் நான் குமாரன் தந்த தேநீரைப் பருகும் போது, அவனிடம் கேட்டேன்:
"குமாரா... அந்தப் பெண் தேங்காய்கள் கேட்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே?"
எதிர்பார்த்திராத பதில் கிடைத்தது.
"சார்... இங்கு இருப்பதால்தானே அவள் கேட்கிறாள்?''
நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன்.
மனைவியின் மரணத்திற்குப் பிறகு, நான் பொதுவாகவே நன்கு மது அருந்துவேன்.
அதற்கே மாதத்திற்கு ஐநூறு ரூபாய் வேண்டும். குமாரன்தான் புட்டியை வாங்கிக் கொண்டு வருவான்.
அவனுடைய சம்பளம் முந்நூறு.
என் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். "பெரிய தொகை' என்று எதுவுமே இல்லையெனினும், இருப்பது சாதாரண தொகையல்ல.
என்ன காரணத்திற்காக என்பதைக் கூறமுடியவில்லை.
அந்த நிமிடத்திலிருந்து குமாரனை நான் சந்தேகப்பட ஆரம்பித்தேன்.
ஒரு இரவு... நான் படுத்து உறங்கிக்கொண்டிருந்தேன்.
ஒரு தோணல்... யாரோ என் கழுத்தை இறுகப் பிடிக்கிறார்கள். நான் கண்களைத் திறந்தேன். பார்த்தது.. குமாரனை.
"என்ன குமாரா?''
"சார்... நான் உங்களுக்கு கம்பளியை மூடிவிட்டுக் கொண்டிருந்தேன்.'' என்று பதில்.
இன்னொரு நாள்.
என் கட்டிலுக்கு அடியில் ஒரு சிவப்பு நிற வேஸ்ட் பேப்பர் பேஸ்கட் இருக்கும். ஒருநாள் அதன் நிறம் பச்சையாக இருந்தது. பெருக்கிச் சுத்தம் செய்யும் பெண், வீட்டைச் சுத்தப்படுத்திய வேளையில் மாற்றி வைத்திருக்கலாம்.
என்... நான் இதுவரை பயன்படுத்தியிராத...
அலுவலக அறையின் குப்பைக் கூடையின் நிறம் தானே பச்சை?
அதற்குள் நான் கிழித்துப் போட்ட இரண்டு தாள் துண்டுகள் கிடந்தன.என் ஏராளமான கையெழுத்துகளைக் கொண்ட தாள்கள்!
அப்படியென்றால்....?
குமாரன் என் கையெழுத்தைப் போட்டு பழகிக் கொண்டிருக்கிறான்!
காசோலை புத்தகமும் பாஸ் புக்கும் அவனின் கையில்தானே இருக்கின்றன!
நான் எதுவும் கூறவில்லை.
குமாரன் எப்போதும்போல சிரிக்கிறான்.
கூறியபடி நடக்கிறான்.
ஒரு மகனைப் போல நடந்து கொள்கிறான்.
இவற்றிற்குப் பிறகு நான் தொடர்ந்து ஒரு கனவைக் காண ஆரம்பித்தேன்.
என் நிலத்திற்குப் பின்னாலிருக்கும் ஆற்றிற்குள் பூமி சரிந்து இறங்கும் பகுதியில், புதருக்குள்ளிருந்து குளக்கோழிகள் தலையைத் தொங்க விட்டவாறு நடந்துவரும் இடத்தில், பல வருடங்களுக்கு முன்னால் நான் இயற்கை உரத்திற்கான குழியை வெட்டி வைத்திருந்தேன். என் நிலத்திலிருந்த செடிகளுக்கும் மரங்களுக்கும் உரம் இடுவதற்காக....
பிறகு... கவனம் குறைந்துவிட்டது. குழி மூடிவிட்டது. குழி இல்லாமல் போனது.
என் கனவில் அந்தக் குழி ஒரு மலக்குழியாக மாறியது.
குமாரன் குழியை வெட்டுகிறான்.
பிச்சைக்காரியான பெண் அதில் நிரந்தரமாக மலம் கழிக்கிறாள். குழி நிறைகிறது.
குமாரன் கறியை வெட்டக்கூடிய கத்தியால் என் கழுத்தை வெட்டுகிறான். ஒரு முறை அல்ல. பல தடவைகள் கூர்மையான அந்த கறியை வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி மெதுவாக அறுத்து என் தலையைத் தனியாக எடுக்கிறான்.
துண்டிக்கப்பட்ட என் தலையை குமாரன் மலக்குழியில் காலால் எத்தி எறிகிறான். அப்போது பைத்தியக்கார சிரிப்புடன் என் தலையில் கால்களை விரித்து வைத்தவாறு அந்த பிச்சையெடுக்கும் பெண் மலம் கழிக்கிறாள்.
இந்த கனவை ஒருமுறை மட்டும் பார்க்கவில்லை.
பல முறைகள்.
தொடர்ந்து பல இரவுகளிலும்....
அப்போதுகூட குமாரன் என்னைக் கொல்வான் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஆனால், நேற்று தோன்றியது.
குமாரன் கூறுகிறான்:
"சார்... அந்த பழைய இயற்கை உரக்குழி மூடி விட்டது. அதன்மீது இப்போது யாருக்குமே தேவைப்படாத ஒரு மொந்தன் வாழை மரம் மட்டுமே இருக்கிறது. நான் மீண்டும் அந்த குழியை வெட்டப் போகிறேன். சிறிய கன்றுகளுக்கு நல்ல உரம் கிடைக்கட்டும்.''
நான் அதிர்ந்துவிட்டேன்.
எனக்கு அனைத்தும் புரிந்துவிட்டன.
என் கனவில் குமாரன் இருந்தான்.
அவன் நான் கூறியபடி நடக்கிறான்.
சிரிக்கிறான்.
மதிக்கிறான்.
ஆனால், எனக்குப் புரிந்துவிட்டது... அவன் என்னைக் கொல்வான்.
_____________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 சிறந்த சிறுகதைகளை மூன்று மொழிகளிலிருந்து நான் மொழிபெயர்த்திருக்கிறேன் "மன்னிப்பு கேட்ட பாவி' என்ற ரஷ்ய மொழி கதையை எழுதியிருப்பவர்...உலகப் புகழ் பெற்ற மகத்தான இலக்கிய நட்சத்திரமான லியோ டால்ஸ்டாய்.
சொர்க்கத்திற்குள் நுழைய விரும்பும் ஒரு பாவியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
சொர்க்கத்தின் வாயிலில் நின்றுகொண்டு அவன் பீட்டர், டேவிட், ஜான் ஆகியோரிடம் கேட்கும் கேள்விகள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை.
கதையின் இறுதிப் பகுதி, யாருமே சிறிதும் எதிர்பாராதது.
டால்ஸ்டாயின் அழுத்தமான முத்திரையை கதையின் இறுதிப் பகுதியில் நான் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள்.
"தேர்வு' என்ற கதையை எழுதியிருப்பவர்... இந்திய எழுத்தாளர்களின் மாபெரும்
அரசரான பிரேம்சந்த்.
இந்தி மொழியில் எழுதப்பட்ட கதை இது. 1914-ஆம் வருடத்தில் 'ப்ரதாப்', என்ற பத்திரிகையில் இக்கதை பிரசுரமானது.
பிரேம்சந்த் உருது மொழியில் ஏராளமாக எழுதியிருக்கிறார். அவர் இந்தி மொழியில் எழுதிய முதல் கதை இது.
திவானாக பணியாற்றுவதற்கு ஆளைத் தேர்வு செய்யும் கதை.
மக்கள் சேவையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அடிப்படை அம்சங்கள்...மனிதாபிமானமும், கனிவு மனமும், இரக்க குணமும்தான்.
இந்த உயர்ந்த விஷயத்தை அடிநாதமாக வைத்து எழுதப்பட்ட கதை.
இந்த கதையை வாசிக்கும் யாரும் ஆழமான சிந்தனையில் இறங்குவார்கள் என்பது நிச்சயம்.
"என்னைக் குமாரன் கொல்வான்' என்ற கதையை எழுதியவர்... தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், உயர் அரசு பதவிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அமர்ந்து ஆட்சி செய்தவருமான மலயாற்றூர் ராமகிருஷ்ணன்.
குமாரன் தன்னைக் கொன்று விடுவானோ என்ற சிந்தனையுடன் இருக்கும் ஒரு முன்னாள் அரசு அதிகாரியின் கதை.
மாறுபட்ட கதைக் கருவை மையமாக வைத்து கதையை எழுதிய மலயாற்றூரை நான் மனதிற்குள் பாராட்டுகிறேன்.
இந்த மூன்று நல்ல கதைகளும் உங்களுக்கு மூன்று வித்தியாசமான இலக்கிய அனுபவங்களைத் தரும்.
"இனிய உதயம்' மூலம் நான் மொழிபெயர்க்கும் இலக்கிய ஆக்கங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் உன்னத உள்ளங்களுக்கு என் இதய நன்றி.
அன்புடன்,
சுரா