திருமணமான மகளின் கூந்தலில் ஒரு முல்லை மாலையைச் சூட்டியவாறு தாய் முணுமுணுத்தாள்: "கண்ணு... அழக்கூடாது. பயப்படுறதுக்கு இதுல என்ன இருக்கு?''
அன்னையின் இதயத்தில் நினைவுகள் வேகமாக எழுந்து வந்தன. இருபது வருடங்களுக்கு முன்பு அவளை படுக்கையறைக்குள் அனுப்பும்போது அவளுடைய தாய் கூறிய அதே வார்த்தைகள்! அன்று அவள் கைவிரலைக் கடித்தவாறு அமைதியாக நின்று கொண்டு கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் புதிய ஒரு வாழ்க்கைக்குள் நுழைகிறாள் அல்லவா என்பதை நினைத்ததால் இருக்கவேண்டும்... தாயின் கண்களும் நிறைந்து வழிந்தன. காலம் எவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது!
சீதாவின் நடுங்கிக்கொண்டிருக்கும் கையைப் பிடித்தவாறு தாய் படுக்கையறையை நோக்கி நடந்தாள். இருபது வருடங்களுக்கு முன்னால் அந்த அறையின் வாசலில் வைத்து தன் கால்கள் தடுமாறியதைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். திறந்து கிடந்த அந்த வாசலுக்குள் நுழைந்தபோது, அவளுடைய இதயம் மிகவும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.
நரம்புகளின் வழியாக ரத்தம் வேகமாக பாய்வதைப்போல தோன்றியது. அந்த அறையில்... கட்டிலின் ஒரு மூலையில் சீதாவின் தந்தை அமர்ந்திருந்தான்.
தாய் அவளை அங்கு இருக்கச் செய்துவிட்டு, திரும்பிச்சென்று விட்டாள். அவனுடைய முகத்தில் வெட்கத்தால் வெளிறிப்போன வெளிப்பாட்டுடன் ஒரு புன்னகை அரும்பி நின்றது. அன்று அவளின் தலை சுற்றியது.
கூந்தலி-ருந்த முல்லை மாலை தரையில் விழுந்தது.
சீதாவிற்கும் கால் தடுமாறியது.
வாசலுக்கருகில் சென்றபோது, அந்தக் கன்னங்களில் ஒரு மினுமினுப்பு ஏறுவதை தாய் பார்த்தாள். வெண்மை நிறத்தில் சில்க் ஜுப்பா அணிந்திருந்த அந்த இளைஞன் மெதுவாக ஒருமுறை சிரித்தான்.
அமைதியாக நின்றுகொண்டிருந்த சீதாவை அவனுடன் சேர்ந்து தனியாக இருக்கச் செய்துவிட்டு கதவை அடைத்தபோது, தாயின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.
அவள் அந்த கதவின்மீது செவியை நெருக்கமாக இருக்கச் செய்தவாறு கவனித்தாள்.
ஏதோவொன்று தரையில் விழும் சத்தம்... ஆமாம்...
சீதாவின் முல்லை மாலை... இருபது வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்கள் தாயின் மனதில் அப்படியே திரும்பி வந்தன.
சிந்தனை நிறைந்த மனதுடன் அவள் தன்னுடைய அறையை நோக்கிச் சென்றாள்.
மேற்குத் திசையிலிருந்து கடலின் கர்ஜனை இருட்டிற்கு நடுவில் முழங்கியது.தாய் தன்னுடைய முதலிரவைப் பற்றி நினைத்துப் பார்த்தாள்.
அன்று அவர்கள் தனியாக இருந்தபோது, கணவன் வெட்கப்பட்டு நின்றுகொண்டிருந்த அவளின் முகத்தைப் பிடித்து உயர்த்தியவாறு அழைத்தான்:
"அம்மிணீ!'' அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அன்பு ததும்பி நின்றிருந்த அந்த கண்கள் அவளுடைய இதயத்திற்குள் ஆழமாக நுழைந்தன. ஏதாவது கூறினால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது.
உதடுகள் மலர்ந்தன. ஆனால், ஓசை வரவில்லை.
அவனுடைய கைகளுக்குள் அவள் இருந்தாள்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தடுமாறியவாறு அவன் முணுமுணுத்தான் : "அம்மிணி...என் அம்மிணி...'' அவளுடைய நெற்றி வியர்த்திருந்தது.
தாய் அந்த பழைய நாடகத்தில் மீண்டும் பங்கெடுத்துக் கொண்டாள். அவளின் நெற்றியில் வியர்வை அரும்பியிருந்தது.
அந்த அறையின் அடர்த்தியான இருட்டில்... இறந்துவிட்ட தன் கணவனை அவளால் பார்க்க முடிந்தது. அன்றைய திருமண கோலத்தில்...
அவளை அந்த சாளரத்தின் படியில் அமர வைத்தவாறு அவன் கேட்டான்: "அம்மிணி... உனக்கு பாடத் தெரியுமா?''
" ம்....''
"எனக்காக ஒரு சிறிய பாட்டு பாடு...''
அவன் அவளுடைய கையை எடுத்து மடியில் வைத்திருந்தான்.
கடலில் அலைகள் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தன.
அவள் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்.
"இனிய இரவு வேளையில்...
பூங்குயிலே...'' தாயின் குரல் படிப்படியாக உயர்ந்தது. சுய உணர்வே இல்லாமல் போனதைப்போல அவள் அந்த பழைய பாட்டைப் பாடிக் கொண்டி ருந்தாள்.
பக்கத்து அறையின் சாளரத்தின் வழியாக சீதாவின் மென்மையான பாடல் வெளியே பறந்து வந்துகொண்டிருந்தது.
"வீசும் இளம் காற்றில்...''
அன்னையின் பாட்டு நின்றது. "செல்லமே....'' -
அன்பொழுகும் குரலில் அன்று கணவனே அழைத்தான்.
அவளுடைய கூந்தல் அவிழ்ந்தது. தளர்ந்த சரீரம் அந்த மார்பின் மீது சாய்ந்தது. ஒரு பிஞ்சுக் குழந்தையைப் போல அவளை வாரித் தூக்கி அவன் மெத்தையில் படுக்க வைத்தான். அந்த படுக்கை விரிப்பிலிருந்து அருமையான ஒரு நறுமணம் எழுந்து வந்தது. அவன் முணுமுணுத்தான்:
"நான் உன்னைக் காதலிக்கிறேன்.'' அவளுடைய கண்கள் மூடின. அறியாமலே உதடுகள் அசைந்தன. "நான் உங்களையும்....''
இறுக்கமான அந்த அணைப்பில் அன்று அவள் உறங்கினாள். இறந்து விட்ட கணவனின் முகத்தைத் தன்னுடன் நெருங்கி இருக்குமாறு செய்து அவளால் பார்க்கமுடியும். அவனுடைய மூச்சுக்காற்று தன் கன்னங்களில் படுவதைப்போல உணர்ந்தாள். ஆனந்த போதையில் மூழ்கிக்கிடந்த அன்னையை சாளரத்தின் வழியாக வந்த இளம் காற்று தூக்கத்தில் ஆழ்த்தியது.
பொழுது புலரும் வேளையில் கூந்தல் சிதறிப் பறந்து கொண்டிருக்க, சோர்வடைந்த கண்களுடனும் ஒழுங்கற்று அணிந்திருந்த ஆடைகளுடனும் சீதா தாயின் அறைக்குள் வந்தாள். அவளுடைய கூந்தல் அவிழ்ந்து சிதறிக் கிடந்தது. முகத்தில் களைப்பு தெரிந்தது.
புடவையைச் சரி செய்துவிட்டு தாய் புன்னகைத்தாள். ஒரு புதிய மணப்பெண்ணின் வெட்கம் கலந்த சிரிப்பு...