எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
-என்கிறார் வள்ளுவர்.
இதன் பொருள்... "எவரையும் இழிவுபடுத்த வேண்டும் என்று எந்த நிலையிலும் மனதால்கூட நினைக்காமல் இருப்பதே தலையாய மனிதப் பண்பு' என்பதாகும்.
ஆனால் இதற்கு மாறாக, பா.ஜ.க.வின் கட்டுப் பாட்டில் இருக்கும் மணிப்பூரில், மனிதம் பகிரங்கமாக இழிவுபடுத்தப்பட்டு, மானக்கேடான செயல்கள் அரங்கேறி வருவது பெருங்கொடுமையாகும்.
= "உங்கள் நாடு; காட்டுமிராண்டிகளின் நாடா?'' என்று, உலகமே காறித் துப்பும் அளவுக்கு, இந்தியா வின் தரத்தை தலைகீழாகக் கொட்டிக் கவிழ்த்திருக் கிறது மணிப்பூர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், போராட்டம் என்ற பெயரில், விவரிக்கமுடியாத வெட்கக்கேட்டை நடத்தியிருக்கிறார்கள் வக்கிரம் பிடித்த மனித ஓநாய்கள்!
அங்கே வசிக்கும் மெய்தோய் இனத்தவர்கள், தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்கவேண்டும் என பல காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் தங்கள் சலுகைகள் பாதிக்கப்படும் என்று, அதற்கு குகி இன பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் கடந்த மே மாதம் 3-ஆம் தேதி, அங்கே மோதலாக மாறி, கலவரமாக வெடிக்க... அந்தக் கலவரத்தைச் சாக்காக்கி.... மாபெரும் தேசிய அவமானத்தை அரங்கேற்றி ஆட்டம் போட்டிருக்கிறார்கள் அசிங்கம் பிடித்தவர்கள்.
இம்பா-ல் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில்தான் சொல்லக் கூசும் அந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, 50 பேர் கொண்ட ஒரு மானங்கெட்ட கும்பல், உடைகளைக் கழற்றச்செய்து, துடிக்கத் துடிக்க நிர்வாணமாக்கி, அவர் களை வீதி வீதியாக ஊர்வலமாக இழுத்து வந்திருக்கிறது. அந்த நிலையிலும் அவர்களை வயல்வெளிக்கு இழுத்துச் சென்று, பா-யல் வல்லுறவுக்கு ஆளாக்கி வெட்கமில்லாமல் வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள்.
அந்த வெறிக்கும்ப-டம் அந்தப் பெண்களைப் பிடித்துக் கொடுத்ததே, போலீஸ்காரர்கள் போர்வையில் இருந்த பொறுக்கிகள்தானாம். இதைவிட அவமானம் உண்டா?
சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு வெட்கங்கெட்ட கொடுமை, வேறு எங்கேயும் அரங்கேறியதில்லை. இது இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பலத்த அவமானம்.
மே 4 வாக்கில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், ஜூலை 17-ல் சமூக ஊடகங்களில் வெளியான பிறகுதான், பெண்களைப் புனிதமாகக் கருதும் இந்தியாவில் இப்படியும் ஒரு கொடுமையா? என்று நாடே அதிர்ச்சியில் உறைந்து போனது.
இப்படி நிர்வாணக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களில் ஒருவர், ராணுவ வீரரின் மனைவி என்பது இன்னொரு அதிர்ச்சி.
அந்த ராணுவ வீரர் கார்கில் போரில் களமிறங்கிய போராளியாம். அந்தக் கொடூரம் பற்றி கண்ணீரோடு விவரித்த அந்த ராணுவ வீரர், "அந்தக் கும்பல் எங்கள் கிராமத்திற்கு வந்தது. எங்கள் வீடுகளை எரிக்கத் தொடங்கியது. நாங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோடினோம். காட்டுப்பகுதியில், என் மனைவியும் மற்றவர்களும் ஒளிந்திருந்தனர். அவர்களை அந்த வன்முறைக் கும்பல் இழுத்துச்சென்றது. அதில் என் மனைவியைத் தவிர, குழந்தையுடன் ஒரு பெண்ணும், இன்னொரு இளம்பெண்ணும் இருந்தனர். அவர்களின் ஆடைகளையும் வலுக்கட்டாயமாக கழற்றச் சொல்- கொடுமைப் படுத்தினர். அவர்களில் இளம்பெண்ணைக் காப்பாற்ற முயன்ற அவளது தந்தையையும் சகோதரனையும் அவர்கள் அடித்தே கொன்று விட்டார்கள். இந்திய நாட்டைக் காக்க, கார்கில் யுத்தத்தில் சண்டை யிட்ட என்னால், என் மனைவியின் மானத் தைக் காப்பாற்ற முடிய வில்லை'' என்று வெடித்து அழுதிருக்கிறார்.
வக்கிர மிருகங்களால் குதறப்பட்ட அவரது மனைவிக்கு மருத்துவம் செய்யக்கூட மருத்துவர் கள் முன்வரவில்லை என்பது, மற்றொரு பெருங் கொடுமை.
=
இவ்வளவு நடந்தும் பிரதமர் மோடியோ, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ இதைக் கண்டுகொண்டதாகவே, அப்போது காட்டிக் கொள்ளவில்லை. அவர்களின் கீழ் இருக்கும் உளவுத்துறை, சம்பவம் நடந்த போதே அவர்களின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோகாமலா இருந்திருக்கும்?
எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாதது போல், மோடியும் அமித்ஷாவும் மகா நடிகர் களாக நடந்து கொண்டார்கள்.
இதற்காக இந்தியாவை ஆளும் பிரதமர் மோடியோ, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, மணிப்பூரை ஆளும் இவர்களின் சிஷ்யரான பைரோன்சிங்கோ வெட்கித் தலைகுனியவில்லை.
சொந்த வீட்டில், அம்மா செத்துக்கிடக்கும் போது ஆட்டுக்கால் சூப்பு வாங்க அலைவதைப் போல, மணிப்பூரே பற்றி எரிந்துகொண்டிருந்த போது, பிரதமர் மோடி, எந்தக் கவலையும் இல்லாமல் அமெரிக்காவிற்குப் பறந்தார். இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்துவரும் இந்த கலவர காலத்தில் மட்டும், பிரதமர் மோடி ஏழு நாடுகளுக்குச் சென்று உல்லாசப் பயணம் நடத்திவிட்டு வந்திருக்கிறார். இதை எப்படிப் பார்ப்பது?
அவர் வெளிநாடுகளில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், இங்கே மணிப்பூர் கலவரத்தீயில் மனிதர்கள் வெந்து கருகிக்கொண்டிருந்தார்கள். எல்லாப் பக்கமும் அங்கே ரத்த வாடை வீசிக்கொண்டி ருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள், கலவரத்தில் கொல்லப்பட்டு, மார்ச்சுவரிகள் அங்கே நிரம்பிக்கொண்டு இருந்தன. ஏராளமான பெண்கள், அங்கே ஆடைகள் உரிக்கப் பட்டு, வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாகி, கொலைக் களத்தில் துடித்துக்கொண்டிருந்தார்கள்.
இதுபற்றி எல்லாம் கொஞ்சம்கூட மோடிக்கு மன உறுத்தல் ஏற்படவே இல்லை.
மணிப்பூர் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே, "பிரதமர் இதில் உடனடியாக கவனம் செலுத்தவில்லை. அவரை நேரில் சந்தித்து முறையிட முயன்றும், எங்களை அனுமதிக்க வில்லை'' என்று கைபிசைந்திருக்கிறார்கள். இதுதான் பிரதமரின் லட்சணம்!
=
75 நாட்களுக்கு மேலாக, ஒன்றுமே நடக்காததுபோல், இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்த மோடி, உலக நாடுகள் காறித்துப்பிய பிறகு, மெதுவாக வாய்திறந்திருக்கிறார்.
அதிலும், பெரும் அதிர்ச்சியையோ அவமான உணர்ச்சி யையோ அவர் அடைந்ததாகத் தெரியவில்லை.
"ஜனநாயகத்தின் கோவிலுக்கு அருகில் நிற்கும் என் இதயம் முழுதும் கோபமும் வ-யும் நிறைந்துள்ளது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என உறுதியளிக்கிறேன்'' என்று நாடக பாணியில் வசனம் பேசியிருக்கிறார் மோடி.
இந்திய நாட்டில் இப்படியொரு, நிர்வாண ஊர்வலக் கொடுமை நடந்துவிட்டதே என்ற பரிதவிப்பைவிட, இது எப்படி வெளியே தெரிந்தது என்கிற ஆதங்கம்தான் மோடியிடமிருந்து அதிகம் வெளிப்பட்டிருக்கிறது.
மணிப்பூரின் தட்பவெப்பம் சரியில்லை என்பது குறித்து பலரும், முன்னதாகவே எச்சரித்தும், அங்கே இருக்கும் அரசு கண்டு கொள்ளவில்லை.
குறிப்பாக, கடந்த 17 மாதங் களுக்கு முன்பே, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங் களில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதாக மக்களவை யில் ராகுல் காந்தி எச்சரித் திருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ உரையில் ராகுல் காந்தி "இந்த நாட்டை கட்டியெழுப்ப எனது தாத்தா 15 வருடங்கள் சிறையில் இருந்தார். என் பாட்டி 32 முறை சுடப்பட்டார், என் தந்தை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார், நீங்கள் பிரச்னையை உருவாக்குகிறீர்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் பிரச்சினைகளை இப்போதே உருவாக்க ஆரம்பித்து விட்டீர்கள்'' என்று அழுத்தம் திருத்தமாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும், மணிப்பூரில் அதிகாரத்தில் இருக்கும் மரண தூதர்கள், எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
===
இந்த நிர்வாண ஊர்வலக் கொடுமைபோல், அங்கே தொடரும் கொடுஞ்செயல்கள் வெளியே வந்து, பதறவைத்தபடியே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக மற்றொரு சம்பவம்....
அங்குள்ள கக்சிங் மாவட்டத்தில் மே 28 ஆம் தேதி அதிகாலையில், ஆயுதமேந்திய கும்பல் ஒன்று 80 வயது மதிக்கத்தக்க இபெடோம்பி என்ற பெண்ணை, அவரது வீட்டிற்குள் அடைத்து வைத்து, தீ வைத்திருக்கிறது. இப்படிக் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் கணவரான சுராசந்த் சிங், முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாமின் கைகளால் விருதுபெற்ற, ஒரு முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அங்கே தற்போது நிகழ்ந்து வரும் வன்கொடுமையில் 70-க்கும் அதிகமான குகி, மெய்தோய் இனப் பெண்கள் கூட்டுப் பா-யல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் எழுந்துவந்து பதறவைக்கின்றன.
மணிப்பூரில், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைப் பட்டிய-ட்டு பிரதமர் மோடிக்கு, மனித உரிமைகளுக்கான குகி மகளிர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் அங்கே நடக்கும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில...
= கிழக்கு இம்பா-ல் கார் பழுதுநீக்கும் நிலையத்தில் 2 குக்கி இன பெண்கள் பா-யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.
= மொய்ரானில் 2 வயது குழந்தை கொலை
= காங்போக்பி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை கொலை
= சந்தேல் மாவட்டம் திங்கங்பாய் காட்டில் கர்ப் பிணிப் பெண் கொலை
=இம்பால் அருகே உள்ள கோங்சாய் வெங்கில் கணவன் கண்முன்னே பெண் பா-யல் வன்கொடுமை
= மேற்கு இம்பா-ல் தாயும் மகனும் ஆம்புலன்சில் எரித்துக்கொலை
= இம்பா-ல் பெற்றோர் மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் சுட்டுக்கொலை
= கோகன் கிராமத்தில் தேவாலயத்தில் பிரார்த் தனை செய்து கொண்டிருந்த பெண் சுட்டுக்கொலை
= லாம்ஃபெல் என்ற இடத்தில் வயதான பெண் சுட்டுக்கொலை
= பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஒரு குடும்பமே எரித்துக்கொலை
-இப்படி பகீர் தகவல்கள் அணிவகுத்தபடியே இருக்கின்றன.
=
மணிப்பூர் என்பது 80 சதம் மலைப்பகுதிகளைக் கொண்ட மாநிலம் ஆகும். இங்கே, மெய்தோய், குகி, நாகா ஆகிய பழங்குடி மக்கள் வாழ்கின்ற நிலையில், இவர்களில் குகி இனத்தவர்கள் தான் மலைப்பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் துடிக்கும் மெய்தோய் சமூகத்தினர், அங்குள்ள பா.ஜ.க. பைரோன்சிங் அரசின் "பாப்பி' என்னும் போதைப் பொருள்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பதாகச் சொல்-க்கொண்டு, குகி மக்களை அவர்களின் வாழிடங்களில் இருந்து துரத்த முயற்சித்து வருகிறார்கள்.
மேலும் குகி இன மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் மியான்மரில் இருந்து, மெய்தோய் இனத்தி னர் தங்கள் சமூகத்தினரைக் கொண்டுவந்து சட்ட விரோதமாகக் குடியேற்றுகின்றனர்.
மெய்தோய் மக்களுக்கும் குகி மக்களுக்கும் இடையில் மூண்டிருக்கும் மோதல், தற்போது இன அழிப்பு யுத்தமாக மாறி இருப்பதுதான் பகீரை ஏற்படுத்துகிறது. இவ்வளவு நடந்தும், அங்கே உள்ள பா.ஜ.க. அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
மணிப்பூர் கொடூரத்திற்குப் பிறகும் அதிகாரத்தில் அமரும் அருகதை, பிரதமர் மோடிக்கு இருப்பதாக இங்கிருக்கும் எவரும் கருதவில்லை. எப்போது இந்தியா விடியும்?
-ஏக்கத்தோடு,
நக்கீரன்கோபால்