தனது நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்ற பூமியின் வரைபடத்தில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. டெக்டானிக் தட்டுகளின் நகர்விற்கும், நில அதிர்விற்குமென இன்னும் பல இயற்கை மாற்றங்களுக்கு ஆளாகின்ற பூமிப்பந்து, தனது முக்கால் பகுதியில் நீரைக் கொண்டு நிலப் பகுதியில் குறைந்திருக்கிறது. கடல் நீருக்கடியிலிருந்த நிலங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நீர் வற்றி தரைப் பகுதியாக மாறுவதும் நிலப் பகுதிகள் நீருக்கடியில் மறைவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இவை யாவற்றையும் உணர்கின்ற வாய்ப்பு, அன்றாட வாழ்க்கையில் நகர்ப்புற கட்டிடங்களுக்கிடையில் நாம் பயணிக்கின்றபோது கிட்டுவதில்லை. கண்டம்விட்டு கண்டம் பயணித்து, மனிதர்களின் ஆளுமைகளுக்கு ஆளாகாத புதிய நிலங்களைக் காணும்போது, அந்த நிலத்தின் வரலாறு அவற்றை நமக்கு அறிவித்துவிடுகிறது. அப்படியான சந்தர்ப்பம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் செடோனா நகரத்திற்குச் சென்றிருந்தபோது கிட்டியது. அதிகாலை ஐந்தரை மணிக்கு பீனிக்ஸ் நகரிலிருந்து கிளம்பி 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த நாங்கள் கிட்டத்தட்ட காலை 8:30 மணிக்கு செடோனா வந்து சேர்ந்தோம். இந்த இடம் பீனிக்ஸ் நகரம் அமைந்திருக்கும் பாலை நிலத்தைவிட உயரமானது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடிகளுக்கு மேல் எழும்பியுள்ளதால் சற்றுக் குளிராக உணரவைத்தது. கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாத பீனிக்ஸ்வாசிகள் அருகேயுள்ள செடோனாவிற்குப் பயணிப்பது வழக்கம். வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையன்று அப்பயணத்தை நாங்களும் மேற்கொண்டோம்.
செடோனாவை அடைந்தபோது, இளஞ்சூரியனின் மென்மையான கதிர்கள் செந்நிற மண்ணில் பட்டு எங்கள் முகத்திலும் தெறித்தது. சற்று உயரமாகத் தெரிந்த நிலப்பகுதிக்கு வந்துசேரும் வரை, கூடுதலடைகின்ற உயரத்தை எங்களது பயணத்தில் நாங்கள் உணரவே இல்லை. எந்தவொரு மலைப்பாதையும் சுமார் முப்பது டிகிரி கோணத்தில் உயர்ந்ததால் வாகனம் மேலே ஏறுவதை உணராமலேயே பயணித்தோம். இப்பகுதி ஒரு காலத்தில் வெப்பமண்டல கடற்கரைச் சோலையாக இருந்திருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக கடல் மட்டம் பல மடங்கு உயர்ந்து பிறகு சரிந்திருக்கிறது. காற்றும் ஆறும் இணைந்து மணலை இடம்பெயரச் செய்து மணற்குன்றுகளை உருவாக்கியிருக்கின்றன. பல வண்ணமயமான அடுக்குகளைக் கொண்ட மலைகளை அளவீடாகக் கொண்டு ஆராய்ந்து இதனை அறிவித்திருக்கிறார்கள்.
ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தாலான முக்கோண வடிவ மலைகள் பல இந்த நிலப்பரப்பில் இருந்தாலும் சிறப் பாக சொல்லப்படுகின்ற ஒரேயொரு மலை, கோவில்மணியின் வடிவத்தை ஒத்து நேர்த்தியாக இருப்பதால் அதனை (இங்ப்ப் தர்ஸ்ரீந் ஙர்ன்ய்ற்ஹண்ய்) மணிப்பாறை மலை என்று பெயர் சூட்டி சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். இம்மலையில் ஹெமடைட் எனப்படுகின்ற இரும்பு ஆக்சைடு தாதுக்கள் அதிகமாக இருப்பதுதான் இந்நிறத்திற்கு காரணமாக இருக்கிறது. இவ்விடத்திற்கு வந்ததே அந்த மலையின் மீது ஏறுவதற்குத்தான். அது எத்தனை பெரிய சவாலானது என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. அதற்கேற்ற காலணிகளை அணிந்து கொண்டு, சூரிய ஒளிக்கதிர்களையும் குளிரையும் ஒரே நேரத்தில் தாங்குவதற்கேற்ற உடைகளை அணிந்துகொண்டோம். ஏனெனில் சுட்டெரிக்கும் வெயிலை எதிர்பார்த்து அதற்கேற்ற ஆடைகளோடு சென்றோமெனில் நடுங்கும் குளிரையும் அதே நாளில் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதிகக் காற்றும் திடீர் புயலும்கூட வீசலாம். அப்படியான உடனடி மாற்றத்திற்கு உட்பட்ட தட்பவெப்ப நிலை இங்கு நிலவுகிறது. எங்களது நடை பயணத்தை ஆரம்பித்தபோது, முதல் எச்சரிக்கையே நாங்கள் அங்கு செல்வதை யாரிடமாவது சொல்லி வைத்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதுதான். சென்றவர்கள் திரும்புவதற்கு காலதாமதமானால் உதவுவதற்கு வசதியாக அதனைச் சொல்கிறார்களென புரிந்து கொண்டபோது, மனதில் சற்று பயமிருந்தாலும் துணிச்சலும் கூடுதலானது. ஏனெனில் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனும் அவனது அன்னையும் எங்களோடு வந்து கொண்டிருந்தார்கள். இரண்டு மாதக் குழந்தையை, கூடையில் வைத்து முதுகில் சுமந்தவாறு ஒரு பெண்மணியும் அங்கு இருந்தார்.
கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்டு கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் நிற்கும் இந்த மலையைச் சுற்றி இருக்கின்ற பாதையில், பைக் என்று அவர்கள் அழைக்கின்ற சைக்கிளில் இருபது வயது மதிக்கத்தக்கவர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முதுகில் எடுத்துக் கொண்டு சிறிய உறிஞ்சிக் குழாயை உதட்டருகே கொண்டவாறு வேகமாக பயணித்ததன் நோக்கம், உடல் நலத்தைப் பேணுவதேயன்றி வேறல்ல. 70 வயது மதிக்கத்தக்க பெண்களும் நடந்துவந்தார்கள். கோவில் மணியின் வடிவத்தைக் கொண்ட இந்த மலையின் மீது ஏறும்பொழுது மனம் அமைதியடைகிறது எனும் ஆன்மீக நம்பிக்கையும் இங்கு உள்ளவர்களுக்கு இருக்கிறதென்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது. நேர்மறையான அதிர்வலைகள் இங்கு பரவியிருப்பதாக நம்பிக்கை கொண்டு பயணிப்பவர்களும் மலை ஏறுகின்ற சவால்களை துணிச்சலாக மேற்கொள்பவர்களும் தனது வழிகாட்டியோடு குழுவாக முயற்சிப்பதும் அவ்வப்போது நடக்கிறது. அப்படியாக உச்சிமலை வரை சென்றுவந்தவர்கள் அன்றைய தினப் பத்திரிகையில் செய்தியாக பிரசுரிக்கப்படு கிறார்கள்.
இந்த மலையின் மீது ஏறுகின்ற வழித்தடத்தை சரியாக அறிந்தவர்களும் பயிற்சி பெற்றவர்களும் தனியாகப் பயணிக்கலாம். அப்படி அல்லாதவர்கள் தங்களது எல்லையை அறிந்துகொண்டு மலைப்பாதை குறித்த விவரங்களையும் தெரிந்துகொண்டு குழுவாகப் பயணிப்பது சிறந்தது. இத்துடன் நாம் இருக்கும் இடத்தை அறிவிப்பதற்கு விசில் ஒன்றை வைத்துக்கொள்வதும் நல்லது. ஏனெனில் நமது கைப்பேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்துவிட வாய்ப்பு இருக்கிறது. மணிப்பாறை மலை அமைந்திருக்கும் இடம் முண்ட்ஸ் மலை வனப்பகுதியாகும். மனிதர்கள் வசிக்காத இப்பகுதியில் குறு மரங்கள் நிறைந்திருப்பதால் அங்கு மறைவாக வாழும் விலங்குகளிடமிருந்தும் நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
அவை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே வெளியேறுகின்றன என்றாலும் எப்பொழுதாவது வெளியே வருகின்ற வாய்ப்பு பகலிலும் இருக்கிறது. கல் இடுக்குகளில் இருக்கும் விஷப்பூச்சிகள், அதிக விஷமுள்ள அறுவடை எறும்புகள், கொம்புகள் கொண்ட தேரைகள், பாம்புகள், வவ்வால்கள், நரிகளென இன்னும் பல உயிர்களும் வாழ்வதால், இவற்றை இரையாகக் கொள்ள கரணம் அடிக்கும் பால்கன் பறவைகளும், இறந்த உடல்களை கொத்தித் தின்ன வரும் காக்கைகளும் சிவப்பு வால் பருந்துகளும் அந்த மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பறக்கின்றன. ரோடு ரன்னர்கள் என்று அழைக்கப்படுகின்ற பறவைகள் 32 அங்குள்ள நீளமான இறக்கைகளோடு 13 அவுன்ஸ் எடை மட்டுமே கொண்டவை. புறா வைப் போல ஒலி எழுப்புகின்ற இவற்றால் பறக்க முடிந்தாலும் பெரும்பாலும் அவை நடந்து செல்வதைக் காணலாம்.
இப்படியான இந்த மலை கீழிருந்து மேலாக ஒரே சரிவாகவும் இல்லை?. கரடு முரடான பாதைகளில் மேடு பள்ளங்களை அதிகமாகக் கொண்டு செப்பனிடப்படாத இயற்கையான இவ்விடத்தில் மனிதர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். மலை ஏறுவதற்கு உதவியாக சிலர் ஊன்றுகோலையும் பயன்படுத்துகிறார் கள். இங்குள்ள தாவரங்களின் தன்மையை அறியாதவர்கள் அவற்றைத் தொடுவதை தவிர்ப்பதும் சிறந்தது. நீர் குறைந்த பாலைவனப் பகுதிகளில், கிடைத்த நீரைக் கொண்டு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள, அவை விஷமுடைய வையாகவும் இருக்கலாமென்கிற கணிப்பு இருந்தாலும், இந்த வனப்பகுதி பாலைவனமா என்கிற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.
பல்வேறு வகையான தாவரங்களையும் விலங்குகளையும் கொண்டு இப்பகுதி பன்முகத்தன்மையுடன் இருப்பதால் இந்த நிலப்பரப்பினை ஒரு பொய்யான பாலைவனமாகக் கருதுகிறார்கள். செடோனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாலைவனத் தின் புல்வெளிகள் காணப்படுகின்றன. இந்த உயிரியல் சமூகத்தில் எப்பொழுதாவது கூர்மையான இலைகள் கொண்ட யூக்கா அல்லது ஸ்பைனி கற்றாழை கலந்த பல்வேறு புற்களும் இருப்பதால், இவை பல்வேறு வகையான சிறிய பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கும் வாழ்விடமாகத் திகழ்கின்றன. சற்று உயரத்தில் நகரும்போது அங்கு பசுமையான புதர்களும் மரங்களும் காணப்படுகின்றன. வசந்த காலத்தில் பூக்கின்ற ஃபோர்ப்ஸ் மலர்கள் இப்பகுதிக்கு கூடுதல் வண்ணத்தைக் கொடுக்கின்றன.
இங்குள்ள விலங்குகளினால் மனிதர்களுக்கு ஆபத்து நேரலாம் என்கிற எச்சரிக்கையோடு, மனிதர்களாலும் வனவிலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார் கள். வனத்தில் வாழ்கின்ற விலங்குகளுக்கு உணவு அளிப்பதோ, அருகே சென்று அவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்குவதோ, தொட முயற்சி செய்வதோவென எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள். இவையாவும் இன்றைய வாழ்வின் உயிரிகளாகத் திகழ்ந்தாலும் செடோனாவின் சிவப்புப் பாறைகள் நிறைந்த இப்பகுதி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்னவாக திகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ள, இங்கு படிமங்களாகியிருக்கும் பாறைகளின் மூலக்கூறுகள் அவற்றின் கதைகளைச் சொல்கின்றன.
மிகவும் ஆக்ரோஷமாக வெடித்து வெளியேறிய எரிமலைக் குழம்பின் படிவுகள் இங்கு நிறைந்திருக்கின்றன. அவை கடலுக்கடியில் இருந்ததற்கான சாட்சியங்களையும் அவற்றின் மீதுள்ள 10 அடி தடிமத்தினாலான கடல் தாதுக்களின் படிவுகள் மற்றும் சுண்ணாம்புக் கல்லின் படிமங்கள் காட்டுகின்றன. வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு மலைகளிலிருந்து ஆறுகள், மணலையும் வண்டலையும் கொண்டு வந்து சேர்த்த படிமானங்களும் இங்கு நிறைந்திருக்கின்றன. காற்றும் மழையும் அரித்தது போக எஞ்சிய உருவமே இன்றைய மலைகளாக இப்பகுதியில் நின்றுகொண்டிருக்கின்றன.
பழங்கால மணல் திட்டுகளை, உப்பு அடுக்குகள் மூடி இருப்பதைக் கொண்டும் அதன் காலத்தைக் கணக்கிட்டும், எது முதலில் நடந்தது என்பதையும் நாம் யூகிக்கலாம். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மணல் திட்டுகள் உருவான பிறகு, சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் உருவாகி மறைந்திருக்கிறது. துருவா, ஜோஸ், பீச் (உட்ழ்ன்ஸ்ஹ, த்ர்ள்ங், ல்ங்ஹஸ்ரீட்) என பல்வேறு வண்ணங்களைக் கொண்ட அடுக்குகள், இம்மலைகள் உருவான காலங்களை கணக்கெடுக்கின்றன. இங்குள்ள வறண்ட நதிப் படுகைகளிலிருந்து வீசுகின்ற வடக்குக் காற்று தெற்குப் பகுதியிலுள்ள அரிசோனா விற்கு மணற்துகள்களை எடுத்துச் சென்றதால்தான் தாழ்வான கரையோரக் குன்றுகள் எல்லா திசைகளிலும் மைல்கள் கணக்காக நீண்டு உருவாகியிருக்கின்றன என்பதை ஆய்வில் சொல்கிறார்கள். தென்கிழக்கு அரிசோனாவிலிருந்து வெகு தொலைவிலுள்ள செடோனாவின் சிவப்புப் பாறைகளின் அதே வயதையொத்த கொமெஸ்டோன் பாறைகள் இப்படியான வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சி, இவை உருவான வரலாற்றை விரிவாகப் பேசுகின்றன. 1984 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடங்கள் யாவும் வனத் துறையின் பாதுகாப்பிற்குக்கீழ் வந்திருக்கின்றன. அதற்கு முன்புவரை இங்கு நிலக்கரிகளைத் தோண்டியெடுத்து விற்பனை செய்து சில அடையாளங்களை இல்லாமலும் செய்திருக்கி றார்கள்.
இயற்கையின் சப்தங்கள் இங்கு ஓங்கி இருக்கட்டும் என்கிற விருப்பத்தை வெளிப்படுத்தி மோட்டார் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்திருக்கிறார்கள். ஓக் கிரீக் கிராமம் வனப் பகுதியின் வெகு அருகில் அமைந்திருக்கிறது. வனச் சேவை சமூகங்களும் பழங்குடியினரும் அரசு நிறுவனங்களும் தனி நபர்களும் பங்குதாரர்களாக இணைந்து, செடோனா மற்றும் ஓக் க்ரீக் கிராமத்தைச் சுற்றியுள்ள நகர்ப்புற மேம்பாட்டிற்காக செயல்பட்டு, அதன் பழமையான தன்மை மாறாமல் காத்துவருகிறார் கள். ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓக் கிரீக் எவ்வாறு உருவாகியது என்பதற்கும் இங்கு வரலாறு இருக்கிறது. பனி உருகி பாறைகளுக்குள் ஊடுருவி அங்குள்ள நிலத்தடி நீராக ஓடி பாறைகளை வலுவிழக்க செய்து, மேற்பரப்பில் அதன் ஓட்டத்தை எளிதாக்கியிருக்கிறது. மில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவான பழமையான கேன்யானைச் செதுக்க உதவிய ஓக் கிரீக் ஆறு அரை மைல் ஆழமான பள்ளத்தாக்கினைக் கொண்டுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானது.
கோடை மழையில், ஓக் க்ரீக் பெருக்கெடுத்து ஓடி, நிறைய மணல், சரளை மற்றும் பாறைகளை கீழ்நோக்கியவாறு சுமந்துசெல்கிறது. இது போன்ற நிகழ்வுகள் நிலஅரிப்புக்கான சக்திவாய்ந்த முகவர்களாக விளங்குகின்றன. இன்று மில்லியன் கணக்கான பார்வையாளர்களும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களும் செடோ னாவிற்கு அருகிலுள்ள இயற்கைக் காட்சிகளுக்கு மத்தியில் மீண்டும் வாழ்கிறார்கள். சிவப்புப் பாறை மாகாணப் பூங்காவைச் (தங்க் தர்ஸ்ரீந் நற்ஹற்ங் டஹழ்ந்) சேர்ந்தவர்கள், கரையோர வாழ்விடப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி மற்றும் இயற்கை பொழுதுபோக்குப் பணியை ஆதரிப்பது, ஊக்குவிப்பது, மேம்படுத்துவது போன்ற திட்டங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். மனித அடையாளங்களை ஒரு துளியும் அங்கே விட்டுச்செல்லக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு இப்பகுதியில் வாழ்பவர்களுக்கு இருக்கிறது.
இப்படியான அறிவியல் பூர்வமான வரலாறுகளை இப்பகுதிக்கு வருகின்ற மக்கள் அறியும்படி மலை அடிவாரத்தில் செய்திகளாக பதிய வைத்திருக்கிறார்கள். அங்கிருந்த நுழைவாயிலிலிருந்து மண் பாதையின் வழித்தடத்தை அடையாளமாகக் கொண்டு சவால்களை சந்தித்து, நாங்கள் பாதி மலையைக் கடந்த பிறகு, மாற்றுப் பாதையை தவறுதலாக எடுத்ததால் அங்கிருந்து செங்குத்தான சரிவையே காண நேர்ந்தது. பாதை இல்லாமல் பயணத்தைத் தொடர இயலவில்லை. உடன் வந்த ஒருசிலரையும் அங்கு காணவில்லை. உயரமாக இருக்கும் அவர்கள் நம்மைவிட விரைவாக நடந்துவிடுகிறார்கள். மாற்று வழியை யோசித்து வழி தெரியாமல் திணறியபோது, 911 எனும் அவசர அழைப்பை அழைக்கலாமா என்கிற பதட்டம்கூட தொற்றிக் கொண்டது.
அதற்கும் நாம் அதிகமான டாலர் மதிப்புகளை தொகையாகக் கொடுக்கவேண்டுமென்பதால் சற்று நிதானித்து எளிதாக கீழே இறங்கும் வழியை கண்டுபிடிக்க தடுமாறிக் கொண்டிருந்தோம்.
அந்த சமயத்தில் புதியதாக மேலே ஏறிய ஒரு இளம் பெண் எங்களுக்கு சரியான வழியைக் காட்டியதால் அதனைத் தொடர்ந்து, கீழ்நோக்கிய காட்சிகளை ரசித்துவிட்டு, பிறகு இறங்கியவர்களாக சுமார் மதியம் 12 மணியளவில் அடித்தளத்தை அடைந்தோம். செடோனாவில் மேசா விமான நிலையத்தின் உயரத்திலிருந்து செடோனா வில் எழும்பி இருக்கின்ற பல சிவப்புப்பாறை மலைகளை ரசிக்கவும் மக்கள் அங்கு செல்கிறார் கள். கண்கள் அவற்றை அழியாத அழகின் காட்சிகளாக படம்பிடித்துக் கொள்கின்றன. செடோனாவின் (இங்ப்ப் தர்ஸ்ரீந் ஙர்ன்ய்ற்ஹண்ய்) மணிப்பாறை மலையை ஒத்த அந்த மலைகள் அப்பகுதியை வேற்று கிரகம்போல உணர வைத்தன. இயற்கை ஓங்கியிருந்த இவ்விடத்தில் மனித வாழ்க்கை மிகக் குறைவாகவே வெளிப்பட்டது.
(தொடரும்)