ணிமேகலை புத்த சமயக் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டதொரு காப்பியம். அதனை இயற்றிய சாத்தனார் பாலி மொழியை நன்கு அறிந்தவர்; வடமொழி கற்றவராயும் இருந்திருக் கிறார். தமிழில் எழுந்த முதல் சமயக் காப்பியமாக மணிமேகலை இருப்பினும், புத்த மதக் கருத்துக்களை முதன்முதலில் பெருமளவு மொழிபெயர்ப்புச் செய்த நூல் என்ற பெருமையும் அதற்கு உண்டு. ஏனைய காப்பியங்களுக்கு இத்துறையில் ஒரு வழிகாட்டியாய் இருந்துள்ளது என்பதும் சாத்தனார்க்குப் புகழ்சேர்க்கிறது. பிற மொழிச் சொற்களை அழகுறத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமையும் பாராட்டுக்குரிய வகையில் அமைத்துள்ளார். இதனை எண்ணிய உ.வே.சா -

''சமய சம்பந்தமான சில சொற்களையும் தொடர்களையும் வேறு சிலவற்றையும் இடத்திற்கேற்ப இவர் மொழிபெயர்த்து

அமைத்திருத்தல் மிகப் பாராட்டுக்குரியதொன் றாம்''.

என்பர்.

சாத்தனாரின் தனித்தன்மையையும்,

அவருக்குப் புத்த மதத்தின் மீதிருந்த மிகுந்த ஈடுபாட்டையும் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஆகிய காதைகளின் வழி உணரலாம்.

இக்காப்பியம் மதக் கருத்துகளைக் கொண்டிருந்தாலும், சாத்தனார் சிலவற்றைக் காட்சிப்படுத்துவதில் புதுமை செய்திருப்பதனை அறியலாம். சிலம்பைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளைத் தம் பின்னணியில் கூறியிருப்பதில் சில ஆழமான பதிவுகளைக் காண இயலுகிறது. இளங்கோவடிகளின் கருத்துகளைப் பெரும்பாலும் ஏற்றே தம் புனைவுகளைப் புகுதியுள்ளார் சாத்தனார்.

இதனை எண்ணிய வ.சு.ப.மாணிக்கம்,

‘நாடக இலக்கியமாய் அமைத்த காரணத்தால் இளங்கோ தலைமக்களின் சில செய்திகளைத் தள்ள வேண்டியவராகிறார். அவர் தள்ளிய செய்திகள் மணிமேகலை நூலில் இடம்பெறுகின்றன.’

என்று சொல்லிவிட்டு கண்ணகி, கோவலன் இருவருடைய தெய்வ உருவங்களை மணிமேகலை தொழுவதனை மணிமேகலைப் பகுதியிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.

தணியாக் காதல் தாய்கண் ணகியையும்

கொடைகெழு தாதை கோவலன் தன்னையும்

கடவுள் எழுதிய படிமங் காணிய

வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து

வணங்கி நின்று குணம்பல ஏத்தி (மணி 26/1-6)

அறச் செல்வியாகிய மணிமேகலை, கண்ணகி -

கோவலன் தெய்வ உருவினை வணங்கிய காட்சியை இவ்வகையில் விளக்குவர் சாத்தனார். கோவலனின் குடும்ப வரலாற்றை இலக்கியமாக்க எண்ணிய அடிகளாரும் வணிகனாரும் பாடும் காதைப் பகுதியை வரையறுத்துக் கொண்டனர் என வ.சு.ப. இருவரின் காப்பியப் புனைவுக்கான களன்களைச் சுட்டியுள்ளார்.

மணிமேகலையின் அழகும் இளமையும் மிக்க எழில் நலம் நம் கண்முன் விரியுமாறு சாத்தனார் காட்சிப்படுத்துவர். ஆடவர் அவளது அழகில் மயங்கி நின்றதை மலர் வனம் புக்க காதையில் சாத்தனார் சற்றே புதுமையாய்க் காட்டுவர். மணிமேகலை தொடுத்து வந்த மாலை கண்ணீரால் நனைந்து தூய்மை இழந்தது. மதுரையில் கோவலன்- கண்ணகிக்கு நேர்ந்த துயரை நினைத்து அழுததால் அம்மலர்கள் தூய்மை இழக்கக் காரணமாயின. வேறு மலர்கள் தொடுத்துவர, சுதமதியோடு மலர் வனம் வந்தாள் மணிமேகலை.

அவளது கண்களிலிருந்து சிந்திய கண்ணீரை காமன் காண நேரிட்டால் அவன் தன் மலர்க் கணையை எறிந்துவிட்டு உள்ளம் தள்ளாடி நடுங்கி நின்றுவிடுவான். ஆடவருள் யாரேனும் அவளைக் காண்பாரேயானால், அவள் வரும் வழியைவிட்டு அகல மாட்டார்கள். அவர்கள் ஒரு சமயம் தம் இயல்பில் திரியாமல் நின்றாரேயானால் அவர்கள் பேடிகள் எனச் சாத்தனார் அவளது எழிலார்ந்த இளமை நலத்தை இவ்வாறு புனைந்திருப்பது புதுமை.

அணிதிகழ் நீலத் தாய்மலர் ஓட்டிய

கடைமணி உகுநீர் கண்டன னாயின்

படையிட்டு நடுங்கும் காமன் பாவையை

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்

(மணி. 3/21 - 25)

இக்காட்சி அவளது எழில் நலத்திற்குச் சாட்சி. இப்படி ஒரு காட்சி ஒப்புமை காட்டுவதற்கு ஏற்பதாய் உள்ளது. மாதவியை எப்படிப்பட்ட அழகினள் என்று இளங்கோ அவளை அறிமுகப்படுத்தும்போது, ‘தாதவிழ் புரிகுழல் மாதவி’ என்று சுட்டிவிட்டு அவள், ஆடல் பாடல் அழகு என்ற மூன்றிலும் குறைவுபடாதவளாய் விளங்கினாள் எனக் குறிப்பிடுகிறார். பொன்னியல் பூங்கொடி, மா மலர் நெடுங்கண் மாதவி, மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல், அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை, என்று இளங்கோவால் பலவாறு மாதவியின் அழகு நலம் புனைந்துரைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட அழகினளுக்குப் பிறந்த பேரழகினள் மணிமேகலை.

அழகுக்கு அழகு சேர்ப்பவளாய் இருந்த தால்தான் மணிமேகலையின் பேரழகினைச் சாத்தனார் விதந்தோதுகிறார். அழகு என்பது இயற்கையின் நாணயம். அஃது ஓரிடத்தில் உறைந்து விடாமல் வழி வழி வருவதாய் இருத்தல் வேண்டும் என்பார் மில்டன். மணிமேகலை அழகும் அப்படிப்பட்டதுதான். வழி வழி வந்த அழகு.

சேக்சுபியர் ‘அந்தோணியும் கிளியோபாத்ராவும்’ என்ற நாடகத்தில் கிளியோபாட்ராவின் அழகைப் புனைந் துரைப்பர். அவள் எகிப்து நாட்டின் எழிலரசி, நைல் நதி நங்கை. கறுப்பழகி. ஆயினும் அந்த அழகு பலரையும் மயக்கும் வனப்பினது.

நாடகத்தில் பங்கேற்கும் சார்மியான், ஈராஸ் போன்றவர்கள் அவள் அழகு ராச நடையும் பெருமிதம் கொண்டது எனப் புகழ்வர். பாம்பே அவளை எகிப்திய நாட்டு எழிலரசி என்கிறான்.

அந்தோணியைக் காணுவதற்காக வரும் கிளியோபாத்ராவின் அழகை ஈனோபார்பஸ் வருணிக்கும் போது, ‘காலம் அவள் அழகை முதிர விடாது. அவளது கலவிக் கலைகள் தெவிட்டாது, அவளது காமக் குறும்புகளோ மோனத் தவம் புரியும் முனிவர்களை முணுமுணுக்கச் செய்துவிட்டு வாழ்த்தி ஒதுங்கிவிடும்’ என்கிறான்.

மணிமேகலையின் அழகோ ஆடவரை அகலச் செய்யாதது மட்டுமின்றி அவர்களில் எவரேனும் இயல்பினில் திரியாமல் நின்றால் அவர்கள் பேடிகளே என்று சுட்டியிருப்பதோடு கண்ணீரோடு இருக்கும் மணிமேகலையின் அழகினைக் கண்டு காமன் தன் படைக் கலங்களைப் போட்டு விட்டு உள்ளம் நடுங்கி நிற்பான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கிளியோபாத்ராவின் வருணனையோடு ஒப்புமைப்படுத்தலாம். முனிவர்கள் ஒதுங்கி நின்று வாழ்த்துவதனை சேக்சுபியர் படம் பிடித்துக் காட்டுவர். சாத்தனாரோ காமன் நடுங்கி நிற்பதாகச் சுட்டுகிறார். மணிமேகலை பற்றிய வருணனை பின்னும் தொடருகிறது. அவள் அழகினைக் கண்டு வியந்த மக்கள் ‘அணியமைத் தோற்றத்து அருந்தவப்படுத்திய தாயோ கொடியள் தகவிலள்’ என்று சொல்கிறார்கள். மணிமேகலையோடு மலர் வனத்திற்கு உடன் சென்ற சுதமதியும்

அவளைப் பலபடப் புகழ்கிறாள். அழகும் இளமையும்

குடிகொண்டிருந்த மணிமேகலையைக் காமமும்

அலைக்கழித்தது. உதயகுமரனிடம் இயல்பாக அவள் மனம் சென்றது. தன் மனக் குறிப்பைச் சுதமதியிடம் வெளிப்படுத்தும் மணிமேகலை,

புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத் தியற்கை

(மணி 5/93-94)

எனத் தன்னிலை விளக்கத்தை எடுத்துரைக்கி றாள். மணிமேகலை, பழம்பிறப்பில் உதயகுமரன் தன் காதலனாக இருந்ததையும் எண்ணிப் பார்க்கி றாள். அவனும் இவளை விரும்பி வந்தான். இவளும் அவனைக் கண்டு மயங்கினாள். காமத்தின் இயற்கை இவ்வாறு எனச் சுதமதியிடம் உள்ளம் திறக்கி றாள். மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குப் பழம் பிறப்பை உணர்த்தியதோடு, இராகுலனே இப்பிறப்பில் உதயகுமாரனாக இருப்பவன் என்று சுட்டுகிறது. உதயகுமரன் மணிமேகலையிடத்துக் காமுற்றிருப்பதை உணர்த்திய அத்தெய்வம், மணிமேகலையும் அவனிடத்து உள்ளம் பறிகொடுத்து நீங்காதிருப்பதையும் அவளிடத்தே உரைக்கிறது.

மாதவியின் தாயான சித்திராபதி எப்படியாவது தன் குலத் தொழிலில் மணிமேகலையை ஈடுபடுத்தவே விரும்பினாள். அவள் உதவியால் அவளை அடைவேன் எனத் திண்ணமாய் எண்ணுகிறான் உதயகுமாரன்.

ss

சித்திராபதியின் குலத் தொழில் கைத்தூண்’ வாழ்க்கையாகும். பலரது கையினின்றும் பொருள் பெற்று வாழும் வாழ்க்கை, தனது குலத்தொழில் என்று எண்ணியவள் அவள். கோவலன் இறந்த பின் மணிமேகலையை அக்குலத் தொழிலில் இறங்கச் சொன்னாள். அவ்வெண்ணத்திற்கு இடையூறாய் நின்றபோது மகள் மாதவியைப் பழித்தாள். தன்குலத் தொழிலைத் துறந்தமையை எண்ணி வருந்தினாள். சித்திராபதி மாதவி துறவு பூண்டதெண்ணிச் சினங்கொண்டாள். கோவலன் இறந்துவிட்ட பின் மகளின் துறவுக் கோலம் நகைக்கத்தக்கது என்றாள். தன் குல மரபுக்கு எதிராக அவள் கொண்டிருந்த அறவொழுக்கத்தை ஒழித்துக் கட்டுவேன் என்று உறுதி பூண்டாள். தாங்கள் பத்தினிப் பரம்பரையினர் அல்லர் என்று பறை சாற்றினாள். ‘பூவின் நறுந்தாது உண்டு அது வறிதானபோது, அதனை விட்டு நீங்கும் வண்டு போன்றவர்கள் நாம் ‘ என்றுரைத்தாள். நல்வினை பிறழ்ந்த ஆடவரை விட்டுத் திருமகள் நீங்குதல் போன்று அவர்களைக் கைவிட்டகலும் பண்பு நம்முடையது என்று சொன்னாள். தவக்கோலம் பூண்பது நம் குலத்தொழிற்கு ஒவ்வாது என்பதில் உறுதியாய் நின்றாள்.

Advertisment

பாண்மகண் பட்டுழிப் படூஉம் பான்மையின்

யாழினம் போலும் இயல்பினம் அன்றியும்

நறுந்தாது உண்டு நயனில் காலை

Advertisment

வறும்பூத் துறக்கும் வண்டுபோல்குவம்

வினையொழி காலைத் திருவின் செல்வி

அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்

(மணி 18/17-22)

என்கிறாள். மேலும் எப்படியாவது மணிமேகலையின் உள்ளம் சிதைக்க நினைத்தாள் சித்திராபதி. உதயகுமாரனின் காமத்தைத் தணிவிக்க மணிமேகலையைக் கருவியாக்க எண்ணினாள். அவன் இன்பத்தை மணிமேகலை அருந்தித் துய்க்குமாறு செய்வேன். மணிமேகலையை உதயகுமாரனின் பொற்றேரில் ஏற்றிக்கொண்டு வரச் செய்வேன். இஃது உறுதி. அப்படிக் கொண்டு வரவில்லை எனில், 'கல் சுமந்து நாடக அரங்கைச் சுற்றி வருவேன். பழியொடு வாழும் குலமரபு கெட்ட நாடக மடந்தையருள், நானும் ஒருத்தியாவேன். கூத்தியர் வீட்டில் இயல்பாகப் புகும் உரிமையையும் இழப்பேன்' என்று வஞ்சினம் பேசினாள்.

மற்றவன் தன்னால் மணிமே கலைதனைப்

பொற்றேர்க் கொண்டு போதே னாகில்

சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி

வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்

அனையே னாகி அரங்கக் கூத்தியர்

மனையகம் புகாஅ மரபினன் என்றே

வஞ்சினம் சாற்றி (மணி 18/31-37)

என இவ்வாறு சூளுரைத்தாள். சூளுரைத்த தோடு நின்று விடாமல், அதனைச் செயல்படுத்த காற்றினும் வேகமாக நடந்து உதயகுமாரனை அணுகினாள். உதயகுமாரனைத் தூண்டினாள்.

அவனும் மணிமேகலையிடத்துத் தான் கொண்டி ருந்த தீராக் காதலைச் சித்திராபதியிடம் வெளிப்படுத்தினான். எப்படி யாவது அவனோடு மணிமேகலையை இணைத்து விடப் பார்க்கிறது சித்திரா பதியின் உள்ளம். ஆயின் நடந்தது என்ன? கண்ணகி யின் வஞ்சினம் மதுரை எரியக் காரணமானது போல, சித்திராபதியின் வஞ்சினம் பொய்த்ததோடு மணிமேகலை யின் காமத்தை எரிக்கவும் காரண மானது. சித்திராபதியின் எண்ணம் நிறைவேறாத தோடு மணிமேகலையை மடைமாற்றத்திற்கு உட்படுத்தி மணிமேகலையை அறச்செல்வி யாக்கியது. அந்த மடைமாற்றத்தை மணிமேகலாத் தெய்வம் ஊக்கியது. எங்கே அவள் காமத்தில் சிக்கித் தவிப்பாளோ என்று எண்ணி அவளுக்குப் பழம்பிறப்பை உணர்த்தியது. மணிமேகலையின் காமவுணர்வு உதயகுமரன் என்னும் களர் நிலத்தில் விழுந்து வீணாகி விடக்கூடாது என்று எண்ணிய அவளை, மணிபல்லவத் தீவிற்கு அழைத்து வந்த அத்தெய்வம், மெல்லியள் ஒருத்திக்குக் காமம் இயல்பானது, அதனைத் திசை மாற்றிப் பிறவிப் பிணி அறிதற்கும், பேரறமாகிய பசிப்பணி அகற்று தற்குமாக மாற்றியிருப்பது சாத்தனார் காட்ட விழைந்த காப்பியக் களனாகும். மணிமேகலையின் காதலுணர்வு மெல்லிய நூலிழையாக நுழைந்து அறுபட்டுப் போகிறது.

காப்பியக் களனை வளர்த்துச் செல்வதற்குரிய இனிய சூழலாக அதனை விரித்துரைக்காது. மதச் சார்பைப் பாவிகமாக ஆக்கித் தம் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் சாத்தனார்.

***

சாத்தனார் காட்டும் மற்றொரு காட்சி இயற்கை கடந்த நிகழ்ச்சியாகும். சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் வியப்பில் ஆழ்த்தி நம்மை அச்சம் கொள்ளச் செய்வன. இடுகாடும் சுடுகாடும் நிறைந்த பகுதியைச் சாத்தனார் வருணிக்கிறார். காடு என்ற சொல் இவ்விரண்டினையும் சுட்டும் தொல்காப்பியர்,

மலர்தலை உலகத்து மரபு நன்கறியப்

பலர் செலச் செல்லாக் காடு

எனக் குறிப்பிடுவர். பலரின் வாழ்வு அங்கு முடியத் தனக்கு மட்டும் முடிவில்லாதிருப்பது இத்தகைய காடு. மனிதர் நிலை இல்லாதவர். ஆயின் காடு நிலைத்திருப்பது என்ற கருத்தை முன்வைக்கிறார் தொல்காப்பியர். இக் காட்டினைச் சாத்தனார் காட்டும் விதமே தனி. உவவனத்தின் அருகில் உள்ள சக்கரவாளக் கோட்டம் என்னும் சுடுகாட்டுக் கோட்ட வருணனை இயல்புபடச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

பிணங்களை இடுவோரும், சுடுவோரும், குழிகளில் புதைப்போரும் தாழியில் கவிப்போரும் இரவு பகல் பாராது எந்நேரமும் வருவதும் போவதுமாக இருப்பர். இறத்தல் ஒருவருக்கு உண்டு என்பதனை வாழ்வோருக்கு எடுத்துக் கூறுவது போன்று உள்ளத்தை உறைய வைக்கும் நெய்தல் பறை அங்கு முழங்கியவண்ணம் இருக்கும். துறவியர் இயற்கை எய்தின் துதிபாடும் ஒலி ஒரு புறம். இல்லறத்தார் இறப்பின் சுற்றத்தாரும் ஏனையோரும் அரற்றும் அழுகை ஒலி மற்றொரு புறம். நரிகளின் ஊளை ஒலி, இறப்போரைக் கூவி அழைக்கும் பேராந்தை ஒலி, மற்றும் கோட்டான் ஒலி, தலையை மட்டும் கல்லி எடுத்துண்ணும் ஆண்டலைப் பறவை எழுப்பும் ஒலி முதலான ஒலிகள் கண்டோரையும் கேட்போரையும் அச்சத்திற்கு உள்ளாக்கும்.

இன்னொரு புறம் பாழிடத்தை நமக்குக் காட்டுகிறார் சாத்தனார். தீச்சட்டிகள், சிற்றுண்டி இட்ட கலங்கள், பண்டம் இட்ட உறி, பாடையில் கட்டி அறுத்தெறியப்பட்ட மாலைகள், உடைக்கப்பட்ட குடங்கள், வழி எங்கும் இறைந்து கிடந்த நெற் பொரிகள், சிதறிக் கிடக்கும் சிறு பலிக்கான அரிசிகள், இவை யாவும் பாழிடங்களின் காட்சிகளாகும்.

தாமசு கிரே பாடிய ‘இடுகாட்டில் எழுதிய இரங்கற்பா’ ஓர் அருமையான பாவியம். இடுகாட்டின் சூழலைப் படம் பிடித்துக் காட்டும் கிரேயின் இரங்கற்பா உலக இலக்கியங்களில் தனியிடம் பெற்றதாகும். அவர் காட்டும் இடுகாட்டுக் காட்சி ஒன்று. ஓர் ஆந்தை, ஐவி என்னும் கொடி படர்ந்திருக்கும் மாடத்தின் கண் நீண்டநாள் வசித்தது. அது யார் கண்ணுக்கும் புலப்படாமல் அங்கு வசித்து வந்தது. அந்த இடத்திற்கு அதுதான் அரசன். யாராவது அங்கு வந்து அந்த இடத்தைச் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன செய்வது என்ற அச்சம். அதனால் அலறத் தொடங்கியது. அந்த அலறல் ஒலி தனது உரிமை இடத்தை யாரேனும் பறித்துக்கொண்டு விடுவார்களோ என்று நிலாவிடம் முறையிடுவதாகக் கற்பனை செய்கிறார் தாமசு கிரே.

சாத்தனார் காட்டும் ஆந்தை இறந்தோரைச் சுடுகாட்டுக்கு வருக என்றழைப்பதுபோல் அதன் குரல் இருந்ததாகக் கற்பனை செய்வதனை இங்கு ஒப்புநோக்கலாம். சாத்தனார் அச்சூழலை, சாவோர்ப் பயிற்றும் கூகையின் குரலும்’ என்று சுருக்கமாக அக்காட்சியை உணர்த்துகிறார்.

'இடுகாட்டில் எழுந்த இரங்கற்பா'வில் தத்துவமும், வாழ்வியல் நிலைகளும் எடுத்துச் சொல்லப்படுகின்றன. மணிமேகலையில் காணப்பெறும் இடுகாட்டுச் சூழ்நிலையிலும் வாழ்வியல் அறக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

உலக இலக்கியங்களிலும் இடுகாட்டுக் காட்சிகளில் நிலையாமைத் தத்துவம் இடம் பெற்றிருக்கிறது. இடுகாடு பற்றிய வருணனைகளும் வாழ்வியல் தத்துவங்களும் உலக இலக்கியங்களில் காணப்படுவது இயல்பு.

‘எல்லா வழிகளும் உரோமை நோக்கியே’ என்று சொல்லும் வழக்கினைப் போன்று, மனிதர் யாவரும் இறுதியாகச் சென்று சேருமிடம் மயானமே என்று கூறலாம். ஏழை பணக்காரர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றெல்லாம் பாராது அனைவர்க்கும் அங்கே அடக்கம் என்பது பொது.

குலப்பிறப்பும் பகட்டு வாழ்வும் அழகும் செல்வமும் புகழும் ஒரு சேரச் சென்றடையும் இடம் இடுகாடே ஆகும் என்றுரைப்பார் தாமசு கிரே. எந்த வேறுபாடுமின்றி அனைத்தும் அடங்கிப் போகிற வாழ்க்கையை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது கிரேயின் இடுகாட்டுத் தத்துவம்.

சாத்தனாரும் இடுகாடு பற்றிய தத்துவத்தில் யாரையும் இன்னார் என்று பாராமல் கொன்று குவிக்கும் காலனைப் பற்றிச் சுட்டுகிறார்.

அதுமட்டுமின்றி, துறவியர், செல்வர், ஈன்றணிமைப் பெண்டிர், சிறுவர், மூத்தோர், இளையோர் என்ற வேறுபாடின்றி எமனாகிய கொடுந்தொழிலாளன் உயிரைக் கொன்று குவிப்பதை எடுத்துக் காட்டி நிலையாமை உணர்த்துவதோடு அறமும் உரைக்கின்றார். நெருப்பிற்கு இரையாகிப் பெருஞ் செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடி, மேன்மை தரும் நல்லறங்களை விழையாமல் வாழ்கின்ற மக்களினும் சிறந்த அறிவிலிகள் உள்ளனரோ என்று வினவுகிறார்.

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்

ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்

பாவகர்

முதியோர் என்னான் இளையோர் என்னான்

கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவில்

வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்

கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து

மிக்க நல்லறம் விரும்பாது வாழும்

மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ?-

(மணி 6/97 - 104)

என்று சுட்டிச் செல்கிறார் சாத்தனார்.

***

இடுகாட்டுக்குரிய சூழலில் பேய் பற்றிய காட்சிகள் இடம் பெறுவது உலக இலக்கியங்களில் பொதுமரபாக உள்ளது. யாக்கை நிலையாமைத் தத்துவத்தைச் சாத்தனார் பேய்களின் வழி விளக்கும் சூழல் சுவையானது. பின்னர் எழுந்த கலிங்கத்துப் பரணிக்கு வழிகாட்டியாகவும் இஃது அமைந்தது. இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் இடம் பெறுவது காப்பியங்களில் பொதுவாகக் காணப்படுவதாகும். செயங்கொண்டார் காட்டும் பேய் உலகத்திற்கு இக்காவியம் முன்னோடி. போர்ச் சூழலில் பேய்க் கூத்து நிகழ்வதற்கான சூழலைத் தொல்காப்பியம் புறத்திணையில் இலக்கணப்படுத்தும்.

சாத்தனார் பெண் பேய் ஒன்றை இடுகாட்டுக் காட்சியில் காட்டுவிப்பது புதுமை. இறந்துபோன பெண் ஒருத்தியின் முகத்தைக் கையில் ஏந்திய பெண் பேய் மகிழ்ச்சியில் திளைத்தது. அந்தப் பெண் உயிரோடிருந்தபோது எவ்வளவு அழகியாக இருந்திருப்பாள் என்பதைக் கற்பனை செய்து பார்த்தது. அதன் செயலைச் சாத்தனார்,

கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி

இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள்

புயலோ குழலோ கயலோ கண்ணோ

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ

பல்லோ முத்தோ என்னா திரங்காது

கண்தொட் டுண்டு கவையடிப் பெயர்த்துத்

தண்டாக் களிப்ப னாடும் கூத்து

(மணி 6/122-128)

உயிரோடிருந்தபோது அந்தப் பெண் எப்படி இருந்திருப்பாள் அவள் கூந்தல் மேகமாக இருந்திருக்குமா? கண்கள் கயலாக ஒளிர்ந்திருக்குமா? மூக்கு குமிழம் பூவை நினைவூட்டுகிறதே? இதழ்கள் முருக்கம் மலரை ஒத்திருக்குமா? பற்கள் முத்துப் போன்றல்லவா விளங்கியிருக்க வேண்டும்? என்று பெண் பேய் எண்ணிப் பார்த்து சொல்லிக் களிப்புடன் கூத்தாடியது.

இறந்த உடலை வைத்துக்கொண்டு இவ்வாறு பேசுவதனை சேக்சுபியர் நாடகமான ‘ஹாம்லட்’டில் வரும் இடுகாட்டுக் காட்சியோடு ஒப்பிடலாம். இங்குப் பேய்க்காட்சி இல்லை. ஆயின் கல்லறையைத் தோண்டும்போது மண்டை ஓடுகள் பற்றிக் குழி தோண்டுபவன், ஹொராஷியோ, ஹாம்லட் ஆகியோர் பேசுவதனைச் சுவைபட விளக்கிச் செல்கிறார் சேக்சுபியர்.

அம்மூவரும் அரசியல்வாதி வழக்குரைஞர் பைத்தியக்காரன் ஆகியோரின் மண்டை ஓடுகளைப் பற்றிய விமரிசனத்தில் இறங்கி விடுகிறார்கள். பைத்தியக்காரனின் மண்டை ஓட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஹாம்லெட் பேசுவது எண்ணிப் பார்க்கத்தக்கது.

ஹாம்லெட், கல்லறையிலிருந்து வீசி எறியப்பட்ட ஒரு மண்டை ஓட்டைக் கண்டான். அது வழக்குரைஞனின் மண்டை ஓடாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். அந்த வழக்குரைஞன் உயிரோடிருந்தபோது பொய்யும் புரட்டுமாய் வழக்காடி இருக்கவேண்டும். அடுத்துக் கல்லறை ஒன்றிலிருந்து தோண்டப்பட்ட மண்டை ஓடு ஒரு பைத்தியக்காரனுடையது என்றான் கல்லறை தோண்டுபவன். அதனை ஹாம்லெட் கையில் எடுத்துக் கொண்டு இறந்த அந்த மண்டை ஓட்டுக்குரியவனைத் தனக்குத் தெரியும் என்றான்.

அவன் ஒரு நகைச்சுவைச் சுரங்கம். ஆனால், நல்லவர்களிடம் பகைமை பாராட்டும் குணத்தானாக இருந்திருக்கிறான். அந்த மண்டை ஓட்டைப் பார்த்து விளித்து, ‘ஏ மனிதா! எங்கே உன் ஒளிமுகம்! வேடிக்கை விளையாட்டுகள் எங்கே போயின? சிரிப்பூட்டும் உன் நகை விருந்து எங்கே போனது? நீ இன்றிருந்தால் அறையில் இருக்கும் அழகி ஒருத்தியின் முகச் சாயமும் வாசனைப் பூச்சும் முடிவாக உன்னைப் போல் தான் வெளுத்துப் போகும் என்று அவளிடம் கூறுவாய்! அவ்வாறே எடுத்துக் கூறு!’ என்று பேசுகிறான் ஹாம்லெட்.

காப்பிய/ நாடக நிகழ்ச்சிகளுக்கு இவை போன்ற காப்பியக் களன்களும், காட்சிகளும் இலக்கியத்திற்குச் சுவையூட்டுகின்றன. அவை படைப்பாசிரியரின் புனையும் ஆற்றலைப் புலப்படுத்துவதோடு அவர்கள் கருத்துகள் இப்படிப்பட்ட காட்சிகள் வழியேயும் வெளிப் பட்டுப் படைப்புக்குப் பெருமை சேர்ப்பனவாய் உள்ளன.